இந்த வார வல்லமையாளர் – ஆர்த்தி நிதி
நாங்குநேரி வாசஸ்ரீ
சுவீடன் நாட்டின் ஹெல்சின்பர் (Helsingborg) நகரில், 2019 ஜூன் 4 ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை நடைபெற்ற ஏழாவது உலக பவர்லிஃப்ட்டிங் போட்டியில் 63 கிலோ எடைப் பிரிவில் ஆர்த்தி நிதி, வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங், மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Dead lift) ஆகிய மூன்று கட்டங்களைக் கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையைத் தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.
ஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சுவீடனில் நடைபெற்ற தொடரில், 20-22 வயதுக்கு உட்பட்ட, 63 கிலோ எடையுள்ள பெண்களுக்கான பிரிவில் அமெரிக்கா சார்பில் போட்டியிட்ட ஆர்த்தி நிதி, வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி, இந்த பவர்லிஃப்ட்டிங் போட்டியின் ஸ்குவாட் பிரிவில் உலகச் சாதனையோடு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
அமெரிக்காவிலேயே பரதநாட்டியம் கற்றுக்கொண்டு அரங்கேற்றம் செய்த ஆர்த்தி, எப்படி கல்லூரிக்குச் சென்ற பிறகு பவர்லிஃப்ட்டிங் துறைக்குள் நுழைந்தார் என்று பிபிசி செய்தியாளரிடம் அவர் பேசியுள்ளார். “மேல்நிலை பள்ளிக்கல்வி வரை பரதநாட்டியம் பயின்ற நான், இடையில் ஓராண்டிற்கு அதை நிறுத்தியதால் உடல் எடை அதிகமானது. அதைத் தொடர்ந்து, உடல் எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சிக் கூடத்திற்கு சென்றேன்; உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றியமைத்து உடற்கட்டில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கினேன். அதைத் தொடர்ந்து, கல்லூரியில் சேர்ந்த பிறகு, பயிற்சியாளர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த அறிவுரையின்படி, பவர்லிஃப்ட்டிங்கில் ஈடுபடத் தொடங்கினேன்” என்று தனது பயணத்தின் தொடக்க காலத்தை விவரிக்கிறார்.
தனது வெற்றியைக் குறித்து அவர் பேசுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக பவர்லிஃப்ட்டிங் போட்டிகளுக்காக பயிற்சி செய்து வரும் நான், இவ்வளவு விரைவில், பவர்லிஃப்ட்டிங் விளையாட்டின் ஒலிம்பிக்காகக் கருதப்படும் இந்தத் தொடரில் அமெரிக்காவுக்காகப் பதக்கத்தை வெல்வேன் என்று நினைக்கவில்லை. எனது கடுமையான, விடாப்பிடியான பயிற்சி, எனது நான்காண்டுக் கால கனவை நிறைவேற்றியுள்ளது என்று கூறியுள்ளார்.
தான் ஒரு தமிழ்ப் பெண் எனப் பெருமை கொள்ளும் ஆர்த்தியின் தந்தை முனைவர் கருணாநிதி, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தாயார் சாந்தி அம்மையார், நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் புலம் பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் இந்தத் தம்பதிகள், நம் தமிழ்ப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தங்கள் மகனுக்கும் மகளுக்கும் ஊட்டி வளர்த்துள்ளனர்.
இந்தியா, அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பெண்களை அவர்களது சொந்தக் குடும்பத்தினர், குறைவாக மதிப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்தச் சமூகம் நினைப்பதைப் போன்று பெண்கள் வலுவற்றவர்கள் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் எந்தப் பெண்ணாலும் சாதிக்க முடியும். தனக்கு மிகவும் பிடித்த விடயத்தைச் செய்ய பெண்களுக்குக் குடும்பத்தினர் ஆதரவளிக்க
வேண்டும், நினைத்ததைச் செய்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்று கூறும் ஆர்த்தி, பவர்லிஃப்ட்டிங் வீராங்கனையாக மட்டுமின்றி, பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பொறியாளராகவும் பணிபுரிகிறார்.
தற்போது வரை ஒலிம்பிக்கில் சேர்க்கப்படாத பவர்லிஃப்ட்டிங், வருங்காலத்தில் அங்கீகரிக்கப்பட்டால், ஒலிம்பிக்கில் அமெரிக்காவின் சார்பாக பங்கேற்று பதக்கம் வெல்வதே தனது நீண்டகால இலக்கு என்கிறார் ஆர்த்தி.
வீரத் தமிழ்ப் பெண் ஆர்த்தியை இந்த வாரத்தின் வல்லமையாளராக அறிவித்து மகிழ்கிறோம். அவரது சாதனைப் பயணம் தொடர, வல்லமை மின்னிதழ் சார்பில் உளமார வாழ்த்துகிறோம்.
நன்றி – பிபிசி