-விசாலம்

(ஒரு திருமணத்தில் மாப்பிள்ளை காசி யாத்திரை போகும் காட்சி. கையில் அவர் ஒரு தடி வைத்துக் கொள்ள வேண்டும். அதை எங்கேயோ தவறி வைத்துவிட்டு அதைத் தேட பெண்வீட்டாருக்கு ஒரே டென்சன். இதைப் பார்த்த சம்பவத்தால் இந்தக் கவிதை  பிறந்தது.)

கைத்தடி எங்கே ?
கைத்தடி எங்கே ?
ஒரே பரபரப்பு!

திருமண வீட்டில்                                                   walking_stick
மாப்பிள்ளை நின்றார்,
காசி யாத்திரைக் கோலம்
கையில் ஒரு விசிறி!

பத்து நிமிடம் போனது…
“எதற்குக் கம்பும் விசிறியும்?
என்ன சம்பிரதாயமோ?”
நக்கல் அடித்தாள் ஒருத்தி!

அப்பா, கைத்தடி கிடைத்தது
சங்கு சக்கரம் போல்
மாப்பிள்ளைக் கைகளில்!
பொய்க் கோபத்தில்
மாப்பிள்ளை புறப்பட்டார்

நாலு அடிகள் முன் செல்ல
மாமனார் பின் ஓடிச் செல்ல
ஒருவர் அவர் காதைக் கடிக்க
புன்னகையுடன் முகம் மலர
திரும்பி வந்தார் மாபிள்ளை! 

“டும் டும் டும்” மேளம் கொட்ட
மாலைகளும் மாற்றப்பட
ஊஞ்சலும் ஆடியது
கைத்தடியின் பாகம் முடிந்தது!

கிரஹப்பிரவேசம்
கைத்தடிக்கு இடம் தேட
மாமா அதை பீரோமேல் வீச,
அமர்ந்தது கைத்தடி!

வருடங்கள் ஓடின…
கேட்பாரற்று பீரோ மேல்
தூசிப் பிடித்துக் கிடந்தது,
ஐம்பது வருடங்கள் ஓடத்
தனிமையானார் மாப்பிள்ளை…
தேவைப்பட்டது கைத்தடி!
கிழவர் கைத்தடி ஊன்றினார்
அதுவே ஊன்றுகோலானது!!

 

Leave a Reply

Your email address will not be published.