கே.ரவி

புயல் வந்ததா, முயல் வந்ததா?

ஒன்றும் வரவில்லை தம்பி. காத்துக் கொண்டிருக்கிறேன். காலம் மட்டும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. நான் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்? தெரியாது. ஆனால், காத்துக் கொண்டே இருக்கிறேன்.

சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்

கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்

என்று கம்பன் சொன்னது போல், நானும் ஓர் அசோக வனத்தில்….!

என் நூல்களைப் பொதுவாக நான் விரைவில் எழுதி முடித்து விடுவேன். “நமக்குத் தொழில் கவிதை” என்ற நூலை ஒரு மாதத்துக்குள் எழுதி முடித்ததாக ஞாபகம். ஆங்கிலத்தில் எழுதிய சட்ட நூல்கள் இரண்டும் அப்படித்தான். ஆனால் “இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு” என்ற நூல் எழுதி முடிக்கச் சில ஆண்டுகள் ஆயின. காரணம், பாடமாக நான் படிக்காத அறிவியல் பற்றிய நூல் அது. பல ஆங்கில நூல்கள் படித்துப் பயின்று நான் எழுத வேண்டியிருந்தது. அதே போல், “வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்” (Verses of Wisdom) என்ற ஆங்கில நூல் எழுதவும் பல ஆண்டுகள் ஆயின. அது நான் என் போக்கில் சிந்தித்து எழுதிய நூல் இல்லை. அதன் ஒவ்வொரு பகுதியையும் எழுதும் போதும், சிந்தனை முயற்சி அதிகம் குறுக்கிடாமல், உள்ளூக்கம் என்னைத் தூண்டக் காத்திருந்து, காத்திருந்து எழுதிய நூல் அது. அப்படித்தான் “ப்ரும்ம சூத்ரா த காஸ்மிக் கோட்” (Brahma Sutra, the Cosmic Code) என்ற ஆங்கில நூலைக் கடந்த பத்து ஆண்டுகளாக மேற்சொன்னவாறு காத்திருந்து, காத்திருந்து எழுதி வருகிறேன். அதை எழுதி முடிக்கும் பணியை இறைவன் எனக்குத் தந்திருந்தால், என் உடலும், மனமும் தளர்ந்து போவதற்குள், என் உலக வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருவதற்குள், அந்த நூலை எழுதி முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்.

நான் எதற்காக எழுதுகிறேன்? ஒரே பதில். எதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லையோ அதை எழுதுகிறேன். அதை எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை என்பதுதான் நான் அதை எழுத ஒரே காரணம்; நானறிந்த ஒரே காரணம்.

‘ப்ரும்ம சூத்ரம்’ என்ற மிகப் பழைய சமஸ்க்ருத நூலுக்கு ஆங்கிலத்தில் ஒரு விளக்கவுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கேன் ஏற்பட்டது? தெரியாது என்பதுதான் சரியான விடை.

நூல்கள் எழுதி அதன் மூலம் பேரும், புகழும் பெற்று வாழ வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. என்னுடைய எந்த நூலையும் ஓரிருவருக்கு மேல் எவரும் முழுமையாகப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. இருந்தும், நான் தொடர்ந்து எழுதுகிறேன். என் ஆயுட்காலத்துக்குள் இந்த நூல்களை நிறைய பேர் படிக்க வேண்டும் என்ற ஆசையோ, அவசரமோ எனக்கில்லை. இந்த நூல்களை ஈன்றெடுத்த காலமே அவை எங்கே, எப்போது போயடைய வெண்டும் என்பதை நிர்ணயம் செய்யும்.

ஆங்கிலத்தில் நான் எழுதிய ஒரு சட்ட நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மேடையில் பேசும் போது என் இனிய நண்பர், திரு.ப.சிதம்பரம் ஒரு கேள்வி கேட்டார். அவர் ஆங்கிலத்தில் கேட்ட அந்தக் கேள்வியை அப்படியே ஆங்கிலத்தில் இங்கே தருகிறேன்: Ravi, how do you find time to write such books ? என் ஏற்புரையில், ஆங்கிலத்தில் நான் சொன்ன பதில்:

I do not find time, but, Time finds me.

தமிழில், கிட்டத்தட்ட, இப்படிச் சொல்லிப் பார்க்கலாமோ?

காலத்தை நான் தேடிப் போவதில்லை. காலமே என்னைத் தேடி வந்து பற்றிக் கொள்கிறது.

எத்தனையோ அடியார்கள் இறைவனைத் தேடி அலைபாய்ந்திருக்கும் வரலாறுகளுக்கு இடையில் ஃபிரான்ஸிஸ் தாம்ஸன் என்ற ஆங்கிலக் கவிஞன் மட்டும் வேறுவிதமாகச் சொல்கிறான். அவனைத் தேடிவந்து துரத்துகிறதாம், சொர்க்கத்தின் வேட்டை நாய். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அவன் அலைபாய்கிறான். எங்கெங்கோ ஓடுகிறான். நட்சத்திர மண்டலங்களுக்கெல்லாம் சென்று புகலிடம் கேட்கிறான். எல்லாமே அவனை ஒளித்து வைத்துக் கொள்ள முன்வராத நிலையில், “ஐயோ, நான் தோற்றேன்” என்று அவன் வீழ்கிறான்! அவனைத் துரத்தி வந்த சொர்க்கத்தின் வேட்டை நாயான இறைவனே தன் உண்மையான புகலிடம் என்பதைக் கடைசியில் உணர்கிறான். “The Hound of Heaven” என்ற அந்த அருமையான ஆங்கிலக் கவிதை என்னை மிகவும் தாக்கிய படைப்புகளில் ஒன்று. அதன் தொடக்க வரிகளே அந்தக் கவிதையின் விறுவிறுப்புக்கும், ப்ரும்மாண்டமான அரங்க அமைப்புக்கும் கட்டியம் கூறுகின்றன:

I fled Him, down the nights and down the days;

I fled Him, down the arches of the years;

I fled Him, down the labyrinthine ways

Of my own mind; and in the midst of tears

I hid from Him, and under running laughter.

Up vistaed hopes I sped;

And shot, precipitated,

Adown Titanic glooms of chasmed fears,

From those strong Feet that followed, followed after.

But with unhurrying chase,

And unperturbèd pace,

Deliberate speed, majestic instancy,

They beat—and a Voice beat

More instant than the Feet—

‘All things betray thee, who betrayest Me’

இரவு பகலாக அவனிடமிருந்து தப்பிக்க நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். காலச் சந்திகளின் ஊடே, என் மனத்தின் நெறியற்ற குறுக்குப் பாதைகளின் ஊடே …. கண்ணீர்த் துளிகளுக்கிடையில் ஒளிந்து கொண்டேன்; ஏதோ ஒரு நம்பிக்கைத் தோற்றம் காட்டிச் சலசலக்கும் சிரிப்பலைகளினூடே விரைந்தேன். எதிர்பாராமல், திடீரென்று அச்சம் என்ற அதல பாதாளத்தில் வீழ்ந்தேன். ஆனால், நிதானமான விரட்டலில், நிலைகுலையாத கதியில், கணிக்கப்பட்ட விரைவோடு, கம்பீரமான அவசரத்தோடு என்னைத் துரத்தித் துரத்தி வரும் அந்த வலிமையான பாதங்கள்; அவற்றைக் காட்டிலும் ஓர் அவசர அருகாமையில் ஒலிக்கிறது ஒரு குரல்: ‘என்னை விட்டு ஓடும் உன்னை எல்லாமே கைவிட்டு விடும்.’

அடாடா! மலைக்க வைக்கும் சொல்லோவியம்!

அந்தக் கவிஞனைத் துரத்திய சொர்கத்தின் வேட்டை நாய் போல், காலம் என்னைத் துரத்தித் துரத்திப் பிடித்து எழுத வைக்கிறது என்று நான் சொன்னால் அது கொஞ்சம் அதிகப்பிரசங்கமாகத் தோன்றலாம்; ஆனால், வேறு விதமாக அதை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.

எழுத்தாளன் தான் வாழும் காலத்திலேயே புகழ் பெற வேண்டும் என்று விரும்புவதில் தவறெதுவும் இல்லை. ஆனால், புகழ் என்று நான் கருதுவதே வேறு.

பிரபலமாக இருப்பது வேறு. புகழ் என்பது வேறு.

இருவே(று) உலகத்(து) இயற்கை திருவேறு

தெள்ளியர் ஆதலும் வேறு

ஒருவருடைய பிராபல்யம் அவர் முகம் ஊடகங்களில், திரையில் தினம் வந்து கொண்டிருக்கும் வரைதான். 1940-களில், எம்.கே.தியாகராஜ பாகவதர் புகைவண்டியில் பயணம் செய்தால், ஒவ்வொரு நிறுத்தத்திலும் பாகவதரைப் பார்க்க நூற்றுக் கணக்கான ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு அலைமோதுவார்கள்; அந்தப் புகைவண்டி, ஏழெட்டு மணிநேரம் தாமதமாகத்தான் இலக்கைச் சென்றடையும்; ஆனால், அவரே திரையில் தோன்றாமல் ஏழெட்டு ஆண்டுகள் சிறை சென்று வந்த பிறகு, அவர் ரிக்க்ஷாவில் சென்றால் கூடப் பார்க்க ஆளற்ற நிலையும் உருவானது. திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்தே நாட்டின் மன்னனாக முடிசூட்டிக் கொண்ட நாடோடி மன்னன் எம்.ஜி.ஆரை இப்பொழுது ஏழெட்டு வயதான தமிழ்ச் சிறுவர்களுக்குத் தெரியவில்லை.

ஒரு வேடிக்கையான சம்பவத்தை இங்கே குறிப்பிட வேண்டும். 1972-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அது. அப்போது, நான் ‘மாணவரிஸம்’ என்ற பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். அந்தப் பத்திரிகைக்குப் பல ஊர்களில் மாணவப் பிரதிநிதிகள் இருந்தார்கள். ‘இதெல்லாம் ஒண்ணும் கொறச்சலில்லை’ என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறதே! சரி, சம்பவத்துக்கு வருகிறேன். டில்லி நகரத்துக்கான பிரதிநிதியாக இருந்த ராஜா என்ற நண்பர் அப்போது சென்னைக்கு வந்திருந்தார். அவர் சென்னையில் இருப்பதாகவும், என்னைப் பார்க்க விரும்புவதாகவும் தொலைபேசியில் சொன்ன போது, நான் ஏ.வி.எம். படப்பிடிப்பு நிலையத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். மாணவரிஸத்துக்குப் பேட்டி எடுக்க வேண்டும் என்ற என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, இயக்குநர் ஶ்ரீதர் என்னை அங்கே அழைத்திருந்தார். அப்போது அவர் “ஹீரோ 72” என்ற படம் எடுத்துக் கொண்டிருந்தார். அது சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘வைர நெஞ்சம்’ என்ற தலைப்போடு வெளியாகியது.

ஶ்ரீதர் சொன்னபடியே நான் அந்தப் படப்பிடிப்பு நிலையத்துக்குச் செல்லத் தயாரான போதுதான் ராஜாவின் அழைப்பு வந்தது. ராஜாவையும் அங்கேயே வரச் சொன்னேன். நான் போய்ச் சேரவும் அங்கே ராஜா எனக்காகக் காத்திருந்தான். அவனுக்குத் தமிழ் கொஞ்சம் தடுமாற்றம்தான். ஆங்கிலம், ஹிந்தி பேசுவான். டில்லியிலேயே பிறந்து, வளர்ந்தவன். அவனும், நானும் ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததும் அங்கே ஒரு தளத்தின் வெளி வாயிலில் இருவர் அமர்ந்திருந்தனர். ஒருவர் இயக்குநர் ஶ்ரீதர். அவர் அருகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு பிரபலமான பிரமுகர் அமர்ந்திருந்தார். என்னைச் சுட்டிக் காட்டி, “தயாரிப்பாளர் கல்யாணராமனின் புதல்வர்” என்று என்னை அந்த பிரபலமானவருக்கு ஶ்ரீதர் அறிமுகம் செய்து வைத்தார். ‑அவரும், வணக்கம் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, “வாத்யார் செளக்கியமா?” என்று என் தந்தை விஸ்வம் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு பதில் சொல்லிவிட்டு, அருகில் இருந்த ராஜாவிடம் ஶ்ரீதரைக் காட்டி, “இவர்தான் இயக்குநர் ஶ்ரீதர்” என்றேன். அவன் உடனே அருகில் முழு மேக் அப்பில் அமர்ந்திருந்த பிரபலமானவரைச் சுட்டிக்காட்டி அவர் யார் என்று கேட்டு விட்டான். எனக்கு பகீர் என்றது. இயக்குநர் ஶ்ரீதரோ எழுந்து நின்று கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். தன்னைத் தெரியாத ஒரு தமிழன் இருப்பது அந்தப் பிரபலமானவருக்கே, அதாவது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே வியப்பாக இருந்தது. நான் ராஜாவிடம் மெதுவாக “டேய், இவர்தாண்டா சிவாஜி” என்றதும், அவன் இன்னும் சத்தமாக “ஓ, நான் இவர் நடித்து ஒரு படம் ரொம்ப நாட்களுக்கு முன் பார்த்திருக்கிறேனே, பாசமலர் என்று நினைக்கிறேன்” என்றதும் இயக்குநர் ஶ்ரீதர் இன்னும் அடக்க முடியாமல் சிரித்ததை நினைத்துக் கொள்கிறேன். பிரபலத்தின் பலம் அவ்வளவுதான்!

அதே சமயத்தில், நாம் இன்னொன்றைக் கருதிப் பார்க்க வேண்டும். எந்தப் புலவனின் நூலைத் தமிழ்ச்சங்கம் அங்கீகரிக்கத் தயங்கியதோ, அந்தப் புலவனின் நூலை உலகப் பொதுமறை என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கொண்டாடி வருகிறோம்; எந்தக் கவிஞனின் இறுதி யாத்திரையில் இருபதுக்கும் குறைவானவர்களே கூடச் சென்றனர் என்று நாம் இன்னும் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ, அந்தக் கவிஞனின் கவிதைகளைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் லட்சக் கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் பயில்வதுடன், அவனுடைய வரிகளைச் சொல்லாமல் எந்த மேடைப் பேச்சும் நிறைவு பெறுவதில்லை என்ற நிலையும் உருவாகி விட்டது. பூமியைச் சுற்றிக் கதிரவன் வருவதாகச் சொல்லப்பட்ட புவிமையக் கருத்தோட்டத்தை மறுத்துக் கதிர்மையப் படிவத்தை முன்மொழிந்ததற்காக யார் சித்திரவதை செய்யப் பட்டானோ, அவனைத்தான் தற்கால அறிவியலின் தந்தை என்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உலகம் கொண்டாடுகிறது.

பிரபலமாக இருப்பது கொஞ்ச காலத்துக்குத்தான். புகழோ காலம் கடந்தது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் இசை வாழ்ந்து கொண்டிருக்கும்; விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கும். ரவிவர்மன், சில்பி போன்ற மேதைகளின் ஓவியங்களும், கோபுலுவின் கோட்டோவியங்களூம் எத்தனை ஆண்டுகளானாலும் ரசிக்கப் படும். கல்கி, நா.பா., இந்திரா பார்த்தசாரதி போன்ற வல்லுநர்களின் எழுத்தோவியங்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். இசைக்கவி ரமணன், வ.வே.சு., சு.ரவி ஆகியோர் கவிதைகள் போல் என் கவிதைகளும் காலம் கடந்து நிற்கும். ஒரு நம்பிக்கைதான்!

என் மூலமாக என்னென்ன படைப்புகள் உருவாக வேண்டும் என்பது இறைவன் திட்டமோ அவை உருவாகியே தீரும். காத்திருப்பது மட்டுமே என் பணி. கொக்குத் தவத்தில் காத்திருக்கிறேன். தக்க நேரத்தில் அதன் குத்தொக்கச் செயல்படுவேன்.

போதும் நிறுத்துவே. கொஞ்சம் வுட்டா ஒரேடியா அளந்து கொட்டிடுவீகளே! சிகாமணி அதட்டுகிறான். மனோன்மணி புன்முறுவல் பூக்கிறாள்.

ஏன், நான் காத்திருப்பதில் என்ன தவறு? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், மன்னிக்கவும், எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன், ஏன், பல யுகங்களுக்கு முன் நிகழ்ந்து முடிந்த பிறகும், கோடானு கோடி ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஆகாச கூடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அனுபவக் களங்கள் தம்முள் பிரவேசிக்க மீண்டும் ஒரு கவிஞன் வரும்வரைக் காத்திருக்க முடியும் என்றால், நான் காத்திருக்கக் கூடாதா? மனோன்மணி முணுமுணுக்கிறாள், 36 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஒரு பாடலை:

வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

வாழ்க்கை என்றேன் அதில் மூழ்கி விட்டேன்

அந்த

உலகத்திலே நான் எனக்கொரு வடிவம்

செய்ய நினைத்தேன் செயலிழந்தேன்

நிலவொளி கொண்டு கதிரவனைத்

தேடுகின்றேன் எங்கும் ஓடுகின்றேன்

வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

நினைவுத் திரையில் நிழல் தெரிந்ததும்

நீரில் வண்ணங்களைக் குழைத்தேன்

தூரிகையால் அதைத் தீண்டிய போது

திரையே நிழலென்று தெரிந்து கொண்டேன்

வானவில் போல நானிங்கே

வளைகின்றேன் பின்பு கலைகின்றேன்

வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

கனவுக் கடலின் நடுவினிலே நான்

காகிதப் படகாய் மிதந்திருந்தேன் – என்

கலங்கரை விளக்கங்கள் மூழ்கியதாலே

காற்றின் கருணையைப் பார்த்திருந்தேன்

கரைவரும் என்று காத்திருந்தேன்

காத்திருந்தே மெல்லக் கரைகின்றேன்

வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்

வாழ்க்கை என்றேன் அதில் மூழ்கி விட்டேன்

கூட்டிக் கழித்துப் பார்த்தால் வார்த்தைகள், வெறும் வார்த்தைகள்! இதைத்தானே சொன்னான் விட்ஜென்ஸ்டைன்! ஆனால் சொல் என்பது என்ன, அவ்வளவு எளிதானதா? ஆதியில் சொல் இருந்தது என்றுதானே விவிலியம் தொடங்குகிறது!

தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ

இதுதானே கம்பராமாயண சாரம்!

சொல் ஒன்று வேண்டும்

இதுதானே பாரதியின் பிரார்த்தனை!

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை

இதுதானே நம் அருமைக் கவிஞர் கண்ணதாசனின் கணிப்பு.

ம்! என் சொற்களுக்குள் ஏறிக்கொள்!

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *