Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

முக்தி தலம் சுப்பிரமண்யா – 3

விசாலம்.

Kukhi Subramanya

 

 

அருள்மிகு குக்கி சுப்ரமண்யா திருக்கோயில் (தொடர்ச்சி…)

தலபுராணத்தில் இந்தக்கோயிலின் சிறப்பைப் படித்தேன். ஒரு சமயம் வாசுகியை மஹாவிஷ்ணுவின் வாகனமான கருடன் பார்த்துவிட்டு துரத்த ஆரம்பித்தது. வாசுகி பயந்தபடி குமார பர்வதத்தினுள் இருக்கும் ஒரு குகையில் போய் ஒளிந்து கொண்டு சிவபெருமானைக்குறித்து தவம் இருந்தது. பரமேஸ்வரனும் வாசுகி முன் தோன்றி “நீ இங்கேயே இரு. சுப்பிரமண்யன் உன்னை அருள் பாலிப்பான். அவனருளால் உனக்கு கருடனிடமிருந்து ஒரு ஆபத்தும் இருக்காது நீ இங்கு குமரனுடன் இருக்க பக்தர்கள் உன்னையும் சேர்த்து பூஜிப்பார்கள் ” என்றார். முருகனும் அதை ஆமோதித்து “வாசுகியுடன் கூடியிருக்கும் என்னை வணங்குபவர்கள் சகல சௌபாக்கியங்களும் பெறுவர்” என்றார்.   இதையே வேறு ஒரு புராணக்கதையாக அங்கு இருந்த பக்தர் சொன்னார்.

தாராகாசுரனை வதம் செய்த இடம் ஒரு மலையின் சிகரமாம். அந்த இடத்திற்கு குமராத்ரி மலை என்று பெயர் வந்தது. தாராகாசுரனை வதைத்த முருகன் மேல் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு அதிக அன்பும், பாசமும் ஏற்பட்டு மனம் நெகிழ்ந்து, தன் மகள் தேவசேனையைத் திருமணம் செய்து கொடுத்தான். பின் பட்டாபிஷேகமும் செய்து முடித்தான். அந்த அபிஷேக நீர்தான் குமரதாரா நதியானதாம். அங்கு தங்கிய குமரன் ஒருநாள் மலைப்பகுதியில் நடக்க, அங்கு ஒரு குகையினுள் வாசுகி தவம் செய்வதைக் கண்டார். வாசுகியின் தவக்கோலமும் முகத்தின் அழகும் அவரை மிகவும் கவர்ந்தது. அதனால் வாசுகியைத்தன் தோழனாக ஏற்று அவனுக்குத்துணையாக கூட அங்கு தங்குவதாக வாக்கு கொடுத்தாராம். கருடனையும் குமராத்ரி எல்லைக்குள் வரக்கூடாது என்றார். ஆனால் கருடன் தான் வருடம் ஒருமுறையாவது குமரனை வலம் செய்ய விருப்பப்பட்டார். அதன்படியே வருடத்தில் ஒருமுறை கருடன் அங்கு வருகிறார். சபரிமலை ஜோதி தெரியும் முன் கருடன் வந்து சுற்றுவது போல் இங்கும் மார்கழி மாதம் நடக்கும் உற்சவத்தில் தேர் ஊர்வலம் முன் கருடன் வந்து மும்முறை வலம் வந்தப்பின் தான் தேர் கிளம்பும். இது காணக்கிடைக்காத காட்சி தான்.

இந்த ஆலயத்தில் பல தூண்களில் நாகம் வடிக்கப்பட்டிருக்கிறது. அந்த நாகத்தின் எல்லா முகங்களிலும் வைணவ சம்பிரதாயம் போன்று திருமண் குறி இடப்பட்டிருகிறது. தவிர கருவறைக்குள் ஆதிசேஷன் இருப்பதும், எதிரில் கருட ஸ்தம்பம் இருப்பதும் வைணவ சம்பிரதாயமாக இருக்கிறது. அத்துடன் அருள்மிகு சுப்பிரமண்யாவும் இருப்பதும், சைவமும் வைணமும் கைக்கோர்த்துக்கொண்டு அருள் புரிவதும் என் மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது.

அங்கு இன்னொரு சடங்கு மிகவும் புதிதாகவும் முக்கியமாகவும் எனக்குப்பட்டது. அதுதான் அக்ஷய பாத்திரம் கொண்டு வரும் சடங்கு. பூஜை முடிந்தபின் அர்ச்சகர் கருவறையினுள் இருக்கும் ஒரு கரண்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். பின் நேராக மடப்பள்ளி சென்றார். அவர் கையில் இருந்த கரண்டியில் கர்ப்பகிரகத்தில் நைவேத்தியம் செய்த பிரசாதம் இருந்தது. அதை அவர் மடப்பள்ளியில் இருக்கும் மொத்த அன்னத்தில் கலந்து விடுவாராம். பின் அன்னதானம் நடக்குமாம். அங்கு போஜனத்திற்கு எத்தனைப்பேர் வந்தாலும் அன்னம் வளர்ந்து கொண்டே இருக்கும் என நினைக்கிறேன். அதனால் தான் அந்தக்கரண்டி அட்சயப்பாத்திரமாக இருக்குமோ என எனக்குத் தோன்றியது. எத்தனைக்கூட்டம் வந்தாலும் இல்லை என்று சொல்லாமல் அன்னதானம் நடப்பது மிகவும் பாராட்டுக்குரியதுதான்.

இங்கு நடக்கும் அங்கப்பிரதக்ஷிணம் சற்று வித்தியாசமாக இருக்கிறது. பிரார்த்தனை செய்பவர், வேண்டிக்கொண்டவர் எல்லோரும் சாப்பிட்ட எச்சில் இலைகளின் மேல் அங்கப்பிரதக்ஷிணம் செய்வார்களாம். இதனால் அவரது தீராத நோயும் மறைந்து போய் விடுகிறதாம்.

கோயிலைச் சுற்றி வர, பின்புறம் மேற்கே பார்த்து ஒரு சன்னிதியில் ஒரு அழகிய சிவலிங்கம் இருக்கிறது. இதை “குக்கே லிங்கம்” என்கின்றனர். குக்கே என்றால் என்ன அர்த்தம் என்று கேட்க ‘குக்கே” என்றால் கூடை என்ற விடை கிடைத்தது. கூடை சிவலிங்கம் என்றால் என்னவாயிருக்கும் என்று என் மண்டைக்குடைய அங்கிருக்கும் ஒருவர் அதற்கும் விடையளித்தார். முன் காலத்தில் இங்கு ஒரு கூடை நிறைய சிவலிங்கங்கள் இருந்தவனவாம். அதனால் இந்த ஊருக்கே “குக்கே சுப்பிரமண்யா” என்ற பெயர் அமைந்ததாம்.

மேற்கு பிரகாரத்தில் ஸ்ரீ மாருதி ராயரும் இருக்கிறார். அவரையும் பார்த்து விட்டு வெளியில் வந்தேன். அங்கு ஒருவர் “உள்ளே ஒரு திண்னையில் நின்றுகொண்டிருக்கும் பல்லாள ராயர் சிலையைப்பார்த்து வந்தீர்களா? அது ரொம்ப முக்கியமாயிற்றே” என்றார்.

“அது என்ன சிலை? நாங்கள் பார்க்கவில்லையே”என்று அசடு வழிந்தபடி சொன்னேன.

“அந்தச்சிலை முன் பலர் முழு பூஷிணிக்காய், பருத்தி போன்றவற்றை வைத்து காணிக்கை செலுத்துகிறார்கள். அதைப்பார்க்கவில்லையா? இந்தச்சிலையை முக்கியமாக பார்த்துவிட்டு வருவது வழக்கம். போய் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் “

“இதோ போகிறோம். அதற்கு முன்னால் அந்த பல்லாளராயர் யார் ? அவருக்கு ஏன் அங்கு சிலை இருக்கிறது? என்பதைச் சுருக்கமாக சொல்லுங்களேன்”

“சொன்னால் போச்சு” என்று கதையை ஆரம்பித்தார்.

