கே. ரவி

என்னப்பா ‘ஸிந்தடிக் விஷன்’ என்றெல்லாம் சொல்லி மிரட்டுகிறாய்?

பொறு தம்பி, இன்னும் பெரிய, பெரிய வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் சுலபமாகப் புரிந்து கொள்ளும்படிச் சொல்கிறேன். ஒருங்கிணைந்த பார்வை என்பதைப் புரிந்து கொள்ள நாம் வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. நம் புலப்பாட்டு இயக்கமே போதும்.

உளவியல் துறையில் பயிலும் மாணவர்கள் புலன் நுகர்ச்சி எப்படி உண்டாகிறது என்பது பற்றிப் பல்வேறு கொள்கைகளைப் படிப்பார்கள். புலனுகர்ச்சிக் கொள்கைத் திரட்டு, ஆங்கிலத்தில், “தியரீஸ் ஆஃப் பெர்ஸெப்ஷன்” (Theories of Perception) என்று அழைக்கப் படுகிறது.

நமக்கு வெளியுலகத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் எல்லாமே ஐந்து புலன்கள் மூலமாகத்தான் கிடைக்கின்றன என்று பொதுவாக நம்பப் படுகிறது. திருவள்ளுவர் மிக அழகாக, அதுவும் காமத்துப் பாலில் உள்ள ஒரு குறட்பாவில், ஐந்து புலன்களையும் ஒரே வரியில் குறிப்பிட்டு விடுகிறார்:

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள

ஐந்து விதமான புலப்பாடுகள் ஏற்பட உதவும் சாதனங்களே கண், காது, நாக்கு, மூக்கு, சருமம் எனப்படும் தோல் ஆகிய ஐந்து பொறிகள். பொதுவாகப் புலநுகர்ச்சிக் கொள்கை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடாமல், காட்சிப் புலன் என்பது பற்றி மட்டும் குறிப்பாக இங்கே நோக்குவோம்.

‘காண்பது’ என்பதே காட்சிப் புலன். இந்தப் புலப்பாட்டை உண்டாக்கும் சாதனமே ‘கண்’ என்ற பொறி.

காட்சிப் புலப்பாடு எப்படி உண்டாகிறது? வெளியில் உள்ள ஒரு பொருள் மீது (அது நம் உடலாகவோ அதன் ஒரு பகுதியாகவோ கூட இருக்கலாம்), ஒளிக்கற்றைகள் விழுந்ததும், அந்தப் பொருளால் தடுக்கப்பட்டு மீளும் ஒளிக்கற்றைகள் நம் விழி வழியாக நுழைந்து, விழிக்குள் உள்ள ‘ரெட்டினா’ என்ற விழித்திரையில் விழுந்து, தம்மைத் தடுத்தனுப்பிய பொருளின் பிரதிபிம்பத்தை அந்தத் திரையில் ஏற்படுத்துகின்றனவாம்; அந்தப் பிரதிபிம்பத்தை இன்ன பொருளின் பிம்பம் என்று அறிவு நமக்கு அறிவுறுத்துமாம். இப்படித்தான் காட்சிப் புலப்பாட்டில் நாம் பொருள்களைப் பார்க்கிறோம் எந்று அறிவியல் விளக்குகிறது!

எல்லாம் சரி, ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கத் தவறி விட்டோமே! நாம் ஒற்றைக் கண்ணால் பார்ப்பதில்லையே! இரண்டு கண்களால் காண்கிறோம். ஆங்கிலத்தில் இதை பைனாகுலர் விஷன் (Binocular Vision) என்கிறார்கள். நாம் காணும் ஒவ்வொரு காட்சியும் இரண்டு விழித்திரைகளில் பதிவாகின்றன. ஆனால் ஒரு காட்சியைத்தானே பார்க்கிறோம்! நாம் ஒரு மாம்பழத்தைப் பார்க்கிறோம் என்றால், நம் இரண்டு விழிகளுக்கும் உள்ளே உள்ள ரெட்டினா என்ற இரண்டு திரைகளில் அந்த மாம்பழத்தின் இரண்டு பிரதிபிம்பங்கள் பதிவாகி, அந்த இரண்டு பிம்பங்களை நம் அறிவாகிய சாதனம் ஒரே மாம்பழமாக மீண்டும் ஒருமைப் படுத்தி நமக்குக் காட்சிப் படுத்துகிறது. வள்ளலார் கண்ணாடியில் முருகப் பெருமானைப் பல அம்சங்களும் ஒருங்கிணைந்த தணிகாசலமாகக் கண்ட ‘சிந்தடிக் விஷன்’, அதாவது, ஒருங்கிணைக்கப்பட்ட பார்வை பற்றி முன் பகுதியில் சொன்னதை நினைவு கூர வேண்டும். இரண்டு விழித்திரைகளில் தோன்றும் பிம்பங்களை ஒருங்கிணைத்து, ஒரே காட்சியாக்கி அதற்கு இடம், காலம் ஆகிய முத்திரைகள் குத்தி அறிவு நமக்கு அதை விளங்கத் தருகிறது. அப்படியென்றால், இடமும், காலமும் புறவுலகில் உள்ள பொருட்களைப் போல வேறு பொருட்களா, இல்லை அவை இரண்டுமே அகச்சாதனங்களா? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் ஒத்தி வைப்போம். இப்பொழுது விவாதம் இடம், காலம் பற்றியில்லை. அது, இரண்டு கண்களில் உள்ள திரைகளில் விழும் பிம்பங்களை ஒருமைப்படுத்தும் அகச்சாதனம் பற்றியது.

