சிந்தித்து நாமும் தெளிவடைதல் எக்காலம்!

0
image0 (4)

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

ஓடும் வரை ஓட வேண்டும்
உழைக்கும் வரை உழைக்க வேண்டும்
வாடி நிற்போர் நிலை கண்டால்
மனம் உவந்து வழங்க வேண்டும்

மண் வாழப் பொருள் வேண்டும்
மகிழ்ச்சி பொங்கப் பொருள் வேண்டும்
கண் துஞ்சா உழைத்த பொருள்
கை இருக்க அறம் வேண்டும்

மற்றவர் வதையாக வந்திட்ட  எப்பொருளும்
எத்தனை இருந்தாலும் இன்பமாய் ஆகாது
கண்ணீரும் ரத்தமும் கலந்திட்ட  பொருளாலே
களிப்புற்று நின்றிட்டால் கருணையே அழித்துவிடும்

மாடிமனை கோடிபணம் வாய்ப்பார்கள் மகிழ்வார்கள்
தேடியோடி சேர்த்ததெலாம் திசைமாறாப் போகுமுன்னர்
வீடுதோறும் வாசற்படி விட்டகன்று போவதில்லை
கேடுகெட்ட செயலென்றும் கிட்டவிடா மனநிறைவை

மனம் வருந்தா உழைத்த பொருள்
மன நிறைவை உவந் தளிக்கும்
மனம் வருந்த குவிந்த பொருள்
வாழ் வெல்லாம் பெருந் துயரே

ஏழைகள் அழுதால் எல்லாமே அழிந்திடுமே
ஏழைகள் அழுதகண்ணீர் கூர்வாளை ஒக்குமே
ஏழைகளை வதைக்காமல் இரக்கத்தை இழக்காமல்
வருகின்ற அத்தனையும் வளமாகத் தானிருக்கும்

அடித்துக் குவிக்கும் பொரு ளெல்லாம்
எடுக்க எடுக்க பெருந் துயரே
அடுத்தவ ரழுகையில் வந்த பொருள்
கெடுக்கு மென்பதை மனம் எடுப்போம்

உடம்பினை விட்டு உயிர் போனால்
தேடிய அனைத்தும்  கூட  வருமா
செல்வாக் கிழந்து செருக் கிழந்து
செல்லாக் காசாய் சிதை செல்வாய்

தேடிய பொருள்கள் உனைப் பார்க்கா
திரண்ட உறவுகள் கூட வரார்
உந்தன் இருப்பிடம் மயானம் ஆகி
ஒன்றுமே இல்லா நீ செல்வாய்

சிந்தித்து நாமும் தெளிவடைதல் எக்காலம்
தொந்தி சரியுமுன்னே தூய்மையுறல் எக்காலம்
பொருளாலே அருளிழக்கும் போக்கினை மாற்றாமல்
பொழுதினைப் பொருள்தேட செலவிடுதல் முறையாமோ !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.