ஆனைக்குழந்தை! (சிறுகதை)

0

மாலுமி

வாடிக்கையாக வரும் நபர்களிடையே இன்று வக்கீல் சண்முகசுந்தரத்திடம் வந்தவர்கள் சற்றே வித்தியாசமாக இருந்தார்கள். மூக்கு கண்​ணாடியை இடது கை ஆட்காட்டி விரலால் தள்ளிவிட்டவாறு மறுபடியும் கேட்டார்.

“இந்த பெயருக்கு தான் மாத்தணுமா?”

வந்திருந்த இளைஞனும் அவனுடைய வயதான தாயும் ஒருசேர தலைசைத்தார்கள் “ஆமாங்க ஐயா, இல்லைன்னா அது சாமி குத்தம் ஆயிடும்”.

“இந்த பெயர் மாத்தினதுக்கு அப்புறம் கண்ணாலம், காட்சி, படிப்பு, பேங்க், வேலை செய்கிற இடம், நல்லது, கெட்டதுன்னு எல்லா இடத்திலும் இந்த பேர்தான் இருக்கும்… பரவாயில்லையா, ஏம்பா தம்பி நீ ஒண்ணுமே சொல்லாமல் நிக்கிறியே?”.

“அம்மா சொல்றதுதாங்க. அதுக்குத்தானே அவ்வளவு தொலைவில் இருந்து வந்திருக்கோம்”.

“எதுக்கும் இன்னொரு வாட்டி ரெண்டு பேரும் பேசிப்புட்டு ஒரு அரை மணி கழிச்சு வாங்க”.

“அரை மணி, ஒரு மணி எல்லாம் வேண்டாங்க அம்மா சொல்லி புட்டாங்க. எனக்கும் சம்மதம் தான், அதுக்கு என்ன வேலை செய்யணுமோ, நீங்க ஆரம்பிங்க”.

“சரிப்பா … நீ இங்க வந்து உட்காரு இந்த சேர்ல. ஊரு, பேரு, அட்ரஸ், சாட்சியெல்லாம் கொண்டு வந்து இருக்கியா?”.

“இருக்குங்க சார்”, சொல்லிவிட்டு கையில் இருந்த சற்றே அழுக்கான மஞ்சள் பையில் இருந்து ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை போன்றவற்றை எடுத்து வக்கீலிடம் நீட்டினான்.

“அம்மா உங்க கிட்ட ஒண்ணு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே?”.

“கேளுங்க சாமி …”.

“இந்த பேர் மாத்தணும்னு ஏன் வந்தீங்க? அப்படி இந்த பேர்ல என்னதான் இருக்கு?”. கேள்வி சுலபமாக இருந்தாலும் பதில் சொல்வதற்கு பல வருட கதைகளை கூற வேண்டிய கட்டாயம் வந்தது அம்மாவுக்கும், மகனுக்கும். அதை நாமும் தான்

கேட்போமே.

*****                 *****                 *****                 *****                 *****                 *****

பொதுவாகவே ஆனை குட்டி பிறந்து பயிற்சிக்குப் போகும் பருவத்திலேயே இந்த குட்டி திருக்காவூர் கோயிலுக்குத்தான் என்பது முடிவாகி இருந்தது. அவ்வளவு பெரிய உருவத்தை ஒரு சின்னஞ்சிறு சங்கிலியில் கட்டி மனிதன் இடும் ஆணைக்கு எல்லாம் மண்டியிட செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. தாயிடமிருந்து பிரித்துக் கொண்டு வந்து, சோறு தண்ணி இல்லாமல் பட்டிக்குள் ஆடு, மாடு போல அடைத்து ஒரு துண்டு கரும்புக்கும், ஒரு சொட்டு தண்ணீருக்கும், ஒரு கவளச்சோற்றுக்கும், கும்கியின் வலுக்கட்டாய வழிகாட்டலும் மற்றும் அவள் வாங்கிய அடிகளும் கொஞ்ச நஞ்சமல்ல. கடைசியில் விஜயகுமார் பாகனாகியபின்தான் அவளுக்கு புரிய வைத்து, மேலும் பயிற்சிகள் எல்லாம் கொடுத்தார்கள். அப்போதிலிருந்தே இருவரும் இணைபிரியா தோழர்கள் தான்.

பயிற்சியின்போதே அவளுக்கு தெய்வானை என்ற நாமகரணமும் செய்யப்பட்டது. தெய்வானைக்கு இப்போது கோயிலில் நின்று கொண்டிருக்கும்போது கூட அதையெல்லாம் நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது. ‘காட்டு ராஜா போன்ற உருவம், புராணத்தில் ஐராவதம் என்ற பெயர் பெற்ற உருவம், ஆதி முதல்வனாய் இருக்கும் விநாயகப் பெருமானின் உருவம் என்று இன்னும் எத்தனை எத்தனையோ … இப்படி இருந்தும் நமது வாழ்க்கை ஒரு சுதந்திரம் இன்றி உள்ளது? என்ன செய்வது? முன் ஜென்மத்தின் பலன் போல. ஒரே ஒரு நிம்மதி என்னவென்றால் தினசரி ஆண்டவனை சுமந்து செல்லும் பாக்கியமும், அவனை முதலாக தரிசிக்கும் பாக்கியமும் கிடைத்துள்ளது’. கோயில் வெளிப்பிரகாரத்தில் தெய்வானை நடந்து கொண்டே நினைவுகளை அசை போட்டாள். ஒரு சில சமயம் குருவாயூரில் தனது நண்பர்களுக்கு வருடம் ஒருமுறை நடக்கும் ‘கட்டி அடிக்கல்’ என்ற நிகழ்வை நினைத்தாலே குலையே நடுங்குகிறது. நாலைந்து பேர் கழிகளோடு வந்து யானைகளை நீண்ட நேரம் அடிப்பார்கள். அது கிட்டத்தட்ட முடியாத நிலைக்குப் போய் கீழே விழுந்து, ‘என்னை விட்டுவிடு’ என்று கெஞ்ச கூட திராணியற்று உயிர் போகும் வலியில் மயங்கி கிடக்கும்.

‘உன்னை விட நான் தான் பெரியவன் … நான் சொல்வதை கேட்டு நட’ என்று மனிதர்கள் யானைக்கு கூறும் நிகழ்வாகத்தான் அவளால் இதை நினைவு கூற முடிகிறது. பாகன் விஜயகுமாரிடம் சிறிது நாட்களிலேயே தெய்வானை ஒட்டிக்கொண்டு விட்டாள். கோயிலுக்கு வரும் மக்களுக்கு ஆசி செய்வது, கடவுளை சுமந்து ஊர்வலம் வருவது இவைகளுக்காகவே பிரதானமாக இருந்தாள். மற்ற நேரமெல்லாம் பாகனோடு விளையாட்டு தான். அவளை விட்டு அவனும் ஒரு நாள் கூட வெளியில் போனதில்லை. ஏதோ ஒரு அவசர விஷயமாக, ஒரு அரை நாள் வெளியில் போனதற்கே தெய்வயானை காலையிலிருந்து விரதம். கடைசியில் தகவல் போய், மதியத்திற்கு மேல் பாகன் விஜயகுமார் வந்து நாலு கவளங்கள் கொடுத்த பின்னர்தான் சாப்பிடவே ஆரம்பித்தாள். அவனைத் தவிர வேறு யாரும் அருகில் வந்து தொடுவதும் பிடிக்காது. அமைச்சர்கள், அறங்காவலர்கள் இன்ன பிற வி.ஐ.பிக்கள் வரும்போதெல்லாம் பாவம் கூடுதல் ஜாக்கிரதையோடு இருப்பான். விஜயகுமாரின் தம்பி சுந்தரேசன் என்கிற சுந்தரம் ஒருவனை மட்டும்தான் தெய்வானை அரை மனதோடு ஏற்றுக் கொண்டாள். அதுவும் பாகன் விஜயகுமார் பக்கத்தில் அல்லது கூப்பிடு தூரத்தில் இருக்க வேண்டும். சுந்தரம் என்னதான் மரக்கிளைகள், தழைகள் போட்டாலும் அவ்வப்போது திரும்பித்திரும்பி விஜயகுமார் எங்கிருக்கிறான் என்பதை நோட்டம் விட்டுக்கொண்டுதான் இருப்பாள். காலம் இப்படியே போய்க் கொண்டிருக்க ஒருநாள் …

*****                 *****                 *****                 *****                 *****                 *****

தூரத்தில் பாகன் விஜயகுமார் தனது தோழன் கிரிராஜோடு காலை பணிக்காக வந்து கொண்டிருந்தான். அருகிலே வந்ததும் தெய்வானை அழகை பார்த்து தன்னை இழந்து நின்றான். வாழ்க்கையில் ஒரு சில விஷயங்கள் என்றுமே சலிப்பதில்லை. இவற்றில் யானை, ரயில், ஆகாயவிமானம் போன்றவை அடக்கம்.

“விஜய், யானை கூட சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கலாமா?”.     சாதாரணமாகவே யானையின் அருகிலே யாரையும் செல்லவோ போட்டோ எடுக்கவோ அனுமதிப்பதில்லை தெய்வானை பயப்பட்டு விடக்கூடாது என்பதற்காக.

“வேண்டாம்” என்று கூறி முடிப்பதற்கு முன்னரே, அவன் தோழன் கிரிராஜ் யானையை நெருங்கி இருந்தான். புதிய மனிதனின் அருகாமை தெய்வானைக்கு சற்று கோபத்தை வரவழைத்தது. வால் நீண்டு குச்சி போல ஆயிற்று கோபத்தை காண்பிக்க. இவற்றையெல்லாம் கவனித்த பாகன் விஜய்,

“கிரிராஜ் வேண்டாம், வேண்டாம். தயவு செய்து ஆனைகிட்ட இருந்து விலகி செல்லப்பா” என்றவாறு யானையிடம் ஓட ஆரம்பித்தான். தூரம் என்னவோ ஒரு சில அடிகள்தான்.

“ஒரே ஒரு போட்டோ மட்டும்” என்றவாறு கிரிராஜ் சட்டென்று மொபைல் போனை எடுத்து செல்பி எடுத்துக் கொள்ள தெய்வானை மேல் சாய்ந்தவாறு போஸ் கொடுத்து போட்டோ எடுக்கும் பணியில் மும்முரமானான். போனை கண்டது தான் தாமதம், பயத்தினால் தெய்வானை படபடக்க, பாகன் விஜயகுமார் அவளை நெருங்க, எல்லாமே ஒரே நொடிப் பொழுதில் … நடக்கக்கூடாத ஒன்று அந்த ஒரு நொடி பொழுதில் நடந்து விட்டது. ஆம், பயத்திலும் கோபத்திலும் சிறுபிள்ளை போல் செய்வதறியாது கிரிராஜை தும்பிக்கையில் தூக்கி தரையில் அடித்திருந்தாள். அடுத்த நொடி அங்கே உதவுவதற்கு ஓடி வந்த பாகன் விஜயகுமாருக்கும் இதே கதி தான். பயத்திலும், கோபத்திலும் ஆறறிவுடைய மனிதர்களாகிய நாமே என்னென்னவோ செய்யும்போது, தெய்வானை என்னவெல்லாமோ செய்து இருந்தாள். நேரமாக ஆக விஷயம் காட்டுத்தீ போல பரவியது. மக்கள் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. தெய்வானைக்கு எதுவும் புரிந்தபாடு இல்லை. தற்போது சாந்தமாகிவிட்டாள். கீழே இறந்து கிடந்த பாகன் விஜயகுமாரை படுத்திருக்கிறான் என்று நினைத்தாள் போல. மெதுவாக தும்பிக்கையால் தொட்டுத்தொட்டு எழுப்புகிறாள். கண்ணீர் வடிக்கிறாள். எஜமான் எழுவான் என்ற நம்பிக்கையிலே வெகுநேரமாக அவனை எழுப்புகிறாள். அவன் எழ மாட்டான், திரும்ப வரமாட்டான் என்பது அவளுக்கு புரியவில்லை. சுற்றி இருந்த மக்கள் கண்களில் எல்லாம் இந்த பாச போராட்டம் கண்டு கண்ணீர்.

ஊன், உறக்கம் இன்றி சில நாட்கள். மேற்கூறிய சம்பவம் நடந்தது நமது தமிழகத்தையே உலுக்கிவிட்டது. தெரியாமல் தவறு செய்த சிறுபிள்ளை போலத்தான் தெய்வானை முகமும் இருந்தது. ஆனாலும், அடுத்து வந்த நாட்கள் அந்த காலத்து பயிற்சியின் நினைவுகளை மனதில் கொண்டு வந்தது. கூடுதல் சங்கிலிகள், குறுகிய கொட்டடி போன்ற இடத்தில் அடைப்பு, எப்போதுமே வயிறு பசிக்கும் அளவிற்கு அளவில் குறைந்த உணவு, குறைந்த அளவு குடிநீர், ஜீவன் வற்றிப்போக வைக்கும் நாட்களாக இருந்தன. யாரும் அவள் அருகில் போவதில்லை. ஓரிரு மிருக வைத்தியர்கள் தவிர. இலை, தழையெல்லாம் தூரத்திலிருந்து வீசப்படுகின்றன. ‘நான் என்ன தப்பு செய்தேன்? என்னை தாக்கி ஏதோ செய்து விடுவான் என்ற பயத்திலும் கோபத்திலும் தானே இப்படி செய்தேன்? என் எஜமான் பாகன் விஜயகுமார் கடந்த சில நாட்களாக தூங்குகிறான். எப்போதுதான் எழுந்து என்னிடம் வந்து விளையாடுவான்? பேசுவான்?’ அவளது எண்ணங்களை புரிந்து கொள்ள யாரும் இல்லை. கோயில் அலுவலகத்தில் அடிக்கடி மீட்டிங் நடந்தது. அடுத்த பாகன் யார்? என்று முடிவு செய்யப்பட்டது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் வெளியில் இருந்து ஆளை கூட்டி வருவதை காட்டிலும், சுந்தரத்தையே அடுத்த பாகனாக நியமிக்க ஆணையும் வந்தது.

முதலில் சுந்தரத்திற்கும் மனசுக்குள்ளே தித்,திக்கென்றுதான் இருந்தது. அவனை தெய்வானை ஏற்கனவே பார்த்திருப்பதால் வேலையும் சுளுவாக முடிந்தது. பாகன் விஜயகுமார் கூடிய விரைவிலே வருவான் என்று நினைத்தாள்போல. நாளாக, நாளாக அவன் இல்லை என்பதும் புதிய பாகன் வந்துவிட்டான் என்பது புரிந்தும் புரியாதது போலிருந்தது. வீம்பு செய்யாமல் சுந்தரம் சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தாள். சுந்தரத்தின் அம்மா ஒரு நாள் நான்கு கட்டுகள் கரும்பு வாங்கி வந்திருந்தாள். கற்பூரம் பற்ற வைத்து கும்பிட்டு விட்டு ‘பெரியவன காவு வாங்கிட்ட … சின்னவனை உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அவனை நீ தான் காப்பாத்தணும் சாமி’ என்று கண்ணீர் மல்க நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து நமஸ்கரித்து விட்டு சென்றாள். அவள் சொன்னதெல்லாம் என்னவென்று புரியாவிட்டாலும் அதைக் கேட்க கேட்க தெய்வானைக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது போல. தும்பிக்கையால் சுந்தரத்தை அணைத்துக் கொண்டாள்.

