கே. ரவி

aravi
கேரளாவில், ஆதி சங்கரர் பிறந்த ஊரான காலடியில் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1985 அல்லது 86 என்று நினக்கிறேன். காலடிக்குச் சென்று அங்கிருந்த பூர்ணா நதியில் நீராடி விட்டுச் சிருங்கேரி சங்கர மடத்தாரால் பராமரிக்கப்படும் மண்டபத்தில், சங்கரரின் தாயார் ஆர்யாம்பாள் சன்னிதிக்கு எதிரில், வாராஹி, வைஷ்ணவி, கெளமாரி, ப்ராஹ்மி, இந்திராணி, சாமுண்டி, மாஹேஸ்வரி என்ற ஏழு சக்தி வடிவங்களும் செதுக்கப்பட்ட ஒரு தூணுக்கு முன்பாக அமர்ந்து கொண்டு த்யானத்தில் ஆழ்ந்திருந்தேன். சுமார் பதினைந்து நிமிடங்கள் கழித்து நான் கண்மலர்ந்தேன். தியான நிலையில் நான் இரண்டு கைகளிலும் சின்முத்திரையோடு உள்ளங்கைகளை மேற்காட்டி அமர்ந்திருந்த போது என் வலது உள்ளங்கையில் ஒரு வண்ணத்துப் பூச்சி, அதாவது, பட்டாம் பூச்சி வந்து சில நிமிடங்கள் அமர்ந்திருந்த காட்சியை என்னிடம் ஷோபனா விவரித்த போது என்னையறியாமல் எனக்குள் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

மீண்டும் ஒருமுறை சபரிமலை யாத்திரை முடித்து வரும் வழியில் நண்பர்களோடு காலடி சென்றேன். நான் பூர்ணா நதியில் குளிக்க இறங்கிக் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நதியிலேயே பத்மாசனம் இட்டுத் தியான நிலையில் அமர்ந்து விட்டதாகப் பிறகு நண்பர்கள் சொன்னார்கள். எனக்கு ஒன்று மட்டும் நினைவுக்கு வந்தது. அப்போது நான் தியானத்தில் இருந்த சிறிது நேரத்துக்குள், துத்த நாகம் போன்ற நீல நிறத்தில் இருந்த ஒரு பெரிய தடாகத்தில் மூழ்கி உள்ளே சென்றதும், அங்கே நீருக்கடியில் ஒரு குகை தெரிந்ததும், குகைக்குள் வரச் சொல்லி ஒரு குரல் என்னை அழைத்ததும், நான் குகைக்குள் நுழைந்ததும், அங்கே ஒரு பீடத்தில் ஒளிமயமாக ஆதி சங்கரர் போல ஒருவர் தியானம் செய்து கொண்டிருந்ததும், என்னை வா என்று அழைத்தவரோ, பார்த்ததும் அச்சம் உண்டாக்கும் ரத்தச் சிவப்பான கண்களுடன் தலையிலிருந்து தரையில் புரளும் ஜடாமுடியுடன் வீற்றிருந்ததையும், அவர் சொல்லாமலே எப்படியோ அவர்தாம் மார்க்கண்டேய மஹரிஷி என்று நான் தெரிந்து கொண்டதையும் என் நண்பர்களுக்குச் சொன்னேன்; சென்னை வந்த பிறகு டாக்டர் நித்யானந்தம் அவர்களிடமும் சொன்னேன். அவர் கண்களை மூடிக் கொண்டு “கைலாசத்தில் உள்ள மானசரோவர் ஏரி” என்று மெதுவாகச் சொன்னர்.

பிறகு, இப்போது நாலைந்து ஆண்டுகளுக்கு முன் நானும் ஷோபனாவும் பத்ரிநாத் சென்றிருந்தோம். பத்ரிநாத் செல்லும் வழியில் ஜோஷிமடம் என்ற இடத்தில் உள்ள சங்கரர் ஆசிரமத்திற்குச் சென்றோம். அங்கே ஒரு மரத்தடியில் ஒரு குகை இருந்தது. ஆனால் அது பூட்டியிருந்தது. அங்கிருந்த மேற்பார்வையாளரிடம் சொல்லித் திறக்கச் செய்து, உள்ளே சென்று சிறிது நேரம் தியானம் செய்தோம். தியானம் முடிந்ததும், “இந்த இடத்துக்கும் மானசரோவருக்கும் ஏதோ தொடர்புள்ளது போலத் தெரிகிறது” என்று ஷோபனாவிடம் குறிப்பிட்டேன். அதன் காரணம் எனக்கு அப்போது விளங்கவில்லை.

அங்கிருந்து பத்ரிநாத் சென்று கண்ணபிரானைக் கண்குளிரக் கண்டுவிட்டு, அருகில் இந்தியா, திபெட் எல்லையில் இருந்த கடைசி இந்திய கிராமமான மன்னாவுக்குச் சென்றோம். அது, அலகாநந்தா நதியுடன் சரஸ்வதி நதி கலக்கும் இடம். அதன் மேல் பீமன் கட்டியதாக நம்பப்படும் ஒரு பெரிய கல்பாலம் இருந்தது. அதைக் கடந்து சென்றால் ஸ்வர்க்க ஆரோகணி வருமாம். அதாவது, பாரதப் போர் முடிந்த பிறகு, பாண்டவர்கள் அங்கேதான் ஸ்வர்கத்துக்கு ஏறிச் சென்றார்களாம்! எங்குமே பிரஸ்ஸன்னம் ஆகாமல் நிலத்துக்கு அடியில் ஒளிந்து கொண்டே இருக்கும் சரஸ்வதி நதி அங்கே மட்டும் வெளியில் வந்து காட்சி தருகிறது. கிட்டத்தட்ட பச்சை கலந்த நீல நிறத்தில் அந்த நதி இருந்தது. அங்கேயும் ஒரு குகையிருந்தது. அதன் சுவரில் இருந்து துளித்துளியாக ஈரம் கசிந்து கொண்டிருந்தது, நீல நிறத்தில்! அதுதான் அந்த நதியின் ஊற்றுக்கண் என்பது புரிந்தது. அந்தச் சுவரில் எழுதப்பட்டிருந்த செய்தி என்னை வியப்பில் ஆழ்த்தியது. ‘இங்கே வருகின்ற நீர்த்துளிகள் மானசரோவரில் இருந்து வருகின்றன!’

என் பழைய கவிதையொன்றை என் மனம் எதிரொலிக்கிறது:

யார் கொடுத்த ஞாபகத்தை யார் சுமக்க வேண்டுமோ

எப்படியோ, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு வரலாற்றைக் காலத்தில் முன்னும், பின்னுமாகப் போய், அலைபாய்ந்து, எழுத்தில் படம்பிடித்துத் தந்துவிட்டேன். அடுத்த பத்துப் பதினைந்து ஆண்டுகளின் சம்பவங்களை இப்போது சொல்வதைக் காட்டிலும், இன்னும் எனக்கு ஆயுள் மீதம் இருந்தால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அசை போட்டுப் பார்த்துச் சொல்வதே பொருத்தமாக இருக்கும். அதை இரண்டாவது பாகமாக நான் எழுதக் கூடிய வாய்ப்பை எதிர்நோக்குகிறேன்.

இதுவரை நான் உங்களுடன் பகிர்ந்து கொண்டவை மிகவும் விறுவிறுப்பான சம்பவங்களாக இல்லாவிட்டாலும், மற்ற சுயசரிதைகளைப் போல வாழ்க்கையின் அன்றாட நிகழ்ச்சிகளின் தொகுப்பாக இல்லாவிட்டாலும், இந்தப் பிரபஞ்சத்துக்கும் எனக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் கவிதை வரலாறாகக் கொஞ்சமேனும் அமைந்திருக்கக் கூடுமானால் அதுவே இதை ஓரளவு பயனுடைய முயற்சியாக உயர்த்த வல்லது என்ற மனநிறைவோடு இந்தத் தொடரை, அல்லது இதன் முதல் பாகத்தை, இப்போது நிறைவு செய்கிறேன்.

தண்டமிழ்க் கொண்டல் சிதம்பரம் சுவாமிநாதன், குப்புசாமி வாத்தியார், கிருஷ்ணராமானுஜம் பிள்ளை போன்ற ஆசிரியப் பெருமக்களும், ஜகன்னாதாச்சாரியார், டாக்டர் டி.என்.கணபதி போன்ற பேராசிரியப் பெருந்தகைகளும், சுகி சிவம், சு.ரவி, சசி, சீனி சுந்தரராஜன், வ.வே.சு., ரமணன், சுப்பு போன்ற நண்பர்களும், அமரர் நா.பா., ஒளவை நடராஜன், பாரதி சுராஜ் போன்ற வழிகாட்டிகளும், டாக்டர் நித்யானந்தம் என்ற குருநாதரும், என் சிந்தனையின் போக்குக்குத் தடம் அமைத்துக் கொடுத்த தத்துவ மேதைகளும், இறுதியாக, ஆனால் உறுதியாக, என் இல்லத்திலும் உள்ளத்திலும் ஒரே தீபமாகச் சுடர்விடும் ஒளிவிளக்காகவும், என் கவிதை யாவும் தனக்கெனக் கேட்கும் பராசக்தியாகவும், என் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஷோபனாவும், இப்படிப்பட்ட சுடர்ப்பொறிகளும், தாரகைகளும் கதாபாத்திரங்களாக வந்து கெளரவப் படுத்திய இந்தக் கவிதை வரலாற்றில் நானும் இடம்பெற்றேன் என்பதே என் பிறவிப் பயன் என்று நான் கருதுகிறேன்.

எஞ்சியுள்ள நாட்களில், பாதி முடிந்த நிலையில் இருக்கும் பிரும்ம சூத்திரத்துக்கான ஆங்கில விரிவுரையை எப்படியாவது நிறைவு செய்து வெளியிடப் பராசக்தி அருள்செய்வாள் என்று நம்புகிறேன்.

பொறுமையுடன் என் ஞாபகப் பயணத்தில் என்னோடு வந்த வாசகர்களுக்கும், இந்தப் பயணத்துக்கு வாகனம் அமைத்துத் தந்த வல்லமை இதழின் பொறுப்பாளர்களுக்கும் நன்றி.

2001-ஆம் ஆண்டு எழுதிய ஒரு கவிதையுடன், “காற்று வாங்கப் போனேன்” முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்:

அணையாத சுடரேற்றுவேன் – நெஞ்சில்

அலைமோதும் சொற்களை அக்கினியில் தோய்த்துத் தீக்

கணையாக உருமாற்றுவேன் – இமைக்கும்

கணத்திலிப் பேரண்டம் உருவான மையத்தில்

அணையாத சுடரேற்றுவேன்!

விண்மீன்கள் சிறுதுளிகளாய் – வான

விளிம்புக்கு விரைந்தோடிப் போய்விழுந் தேசிதற

எண்ணற்ற உயிர்க்குலங்கள் – வாழும்

விண்மீன்களாய் என்றும் ஒளிசிந்திக் களிகொள்ள

அணையாத சுடரேற்றுவேன்!

பொய்சூழும் நெஞ்சங்களைத் – துளைத்துப்

போகின்ற ஒளியுலகில் இல்லையே என்றமொழி

பொய்யாகிப் போய்மறைய – எந்தப்

பொல்லாங்கும் இல்லாமல் எல்லாரு மேமகிழ

அணையாத சுடரேற்றுவேன்!

மாயை விரித்த வலையோ – ஜனன

மரணத்தி லேசுழலும் புரியாத மர்மமோ

தீயை உமிழும் சொற்கள் – பட்டுத்

தீப்பற்றி எரியட்டும் சூழ்ச்சிகள் முறியட்டும்

அணையாத சுடரேற்றுவேன்!

சொற்களைத் தோய்தெடுக்கக் – கோடி

சூரியப் பிழம்பொன்று தேடிச் சென்றேன் – அன்று

கற்பிலே கனல்விளைத்த – தெய்வக்

கண்ணகித் தாயிடம் வேண்டி நின்றேன் – இருட்

பட்டினிப் பாழ்க்குகையில் – கிடந்து

பதறுமோர் ஏழையின் கண்ணீர்த் துளியில் – ஒரு

சிட்டிகை எடுத்து வைத்தாள் – அதில்

சீறிப் புறப்படும் தீயில்சொல் தோய்த்தெடுத்(து)

அணையாத சுடரேற்றுவேன் – இந்த

அகிலமெல்லாம் உண்மை ஒளிகூட்டுவேன்!

அனைவர்க்கும் ஒருநீதியே – என்ற

அருளாட்சி மலரநான் அறைகூவியே

அணையாத சுடரேற்றுவேன்!

நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காற்று வாங்கப் போனேன் – 53

  1. Dear Ravi

    Eagerly awaiting your next parts n Bramha Sutra bhAshyam..
    INNUMERABLE PALA  NUURAANDU IRU.
    SU.Ravi
    ( innum enRu thAn adiththEn .. ComputerE innumerable enRu mARRi koNdathu. Ithu saththiyam)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.