உயிர் வாசம்!
-அமீர்
மனதை விட்டு அகலாத
மழை நேர
மண் வாசனை…
மறக்காத
பால் தந்த
மார் வாசனை…
திகட்டாத
தூங்கத் தோள் தந்த
தந்தை வாசம்…
சலிக்காத
பால்யத்தில் கட்டிபிடித்துச்
சண்டையிட்ட
சகோதரன் வாசம்…
திரும்பத் திரும்ப அழைக்கும்
மனைவியின்
முந்தானை வாசம்…
விரும்பிய
ரோஜா
மல்லி
சம்பங்கி
சந்தன வாசனைகள்…
அவை யாவுமின்று
எனக்கு
அடுத்தபட்ச வாசமானது
என்னவள் ஈன்ற
என் சேயை
மருத்துவச்சி
என் கையில் தந்தபோது
வீசிய பிறந்த குழந்தையின்
ஈரமான பச்சை வாசத்தால்!