ஒரு வாரங்களில் பல்வேறு மருத்துவ சோதனைகள், பயிற்சிகள் அவ்வப்போது அங்குசம் என்று கொஞ்சம், கொஞ்சமாக சகஜ நிலைக்கு திரும்பியது. சுந்தரத்தின் தாயார் அவ்வப்போது வந்து கும்பிடு போட்டுவிட்டு ‘சாமி … நல்லபடியா காப்பாத்துப்பா, என் மகனுக்கு மொட்டை போட்டு பெயரை மாத்திக்கிறேன்’ என்று கும்பிடு போடுவாள். சில வருடங்களில், தெய்வயானையை ஆனைமலை முகாமுக்கு அனுப்ப சொல்லி ஆணை வந்தது. அதன்படி சுந்தரமும், அவன் அம்மாவும் ஆனைமலை காப்பகம்வரை சென்று வழி அனுப்பி விட்டு வந்தார்கள். அதன் பிறகும் மாதத்திற்கு ஒருமுறை தெய்வானையை பார்க்கப் போனார்கள். அவர்களை கண்டவுடன் ஓடி வந்து தும்பிக்கையால் சுந்தரத்தை கட்டிக்கொள்வாள். இருவருடன் விளையாடுவாள். திரும்பிச் செல்லும்போது சிறுபிள்ளை போல கண்ணீர் விட ஆரம்பித்து விடுவாள்.

“இது தான் சார் எங்க கதை. இப்ப கூட இரண்டு நாள் முன்னால பார்த்துட்டு வந்தோம். நல்லா இருக்கா” என்றான் சுந்தரம்.

“அதான் காப்பகத்தில் விட்டாச்சே, பிறகு என்னத்துக்கு போறீங்க?” வக்கீலின் கேள்வி சுந்தரத்தின் தாயாருக்கு அதீத கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் போல.

“என்ன சார் சொல்றீங்க? அது என் பொண்ணு மாதிரி. எவ்வளவு பாசமா இருக்கும் தெரியுமா? மனுசன எல்லாம் விட நூறு மடங்கு பாசம் ஜாஸ்தி சார். நடந்தது நடந்து போச்சு, நம்ம விதி. உங்க பையனே வெளியூர் ஹாஸ்டல்ல, ஸ்கூல்ல இல்ல உங்க பொண்ணு கட்டி கொடுத்த இடத்துல பாக்குறதுக்கு போவீங்களா? மாட்டீங்களா?” இழப்புக்கு பின்னுமான அவர்களின் பாசம் நமது புரிதலுக்கும் மேலே இருந்தது.

“கட்டாயம் போவேன்”.

“வக்கீல் சார் நீங்க எதனால போறீங்க பார்க்கிறதுக்கு?”.

“நம்ம குழந்தைங்கங்கிற பாசம் தான்”.

“அதே மாதிரிதான இதுவும் புரியுதா சார்”.

மறுபேச்சின்றி வக்கீல் சண்முகசுந்தரம், சுந்தரத்தின் பெயர் மாற்றத்திற்கு தேவையான ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அவனது தாயார் தெய்வானை சுந்தரத்தோடு இணங்கி அவனை ஒன்றும் செய்யாமல் இருந்தால் சுந்தரத்துக்கு மொட்டை போட்டு அவன் பெயரை மாற்றுவதாக கோவிலில் வேண்டியிருந்தார். அதன் நிமித்தமாகவே அவர்கள் இருவரும் இப்போது இங்கே.

“சரி சுந்தரம், டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டேன். எந்த பெயருக்கு மாத்தணும் ?”.

“தெய்வானை … தெய்வானை சுந்தரேசன்!”.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.