இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(128)
– சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே!
இனிய வணக்கங்களுடன் உங்களை இம்மடல் வாயிலாகச் சந்திப்பதில் பெரு மகிழ்வடைகிறேன்.
“அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது” என்றாள் எம் மூதாதைப் பாட்டி. ஆனால் மனிதராய்ப் பிறந்த நாம் இம்மானிடப் பிறவியின் அருமையைச் சரிவரப் புரிந்து கொண்டிருகிறோமா? என்பது மிகவும் சந்தேகத்திற்கிடமான விடயமே!
காலரா, அம்மை, பிளேக் என்று பலவகையான கொடிய வியாதிகள் மனித குலத்தைத் தாக்கி அழித்தது ஒருபுறம்.
சுனாமி, சூறாவளி, பூகம்பம், பெருவெள்ளம் என்று நம்மால் கட்டுப்படுத்த முடியாத நமக்கு அப்பாற்பட்ட காரணிகளினால் அழியும் மனிதர்கள் ஒருபுறம்.
தற்போதைய “இபோலா” என்றழைக்கப்படும் விஷக் கிருமிகளின் வழி சியரா லியோன், பாப்பாவே நியூகினீ, லைபீரியா எனும் ஆப்பிரிக்க நாடுகளில் அழிந்தொழியும் மனிதர்களின் எண்ணிக்கை ஒருபுறம்.
நமக்கு அப்பாற்பட்ட காரணிகளால் கிடைப்பதற்கரிய மனிதப்பிறவி கிடைத்தும் அதை இழந்து விடும் பரிதாப நிலையைப் பற்றி நம்மால் அதிக அளவில் எதுவுமே செய்து விட முடியாது.
ஆனால் மனிதனை மனிதன் அழிக்கும் கொடிய போரினைத் தவிர்ப்பதன் மூலம் மட்டுமே இம்மனிதப்பிறவியின் அரிய தன்மையை நாம் உணர்ந்து கொண்டதை உறுதிப்படுத்த முடிகிறது.
ஆதி அறியாத இப்பிரபஞ்சத்தில், யாரோ இருவரின் இன்பத்தின் மூலம் மனிதப்பிறவியாக ஜனனித்த நமக்கு இருப்பது எல்லாம்நமது சொந்தம் என்னும் எண்ணம் தலைதூக்கும் போதே போருக்கான அவசியமும் ஏற்படுகிறது.
காரணம் எதுவாயினும், அது மொழியாகவோ, மதமாகவோ அன்றி இனமாகவோ இருப்பினும் அதற்காக மற்றுமொரு மனித உயிரை அழிப்பது எதுவிதத்திலு,ம் நியாயப்படுத்த முடியா ஒரு செயல்.
இதுவெல்லாம் ஏனின்று சக்தியின் மடல் வாயிலாக வந்து விழுகிறது எனும் கேள்வி உங்களுக்கு எழுவது இயற்கை. ஆமாம் இத்தகையானதொரு சூழலிலேயே முதலாவது உலக மகாயுத்தம் ஆரம்பித்தது. இவ்வுலக மகாயுத்தம் ஆரம்பித்தது நூறு வருடங்களுக்கு முன்னதாக ஆகும். 1914ம் ஆண்டு ஜூலை மாதம் 28ம் திகதி ஆகும். இவ்யுத்தம் நான்கு வருடங்களுக்கு மேலாக நீடித்தது. இப்போர் ஏறத்தாழ உலகளாவிய ரீதியில் 9 கோடிக்கு மேலான யுத்த வீரர்களையும், 7 கோடிக்கு மேலான பொது மக்களையும் காவு கொண்டது.