எவ்வளவு அழகாக, எளிமையாக நம் அருமைக் கவிஞர் கண்ணதாசன் பாடிவிட்டார்:

இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா

இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா

சாதாரணத் திரைப்படப் பாடல்தானே என்று எதையும் நினைத்துவிடக் கூடாது தம்பி. பாட வேண்டும் என்ற உந்துதல் மட்டுமே கவிஞனுடையது. அவனை ஆட்கொண்டு பாடுவதோ ஆகாச சக்தி! அது வேறு கதை.

சாதாரண விஷயங்களுக்குள் இருக்கும் அசாதாரணங்களைக் காண்பதே தரிசனம் எனப்படுகிறது.

மீண்டும் இம்மானுவெல் கன்ட் என்ற தத்துவ ஞானியைக் கூப்பிட வேண்டும். அவன் கேட்கிறான், ஐந்து புலன்கள் வழியாகத்தான் நீ எல்லா வெளி விவகாரங்களையும் நுகர்கிறாயா? நீ பார்க்கும் மாம்பழத்தின் மஞ்சள் நிறம், அதன் உருண்டை வடிவம், அதன் மணம், சுவை, மென்மை இவையெல்லாம் உன் ஐந்து புலப்பாட்டுச் சாதனங்கள் மூலமாகத்தான் வருகின்றன. ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அந்த மாம்பழம் ஓரிடத்தில் உள்ளதாக, ஒரு காலக்கட்டத்தில் உள்ளதாக, அதாவது இடம், காலம் என்ற இரண்டு குறியீடுகளோடுதானே உனக்குப் புலப்படுகிறது? எந்த இடத்திலுமே இல்லாத, எந்தக் காலப் பரிமாணத்துக்கும் உட்படாத எதையும் நீ புலனுகர்ச்சி செய்வதில்லையே. அந்த இடத்தையும், காலத்தையும் நீ எந்தப் பொறி மூலம், எந்தப் புலனாக அறிகிறாய்? இதுதான் அவன் கேட்ட கேள்வியின் சாரம்.

இன்னும் சற்று வேறு விதமாக நினைத்துப் பார்க்கலாம். நம் ஐந்து பொறிகளின் மூலம் ஐந்து வகைப்பட்ட புலப்பாடுகளாக நம் அகத்துக்குள் நுழைய வெளியுலகப் பொருட்களும், காட்சிகளும் முண்டியடித்துக் கொண்டு வருகின்றன. அவற்றை நம் அறிவு புரிந்து கொள்ளும் முன்பு, அவை இன்னின்ன பொருட்கள், காட்சிகள் என்று நம் அறிவு வகைதொகை செய்து உணர்ந்து கொள்ளும் முன்பு, ஒவ்வொரு பொருள், அல்லது காட்சியின் மீதும், அது புலன் நுகர்வு செய்யப்பட்ட இடம், காலம் என்ற இரண்டு ரப்பர் ஸ்டாம்ப் முத்திரைகளைக் குத்திப் பிறகுதான் அறிவின் சேமிப்புக் கிடங்குக்குள் அனுமதிக்கிறது. இந்த இடமும், காலமும் எந்தப் பொறி வழியாகவும் நுகரப் படுவதில்லை. இடமும், காலமும் பொறிகளின் மூலம் நுகரப்படும் எந்தப் புலப்பாடும் இல்லை. அப்படியென்றால் அவை என்ன? இடம், காலம் ஆகிய இரண்டு முத்திரைச் சாதனங்கள் அறிவின் கட்டுமானத்திலேயே உள்ளடங்கியவை. அந்தச் சாதனங்களோடுதான் அறிவே உருவாகிறது. இடம் என்பதையோ, காலம் என்பதையோ நாம் ஒரு நிறம், வடிவம், சுவை, வாசனை இப்படி ஏதாவது ஒரு புலன் நுகர்ச்சியாக அறிவதே இல்லையே! இவ்வாறு, புறத்தில் இருந்து, புலன் வழியாகப் பெறாத சில உள்ளீடுகள் அறிவின் கட்டுமானத்திலேயே உள்ளன, எனவே, புலன் நுகர்ச்சியைச் சாராமலேயே, பொறிகளின் வழியே பெறாத உள்ளீடுகள் அறிவின் அகத்தே உண்டு என்று சுட்டிக் காட்டிச் சூனிய வாதத்தை இம்மானுவெல் கன்ட் எதிர்கொண்டான்.

இவ்வளவு கனமான, கடினமான ஒரு தத்துவப் பிரச்சினையை இங்கே நான் குறிப்பிடக் காரணம் உண்டு. அதை விளக்குவதற்கு அந்த ஜெர்மானிய தத்துவ மேதை பயன்படுத்திய இரண்டு கலைச் சொற்களை இங்கே பரிச்சயம் செய்து கொள்ள வேண்டும். அவை ஆங்கிலத்தில், “ஆ ப்ரையாரி” (a priori) என்றும், “ஆ பாஸ்டீரியோரி” (a posteriori) என்றும் குறிக்கப் படுகின்றன. முதலில், இந்தக் கலைச்சொற்கள் எந்தக் கருத்துச் சூழலில், என்ன பொருளில், எதை விளக்கப் பயன்பட்டன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

‘நேற்று காலை 7 மணிக்கு நான் மக்கள் தொலைக்காட்சியில் பேசினேன்’ என்று ஒருவர் சொன்னதும் அதை இன்னொருவர் நம்ப மறுத்தால், அந்தத் தொலைக்காட்சியின் பதிவுகளைப் பார்த்து அக்கூற்று மெய்யா, பொய்யா என்பதை அறிந்து கொள்ள முடியும். நயாகரா நீர்வீழ்ச்சி கானடா, அமெரிக்க எல்லையில் உள்ளது என்ற கூற்றை யாரேனும் சந்தேகப் பட்டால், அதை நேரில் கண்டு தெளிய முடியும். ஐந்து புலன்களில் ஏதேனும் ஒன்றின் அல்லது சிலவற்றின் மூலமாக மட்டுமே நிறுவக் கூடிய கூற்றுகளை ‘ஆ பாஸ்டீரியோரி கூற்றுகள்’ என்றும், அப்படியன்றி, எந்தப் புலச்சான்றும் தேவைப்படாமலேயே ஏற்றுக் கொள்ளக் கூடிய கூற்றுகளை ‘ஆ ப்ரையாரி கூற்றுகள்’ என்றும் கன்ட் குறிப்பிட்டான். ஒரு பிரும்மச்சாரி திருமணம் செய்து கொள்ளாதவன் என்பதற்குப் புலச்சான்று எதுவும் தேவை இல்லை. காரணம், திருமணம் செய்து கொண்டிருந்தால் அவனை பிரும்மச்சாரி என்று சொல்ல முடியாதே. அதே போல், ஒருவன் இறந்து விட்டான் என்றால் அவன் இதயத்துடிப்பு நின்றிருக்கும் என்பதற்கு எந்தப் புலச்சான்றும் தேவையில்லை. இதயத் துடிப்பு நின்றால்தான் ஒருவன் இறந்து விட்டதாகச் சொல்ல முடியும். இதயத் துடிப்போடு, கிட்டத்தட்ட இறந்து விட்ட நிலையில் இருப்பதை மூளைச்சாவு (Brain Death) என்று குறிப்பிடும் வழக்கம் உண்டே தவிர அது மரணம் ஆகாது.

இன்னொரு உதாரணம் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சென்டி மீட்டர் விட்டம் உள்ள ஓட்டை போட்ட ஒரு தட்டில் நிறைய நாணயங்களைக் கொட்டினால் அந்த ஓட்டை வழியாகக் கீழே விழுந்துவிடும் நாணயங்களைப் பற்றி ஒரு செய்தி நிச்சயம் சொல்லி விடலாம். கீழே விழுந்த நாணயங்கள் ஒவ்வொன்றும் ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவான விட்டம் உள்ளவையாகத்தான் இருக்க முடியும். இதை அளந்து, புலப்பாட்டுக்கு உட்படுத்திப் பிறகுதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. புலப்பாடே தேவையில்லாமல் இந்தச் செய்தியை நிறுவ முடிவதற்குக் காரணம், தட்டின் கட்டுமானம், அதில் ஒரு சென்டி மீட்டர் விட்டமுள்ள ஓட்டை இருப்பது நமக்கு முன்கூட்டியே தெரிந்திருப்பதுதான்.

இவையெல்லாம் புலச்சான்று தேவைப்படாமலேயே நாம் ஒப்புக் கொள்ளும் ‘ஆ ப்ரையாரி’ கூற்றுகள். இடமும், காலமும் புலச்சார்பு இல்லாத ‘ஆ ப்ரையாரி’ கருத்தீடுகள் என்பதுதான் கன்டின் வாதம். இவ்வளவு சிரமமான, தர்க்க ரீதியான பாடத்தை எங்களுக்கு நடத்தி விட்டு, எங்கள் தத்துவப் பேராசான் முனைவர் டி.என்.கணபதி வகுப்பில் சொன்னதை நான் மறக்கவே முடியாது. வகுப்பில் அவர் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சொன்னது இதுதான்:

‘ஆ ப்ரையாரி’ என்றால் என்னவென்று புரிய வேண்டுமா. ஒளவையாரிடம் கேளுங்கள். “அன்னையும் பிதாவும் முன்னறிatr தெய்வம்” அதாவது, ஆங்கிலத்தில் சொன்னால், Mother and Father are a priori gods. எந்தப் புலன்விசாரணையும் இல்லாமல் நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தெய்வம் அன்னையும் பிதாவும். அவர்களே முன்னறி தெய்வம். அதாவது, புலன் விசாரணை மேற்கொள்ளும் முன்பே, நாம் முந்தி அறிந்து கொள்ளும், முன்னதாக அறிந்து கொள்ளும் தெய்வம்; a priori gods; முன்னறி தெய்வம்.

அடாடா! பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மன் மொழியில் இம்மானுவெல் கன்டும், இருபதாம் நூற்றாண்டில் அவனுடைய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நார்மென் கெம்ப் ஸ்மித்தும் சிரமப்பட்டுப் பக்கம் பக்கமாக விளக்க முற்பட்டதை இரண்டாயிரம் அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் ஒளவைப் பாட்டி எவ்வளவு அநாயசமாக, ஒரு முன்னறிவிப்பாகச் சொல்லிவிட்டார் என்பதை என் பேராசான் சொல்லச் சொல்ல மலைத்துப் போனேன்.

இதுதான் மறைமொழி என்பது. இங்கே திருவள்ளுவர் வாக்கை நினைவு படுத்திக் கொள்வோம்:

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்

மிகச் சுருக்கமாகச் சொல்லப் படும் மறைமொழி, அறிஞர் பெருமக்கள் நிறையச் சொல்லி அறிவுறுத்தும் உண்மைகளை எல்லாம் எளிதில் காட்டி விடும். இப்படித்தான் இந்தக் குறள் பொருள்படும் என்று நான் சொல்லவில்லை. இப்படியும் பொருள்படலாம். நிறைவாழ்வு வாழ்ந்து நீத்தாரின், அதாவது, வாழ்வாங்கு வாழ்ந்து உடல்நீத்த அருளாளர்களின் பெருமையை மறைமொழி காட்டிவிடும் என்றும் பொருள் கொள்ளலாம். திருக்குறளே மறைநூல் ஆயிற்றே!

avvaiyarசித்தர் இலக்கியங்களில் தோய்ந்து, போகர் பற்றியும், திருமூலர் பற்றியும், சிவவாக்கியர் பற்றியும் அற்புதமான பலநூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி அரும்பணியாற்றிக் கொண்டிருக்கும் 80 வயது இளைஞர் கணபதி என் தத்துவப் பேராசான் என்பதை நான் பெருமையாகக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா? அந்தப் பெருமையை, அவர் பாடம் நடத்தும் போது சுட்டிக் காட்டிய ஒளவையாரின் மறைமொழியே காட்டிவிடும். சரிதானே!

இந்த இடத்திலே ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். அன்னையும் தந்தையும் நமக்கு முன்னறி தெய்வங்கள், அதாவது நாம் எந்த விசாரணையும் மேற்கொள்ளத் தேவையில்லாமல் முந்தி அறியும் தெய்வங்கள். இது எவ்வளவு உண்மையோ, அதே போல, நம் ஒவ்வொருவரையும் தக்க தருணத்தில் ஏதேனும் ஒரு குருவின் வடிவில் பரம்பொருளே வந்து ஆட்கொண்டு வழிசெலுத்துவதால், குருவே நம்மை நமக்கு முன்பாகவே அறிந்த தெய்வம் என்பது மறுக்க முடியாத உண்மை. அன்னையும், தந்தையும் நாம் முன்னறிந்து கொள்ளும் தெய்வங்கள். குருவோ நம்மை முன்னறிந்து கொள்ளும் தெய்வம்.

‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த என் நண்பர் அமரர் சிவகுமார் எழுதிய ஒரு பாடல் கனமாக நெஞ்சில் வந்து அமர்கிறது :

எங்கிருந்தாலும் என்னை அறிபவன் ஒருவன்

எண்ணத்தினால் வளர்ப்பான் என்குல இறைவன்

சங்கல்பம் ஓய்ந்துவிடச் சரண்புகுந் திருந்தாலும்

சஞ்சித சாகசத்தால் புறம்புறம் திரிந்தாலும்

தன்கையில் பிள்ளையெனத் தாங்கும் அவன்பரிவு

தடம் மறந்தாலுமங்கே தேடிவரும் உறவு

என்னப்பா, காட்சிப் புலன் என்று தொடங்கி, தரிசனம் என்று பேசிவிட்டுக் கடைசியில் குருவிடம் அடைக்கலம் கொண்டுவிட்டாய் என்ற கேள்வி ஒலிக்கிறது. சித்தன் போக்கு சிவன் போக்கு!

என் குருநாதர், டாக்டரிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன்: சீடன் குருவைத் தேட வேண்டுமா, குரு சீடனைத் தேடி வருவாரா?

அவர் சொன்ன பதில்: யார் தன் குரு என்று தேர்ந்தெடுக்கும் அறிவு சீடனிடம் இருக்கக் கூடுமோ? அந்த அறிவு அவனுக்கு இருந்து விட்டால் அவனுக்குப் பாடமே தேவையில்லையே. குருதான் சீடனைத் தக்க தருணத்தில் அடையாளம் கண்டு வரவேண்டும்.

நான் மேலும் கேட்டேன்: இராமபிரானுக்கு வசிஷ்ட முனிவரும், அகத்திய முனிவரும் குருநாதர்களாக உபதேசம் செய்திருக்கிறார்கள் என்றால், அவர்களைக் காட்டிலும், பரம்பொருளாகிய இராமபிரான் அறிவில் குறைந்தவனா?

டாக்டர் கண்ணை மூடிக் கொண்டு சிறிது நேரம் மெளனமாக இருந்தார். அப்போது நாங்கள் இருவரும், சென்னை சென்ட்ரல் ரயில்நிலயம் அருகில் இருந்த ‘த செளத் இண்டியா அத்லெடிக் அஸோஸியேஷன்’ (SIAA) என்ற சங்கத்தின் வளாகத்தில் ஓர் அறையில் தனியாக அமர்ந்திருந்தோம். 1986-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். சிறிது நேர மெளனத்துக்குப் பின் அவர் கண் திறந்தார். அப்பப்பா, அதில் தெரிந்த ஒரு கோபச் சிவப்பை நான் மறக்கவே முடியாது. பயந்து விட்டேன்.

அவர் பேசினார்: பெரியவன், சிறியவன் என்றெல்லாம் பேசக் கூடாது. தக்க தருணத்தில் பிரசவம் பார்த்துக் குழந்தையை வெளியே கொண்டுவரும் மிட் வைஃப் மாதிரி, ஒவ்வொரு ஜீவனுக்குள்ளும் இருக்கும் மகத்துவத்தை வெளிக்கொண்டு வரத் தக்க தருணத்தில் குருநாதன் வருவான். அது கடவுளின் ஆக்ஞை. கடவுளே அவதாரம் எடுத்து வந்தாலும் அவருக்குள் இருக்கும் மகத்துவம் வெளிப்பட ஒரு குருநாதன் கண்டிப்பாகத் தேவை.

நான் மெளனமானேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அவர் என்னைப் பாடச் சொன்னார். மனத்தில் இருந்து பொங்கி வந்த சொற்களைச் சிந்து பைரவி ராகத்தில் பாடினேன்:

நினைத்தேனா இங்கு வருவேன் என்று

ஜென்மங்கள் ஆயிரம் எடுப்பேன் என்று

நினைத்தேனா இங்கு வருவேன் என்று

… … ..

… … …

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *