கே. ரவி

என்னைய்யா இது, சோகத்தைக் கூட ரசிக்கணும்னு சொல்றீக!

ஏன் ரசிக்கக் கூடாது. இலக்கிய ரசனை என்பது சந்தோஷ சமாச்சாரம் மட்டுமே என்பது தப்புக் கணக்குத் தம்பி!

இலக்கிய ரசனை என்பது, தன் வாழ்வில் தன் அனுபவமாக வராத ஒரு நிகழ்வை, இன்னொருவர் அனுபவித்த ஒன்றை, அந்த இன்னொருவருக்குள் எப்படியோ நுழைந்து, ஏறக்குறைய அவர் அனுபவித்தபடியே அனுபவிப்பது.

அங்கே பார், அந்த மங்கை அழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். அவளருகே ஒருவன் குருதி வெள்ளத்தில் இறந்து கிடக்கிறானே! யாரவன்? அவள் கணவனோ? ஆம், அதோ தொலைவில் நின்று கொண்டு இந்தக் காட்சியைப் பார்த்தபடி ஒரு மூதாட்டி ஏதோ சொல்கிறாளே அதைக் கேள்: என்னத்த சொல்ல! இன்னைக்குக் காலைலதானுங்க இந்தப் பொண்ணு தலைல பூமுடிச்சு விட்டு அவன் பிரியா விடைபெற்றுக்கிட்டுப் போனான். அப்படிப் பூமுடிச்சப்ப, அவ கூந்தல்ல வச்சு விட்ட பூச்சரத்துல வண்டு ‘ஞொய்’னு ரீங்காரம் செஞ்ச சத்தம் கூட இன்னும் ஓயலீங்க! அப்ப அவனக் கட்டித் தழுவி அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினா இந்தப் பொண்ணு. இப்பப் பாருங்க, இந்த சாயரட்ச வேளைல ரத்த வெள்ளத்துல செத்துக் கெடக்குற அவனப் பாக்க வேண்டிய நெலமைக்கு ஆளாயிட்டாளே அந்த மஹாபாவி! பாக்க சகிக்கலேங்க இந்த சோகக் காட்சி!

எப்படி ஒரு சோகக் காட்சி நம்மை உலுக்குகிறது பார்த்தாயா! உனக்கு நேர்ந்த சோகம் இல்லை. யாருக்கோ நேர்ந்ததுதான். ஆனால் ஒரு கணம், ஒரே ஒரு கணம்தான், அந்தச் சோகத்தை நீ அனுபவிக்குமாறு அந்த மூதாட்டியின் வார்த்தைகள் செய்துவிட்டனவே! அந்த ஒரு கணத்தை, அதன் கனத்தை, உன் வாழ்நாளில் நீ மறக்க முடியாதவாறு, அவ்வப்போது நீ நினைத்துக் கொள்ளுமாறு ஆகிவிட்டதே!

வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழல்மேல்

கொண்டாள் தழீஇக் கொழுநன்பால் காலைவாய்ப்

புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க்

கண்டாள் அவன்தன்னைக் காணாக் கடுந்துயரம்

ஆம், காலையில் கோவலனிடம் பூச்சூடிக் கொண்டு அவனை வழியனுப்பி வைத்த கண்ணகி, மாலை அவனைப் பிணமாகக் கண்டு அழுத காட்சியை நாம் என்றைக்கும் மறக்க முடியாமல் செய்து விட்டாரே இந்த இளங்கோவடிகள்! அந்தச் சோக அனுபவக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல, வண்டுகளைப் பாட வைத்தும், குஞ்சம் துவளத்துவளத் தொங்கிய பூமாலையை அசையச் செய்தும், கணவனும் மனைவியும் ஆரத் தழுவிக் கொண்டு பிரிய முடியாமல் பிரிந்ததை “தழீஇ” என்று நீட்டி முழக்கியும், புண் தாழ்ந்து குருதி பொங்கி வழிந்ததைப் படம் பிடித்துக் காட்டியும், எப்படியெல்லாம் பாடுபடுகிறார் புலவர்!

இதென்னய்யா, மத்தவன் அவஸ்தையை வேடிக்கை பாக்க வைக்கறதுதான் புலவன் வேலையா?

இல்லை, வேடிக்கை பார்க்க வைப்பது இல்லை அவன் வேலை, அந்த வேதனையை அப்படியே, கொஞ்சமேனும் அனுபவிக்க வைப்பதுதான் அவன் வேலை. ஏன் அனுபவிக்க வேண்டும்? அறுசுவை விருந்திலே கசக்கும் பாகற்காய்ப் பொறியல் ஏன் படைக்க வேண்டும்? அட, சும்மா வசனத்துலியே பேசிக்கிட்டிருந்தா எப்படி, நாமும் பாடுவோம் அப்பு:

சோகத்தில் கூடசுகம் உண்டு தோழி

சோகத்தின் சாரத்தைச் சொல்ல வந்தேன்

தேகத்தில் ஒளிந்திருக்கும் தினவை எல்லாம்

தீவைத்துக் கொளுத்துவது சோக மன்றோ

வேகத்தை விறுவிறுப்பைப் பிடித்தி ழுத்து

வெறுமையினைக் காட்டுமொரு தீப மன்றோ

சோகத்தைப் பயில்வதற்குத் துணிந்து விட்டால்

சோதனைகள் இல்லைமனம் துவள்வ தில்லை

இதயத்தைப் பிழிந்துவிடும் சோகத் தாலே

இருக்கின்ற சுமையெல்லாம் கண்ணீ ராகி

உதிர்ந்துவிடும் நீயாக மட்டும் உன்னை

உள்ளுக்குள் நீகாண முடியும் நெஞ்சின்

அதிர்வுகளை நீவிவிடும் அனுப வத்தை

அரைநொடியில் ஏற்படுத்தும் இசையி னாலோர்

அதிசயத்தை உருவாக்கும் அதற்கும் மேலே

அமரநிலை உண்டென்று நினைவு றுத்தும்

இருட்டென்றா எண்ணுகிறாய் இல்லை இல்லை

ஏகாந்த நீழலடி நுழைந்து பாரேன்

உருண்டுவரும் மேகங்க ளூடு செல்லும்

ஒளிநிலவை நினைத்துக்கொள் ஒருக ணம்தான்

விருட்டென்று பயமெல்லாம் விலகி யோடும்

வியர்வையெல்லாம் பூப்பூக்கும் சோகம் உன்னை

அருட்கரத்தால் நெஞ்சாரத் தழுவிக் கொள்ளும்

அமைதியுடன் நீயுறங்கக் கவிதை சொல்லும்

எப்படி இருக்குத் தம்பீ!

என்ன சொன்னாலும் சரி அப்பு, சோகத்தை ரசிக்கணும்னு சொல்றத ஒப்புக்க முடியலே!

தம்பி, ரெண்டு ரூவா கொடுத்து டிக்கெட் வாங்கிப் போய்ப் பாசமலர் படம் பாத்து, சிவாஜியும் சாவித்திரியும் அழுதபோதெல்லாம் கூடவே அழுதியே, மறந்துட்டியா? காசு கொடுத்து வாங்கிய கண்ணீர் தம்பி! ஏன்?

கப்பலோட்டிய தமிழன் படம் நான் பலமுறை பார்த்து ரசித்த படம்தான். 1986 அல்லது 87, தொலைக்காட்சியில் அந்தப் படத்தை, ஐந்தாவது முறையாக என்று நினைக்கிறேன், நான் பார்த்துக் கொண்டிருந்த போது, முழுதும் பார்க்க முடியாமல் என் கண்களை மறைத்த கண்ணீர்த் துளிகளை நான் துடைத்துக் கொண்டே இருந்தேன். தான் அமர்ந்திருந்த நாற்காலியைத் திருப்பிப் போட்டுக் கொண்டு, தொலைக்காட்சிப் பெட்டிக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, படத்தைப் பார்க்காமல், நான் அழுவதை என் நண்பன் முரளி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும்தான் நான் சுதாரித்துக் கொண்டேன்.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா – இப்பயிரைக்

கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ!

அடாடா, நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் பாடல். அந்த எட்டையபுரத்துச் சுப்பய்யாவின் பாடலை எஸ்.வி.சுப்பையா திரையில்ars பாரதியாராகத் தோன்றிப் பாடியபோது நான் எப்படி அழாமல் இருந்திருக்க முடியும்? சுதந்திரப் போராட்டத்தின் போது நான் பிறக்கவே இல்லை. ஆனாலும் அந்தக் காலத்துக்கு என்னை அழைத்துச் சென்று, அதன் அனுபவக் களங்களில் என்னை நனையச் செய்து, அந்த வீர சக்தியையும், தன்மான உணர்வையும் எனக்குள் ஊட்டிய மாயத்தை இதுபோன்ற படங்களும், பாடல்களும் செய்யவில்லையா?

திரைப்படம் எடுக்கும் தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே, வார்த்தைகள் மூலமாக மட்டுமே, பல காட்சிகளை நம் மனத்திரையில் கவிஞர்கள் ஓடவிட்டிருக்கிறார்கள்.

இந்தப் பகுதியின் தொடக்கத்தில் சொன்ன அமரவாக்கியத்தை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்:

இலக்கிய ரசனை என்பது, தன் வாழ்வில் தன் அனுபவமாக வராத ஒரு நிகழ்வை, இன்னொருவர் அனுபவித்த ஒன்றை, அந்த இன்னொருவருக்குள் எப்படியோ நுழைந்து, ஏறக்குறைய அவர் அனுபவித்தபடியே அனுபவிப்பது.

போச்சு, திரும்பவும், ‘ஒருவருக்குள் இன்னொருவர் நுழைந்து’ங்கற பழைய வேதாளம் வந்து விட்டது ஓய்! அது வரத்தான் செய்யும். சபரிமலை செல்லும் போது, பேருந்தில் எனக்கும், சு.ரவிக்கும் ஏற்பட்ட அனுபவத்தை, எங்களுக்குள் நடைபெற்ற உரையாடலை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளலாம்!

இப்படி அனுபவிப்பதால் ஏதேனும் பயன் உண்டா? இதுதானே உன் கேள்வி?

அதுவும் ஒரு கேள்வி.

அப்படியானால் வேறேதோ கேள்வியும் இருக்கிறதோ?

உண்டு. நீர் என்னமோ கோத்தகிரி எஸ்டேட் என்றெல்லாம் சொல்லிவிட்டு ஒருவர் அனுபவத்தை இன்னொருவர் அனுபவிப்பதுன்னு பழைய பாடத்துக்கே வந்து விட்டீரே என்பதுதான் இன்னொரு கேள்வி.

தம்பி, அது கோத்தகிரி எஸ்டேட் இல்லை, கேட்டகிரி மிஸ்டேக், அதாவது, வகுப்புத் தப்பிதம். அதற்கும் நம்முடைய இப்பொழுதைய விஷயத்துக்கும் தொடர்பு உண்டு. சொல்கிறேன்.

நீ, கேட்கிறாயே, மேலே சொன்னவாறு இன்னொருவருடைய அனுபவக் களத்துக்குள் புகுந்து அனுபவிப்பதால் ஏதேனும் பயனுண்டா என்று, அதுவே ஒரு கோத்தகிரி எஸ்டேட். மன்னிச்சுக்க தம்பி, சகவாச தோஷம் தொத்திக் கொண்டது. கேட்டகரி மிஸ்டேக். எப்படி? ஒரு அனுபவம் பயனுள்ளதா, பயனற்றதா என்ற கேள்வியே தவறு. அனுபவம் என்பது பயன் கருதி வருவதில்லை. நாம் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, நுகர்ந்து, தொட்டு அனுபவிக்க உலகமே அதன் உள்ளடக்கங்களோடு விரிந்து கிடக்கிறது. அதனால் பயன் அடைவதும், பயன் பெறாததும் அனுபவிப்பவரைப் பொறுத்தது.

நான் இந்த உடல் மட்டும் இல்லை. இந்த உடல் என் கூடுதான். பஞ்ச பூதங்கள் தைத்து வழங்கிய சட்டையாகத்தான் நான் இதை அணிந்து கொண்டிருக்கிறேன். இப்படி ஓர் ஆழமான நம்பிக்கை பலருக்கு உள்ளது. நானும் நம்புகிறேன்.

