63 நாயன்மார்கள் வரலாறு – 17. திருநாளைப்போவார் நாயனார்

நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்

போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்

மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்

மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே

 

    நன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ

        நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப்

    பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப்

        பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி

    வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த

        வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற

    மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்

        விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.

சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்ட தொகையில் செம்மையே திருநாளைப் போவாருக்கும் அடியேன் என்று போற்றும் நந்தனார், சோழமண்டலத்தில், கொள்ளிட நதியின் அருகிலுள்ள மேற்காநாட்டில், நீர்வளமும், நிலவளமும் மிக்கதாய் விளங்கிய ஆதனூர் என்ற சிற்றூரில் புலையர் குலத்தில் அவதரித்தவர்.

பகர்ந்துலகு சீர் போற்றும்

  பழைய வளம் பதியாகும்

திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன்

  செழுமணிகள் திரைக் கரத்தால்

முகந்து தர இரு மருங்கும்

  முளரி மலர்க் கையேற்கும்

அகல் பணை நீர் நன்னாட்டு

  மேற்காநாட்டு ஆதனூர்

வயல் வளம் நிறைந்த இவ்வூரில் வானுயர்ந்த மாட மாளிகைகள் நிறைந்தும், செல்வத் திருமகளின் பேராசிகளினால் கொழிக்கும் பேறு பெற்ற மக்கள் வாழும் ஊர் என்று போற்றிப் புகழ்கிறார் சேக்கிழார் பெருமான்.

வயல் வளமும் செயல் படு

  பைந் துடவையிடை வருவளமும்

வியலிடம் எங்கணும் நிறைய

  மிக்க பெரும் திருவினவாம்

புயலடையும் மாடங்கள் பொலிவு

  எய்த மலியுடைத்தாய்

அயலிடை வேறு அடி நெருங்கக்

  குடி நெருங்கி உளது அவ்வூர்.

நந்தனார் பிறந்த ஆதனூர் எனும் அவ்வூரின் செல்வச் செழிப்பை மட்டுமல்லாமல், அவ்வூரின் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இடங்களான புயல் தங்கும் இடங்களும் நல்கிய குடிசைகளையும், புலைப்பாடியின் அழகினையும்  காட்சிப்படுத்திச் சமுதாய வேறுபாடுகளை மன வேதனையுடன் சுட்டிக் காட்டுவதையும் காணலாம்.

இத்தகைய சேரிப்பகுதிகளின் புலையர்களின் ஊர்த்தலைமையாக பதவியேற்று ஒப்பற்ற தலைவராக வாழ்ந்தவர். உலகியல்பின்படி இல்லாமல் சிவன்பால் அதீத பக்தி கொண்ட செம்மையான சிந்தை கொண்டவர். சிவபெருமானின் மீது சிறுவயது முதலே மாறாத பக்தி கொண்டு திகழ்ந்தவர், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குத் தம்மால் இயன்ற அளவு அருந்தொண்டு ஆற்றி வந்தார். இறைவனின் கோவில்களுக்கு நேரடியாகச் சென்று சிவதொண்டு புரிய முடியாதபோது தம்முடைய இயற்தொழிலொடு இணைந்த சிவதொண்டினை செய்து வந்தார். கூலி வேலை செய்தும், முரசுகளுக்கு தோல் தைத்து கொடுத்தும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, சிவபெருமானுடைய கோயில்களுக்கு பயன்படுத்தும் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார், ஆராதனைப் பொருளான கோரோசனை போன்ற நறுமணப் பொருள்களை இறைவனுக்காகக் கொடுப்பதற்காக, நந்தனார் ஒவ்வொரு நாளும் கோயில்களை நோக்கிச் செல்வார். கோயில் வாயிலில் நின்று, தாம் கொணர்ந்த பொருட்களைக் கொடுத்துவிட்டு, அங்கு நின்றபடியே கோயிலைப் பார்த்து ஆடிப் பாடி மகிழ்வார். கோயிலையும், கோபுரத்தையும் தரிசித்து இன்பமுறுவது அவருக்கு மகிழ்ச்சி.

