நவம்பர் 3, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  ‘திரு. இன்னம்பூரான்’ அவர்கள்

innamburan

 

சங்க கால தமிழின் பெருமைகளை நாமும் உணர்ந்து நமது இளைய தலைமுறைக்கும் தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறும் பொருட்டு, கடந்த மாதம் அக்டோபர் 2014 இல், சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் , நடத்திய சிட்னியின் சங்கத் தமிழ் மாநாட்டில் “சங்கத்தமிழ் மூன்றும் தா !” என்ற கட்டுரையை வழங்கிய, ‘திரு. இன்னம்பூரான்‘ என்று அன்புடன் அழைக்கப்பெறும் மூத்த இளைஞரை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்த சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா என்ற இவர், இன்னம்பூரான் என்ற புனைப்பெயரில் எழுதி வருபவர். இவர் வல்லமை வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவரே. வல்லமை இதழின் நலம் விரும்பியாக, வல்லமை இதழின் வளர்ச்சியில் ஆர்வமுள்ளவராகப் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர். வல்லமையாளர் விருது தேர்வுகள் செய்து வந்த திரு. திவாகர் அப்பணியில் இருந்து விடுப்பு பெற்ற காலங்களில் தற்காலிகமாக அப்பொறுப்பை ஏற்று விருது வழங்குதலை தொய்வின்றி நடத்திச் சென்று, வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி மகிழ்ந்திருக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளாக சற்றொப்ப 150 பதிவுகளை வல்லமை வாசகர்கள் படித்து மகிழ அளித்துள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க, சிறப்பு வாய்ந்த கட்டுரைத் தொடர்கள் சில: தணிக்கை என்றொரு முட்டுக்கட்டை, கனம் கோர்ட்டார் அவர்களே, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், ககன சாரிகை, நீயும் நானும் விஞ்ஞானமும், என்னத்தைச் சொல்ல! போன்றவையாகும்.

பெரும்பான்மையான இவர் கட்டுரைகளின் பின்னணி அரசின் நடவடிக்கைகளை ஆராய்வதாகவும், குறை கண்ட இடத்து விமர்சிப்பதாகவும் அமைவதற்கு அவராற்றிய அரசுப்பணியின் பின்புலமே காரணம். திரு. இன்னம்பூரான் இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். அந்த அடிப்படையில் அரசின் தணிக்கைத்துறையின் நடவடிக்கைகள், ஊழல் கண்டவிடத்து அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் பின்னணி, அவற்றையொட்டி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் முக்கியத்துவம் போன்றவற்றை ஆராய்வதாகவும், அரசு மேற்கொள்ளும் மெத்தனமான நடவடிக்கைகளைக் கண்டிப்பது, அரசு நிதியறிக்கைகளை ஆக்கபூர்வமாக அலசுவதாகவும் பல கோணங்களில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

வல்லமையில் மட்டுமின்றி தினமலரின் உரத்த சிந்தனை பகுதியில், “உயிர் பெறுமா நீதியின் குரல்” என்ற கட்டுரையையும், தமிழ் வெப்துனியா செய்தித் தளத்தின் “கருத்துக்களம்” பகுதியிலும் எழுதிவரும் எழுத்தாளர்களில் ஒருவர் திரு. இன்னம்பூரான்.

innamburan3

தமிழின் மீது தணியாத  ஆர்வம் கொண்டவர். இவரது தமிழார்வத்தின் காரணமாகதமிழிற்கான  மிக முக்கியப் பணிகளாக இவர் கருதி இன்றும் தொடர்வது, அரிய பழந்தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்து அவற்றை அடுத்த தலைமுறையினரும் பயனுற சேமிப்பதும், இளைய தலைமுறையினரின் கல்விக்காக இணையவழி கல்வித் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்கொள்வதுமாகும். வல்லமையில் மாணவர் தளம்: தமிழார்வம் என்றும் ஒரு கட்டுரைத் தொடர் எழுதியுள்ளார். தமிழ் மரபு அறக்கட்டளையுடன் இணைந்து நூல் மின்னாக்கங்கள் செய்வதையும், “அன்றொரு நாள்” என்ற வரலாற்று நிகழ்வின் தொகுப்புகளை எழுதுவதையும் தொடர்ந்து வருகிறார். அத்துடன், தனது வலைப்பூவிலும் தனது கருத்துக்களைப் பதிவு செய்து வருகிறார்.

innamburan2ஓய்வு பெற்றபின் நிர்வாக மேல்நிலைக் கல்வி மையங்களில் பணி செய்வதும், அரசு தொடர்பான ஆலோசனைகளில் பங்கு பெறுவதும் எனப் மற்ற பிற பொதுத்தொண்டுகள் ஆற்றி வரும் திரு. இன்னம்பூரான் மத்திய அரசின் பணி தேர்வாணையத்தின் ‘இந்தியஅரசின் ஆட்சி நிர்வாகப் பணி’ (ஐ.ஏ.எஸ்.) தேர்வுகளின் இறுதிநிலை நேர்காணல் குழுவின் அங்கத்தினராக பணியாற்றி அந்த அனுபவமும் பெற்றவர். இவர் நேர்காணல் பயிற்சி அளித்த மாணவர் சிலர் ஐ.ஏ.எஸ். தேர்விலும் வெற்றி பெற்றுள்ளார்கள். அழகப்பா பல்கலைக் கழகத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, இந்தியஅரசின் ஆட்சி நிர்வாகப் பணி தேர்வு பற்றி அப்பல்கலைக்கழக மாணவர்களுக்கான கலந்தாலோசனை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மேலும், இத்தகவல்கள் மாணவர்களுக்கு பயன் தரும் என்ற நோக்கில், “ஐ. ஏ. எஸ். தேர்வில் வெற்றி பெறுவது எப்படி?” என்ற நூலை பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வழி வெளியிட்டுள்ளார். இது ஐ. ஏ.எஸ். தேர்வு எழுதுபவர்களுக்கு உதவும் நோக்கில் தகவல்கள் வழங்கும் ஒரு கையேடு.

எண்பது வயதைக் கடந்தாலும் இன்றும் கற்பதிலும், தமிழ் மீது கொண்ட தீராத ஆர்வம்காரணமாக  திரு. இன்னம்பூரான் தமிழில் இளங்கலை பட்டப்படிப்பையும் முடித்து, முதுகலை பட்ட மேற்படிப்பு, தமிழில் முனைவர் பட்டம் என்ற இலக்குகளை நிர்ணயித்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். “சங்கத்தமிழ் மூன்றும் தா ” என்ற கட்டுரையை சிட்னி தமிழ் மாநாட்டிற்கு வழங்க இவர் எடுத்துக்கொண்ட ஆர்வத்தின் மூலம் மனதிற்கு வயது இல்லை என்று நிரூபித்துள்ளார். உற்சாகத்துடன் செயலாற்றி இளைய தலைமுறையினருக்கு முன் மாதிரியாகத் திகழும் திரு. இன்னம்பூரான் அவர்களை வல்லமையாளர் விருதுக்குத் தேர்ந்தெடுத்துப் பராட்டுவதன் மூலம் வல்லமை விருதும், வல்லமை இதழும் பெருமை அடைகிறது.

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. வல்லமையாளராக தேர்வு செய்யப்பட்ட ஐயா இன்னம்பூரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    குறிப்பிட்ட இலகா அரசு அதிகாரிகளின் செயல்பாடும், அதில் அரசின் போக்கும் இவரின் கட்டுரையில் காணலாம். அதை கண்டிப்பது மட்டுமில்லாமல் அது தீர  அதற்கான வழி வகையும் அவர் எழுதுவது மிச்சிறந்த திறமையான அதிகாரி என்பதற்கு அவைகள் சான்று. தொடரட்டும் அவரின் எழுத்துப்பணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *