-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
இத்தாலி நகர் பிறந்த
இனிய பெஸ்க்கிப் பாதிரியார்
இன்பத் தமிழைக் கற்று
எம்மோடு இணைந்து விட்டார்! 
முப்பது வயதில் வந்தார்
முயற்சியால் தமிழ் படித்தார்
எப்போதும் நாம் நினைக்க
எழுதி வைத்தார் தமிழ்நூல்கள்!
மதம் பரப்பும் நோக்கோடு
வந்த பெஸ்க்கிப் பாதிரியார்
மனதைப் பறி கொடுத்தார்
வாழுகின்ற தமிழின் இடம்!
தாம் படித்த தமிழ்மொழியைத்
தலைமீது வைத்து அவர்
தேம்பாவணி தந்து
திரும்பிநாம் பார்க்க வைத்தார்!
தமிழ் மொழியைக் கற்றதனால்
தன்பெயரை மாற்றிக் கொண்டு
வீரமா முனி ஆகி
வேட்கையுடன் பணி செய்தார்!
தமிழரே தமிழ் எழுதத்
தயங்கி நிற்கும் வேளையிலே
தமிழர் அல்லாப் பாதிரியார்
தமிழ் எழுதித் தலைநிமிர்ந்தார்!
அமிழ்தான தமிழ் கற்று
அதில் திருத்தம் பலசெய்து
அனைவரது உள்ள மெலாம்
அமர்ந்து விட்டார் பெஸ்க்கியவர்!
இத்தாலி நகர் தந்த
இனிய தமிழ் வரவாய்
என்றுமே எண்ணி நிதம்
எம்மனதில் போற்றி நிற்போம்!

Leave a Reply