தெள்ளத் தெளிந்தால் தெரிவான் இறைவன் !

0
image0 (2)

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், ஆஸ்திரேலியா

மாரியும் தெய்வம் மேரியும் தெய்வம்
அரியும் தெய்வம் அரனும் தெய்வம்
அல்லாவும் தெய்வம் அனைத்தும் தெய்வம்
என்று எண்ணினால் எங்கும் நிறைவே

அன்பே உருவாய் ஆனதே தெய்வம்
அன்பே சிவமென அறிந்தோர் அறிவார்
அன்பை விட்டால் தெய்வம் இல்லை
அன்பே தெய்வம் அன்பே அனைத்தும்

சமயம் பேசி சன்னதம் கொள்ளும்
மனித மனங்கள் மாறிட வேண்டும்
உருவம் இல்லா இறையை மக்கள்
உருவம் கொடுத்து உணர்வை இழக்கிறார்

ஆதியும் அந்தமும் இல்லா இறைவன்
சோதியாய் சுடராய் இருப்பவன் இறைவன்
பேதமே இல்லா பெரியவன் இறைவன்
பெரும் பொருளாகியே இருக்கிறான் இறைவன்

நீதியே இறைவன் நேர்மையே இறைவன்
சாதிக்குள் இறைவன் சங்கமம் ஆகான்
பேதிக்கும் வேளை பேணிட வருவான்
பின்னம் இலாதான் பேரின்ப பெட்டகம்

அழுதால் வருவான் தொழுதால் வருவான்
அழுக்குடன் இருந்தால் அகிற்றிட வருவான்
தன்னலம் கருதா உள்ளம் தெரிந்து
தானே அவர்க்கு வழித்துணை யாவான்

மண்ணிலும் இருப்பான் விண்ணிலும் இருப்பான்
மரஞ்செடி கொடி அனைத்தும் இருப்பான்
தேனாய் இருப்பான் சுவையாய் இருப்பான்
தெரிவார் கண்ணுக்குத் தரிசனம் ஆவான்

உயிராய் இருப்பான் உணர்வாய் இருப்பான்
உள்ளக் கமலம் அமர்வான் இறைவன்
கள்ளம் அகன்றால் மெள்ள வருவான்
தெள்ளத் தெளிந்தால் தெரிவான் இறைவன் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.