பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 17
63 நாயன்மார்களின் வரலாறு – 16. உருத்திர பசுபதி நாயனார்


பங்கமில்வண் புகழ்நிலவு தலையூர் வாழும்
பசுபதியா ரெனுமறையோர் பணிந்து செந்தே
னங்கமல மடுவினிடை யல்லு மெல்லு
மகலாதே யாகளமா யமர்ந்து நின்று
திங்கள்வளர் சடைமுடியா னடிகள் போற்றித்
திருவெழுத்து முருத்திரமுந் திகழ வோதி
மங்கையிட முடையபிரா னருளான் மேலை
வானவர்க டொழுமுலகின் மன்னி னாரே.
சோழ வளநாட்டில் உள்ள திருத்தலையூர் எனும் ஊரில் அந்தணர் குடியில் பிறந்தவர் பசுபதி எனும் சிவனடியார். அனுதினமும் தாமரைத் தடாகத்தில், கழுத்தளவு நீரில் நின்றுகொண்டு, இரு கைகளையும் உச்சிமேல் குவித்துக் கொண்டு இரவும் பகலும் முறை வழுவாது உருத்திர பாராயணம் செய்து வந்தவர். வேதம் எனும் அறிவு நூல், வட மொழியில் உள்ள, ரிக், யஜூர், சாமம், அதர்வணம் எனும் நான்கு வேதங்களை உள்ளடக்கியதாகும். அதர்வணம் என்பது மற்ற மூன்று வேதங்களின் தொகுப்பாகும். இந்த மூன்று வேதங்களின் நடுவனவாய் இருப்பது யஜுர் வேதம். ஏழு காண்டங்களை உடைய இந்த யஜூர் வேதத்தின் மையத்தில் உள்ள காண்டத்துள் பதினொரு அனுவாகங்களை உடையது திருஉருத்திரம் என்பது. 101 வரிகளை உடைய இதில் 51வது வரியில், ‘சிவாய’, ‘சிவதராய’ என்ற திரு ஐந்தெழுத்து குறிப்பிடப்பட்டுள்ளது சிறப்பாகும். சிவ பஞ்சாட்சரம் வேதத்தின் இதயம் எனப்படுகிறது. வேதத்தின் கண்மணி ஐந்தெழுத்து என்பதாம். அவ்உருத்திரத்தை பிரார்த்தனை செய்து வந்ததால் இந்நாயனார் உருத்திர பசுபதி நாயனார் ஆனார். பின்னாட்களில் இந்த உருத்திரமும் வேதத்தில் சேர்க்கப்பட்டது.
மறையின் பயனாக உருத்திர மந்திரம் திகழ்வதைச் சேக்கிழார் பெருமான்,
அரு மறைப் பயன் ஆகிய உருத்திரம் அதனை
வரு முறைப் பெரும் பகலும் எல்லியும் வழுவாமே திருமலர்
பொகுட்டிருந்தவன் அனையவர் சில நாள்
ஒருமை உய்த்திட உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்.
என்றார். அன்போடும், மகிழ்வோடும் உருத்திர பாராயணம் செய்து சிவபெருமானின் திருவடியைச் சென்று அடைந்தார் உருத்திர பசுபதி நாயனார். சேக்கிழார் பெருமான், அருந்தவப் பயனான வேத பாராயணம் செய்வோருக்கு பக்தியும் ஈடுபாடும் மிகமிக அவசியம் என்பதை,
“தூய அன்பொடு தொடர்பினில் இடையறாச் சுருதி நேய நெஞ்சினராகி அத்தொழில் தலை நின்றார்”
என்று மொழிகிறார். அந்த வேத மந்திரத்தை நியதியுடன் ஓதிய நிலையோடு பெருமானது “ஆடு சேவடி அருகுற அணைந்தனர்” என்கிறார் தெய்வச் சேக்கிழார் பெருமான்.
“உமை இடம் மகிழ்ந்தவர் உவந்தார்” என்று சேக்கிழார் மகிழ்கிறார்.
உருத்திர பசுபதி நாயனார் புராணம் சொல்லும் கருத்து
“உருத்திர பசுபதிக்கும் அடியேன்” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பிக்கப் பெற்றவர் இந்நாயனார் பெருமான். இந்நாயனார் அவதரித்த தலையூர் என்ற பெயரில் இரண்டு இடங்கள் உள்ளன. மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் வழியிலுள்ள கொல்லுமாங்குடி என்ற ஊரிலிருந்து காரைக்கால் செல்லும் பாதையில் ஒன்றும், முசிறி வட்டத்தில் ஒன்றும் என இரு இடங்கள் இவ்வாறு உள்ளன. இவ்விரு இடங்களிலும் உள்ள சிவாலயங்களில் உருத்திர பசுபதி நாயனாரது மூர்த்தம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அன்றாட வாழ்வில் அறிந்தும், அறியாமலும் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரமாகச் சொல்லப்படுவது உருத்திர மந்திரம் என்பர் பெரியர். அதனைச் செய்வோரும் செய்விப்போரும் அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறுவர். அதுமட்டுமின்றி பிணிகளிலிருந்து விடுபட்டும், நீண்ட ஆயுளைப் பெறுவார். மக்கட் செல்வமும் பெறுவர் என்பது போன்று அளவிட முடியாததாகப் பயன்களைப் பெறுவர் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. தம்மைச் சேர்ந்தவர்களையும் தண்டிக்காமல் பிழை பொறுக்குமாறு வேண்டுதலை அளிக்கிறது.
புரட்டாசி மாத அசுவினி நன்னாளில், உருத்திர பசுபதி நாயனார் சிவபெருமானது திருப்பாத கமலங்களை அடைந்ததை முன்னிட்டு அந்நாளில் அவரது குருபூசை பலதலங்களில் நடைபெறுகின்றன.
தமிழ் வேதமாகிய தேவாரத்தின் திருத்தாண்டகத்தில்,
இருநிலனாய்த் தீயாகி நீருமாகி யியமான னாயெறியுங் காற்று மாகி
யருநிலைய திங்களாய் ஞாயி றாகி யாகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணு மாணும் பிறருருவுந் தம் முருவுந் தாமே யாகி
நெருநலையா யின்றாகி நாளை யாகி நிமிர்புன் சடையடிக ணின்றவாறே
என்பதைக் காணலாம்.
திருச்சிற்றம்பலம்
