உயர்வுடைக் கார்த்திகைத் தீபத் திருநாள்

0
image0 (3)

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

கார்த்திகை தீபம் கதைகளைக் கொண்டது
கதைகளைக் கதையாய் எடுத்திடல் வேண்டாம்
கற்கண்டை மருந்தில் சேர்ப்பது போன்று
தத்துவம் விளக்கிடக் கதைகளைப் பகிர்ந்தார்

விளக்கு என்றால் விளக்கம் தருவது
வெளிச்சம் வந்தால் விளங்கிடும் அனைத்தும்
விளக்கை ஏற்றுதல் வெற்றியைக் கொடுக்கும்
விளக்கை ஏற்றுவார் அனைத்தையும் காணுவார்

கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டும்
இரண்டும் இணைந்தால் இன்பமே ஆகும்
இணையும் வேளை இறுமாப்பு வந்தால்
இரண்டின் பயனும் இல்லாமற் போகும்

சரஸ்வதி நாயகன் பிரம்மா ஆவான்
லக்குமி நாயகன் திருமால் ஆவான்
கல்வியை செல்வத்தை வழங்கும் வல்லமை
பெற்றவர் இருவர் மோதினார் முறுகினார்

ஆணவம் கொண்ட  மாலும் அயனும்
ஆண்டவன் தாமென நின்றிடு வேளை
அவர்களின் நடுவே பேரொளி ஒன்று
ஜோதிப் பிளம்பாய் ஜொலித்துமே நின்றது

ஜோதியைக் கண்டவர் பீதியில் நின்றனர்
அசரீரி ஒலித்தது அடிமுடி காணுங்கள்
கண்டால் கடவுள் கண்டவர் வென்றார்
இருவரும் தேடினார் எதையுமே காணா

ஆணவம் அவர்களை அடிதொழ வைத்தது
ஒளி வடிவாக இறைவன் தோன்றினார்
ஒளி வடிவாக வந்த நன்நாள்தான்
உயர்வுடைக்  கார்த்திகைத் தீபத் திருநாள்

கந்தனின் தோற்றமும் ஒளியுடன் இணைந்தது
கனற் பொறியாகியே கந்தனும் தோன்றினான்
எந்தையாம் இறைவன் ஜோதியாய் எழுந்தார்
எழிலுடன் குமரனும் ஒளியென ஜொலித்தார்

கந்தனின் கோவிலில்  கார்த்திகை தீபம்
விஷ்ணு கோவிலில் விஷ்ணுக்குத் தீபம்
சிவனார் கோவில் ஏனைய கோவில்
அனைத்தும் ஒளிர்வது சர்வாலய  தீபம்

வீட்டிலும் தீபம் வெளியிலும் தீபம்
பார்க்கும் இடமெலாம் பரந்திடும் ஒளியே
ஒளியெனும் வெள்ளம் பரவியே நிற்கும்
உள்ளம் இறையின் எண்ணமே பரவும்

ஒளியாய் இறையைக் கண்டிடும் தத்துவம்
உயவுடைத் தத்துவம் உண்மைத் தத்துவம்
ஆதலால் அனைவரும் அனுதினம் தீபத்தை
வீட்டிலே ஏற்றி போற்றியே நிற்பார்

விளக்கை ஏற்றியே அனைத்தும் தொடங்குவோம்
விளக்கு ஏற்றினால் மங்கலம் என்போம்
மங்கலம் வழங்கிடும் வரமே விளக்கு
விளக்கின் ஒளியில் தெரிவான் இறைவன்

ஒளிவளர் விளக்கு இறைவனே ஆவார்
உயர்வுடை தத்துவம் இறைவனே ஆவார்
கார்த்திகை விளக்கு கசடினை அகற்றும்
கடவுளை நினைந்து ஏற்றுவோம் விளக்கை !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.