என் நம்பிக்கை மேற்சொன்ன நிலையையும் தாண்டிச் செல்கிறது. நமக்கு ஸ்தூல உடல் இருப்பது போலவே, சூக்ஷ்ம சரீரம் என்று ஒன்று உண்டு. அது திட்ப உடல் போல் சதை, எலும்பு, குருதியால் ஆன உடல் இல்லை. அதை எந்தப் புலனாலும் உய்த்துணர முடியாது. ‘ஸாஃப்ட் வேர்’ (software) என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போன்ற நுட்ப உடல் அது. பூதவுடல் என்பது ஹார்ட்வேர், சூக்ஷ்ம உடல் என்பது ஸாஃப்ட்வேர். பின்னது முனைப்புகளால் ஆனது. முனைப்புடல் என்றும் சொல்லலாம். ஒருவன் அல்லது ஓருயிர் இன்ன வடிவில், இன்ன உடல் எடுத்து, இன்னவாறு இயங்கப் போவதை நிர்ணயம் செய்வது இந்த நுண்ணுடல் அல்லது முனைப்புடல்தான். ஒருவன் மரணம் அடைவதற்கு முன்பே, அதாவது அவன் உயிர்நிலை திட்ப உடலைப் பிரிவதற்கு முன்பே, உடல் எடுக்கும் முனைப்பால் மட்டுமே உருவான நுட்ப உடலைக் கலைத்து விட வேண்டும். அதாவது, வடிவ மோகம் அறவே இன்றி ஆக வேண்டும். அப்படியாகித் தன் திடவுடலை முழுதுமாகக் கழற்றிப் பஞ்சபூதங்களில் கலந்துவிடச் செய்யாவிட்டால், அவனுடைய திடவுடலைப் பிரிந்த பின்னும் நுண்ணுடல் அல்லது முனைப்புடல் தன் முனைப்புக்கு ஏற்ப ஒரு திடவுடல் பெற ஏங்கித் திரியும். அப்படியோர் உடல் செய்து கொள்ள வாய்ப்புக் கிடைத்ததும், செய்து கொண்டு அதை ஆளத் தலைப்படும். இதுவே அதன் அடுத்த பிறவி எனப்படுகிறது. இதெல்லாம், ஓரளவு அனுபவ ரீதியாக எனக்குள் மலர்ந்த நம்பிக்கை.

முன்பே நான் குறிப்பிட்டேனே, 101 பாடல்கள் அடங்கிய குருமந்திரம் என்ற படைப்பு 1986-ல் எனக்குள் மலர்ந்து வந்தது என்று. அதில் இரண்டு பாடல்கள் இங்கே நினைவு கூரத் தக்கது:

பூதங்களில் கலந்து போகாத சூக்குமம் தன்

வாதனைக் கேற்ப சாயல் வனைந்திடும் வனைந்த வண்ணம்

பூதங்கள் நெய்த சட்டை புனைந்திடும் புனைந்து கொண்டு

சாதனை போல மீண்டும் சகதியில் ஜனிக்குமாமே!

தூலத்தில் வைத்த பற்றே தூலத்தை விட்ட பின்னும்

தூலமே போல எண்ணும் சூக்கும வடிவம் பின்னும்

தூலத்தில் பற்றறுந்து தூலத்தின் கட்டவிழ்ந்தால்

மூலத்திற் கலப்ப தென்ற முக்திகை கூடுமாமே

இதையெல்லாம் இங்கே நான் சொல்லக் காரணம் தம்பி நீ கேட்ட கேள்விதான். ஆம், ஸ்தூல உடலாகிய திட்ப உடலை நுண்ணுடல் நிரந்தரமாக நீங்கிச் சென்றுவிடும் மரணம் சம்பவிப்பதற்கு முன்பே, அவ்வப்போது, திட்ப உடலில் இருந்து நீங்கிச் செல்லும் பயிற்சியைத்தான் கனவு நிலை தருகிறது.

ஆனால், இரண்டு குறைபாடுகள் இந்தப் பயிற்சியில் உண்டு. பெரும்பாலும் கனவுகள் நினைவில் பதிவாகித் தங்குவதில்லை என்பது முதற்குறைபாடு. கனவில், அறிவின் துணை சிறிதும் இன்றி நுண்ணுடல் அலைபாய நேர்வதால், அது தான்தோன்றித் தனமாக, எந்த வழிகாட்டுதலும், நெறிமுறையும் அற்ற தாறுமாறான அனுபவமாகிறது.

ஆனால், இந்தக் குறைபாடுகள் இன்றி அறிவு விழித்திருக்கும் நிலையிலேயே, திட்பவுடல் நீங்கி நுண்ணுடல் பயணம் மேற்கொள்பவன் கவிஞனும், யோகியும்தான்.

கவிதை ஜனிக்கும் வேளையில் தானன்றிப் பிறிதான ஓர் அனுபவக் களத்தில் கவிஞன் சஞ்சரிக்கிறான். அந்த அனுபவத்தை அவனுடைய அறிவு, விழிப்பு நிலையிலேயே உள்வாங்கிக் கொண்டு, அதை வார்த்தைகளில் வடித்து, நிரந்தரமாக்குகிறது.

யோகியின் கதை வேறு. அவன், திட்பவுடல் நீங்கிப் பயணம் மேற்கொள்ளும் போது தன்னை வரவேற்கும் எந்த அனுபவக் களத்திலும் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துத் தான் நுண்ணிலையிலும் இல்லாமல் தானாக, எந்த முனைப்பும் அற்ற தானாக, ஆகும் ஒரே முனைப்பில் லயிக்கிறான். அவன் களம் விரிய, விரிய முக்காலங்களுக்கும், எல்லா லோகங்களுக்கும் பொதுவான எல்லா அனுபவங்களுமே தானாக உணரும் அத்வைதானந்த அனுபவமே அவனுடைய இலக்காகிறது. அதுவே கடவுள் நிலை. இதுதான் இந்தக் கணத்தில் என் நம்பிக்கை.

எனவே, தம்பி, இப்போது சொல்லு, ஒருவன் இன்னொருவனுடைய அனுபவக் களத்துக்குள் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து செல்வதால் ஏதேனும் பயனுண்டா, இல்லையா? உன் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

சபரி மலை யாத்திரைக்குப் பெரிய பாதையில் செல்பவர்கள், மாலை அணிந்து கொண்ட நாளில் இருந்தே செருப்பில்லாமல் நடந்து பழகுவார்கள். அப்படிப் பழகி விட்டால், யாத்திரையின் போது, செருப்பில்லாமல் பெரிய பாதையில், கல்லும் முள்ளும், குண்டும் குழியும் கடந்து, இரண்டு நாட்கள் நடந்து செல்லும் போது அவ்வளவு சிரமம் தெரியாது. அது போலத்தான், திட்ப உடலை நீங்கிச் சில கணங்கள் விழிப்புடன் பயணம் செய்யும் பயிற்சி மேற்கொண்டால், மரணம் சம்பவித்து, அப்படிச் சிலகாலம் இருக்க நேரிடும் போது அதிக சிரமம் இருக்காதோ என்று நினைக்கிறேன். இது ஒரு பயன் இல்லையா?

அப்படிப் பயணம் செய்யத் தெரியாதவர்களும் அந்த அனுபவக் களத்தில் பங்கேற்க வாய்ப்பாகும் வண்ணம், அதைச் சொற்களில் நிரந்தரம் செய்து விடுவது ஒரு பெரிய சமூகப்பயன் இல்லையா? சரி தம்பி, நீயே முடிவு செய்துகொள்.

முன்பு நான் எழுதிய இன்னொரு கவிதை நினைவு வருகிறது. அட எல்லாவற்றையும் என் கவிதை சொல்லி விடுகிறதே!

நிழலுக் கென்றே சோலை அமைத்து

நிம்மதியாக வாழ்கின்றேன்

பழத்துக் கென்றோ பனிமலர்க் கென்றோ

பயனைக் கருதாமல்

நிழலுக் கென்றே சோலை அமைத்து

நிம்மதியாக வாழ்கின்றேன்

மீண்டும் முதலில் சொன்ன அமர வாக்கியத்தை நினைவு படுத்திக் கொள்வோம்:

இலக்கிய ரசனை என்பது, தன் வாழ்வில் தன் அனுபவமாக வராத ஒரு நிகழ்வை, இன்னொருவர் அனுபவித்த ஒன்றை, அந்த இன்னொருவருக்குள் எப்படியோ நுழைந்து, ஏறக்குறைய அவர் அனுபவித்தபடியே அனுபவிப்பது.

இதை ஏன் அடிக்கடி அமர வாக்கியம் என்கிறேன். மரணத்துக்குப் பிறகு நிகழக் கூடிய ஒன்றை மரணத்துக்கு முன்பே நிகழ்த்திக் காட்டி, மரணத்தை வெல்லும் வழியைக் காட்டுவதால் இது அமர வாக்கியம் தானே!

arsபாரதியுடன் நெருங்கிப் பழகி, அவனால் உள்ளூக்கம் பெற்ற வ.ராமசாமி என்ற வ.ரா., அறிஞர் அண்ணாவால், ‘அக்ரஹாரத்து அதிசய மனிதர்’ என்று போற்றப்பட்ட எழுத்தாளர், கவிஞனைப் பற்றிச் சொன்ன ஒரு குறிப்போடு இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்.

ஒரு கவிஞன் மலரைப் பாடினால் மலாரகவும், கடலைப் பாடினால் கடலாகவும், புயலைப் பாடினால் புயலாகவும் தானே மாறிவிடும் ரசவாதத்தை வியந்துவிட்டு, வ.ரா. ஓர் அமர வாக்கியம் எழுதுகிறார். அதாவது நான் மிகவும் சிரமப்பட்டுச் சொல்ல முற்பட்ட கருத்து வெகு சுலபமாகவும், இயல்பாகவும் வந்து அமர ஒரு வாக்கியமாக அமைந்ததால் அது அமர வாக்கியம்:

கவிஞன் கட்சி பேசலாமே தவிர சாட்சி சொல்ல முடியாது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *