திவாகர்

 

“சார்.. நீங்க ‘பை’ன்னு சொன்னா போதும்.. எதுக்கு சிரிக்கணும்.. வாயை மூடிண்டு எப்படிப் பேசறதுங்கிறதை நீங்க பழகணும்..”

 

ஸீரியஸாகப் பேசிவிட்டு அவள் நடந்து போகிறாள். அவன் தன்னைத் தானேக் கேட்டுக்கொள்கிறான். ‘வாயை மூடிண்டு பேசணுமா..? ம்ம்.. என் பல்லைக் கண்டா நிறைய பேருக்குப் பொறாமை’.. என்று சமாதானம் சொல்லிக்கொண்டே வண்டியைக் கிளப்புகிறான்.

 

அதே சமயம் அனாதை ஆசிரமத்திலிருந்து சுந்தர் கிளம்பிச் செல்வதைப் பார்த்த ரவி ஆசிரமத்துக்குள் நுழைகிறான். அங்கே அந்த வயதானவர் இவனைப் பார்த்து உள்ளேக் கூப்பிட்டு உட்கார வைக்கிறார். ரவி சுற்றுமுற்றும் பார்க்கிறான். பிறகு அவரிடம் சாதாரணமாகப் பேசுகிறான்.

 

‘நான் இங்க டொனேஷன் விஷயமா விசாரிக்க வந்தேன். இதெல்லாம் இங்க யார் பாக்கறது? நீங்கதானா.. இல்லே வேற யாராவது டீல் பண்ணுவாங்களா.. பணமெல்லாம் கொடுத்தா இந்தக் குழந்தைகளுக்கு எப்படி செலவழியும்னு அதாவது சரியா அவங்களுக்குப் போகுமா.. ஏதாவது அக்கௌன்ட் கொடுப்பீங்களா?’

 

‘ஐய்யோ.. என்ன இப்படி கேட்டுட்டிங்க.. நாங்க இப்படி டொனேஷன் பணத்தைச் சரியா செலவழிக்கறதுக்கு ரொம்ப நியாயமா நடவடிக்கை எடுப்போம் சார்.. கணக்கு வழக்கெல்லாம் ரொம்ப ஒழுங்கா இருக்கும். எங்க ஆசிரமத்துக்கு எல்லா இடத்துலயும் நல்ல மரியாதை இருக்கு.’

 

‘அப்படியா..’ ரவி அவரைப் பார்த்து கேட்டவன்.. நீங்களே இதையெல்லாம் கவனிக்கிறீங்களா?’

 

‘இல்லே சார்.. இதுக்கெல்லாம் ஒரு ஆள் போட்டுருக்கோம்.. அவர் பேரு சுந்தர். இப்போதான் வெளியே போனார்.. கொஞ்சம் முன்னாடி வந்திருந்தீங்கன்ன அவரைப் பார்த்திருக்கலாம்.. கொஞ்சம் இருங்க.. அவருக்கு ஃபோன் பண்றேன்.. அவர் உடனே வந்துடுவாரு.. இப்பதானே போனாரு.. ‘ என்று கைபேசியை எடுத்தார்.

 

ரவி அமைதிப்படுத்தினான். ‘இருக்கட்டும் சார்.. நான் விசாரிக்கதான் வந்தேன். நான் டொனேஷன் வாங்கித் தர்ரேன். ஆனா அது சரியா போகறதா தெரியணும் இல்லையா.. இந்த ஆசிரமம் பத்திச் சொல்லுங்க..’

 

‘இது ஆந்திரக்காரங்க குடும்பத்தோட தயவுல போகறது சார். இப்போ பதினைஞ்சு சின்னப் பொண்ணுங்க இருக்காங்க.. அவங்க அத்தனை பேரும் அனாதைப் பசங்கதான். வேற புதுசா ஒண்ணுமில்லேங்க..

 

இப்போ வெளியே போனவர்தாம் எல்லாம் பாத்துக்கிறாரா?

 

;இல்லே சார்.. சொன்னேனே.. அவர் பேர் சுந்தர், இங்கே அக்கௌன்ட் ஒண்ணுதான் பாக்கறார். மிச்ச வேலை எல்லாம் நான் பாத்துக்கறேன். உங்களுக்கு என்ன வேணும்? என்ன பதில் வேணும்னாலும் நான் சொல்லறேன் சார்.’

 

‘அதுக்கு முன்னாடி உங்க இன்மேட்ஸ்லாம் அதாவது இங்க உள்ளவங்களை நான் பாக்கலாமா?’

 

அதே நாள் மாலை நேரம் கல்யாணியின் வீடு.

முரளி வந்திருக்கிறான். அதே சமயம் கோம்டியும் உள்ளே வருகிறாள்.  ஒருவருக்கொருவரை அறிமுகம் செய்து வைக்கிறான் கல்யாண். கோம்டி அவனைக் கூர்ந்து பார்க்கிறாள்.

 

“உங்களை இந்த வீட்டு வாசல்ல ஒரு தடவை பார்த்திருக்கேன். இப்ப ஞாபகம் வரீங்க.. ஒரு மாசம் முன்னாடி ஆட்டோ டிரைவர்கிட்டே சண்டை போட்டீங்க.. அவன் திட்ட நீங்க திருப்பித் திட்ட கொஞ்சம் கும்பல் வந்ததும் ரெண்டு பேரும் சண்டை போடாம போயிட்டீங்க.. ரைட்டா?”

 

“நல்ல ஞாபகசக்தி உங்களுக்கு.. ஆமாம்.. கும்பல் கூடாம இருந்ததுன்னா நாலு சாத்து சாத்தியிருப்பேன்.”

 

“முரளி இங்கே டெய்லி வருவாரோ?” கல்யாணைப் பார்த்துக் கேட்டாள்.

 

முரளியே சொன்னான். “டெய்லி இல்லைன்னாலும் ரெண்டு நாளைக்கு ஒருதடவையாவது ராத்திரி நேரத்துல ஒரு ரெண்டு மணி நேரம் மாமா கூட இருந்துட்டு சாப்பிட்டு போவேன்”.

 

“சாப்பாடுன்னா எடுப்புச் சாப்பாடுதான் இல்லையா.. பொன்னம்மாவோட டெய்லி வேலை இது. சமயத்துல பொன்னம்மா கூட சமைச்சுப் போடுவா இல்லையா?”

 

“அதுவும் சரிதான்.”

 

“உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு இல்லையா.. உங்க மனைவியோட வருவீங்களா இல்ல தனியா வருவீங்களா மிஸ்டர் முரளி..”

 

முரளி ஆச்சரியமாகப் பார்த்தான் அவளை.

“என்னங்க நீங்க வந்ததும் வராததுமா கோர்ட்ல வக்கீல் மாதிரி கேள்வி கேக்கறீங்க?”

 

“ஸாரி,, உங்களுக்குத் தெரியாதா? மிஸ்டர் கல்யாண் என்னை அவரோட பிரைவேட் இன்வெஸ்டிகேடிவ் ஏஜெண்டா நியமிச்சிருக்கார்.. ஏன் கல்யாண்.. சொல்லலியா இன்னும் மிஸ்டர் முரளிகிட்டே?”

 

“யெஸ் முரளி.. போலீஸ் ரொம்ப மெதுவா இன்வெஸ்டிகேட் பண்ணுது. கொஞ்சம் நாமும் நம்மளால முடிஞ்ச அளவு உதவி பண்ணலாமேன்னு பிரைவேட் இன்வெஸ்டிகேடிவ் ஏஜெண்ட் அதுவும் போலீஸ் ஒப்புதலோடதான் ஏற்பாடு பண்ணியிருக்கேன். இவங்க எதிர் வீட்டிலேயே இருந்து செய்யறதுன்னாலே எனக்கும் கொஞ்சம் சௌகரியமா இருக்கு.”

 

“ஓ.. அதுவும் ஒருவிதத்துல நல்லதுதான். சீக்கிரம் இந்த கேஸ் முடியணும்.. ரொம்பவும் எதிர்பார்க்காத துரதிருஷ்ட நிகழ்ச்சி இது. நீங்க கேட்காமயே ஒரு விஷயம் சொல்லறேன். எனக்கு ஆறு வயசு.. இதோ இவனுக்கு மூணு வயசு. இவனோட அப்பாவும் அம்மாவும் ஒரே நாள்ல அசம்பாவிதமா இறந்துட்டாங்க.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. எங்கம்மா  ஒரே கதறல். ரொம்ப நாள் அழுதாங்க.. இவனைக் காமிச்சு ‘அடேய் முரளி இனிமே வாழ்க்கைல இவனைப் பாத்துக்கவேண்டிய பொறுப்பு வந்துடுத்துடா.. அவனை நல்லா பார்த்துக்கோடா’ன்னு சொல்லிச் சொல்லி அழுதாங்க. இவனோட பெரியப்பாவை நான் அப்போலேர்ந்தே மாமா’ன்னு கூப்பிட்டுப் பழக்கம். என் சின்ன சித்தி பிள்ளை சுந்தரும் அப்பப்ப எங்கள்ட்ட ரொம்ப நெருக்கமா இருப்பான். மாமாவும் ரொம்ப ஃபீல் ஆயி யார்கிட்டயும் பேசாம ரொம்ப நாள் அப்படியே இருந்தாரு. இவனைப் பார்த்தா அவருக்கும் அழுகை வரும். இப்படி எமோஷனலாவே இத்தனை வருஷமா நாங்க வளர்ந்தோம். இப்படியே போகிற வாழ்க்கைல இப்போ அந்த அன்பு மாமாவும் போயிட்டாருன்னா எங்களுக்கு எப்படி இருக்கும்? அதுவும் இந்த மாதிரி சாவு ஏன் வரணும்? புரியலே..”

 

“புரியுது” கோம்டி அவனைப் பார்த்தாள். எந்த உணர்ச்சியும் காட்டவில்லை அவள். “இவர் பெரியப்பாவோட ரொம்ப நெருக்கமா நீங்க இருந்தது அவரோட தனிமையான வாழ்க்கைல அவருக்கு அதிர்ஷ்டம் இல்லையா..?”

 

“அதுவும் உண்மைதான்” முரளி ஒப்புக்கொண்டான்.

 

“அதேபோல உங்களுக்கும் ரொம்ப ஆதரவா எப்பவுமே இருந்தார் இல்லையா”

 

“ரொம்ப கரெக்ட்ங்க”.

 

“உங்க வீட்டுக்கு சமீபத்துல அவர் எப்போ வந்தார் மிஸ்டர் முரளி.”

 

“இல்லங்க.. அவர் யார் வீட்டுக்கும் போகமாட்டார். என்னவோ தெரியலே.. அவர் அப்படியே பழகிட்டார்”.

 

“நீங்க ரொம்ப நெருக்கங்கிறச்சே நீங்க எப்பவாவது ‘வாங்க மாமா என் வீட்டுக்கு’ன்னு அழைச்சிருக்கீங்களா?”

 

முரளி விழித்தான். என்ன சொல்வதென்பது தெரியவில்லை என்பது போல கல்யாணைப் பார்த்தான். கல்யாண் உதவிக்கு வந்தான்.

 

“அது வேற ஒண்ணும் இல்லே கோம்டி.. அவனுக்கு ரொம்ப மரியாதை பெரியப்பா மேலே. அவருக்குத் தெரியும் எப்ப வரணும்னு விட்டிருக்கலாம்! அப்படித்தானே முரளி?”

 

“ஆமாண்டா.. அதுதான் சரியான பதில் கூட. நான் அவரை எதிர்த்துக் கூட பேசினதில்லே. அவர் சொல்லற வேலையெல்லாம் செய்யறது.. அவ்வளவுதான்”.

 

முரளியை மறுபடியும் முதலில் கேட்ட கேள்வியை ஞாபகப்படுத்தினாள். “நான் முதல்ல ஒரு கேள்வி கேட்டேனே.. நீங்க எப்பவாவது உங்க மனைவியையும் கூட அழைத்து வருவதுண்டா? அல்மோஸ்ட் டெய்லி வரீங்க இல்லையா.. உங்க மனைவி எப்பவாவதும் ஒரு தடவையாவது கூட வந்தாங்களா..  ஜஸ்ட் கேக்கறேன்.. உங்களுக்கு இஷ்டமில்லைன்னா பதில் சொல்லவேணாம்.”

 

“இல்லை.. மனைவி வரமாட்டா. முதல் காரணம் நான் ஆஃபீஸ்லேர்ந்து போகற வழியிலே கிண்டி இருக்கறதுனாலே நேரா இங்கதான் வருவேன். ரெண்டாவது காரணம் மூணு வருஷமாவே.. இப்படி பெரியப்பாவை பாக்கறதுங்கிறது அப்படியே பழகிப் போச்சு.. ஜஸ்ட் லைக் தட்.”

 

“இல்லை.. நான் ஏன் கேட்டேன்னா ஒவ்வொரு தடவை பெரியப்பாவைப் பாக்க வரச்சே நீங்க எடுப்புச் சாப்பாடை பங்கு போட்டு சாப்பிடுவீங்க இல்லையா.. வீட்டுக்குப் போனா மனைவியும் எதிர்பார்ப்பாங்க உங்களோடு சாப்பிடணும்னு.. ஆனா நீங்க சாப்பிடறதில்லே.. இல்லையா.. உங்க மனைவிக்கு அதுவும் ‘ஒரு வருஷம் புதுசு’ மனைவிக்கு வருத்தம் இருக்குமே..”

 

“என்னங்க நீங்க என் பெர்சனல் விஷயம்லாம் கேட்டுண்டு.. இதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பலே..”

 

என்று சொன்ன முரளி கொஞ்சம் கண்ணைத் துடைத்தபடி இருந்தான். கல்யாணிடம் முறையிட்டான், “அடேய்! போலிஸ் கூட இப்படியெல்லாம் கேட்டதில்லே.. இவங்க சொந்த விஷயம்லாம் கேட்கலாமாடா.. இதோ பார்.. என் மேலே ஏதாவது சந்தேகம் இருந்தா டைரக்டா சொல்லுடா.. நான் ஒண்ணும் தப்பா நினைக்கமாட்டேன். ஆனா இவங்க மூலமா இதெல்லாம் கேக்க வைக்காதே.”

 

“முரளி.. என்னடா நீயே இப்படில்லாம் சொல்லலாமா.. இதோ பார். இதையெல்லாம் ஏன் உங்கிட்டே கோம்டி கேக்கறாங்க தெரியுமா.. உன் மேல யாருக்கும் சந்தேகம் வரக்கூடாதுன்னுதான், நீ ரொம்ப எமோஷனல்.. ஆனா அந்த எமோஷன் உணர்ச்சி உன்னை ஆபத்துல மாட்டக்கூடாதுன்னுதான் இத்தனை கேள்வியும்.. உனக்கொரு விஷயம் சொல்லறேன்.. என்னைக் கூட இப்படியெல்லாம் பெர்சனல் விஷயம்லாம் கேட்டாங்க.. நான் அசராம பதில் சொன்னேன். ஏன்னா இது கொலை வழக்குடா.. உண்மையான கொலைகாரனை விட்டுட்டு உன்னை மாதிரியான அப்பாவியை போலீஸ் மாட்டிவிடுமேன்னு ஒரு அக்கறைதான்.. நீ எமோஷனல் ஆகாம பதில் சொல்லுடா..”

 

“ஸோ.. இவங்க என் பெர்சனல் விஷயம் கேட்டாங்கன்னா கூட என்னைக் காப்பாத்தத்தான்னு சொல்லறே.. ஓகேடா.. “மிஸ் கோம்டி.. இங்க பாருங்க.. என் மனைவிக்கு நான் எங்க மாமாவோட பிரியமா இருக்கறது ஆரம்பத்துலேர்ந்து பிடிக்கலே. எதுக்குன்னு கேட்டா என்ன சொல்ல முடியும். மாமியார் மருமகள் எதிரிங்க மாதிரி.. மாமனார் மருமகள்’ன்னு கூட வெச்சுக்கலாம்.”

 

“வெரிகுட் மிஸ்டர் முரளி.. மாமனார் உங்க மனைவி மேலே மதிப்பு வெச்சுருக்காரா இல்லே அவரும் உங்க மனைவியை எதிரியாப் பார்த்தாரா?

 

“அப்படில்லாம் பொய் சொல்லக்கூடாதுங்க.. அவர் ஒருவார்த்தை சொல்லமாட்டார்.”

 

“அப்போ உங்க மனைவி மேலேதான் தப்பு இல்லையா? அவங்கதான் இவரை தப்பா புரிஞ்சுண்டாங்க இல்லையா? நான் அவங்ககிட்ட இதைப் பத்தி பேசலாமா உங்க அனுமதியோடதான்.”

 

“கோம்டி மேடம் இது பிள்ளையார் பிடிக்க குரங்கா முடியுது. என் பொண்டாட்டியோட விசாரணைக்கெல்லாம் நான் ஒப்புக்கமாட்டேன், ஆமாண்டா கல்யாண் ஐ வில் நாட் அக்செப்ட். ஏன்னா நிச்சயம் எங்க குடும்ப விரிசல்லதான் முடியும். பிரியாவுக்கு கோபம் வந்தா அவ ராட்சஸியா மாறிடுவா”

 

“ஓ.. ஒருவேளை அப்படி ராட்சஸியா மாறவிடக் கூடாதேங்கிற நல்ல எண்ணத்துலதான் நீங்க உங்க மாமாவை உங்க வீட்டுக்குக் கூப்பிட்டதில்லே.. இல்லையா சார்?”

 

“நீங்க என்னதான் சொல்ல வர்றிங்க?”

 

“ஆறு மாசம் முன்னாடி ஒரு சித்ரா பௌர்ணமி நாள்ல இங்க பொன்னம்மா அதான் இந்த வீட்டு வேலைக்காரி மூலமா சித்ரான்னங்கள் பலவகைப்பட்ட ருசியில் செஞ்சிண்டு அதை எடுத்துண்டு உங்க வீட்டுக்கு உங்க மாமா கார்ல வந்தாரு.. அப்போ உங்க வீடு பக்கத்துத் தெருவுலதான் இருந்தது. அதனால பொன்னம்மாவையும் அங்க பாத்திரம் கழுவணும்னு சொல்லி நடந்து வரச் சொன்னாருங்கறதாலே அவளும் கொஞ்சம் லேட்டா வந்தா. அப்போ உங்க மனைவி அழுதுண்டே கிச்சன் உள்ளே இருந்தாங்க.. நீங்க சமாதானப்படுத்தி ஹால் உள்ளே அழைச்சுண்டு போனீங்க.. எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டீங்க.  பொன்னம்மா எல்லா பாத்திரத்தையும் கழுவிட்டு தான் போகலாமா’ன்னு உங்க மாமாவைக் கேட்டுட்டு வெளியே போனா. அப்போ பிரியாவும் வெளியே வந்து அவளைத் தடுத்து நிறுத்தி வெளியேயே ‘பொன்னம்மா என்னையும் அழைச்சுண்டு போ.. இல்லைன்னா நீயும் இங்க நைட்டெல்லாம் இருந்துடணும்’னு அவ காலப் பிடிச்சுக் கெஞ்சினாங்க உங்க மனைவி.. பொன்னம்மாவுக்கு என்ன செய்யறதுன்னுத் தெரியலே.. அவ என்ன பண்ணாள்னா உங்க பொண்டாட்டியை கீழே மயக்கமா விழச் சொல்லியிருக்கா.. அந்தம்மா விழுந்தவுடனே குய்யோ முய்யோன்னு சப்தம் கூட்டி ஆஸ்பத்திரிக்கு அழைச்சிண்டு போய் உங்க மனைவிக்கு குளுகோஸ் ஏத்தி அடுத்த நாள் காலைல ஜாக்கிரதையா அழைச்சுட்டு வந்தா. இதுல வேடிக்கை என்னன்னா தன் பொண்டாட்டியைப் பாக்கறதுக்கு ஆஸ்பத்திரிக்கு முரளியோ இல்லே மாமாவோ போகவே இல்லை. அடுத்த வாரமே நீங்க உங்க வீட்டையே இங்க கிண்டியிலிருந்து கொஞ்சதூரம் தள்ளி அதாவது நங்க நல்லூர் பக்கம் மாத்திட்டீங்க.. மிஸ்டர் முரளி.. நான் சொன்னது இப்போ எல்லாம் உண்மைதானே.. இதோ பாருங்க.. பொய் பேசாம நிஜத்தைச் சொல்லுங்க.. அது உங்களைக் காப்பாத்தும்.. இல்லைனா அனாவசியமா உங்க பொண்டாட்டியை போலீஸ் அழைச்சுட்டுப் போய் கேள்வி கேட்கும். அந்தம்மா உண்மையத்தான் சொல்லும். சாட்சிக்கு பொன்னம்மாவும் இருக்கா இல்லையா.. அதனால பயப்படமாட்டாங்க.. இப்போ மாமா வேற உயிரோட இல்லை. சொல்லுங்க மிஸ்டர் முரளி!”

 

கல்யாண் அவளைப் பார்த்துக்கொண்டே வியப்பின் உச்சத்தில் சென்றான் என்றால் முரளி அழ ஆரம்பித்து விட்டான்.

 

“கல்யாண்.. நம்ம குடும்ப மானம் போகணும்னு நீ டிசைட் பண்ணிட்டே போலிருக்கு!” என்று சொல்லி விட்டு ஓவென அழுதான். ஆனால் கல்யாண் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. ஒரே வார்த்தைதான் சொன்னான்.

 

“நமக்குத் தேவை இப்போ எமோஷனல் இல்லை.. உண்மை.. உண்மையைச் சொல்லு. இல்லைனா என்ன நடந்ததுன்னு என்னாலே உன் பொண்டாட்டியிடம் பயமுறுத்திக் கேட்டு பதில் வாங்கமுடியும்.”

 

“இல்லே என்னால எந்தப் பதிலயும் தரமுடியாது. ஐ டிக்ளைன் டு ஆன்ஸ்வர். நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ.”

 

“இங்க நடந்தது ஒரு கொலை மிஸ்டர் முரளி..  எனக்குக் கொஞ்சம் விவரம்தான் கிடைச்சுது. ஆனா இந்த விஷயம்லாம் போலீஸுக்கு வெல்லம் மாதிரி. போலீஸ்க்காரங்க துருவித் துருவி அவங்க பாணில கேட்டு, உங்களைத் துன்புறுத்தி இருட்டு ரூம்ல  வெச்சு உங்களை விசாரிச்சாங்கன்னா அப்போ எல்லா விடைகளும் டக் டக்னு சொல்லிடுவீங்க.. இது போலீஸ்கிட்ட போகறதா இல்லே நம்மோடேயே இருந்து சால்வ் பண்ணப் பாக்கலாமா?” கோம்டி அவனைப் பயமுறுத்தினாள்.

 

“அப்படின்னா போலீஸ் வரைக்கும் போகாது.. இல்லையா?”

 

கல்யாண் பட்டும் படாமல் சொன்னான். “சொல்லு முரளி.. நீ சொல்றதப் பொறுத்து எல்லாமே இருக்கு.”

 

கல்யாணிடம் நெருங்கி வந்தான் முரளி. அவன் கைகளைப் பிடித்துக்கொண்டான். அவன் குரலில் துயரம் அதிகம் இருந்தது.

 

“கல்யாண்.. நீ நினைக்கிற மாதிரி அவ்வளோ நல்லவரில்லே மாமா.. ஐ மீன் உங்க பெரியப்பா. அவருக்குக் கல்யாணம் ஆகலேயே தவிர அவர் இப்போவரைக்கும் பல பொண்ணுங்க வாழ்க்கைல மோசடி பண்ணி ஏமாத்தி இருக்கார். அதுல ஒருத்திதான் என் பொண்டாட்டி.”

 

“என்னடா சொல்லறே?” கல்யாண் அதிர்ந்து போனான். முரளி தன் தலையில் கைவைத்துக்கொண்டே சோகமாக சொன்னான்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.