நந்தனாருக்கு மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புன்கூரில் உள்ள சிவலோகநாதரைத் தரிசித்து, தம்மால் இயன்ற அளவு திருப்பணிகள் செய்து மகிழ வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. பாடல் பெற்ற தலமான திருப்புன்கூர், வைத்தீசுவரன் கோயில் என வழங்கு புள்ளிருக்கு வேளூர்க்கு 2 மைல் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம். புன்கு எனும் புங்க மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட தலம் என்பதால் இது புன்கூர் எனப் பெயர் பெற்றது. நந்தனார் இக்கோயிலை அடைந்தவுடன் அன்பின் மேலீட்டால் உள்ளம் உருகி, ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோட திருக்கோயிலைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து ஆடிப்பாடி கோயில் முன் நின்றார்.

அப்போது சிவலோகநாதரின் முன்னால் இருந்த பெரிய நந்தி சிவலோகநாதரைப் பார்க்க முடியாமல் மறைத்துக் கொண்டு இருந்தது. நந்தனார் தாம் தேடி வந்த சிவபெருமானின் தரிசனம் கிடைக்காமல் போய்விடுமோ என்று கண் கலங்கி வேதனையுடன் நின்றார். பின்னர் வாசலிலிருந்து திருப்புன்கூர் ஈசனை நினைத்து மனமுருகிப் பாடினார். மனம் கனிந்த சிவபெருமான் நந்தனார் மீது இரக்கம் கொண்டு சற்று வலதுபுறம் விலகி இருக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். இறைவனின் ஆணைப்படி நந்திதேவர் விலகியதும் நந்தனாருக்கு சிவலோகநாதரின் தரிசனம் அற்புதமாகக் கிடைத்தது. இன்றும் நந்தி இத்தலத்தில் விலகியிருப்பதைக் காணலாம். சிவலோக நாதரைப் ஆடிப் பாடி ஆனந்தக் கூத்தாடியவர், திருக்கோயிலை பன்முறை வலம் வந்தார். பின்னர் அவ்வூரைச் சுற்றி வருகையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டார். பள்ளத்தைப் பார்த்ததும் நந்தனார் ஊற்றுக்கேற்ற பள்ளமான அவ்விடத்தைச் சீராக வெட்டிக் குளமாக்கத் தீர்மானித்தார். இரவென்றும் பகலென்றும் பாராமல் சிவநாமத்தைச் சிந்தையிலேகொண்டு தம்முடைய உடல் வலிமையால் அவ்விடத்தில் குளத்தை வெட்டி முடித்த பின்புதான் மன நிறைவோடு ஆதனூருக்கு திரும்பினார்.

இவ்வாறு பல தலங்களுக்குச் சென்று, தொண்டு புரிந்து வந்த நந்தனாருக்குத் தில்லை சிதம்பர நடராசரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. ஆனால் மிகப்பெரிய கோயிலான அதில் வெளியில் இருந்து ஆடலரசனை தரிசிக்க முடியாது என நினைந்து வருந்தினார். ஆனாலும் இரவும், பகலுமாக தில்லை நாதரையே எண்ணி எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். இருந்தாலும் ‘நாளைப் போவேன்’ என்று துணிவார். ஆனால் பொழுது புலர்ந்ததும், அக்கால கட்டுப்பாட்டினை நினைந்து புறப்படாமல் நின்று விடுவார். மறுபடியும் அவரது உள்ளம் உந்த, ‘நாளைக்குப் போகலாம்’ என்று ஆறுதல் அடைவார். மீண்டும் ஆவல் எழும் போதெல்லாம் “நாளைப் போவேன்” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். இவ்வாறு நாளைப் போவேன், நாளைப் போவேன் என்று ஒவ்வொரு நாளாகக் கழித்துக் கொண்டிருந்தார். இதனால் எல்லோரும் நந்தனாரை திருநாளைப் போவார் என்று அழைத்தனர்.

தில்லை செல்லாவிட்டால் தம் வாழ்நாள் வீண் என்ற எண்ணம் நந்தனாருக்கு ஏற்பட, ஒருநாள் துணிவு கொண்ட நெஞ்சத்தோடு தில்லைக்குப் புறப்பட்டார். தில்லையை அடைந்தவர், கோவிலின் மதிற்சுவர் அருகே வேத ஒலியும், வேள்விப் புகையும் வருவதை உணர்ந்தார். கோவிலுக்குள் சென்று இறைவனின் திருநடனத்தைக் காண்பதற்குத் தமக்கு தகுதி இல்லையே என்று மனமுருகியவர் மதி‌லை வணங்கி, இரவும் பகலும் திருமதி‌‌லையே வலம் வந்துகொண்டிருந்தார். சோர்வு மிகுதியால் கோவிலின் அருகே படுத்து உறங்கிவிட்டார்.
அப்போது நந்தனாரின் கனவில் தோன்றிய நடராசர், நந்தனே உன் விருப்பப்படி உமக்கு அமைக்கப்பட்ட செந்தீயில் மூழ்கி எழுந்து முப்புரிநூலோடு நம் காட்சி காண வருவாய் என அருள் செய்தார். அதே சமயத்தில் அங்குள்ள தில்லைவாழ் அந்தணர்கள் கனவிலே தோன்றி என்னை வழிபட்டு மகிழும் நந்தனார் “மதிலின் புறத்தே படுத்திருக்கிறான்” நீவிர் அவனை அழைத்து வந்து தீயிடை மூழ்கச் செய்து என் சந்நிதிக்கு அழைத்து வாருங்கள் என்று ஆணையிட்டார்.
துயிலெழுந்த நந்தனார் இறைவனின் அருளை எண்ணி வியந்தவர் ஆனந்தக் கூத்தாடினார். மறுநாள் தில்லைவாழ் அந்தணர்கள் மகிழ்ச்சியோடு எழுந்து நடராசப் பெருமான் பணித்தபடி மதிலின் புறத்தே இருந்த நந்தனாரைக் கண்டு “அம்பலத்தரசன் ஆணையை நிறைவேற்ற நாங்கள் வந்துள்ளோம்” பெருமான் பணித்ததற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழுவதற்காக தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் “நெருப்பிடை மூழ்கி எழுக” என்று வேண்டிக் கொண்டனர். “இறைவனின் ஆணைப்படி நடக்கட்டும்” என்று நந்தனார் கூறினார்.

அந்தணர்கள் திருமதிலின் தெற்கு வாயிலுக்கு புறத்தே நெருப்பை மூட்டி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.  மூட்டிய தீயினை வலம் வந்து நடராசப் பெருமானை சிந்தையில் நிறுத்தி தீயினுள் மூழ்கி எழுந்த நந்தனார் உருத்திராட்சமாலையும், முப்புரி நூலும் தரித்த தேகப்பொலிவுடன் திருவெண்ணீறு அணிந்து மாமுனிவர் கோலத்துடன் தீயிலிருந்து வெளிப்பட்டார். நந்தனார் இறைவன் ஆணை வழி உருவாக்கப்பட்ட செந்தீயில் மூழ்கி எழுந்தபோது நந்தனார் பிரம்மனைப்போல் எழுந்தார் என்றார் சேக்கிழார். தில்லைவாழ் அந்தணர்கள் நந்தனாரின் அருள் வடிவத்தைக் கண்டு, அகமகிழ்ந்து அவரை வாழ்த்தி வணங்கினர். வானவர் மலர் மாரி பொழிந்தனர். சிவகணங்கள் வேதம் முழங்கினர். நான் மறைகள் ஒலித்தன. தில்லைவாழ் அந்தணர்கள் உடன் சென்றார் திருநாளைப் போவார் நாயனார். தம்மை கனவில் அழைத்த கூத்த பெருமான் சந்நிதியை நோக்கிச் சென்றார். பெருமானார் நடமாடும் மன்றுள் சென்றார். யாரும் நந்தனாரைக் காணமுடியவில்லை. கூத்த பெருமானின் மலரடிகளில் உறையும் பேரின்ப வாழ்வைப் பெற்றார்.

தில்லை வாழ் அந்தணரும் உடன்

  செல்லச் சென்று எய்தி

கொல்லை மான் மறிக் கரத்தார்

  கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி

ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு

  உய்ய நடம் ஆடும்

எல்லையினைத் தலைப்பட்டார்

  யாவர் களும் கண்டிலரால்.

 

திருநாளைப்போவார் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

பிறந்த குலத்திற்கும், இறை அன்பிற்கும் தொடர்பில்லை என்று நிரூபித்தவர் திருநாளைப் போவார் நாயனார்.

ஐயரே அம்பலவர் அருளால்

  இப் பொழுது அணைந்தோம்

வெய்ய அழல் அமைத்து உமக்குத்

  தர வேண்டி என விளம்ப

நையும் மனத் திருத் தொண்டர்

  நான் உய்ந்தேன் எனத் தொழுதார்

தெய்வ மறை முனிவர்களும் தீ

  அமைத்த படி மொழிந்தார்

ஐயர் என்பது பிறப்பு வழி வருவதல்ல. வாழ்வில் உயரிய செந்நெறியால் பெறுவது என்பதே நம் தமிழர்களின் கொள்கை. ஒரு புறம் மாட மாளிகையையும், பிறிதொருபுறம் குடிசைகளும் இருப்பதனை சமுதாய வேறுபாடுகளாகக் காட்சிப்படுத்துகிறார் சேக்கிழார் பெருமான். 12-ம் நூற்றாண்டில் வரலாற்றுத் தகவலாகப் பதிவு செய்யப்படும், ஊர் எல்லையில் வயற்காட்டினை ஒட்டி அமைந்த சேரிக்குடில்களைப் பற்றி எடுத்துக்காட்டுகிறார். மிகப்பழமையான வீட்டின் கூரைகளின் மீது கரைக் கொடிகள் படர்ந்திருக்கும். கோழிக் குஞ்சுகளும், நாய்க்குட்டிகளும் வலம் வந்து கொண்டிருக்கும். கரிய நிறமுடைய சிறுவர்கள் தங்கள் இடுப்பில் இரும்பினாலான அரைஞாணைக் கட்டிக்கொண்டுள்ளனராம்.  இத்தகைய சேரி வாழ்க்கை முறையை இன்றும் காண முடிவதும் வேதனைக்குரிய செய்தியாகும்.

அன்றைய சமுதாய அமைப்பின் காரணமாக மிகச்சிறந்த சிவபக்தரான நந்தனார் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. வெளியே நின்று அழுது தொழுது இசையால் பாடிப் பெருமான் காட்சி கிடைக்கவில்லையே என சிந்தை நொந்த சமுதாயக் கொடுமையை விளங்கச் செய்கிறார். சேக்கிழார் பெருமான் ஐயர் என்ற சொல்லாட்சியை, தாழ்த்தப்பட்டவர்களாகத் தீண்டத்தகாதவர்களாக மக்கள் நினைத்தவர்களையே ஐயரே என அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் பிறப்புவழி ஐயர்களாகக் கருதப்பட்டவர்களைக் கொண்டே அழைக்க வந்தார். பிறப்பு வழி அந்தணர்களாக யாரையும் ஐயரே என்று விளக்கவில்லை.

திருநாளைப்போவார், தனது சாதியின் காரணமாக சமூகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், இறைவனின் தாமரைப் பாதங்களில் மகிழ்ந்த ஒரு சிறந்த பக்தர். கோயில்களுக்கு வெளியே எங்கு கண்டாலும் நின்று, பாடுவார், பாடுவார், ஆடுவார், எங்கும் நிறைந்திருக்கும் அந்த மகிமையில் மகிழ்ச்சி அடைவார். ஆனந்தத்தினால் ஆடல் பாடல்கள் புண்ணியம் என்பது,

நிருத்த மெந்தைமுன் யாவர் நிகழ்த்தினும்

 விரித்த பானு வயுதம் விரிகதிர் 

பொருந்து தேரிற் புலவ ரரம்பையர்  

கருத்தி னாடகங் காண்பர் சிவபுரி.

நாயன்மார்களில் பண்ணார்ந்த இன்தமிழால் இசைத்தொண்டு செய்தவர்கள், திருநாளைப்போவார், ஆனாயர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பரமனையே பாடுவார் ஆகிய நால்வர் ஆவர்.

திருச்சிற்றம்பலம்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.