“இந்தக்கோயிலுள்ளே சுப்பிரமண்யா மடம் என்று ஒன்று இருக்கிறது. இந்த மடத்தை நிறுவியர் ஸ்ரீ விஷ்ணுதீர்த்தர். இவர் ஸ்ரீ மத்வாசாரியாரின் தம்பி. இவர் தினந்தோறும் குமார பர்வதம் சென்று தியானம் செய்வார். அவரிடம் சாளக்கிராமம் வைத்த ஒரு பெட்டி ஒன்று எப்போதும் இருக்கும். அதை சம்புடம் என்பார்கள். ஸ்ரீ விஷ்ணுதீர்த்தரின் சீடர்கள் தங்களுக்கும் சாளக்கிராம சம்புடம் ஒன்று வேண்டும் என்று கேட்டார்கள். அவரும் “அது குமாரதாரா நதியில் வரும், அப்போது எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

அதேபோல் அந்த நதியில் ஒரு சம்புடம் அடித்துக்கொண்டு வர சீடர்கள் மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக்கொண்டனர். ஸ்ரீவிஷ்ணு தீர்த்தரின் முக்கிய சீடரான ஸ்ரீ அனிருத்த தீர்த்தர் அதைத்திறக்க முயற்சி செய்தார், ஆனால் முடியவில்லை. ஆகையால் அதை அப்படியே வைத்துக்கொண்டு பூஜை செய்தார்.

அந்த ஊர் பல்லாளராயர் இதைக்கேள்விப்பட்டு ஒரு கொல்லனை அனுப்பி அதைத் திறக்கச்சொன்னார். அவன் முயற்சி செய்தும் முடியவில்லை. ஆனால் அவன் உடல் முழுவதும் ஒரு எரிச்சல் கிளம்பி, உடல் நலம் குன்றி இறந்து போனான். பின் யானை மூலம் அதைத் திறக்க முயன்றார். அந்த யானையும் சம்புடத்தை தன் காலின் கீழ் போட்டு மிதித்தும் அது திறக்கவில்லை. ஆனால் அதன் உடலும் எரிய ஆரம்பித்து அது பைத்தியம் பிடித்தாற்போல் ஓடி ஒரு நதியில் இறங்கி செத்தது.

மறுநாள் அரசனுக்கும் உடல் எரிய ஆரம்பித்தது. அவன் அழுதபடி அனிருத்தத்தீர்த்தரிடம் சென்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டான். அதைக்கேட்ட சுவாமிகள் ஒரு பரிகாரம் செய்யச்சொன்னார். அதுதான் ஆலயத்தினுள் இருக்கும் அவனது சிலை. அவனைப்போல் ஒரு சிலை வைக்கப்படவேண்டும் என்றும் அதற்கு பக்தர்கள் பூஷிணிக்காய், பருத்தி போன்றவைகளைக் காணிக்கையாக செலுத்தினால் அவனுக்கு இந்த பாபத்திலிருந்து விடுபட ஒரு நல்ல பிராயசித்தம் ஆகும் என்றார்.

இன்றும் அந்தச்சிலை முன் இரவு பூஜையில் காட்டும் தீபாராதனை முடிந்த பின்னர் அந்த தீபக்காலை இந்தச்சிலைக்கு அருகில் கொண்டு வைக்கிறார்கள். இந்தக்கோயிலில் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் எல்லாம் நடந்து விடுவதால் என்றுமே கூட்டத்தைக் காணமுடிகிறது

ஓம் சரவணபவ.

 

 

 

படங்கள் உதவிக்கு நன்றி: http://temple.dinamalar.com/en/new_en.php?id=99

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க