நாலடியார் நயம் – 36
நாங்குநேரி வாசஸ்ரீ
36. கயமை
பாடல் 351
ஆர்த்த அறிவினர் ஆண்டிளையர் ஆயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீத்தொழிலே கன்றித் திரிதந்து எருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.
நிறைந்த அறிவுள்ளவர் சிறியவராயினும்
நல்லொழுக்கத்துடன் தம் புலனடக்கி இருப்பர்
நல்லறிவில்லாக் கயவரோ முதியவராயினும்
நெறிகெட்ட செயலிலே உழன்று கழுகுபோல்
நடந்து குற்றம் நீங்கப் பெறார்.
பாடல் 352
செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை; – வழும்பில்சீர்
நூல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன்று இல்லாதார்
தேர்கிற்கும் பற்றி அரிது.
நீர்நிறை பெரிய குளத்தில் வாழ்ந்தாலும்
நாளும் தவளை தம்மேலுள்ள வழவழப்பான
அழுக்கை நீக்காததுபோல் குற்றமற்ற
அரும்பெரும் நூல்களைக் கற்பினும் நுண்ணறிவு
அற்றவர் அந்நூல்களின் பொருள் உணரார்.
பாடல் 353
கணமலை நன்னாட! கண்ணின்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் – குணன் அழுங்கக்
குற்றம் உழைநின்று கூறும் சிறியவர்கட்கு
எற்றால் இயன்றதோ நா.
கூட்டமான மலைகள்நிறை நாட்டின் அரசனே!
கண்ணெதிரில் ஒருவர் நின்றாலும் அவரின்
குணங்களைக் கூறுதற்கே நா எழுதல் அரிதெனும்போது
குற்றத்தை மட்டுமே கூறி குணம்கெடும்படி செய்யும்
கயவனின் நாக்கு எப்பொருளால் செய்யப்பட்டதோ?
பாடல் 354
கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார்; – கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.
பக்கங்கள் உயர்ந்தகன்ற அல்குலையுடை நற்குலப்
பெண்டிர் விலைமகளிர் போல் தம்
பெண்தன்மையை ஒப்பனை செய்ய அறியார்
பொதுமகளிரோ புதுவெள்ளம் போல் ஆடவருடன்
பழகிக் கலந்து தம் பெண்தன்மை மேம்பட
பாங்காய் அலங்கரித்துப் பொருளைக் கவர்ந்து செல்வர்.
பாடல் 355
தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீராம் மாதோ கயவர்; – அளிநீரார்க்கு
என்னானுஞ் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.
தளிர்மேல் நிற்பினும் ஒருவர் தட்டித்
தள்ளாமல் போகமாட்டாத உளியின்
தன்மையுடை கயவர் இரங்கும்
தன்மையுடை மென்மையானவர்க்குத்
தேவையான உதவி செய்யார் தம்மைத்
தாக்கித் துன்புறுத்தும் கொடியவருக்கு
தேடிச் சென்று செய்வர் எத்தகு உதவியும்.
பாடல் 356
மலைநலம் உள்ளும் குறவன்; பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன்; சிறந்தொருவர்
செய்நன்று உள்ளுவர் சான்றோர்; கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.
வாழும் மலைவளத்தை நினைத்து மகிழ்வான் குறவன்
விளையும் நிலத்தை நினைத்து உவப்பான் உழவன்
வாழ்வில் பிறர்செய்த நன்மையை நினைப்பர் சான்றோர்
வெறுப்புடன் பிறர் இகழ்ந்ததையே நினைத்திருப்பான் கயவன்.
பாடல் 357
ஒருநன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த
பிழைநூறுஞ் சான்றோர் பொறுப்பர்; – கயவர்க்கு
எழுநூறு நன்றிசெய்து ஒன்றுதீது ஆயின்
எழுநூறும் தீதாய் விடும்.
தமக்கொரு நன்மை செய்தவர் பின்
தொடர்ந்து நூறு குற்றங்கள் செய்யினும்
தளராது பொறுப்பர் சான்றோர் கயவரோ
தமக்கு எழுநூறு நன்மைகள்செய்து
தவறுதலாய் ஒன்று தீமையாய் ஆகிவிடின்
தமக்குச் செய்த எழுநூறு நன்மைகளையும்
தள்ளி நீக்கி தீமையையே நினைத்திருப்பர்.
பாடல் 358
ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள்; – கோட்டை
வயிரம் செறிப்பினும் வாட்கண்ணாய்! பன்றி
செயிர்வேழம் ஆகுதல் இன்று.
வாள் போலும் கண்ணுடையவளே! பன்றிக்கொம்பில்
வயிரம் இழைத்த பூணைப்பூட்டினும் அது
வீரம் மிகுந்த யானை ஆகாததுபோல் நற்குடிப்பிறந்தார்
வறுமையுற்றபோது செய்யும் உதவியையும் மூடர்
வளமான செல்வம் மிக்க காலத்தும் செய்யார்.
பாடல் 359
இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந்து – ஒன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.
இன்று செல்வமுடையவர் ஆவோம்
இப்பொழுதே ஆவோம்
இன்னும் சிலநாட்களில் ஆவோம் என
இடைவிடாது சிந்தித்துச் சொல்வதிலேயே
இன்புற்று பின் தம் உள்ளம்நொந்து தாமரை
இலைபோல் தாமிருந்த இடத்திலேயே
இன்பக் கற்பனையில் திரிந்து இறப்பவர் பலர்.
பாடல் 360
நீருட் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும்; – ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப் பெருங்கல் அன்னார் உடைத்து.
நீரில் தோன்றி பசும்
நிறத்துடன் இருப்பினும்
நெட்டியின் உட்புறம் ஈரத்தால்
நனையாதது போல் செல்வம்
நிறைந்திருப்பினும் பெருங்கல் போலும்
நெஞ்சமுடை மனிதரும் இவ்வுலகில்
ஈரமற்ற நெஞ்சுடன் உள்ளனர்.