உலக வரலாற்றிலே மிக அதிக அளவிலான மனித உயிர்களைப் பறித்தது இப்போர் எனப்படுகிறது. “அரிது, அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது” இக்கூற்றின் அர்த்தம் இப்போது புதுமாதிரியாகத் தொனிக்கிறது இல்லையா? இப்போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது 1918ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி ஆகும். இப்போரின் முடிவுத் தினத்தை நினைவு கூறுவது இப்போர்களின் அனர்த்தத்தை மனிதருக்கு நினைவூட்டி இத்தகைய போர்கள் தவிர்க்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் எனும் காரணத்திற்காக மேற்குலக நாடுகளில் இத்தினம் “நினைவுதினமாக” அனுட்டிக்கப்படுகிறது.
இதை ஆங்கிலத்தில் “Rememberance Day” என்பார்கள். இத்தினத்தில் அனைவரும் சரியாக காலை 11 மணிக்கு … அதாவது 11ம் மாதமாகிய நவம்பர் மாதம் 11ம் திகதி 11 மணிக்கு இரண்டு நிமிட மெள்ன அஞ்சலிகள் மறைந்து போன மனித உயிர்களுக்காக அனுட்டிக்கிறார்கள். இங்கிலாந்தில் இத்தினம் நவம்பர் மாதம் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அதாவது 11ம் திகதிகு மிகவும் அண்மையில் வரும் ஞாயிற்றுக்கிழமை அனுட்டிக்கப்படுவது வழக்கம்.
இதன் முக்கியத்துவம் என்னவென்றால் முதலாவது உலக மகாயுத்தத்தில் மடிந்தவர்கள் மட்டுமின்றி இரண்டாவது மகாயுத்தம் அடங்கலாக இன்றுவரை நடந்த அனைத்துப் போர்களிலும் உயிர்துறந்தவர்களுக்காக இந்நினைவு தினம் அனுட்டிக்கப்படுவதே. இத்தினம் அனுட்டிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்னதாகவே “பாப்பி” (Poppy) என்றழைக்கப்படும் ஒரு சிவப்பு நிறத்திலான மலரையொத்த ஞாபகச் சின்னம் ஒன்றை தம்மாலான நிதியையளித்து பெற்றுத் தத்தமது சட்டைகளில் பொருத்திக் கொள்வார்கள். இதன் மூலம் சேகரிக்கப்பட்ட நிதியானது யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் நிதி நிலையத்திடம் கையளிக்கப்படுகிறது.
இம்முறை, உலகமகாயுத்த ஆரம்பத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு இங்கிலாந்தில் “டவர் ஹில்” (Tower Hill) என்றழைக்கப்படும் சரித்திரப் பிரசித்திப் பெற்ற கோட்டையைச் சுற்றிய பாதையில் ஆழி போல் நிறைந்து காணப்படும் வகையில் இப்போரில் மறைந்த ஒவ்வொருவரையும் நினைவுபடுத்தும் வகையில் இப் பொப்பி மலர்கள் நாட்டப்பட்டு இப்பாதை இம்மலர்கள் நிறைந்த ஆழியாய்க் காட்சியளிக்கிறது. இதை மக்கள் திரளாகக் குவிந்து பார்வையிடுகிறார்கள்.
இத்தனை ஏற்பாடுகளும், இத்தனை ஆரவாரங்களும் எதற்காக? போரின் அகோரத்தை மனித இனம் உணர்ந்து மனிதாபிமானத்தை விட பெரியது இவ்வுலகில் எதுவுமே இல்லை எனும் உண்மையை உணர்ந்து கொள்வதற்காகத்தானே! இனியாவது “அரிது, அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது” எனும் வாக்கியத்தின் உண்மைப்பொருளை உணர்ந்து கொள்வோமா?
காலமே இதற்கு விடை பகரும் ஆசான்.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
இந்த நிகழ்வில் மற்றொரு நுட்பமும் இருக்கிறது. குழந்தைப்பருவத்திலேயே வருங்கால தலைவர்/தலைவிகளுக்கு நாட்டுப்பற்றும், வரலாற்று முக்கியத்வமும் தெரிய வந்து, அவர்களும் பங்கேற்றுக் கொள்கிறார்கள். பிறகு, ஆயுசு பரியந்தம் மறப்பதில்லை.