என்னுலகம் 2300
சந்தர் சுப்பிரமணியன்
உலகதன் ஓட்டம் போலே ஓடிடும் நாள்கள் எல்லாம்!
நிலையெலாம் மாறும், ஏதும் நிரந்தரம் ஆகாப் போதில்,
புலருமிந் நாளை ஒட்டிப் போகுமுந் நூறாம் ஆண்டில்
நிலத்தெழு மாற்றம் என்னே? நினைப்பதன் பதிவே இப்பா! (1)
வளருமந் நாளில் மண்ணை வகுத்திட நாடென் றேதும்
அளவிலை, எல்லை யென்னும் அவையெலாம் மாறி ஒன்றாய்
உளநிலம், உள்ளோர் வாழ்வை உழற்றிடும் போருக் கென்றோர்
களமிலா உலகம், காதல் கருத்தினில் உறையும் காலம்! (2)
குழவியை வயிற்றில் ஏந்திக் கொடுக்குமக் காலம் எல்லாம்
பழைமையாய் மாறிப் போகும்; பண்டமாய் ஆய்வுச்சாலைக்
குழலிடை அண்டம் விந்து கொண்டதை வளர வைக்கப்
பழகிடும் முறையே எங்கும் பழக்கமாய் ஆகும் காண்க! (3)
வருவது பெண்ணா ஆணா? வளர்ப்பவர் விருப்பம் ஆகும்!
மரபணுத் தேர்வின் மூலம் வருகிற பிணிகள் எல்லாம்
கருவினில் உள்ள போதே கண்டவை நீங்கச் செய்யும்
மருத்துவம் கொண்ட தாலே மானுடம் செழிக்கும் மேலும்! (4)
சிறப்புடை மரபைத் தேர்ந்து செம்மையை மேலும் கூட்டித்
திறமையை குவிக்கச் செய்து தேர்ந்திடும் துறையைச் சார்ந்த
அறிவிலே ஆழம் காணும் அமைப்பினை மூளை சேர்த்துப்
பிறப்பதை வளமை ஆக்கும் பெருஞ்செயல் எளிதாம் அந்நாள்! (5)
உடல்நிலை ஆய்ந்து காணும் உப்புடன் கொழுப்பும் மற்ற
திடநிலைக் கூறுக் கேற்ப தெரிந்துதம் உணவின் ஊட்ட
எடைதனை சமச்சீர் ஆக்கி எழுதிய வாய்பா டொத்த
கடையுண வொன்றே நன்றாய்க் கருதுவர் அந்நாள் காண்க! (6)
அருஞ்சுவை அதுநா காணும் ஆழ்மனப் பழக்கம் அன்றோ!
ஒருதனி வேதிச் சேர்வை உணவுடன் நாவுக் கென்றே
தரும்விதம் புதிதாய்த் தோன்றும்! தனிநபர் சுவைக்கும் போக்கில்
வரும்பல விதமாய்ச் சேர்வை! வளர்ச்சியென் றிதையே காணும் (7)
தணலிடை உயிரை வாட்டி தான்பெறும் வாய்ச்சு வைக்காய்
கணமொரு விலங்கை கொல்லும் கடைநிலை இலையென் றாகும்!
மணமுடன் சுவையும் சேர்த்து மகிழ்ச்சியை ஊட்டும் நல்ல
உணவென இறைச்சித் துண்டம் உருபெறும் குளோனிங் ஊடே! (8)
தாவரம் அழிக்கும் செய்கை தவறென வாகும் அந்நாள்!
பூவொடு பழம்காய் யெல்லாம் பறிப்பது குற்றம் ஆகும்!
நாவினுக் கேற்ற தாக நற்சுவைப் பொருளை எல்லாம்
மேவிட குளோனிங் ஒன்றே முறையென வாகும் காண்க! (9)
மரங்களின் அடர்த்தி தன்னை மதிப்பிடும் கருவி கொண்டு
நிரம்பிய காடே எங்கும் நிலைத்திட வழிகள் சேர்க்கும்;
தரமுடை கருவி, திட்டம், தனிநிலை இயக்கம் கொண்டு
பரவிடும் பசுமை தன்னை பரப்பிடும் உலகம் எங்கும்! (10)
விலங்குகள் வாழும் காட்டில் விதிபல மனிதர்க் காகும்!
உலவிடத் தடையாம் அங்கே! உடைமைகள் மனிதர்க் கில்லை!
அலைக்கதிர் வீச்சால் மாஆர் அடர்த்தியை அறிவால் ஆய்ந்து
தலைமுறை காக்கும் செய்கை சாதனை படைக்கும் காண்க! (11)
திடநிலைச் சுவர்கள் எல்லாம் தீதென உலகம் காணும்!
இடமது விரியும், மண்ணால் எழும்பிய சுவரே எங்கும்!
அடர்நிலை நகரம் மாறி அண்மையில் கிராமம் சேரும்!
தொடர்ந்திடும் வாழ்வில் மாசு தொலைந்திடும்; தூய்மை எங்கும்! (12)
ஒளிவழித் தொடர்பை ஏற்கும் உலகுடை பணிகள் யாவும்;
களப்பணி குறையும்; வீட்டுக் கட்டிலில் அலுவல் யாவும்;
தெளிவினைப் பெறுவ தற்காய் செய்திகள் இணையம் தன்னில்
அளவிலா தமையும்; வாழ்க்கை அமைந்திடும் அமைதி யோடே! (12)
செப்படி வித்தை போன்றே தொலைவுள சுற்றத் தாரின்
முப்பரி மாணப் பிம்பம் முழுமையாய்க் கண்முன் தோன்றும்!
அப்படி ஆகும் காலம் அந்நியம், தூரம் யெல்லாம்
ஒப்பிலை என்றாய் வையம் ஒருங்கிடும்; ஒன்றென் றாகும்! (13)
சேதியைக் காட்சி யாகச் சேர்த்திடும் நுட்பத் தாலே
பாதைகள் குறைந்து போகும்! பயணமும் அரிதாய்ப் போகும்!
வீதியே இல்லாப் போதில் விரைந்திடும் வாழ்வே தில்லை!
ஆதியில் மனிதர் கண்ட அமைதிசேர் வாழ்வே மீளும்! (14)
இயற்கையை ஒத்த வாழ்வில் இலையினி உணவுப் பஞ்சம்;
வயிற்றெழும் பசியைப் போக்க வளமுடை மண்ணே ஈயும்!
முயற்சியை மேலும் காட்ட முயல்பவர் இணையம் தன்னில்
வயப்படும் வாய்ப்பை ஏற்று வளமையைக் காண்பர் அந்நாள்! (15)
மண்மிசை விளையா டல்கள் மற்றொரு புதுமை காணும்!
எண்திசை யாவும் பிம்பம் எழு மின் மன்றின் ஊடே
கண்வளர் காட்சி யோடு கலந்துளம் காயம் நீக்கி
எண்ணமாய் எழுந்து நீழல் இயல்பெனும் மாயை ஏற்கும்! (16)
பிறப்பினால் சமய மேற்கும் பிழையினி மறைந்து போகும்!
முறைப்படி சிறுவர் வாழ்க்கை முடியுமப் பொழுதில் எல்லா
மறைகளும் ஓதிப் பார்த்து மனத்தெழும் பேச்சைக் கேட்டு
நிறையுளத் தோடொன் றேற்கும்; நீக்கிடும் நிலையும் பார்க்கும்! (17)
வாயிலங் கெட்டோ டென்கோண் வடிவிலோர் மன்றம் ஊரின்
கோயிலாய் அமையும்; மையம் கொள்ளிடம் விண்ணை நோக்கும்!
தாயெனக் காக்கும் ஏகம் தன்னுரு திரிந்து வெவ்வே
றாயினன் என்னும் உண்மை அனைவரும் அறிந்தே வாழ்வார்! (18)
ஒவ்வொரு மொழியும் எழுத்தை, ஒன்றிலை, இரண்டாய்க் கொள்ளும்,
செவ்வியல் வழக்க மென்றும் சேர்ந்தமை வடிவ மென்றும்!
இவ்வியல் பாலிம் மண்ணின் எழுத்தெலாம் இணையும் அந்நாள்!
அவ்விதம் ஆகு மாயின் அனைவரின் மொழியும் ஒன்றே! (19)
எத்தனை எழுச்சி பெற்றும் இயல்பினில் ஏழ்மை செல்வம்
இத்தர வேற்று மைகள் இயற்கையாய்த் தொடரும் போதும்
நித்தியத் தேவை யாவும் நிலைபெறக் கிடைக்கச் செய்யும்
அத்தகு நிலையை மாந்தர் அனைவரும் அடைவர் அந்நாள்! (20)