வல்லமையாளர் விருது!

இந்த வார வல்லமையாளர் விருது (ஏப்ரல் 23 – 29, 2012)

 

வல்லமை அன்பர்கள் கூடி, வாரம்தோறும் வல்லமை விருது வழங்கலாம் என்பதுதிட்டம். நமது கால அளவாக, திங்கள் முதல் ஞாயிறு வரை என வைத்துக்கொள்வோம். இந்த ஒரு வாரத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்திய ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர், விளையாட்டு வீரராகவோ, இலக்கியவாதியாகவோ, அரசியல்வாதியாகவோ, குடும்பத் தலைவியாகவோ, குழந்தையாகவோ கூட இருக்கலாம். உலகின் எந்தப் பகுதியை, எந்த மொழியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். அவர், அந்த ஒரு வாரத்தில் உடல் அளவிலோ, மன அளவிலோ, தனியாகவோ, கூட்டாகவோ… ஏதேனும் ஒரு புள்ளியில் தம் ஆற்றலைத் தலைசிறந்த முறையில் வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

இதற்கான பரிந்துரைகளை வல்லமை அன்பர்களிடமிருந்து வரவேற்கின்றோம். வல்லமை குழுமத்திலோ (http://groups.google.com/group/vallamai), மின்னிதழிலோ (https://www.vallamai.com), மின்னஞ்சலிலோ (vallamaieditor@gmail.com) இத்தகைய வல்லமையாளரைப் பரிந்துரைக்கலாம்.

வல்லமை ஆலோசகர்களுள் ஒருவரான விசாகப்பட்டினம் திவாகர் அவர்கள், வாரந்தோறும் இந்த வல்லமை விருதுக்கு உரியவரை அறிவிப்பார். அவர், திங்கள் முதல் ஞாயிறு வரை வரும் அனைத்துப் பரிந்துரைகளையும் பரிசீலிப்பார். தாமே சொந்தமாகவும் தேடி அலசுவார். தேவைப்பட்டால், வல்லமைக் குழுவினருடன் கலந்தாலோசிப்பார். இவற்றின் அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, திங்களன்று அறிவிப்பார். அதற்கான காரணங்களையும் விளக்குவார். தவிர்க்க முடியாத பணிகள் இருப்பின், இந்தப் பணியை ஏதேனும் ஒரு வாரத்தில் யாரேனும் ஒருவரிடம் அவர் ஒப்படைக்கலாம்.

இந்த வல்லமை விருது, இணையத்தின் வழியே வழங்கப்படும் கௌரவ விருதாகும். இத்துடன் பரிசு எதுவும் இருக்காது. இத்தகைய வல்லமையாளர் ஒருவரைப் பாராட்டுவதன் மூலம், பலரின் ஆற்றலையும் வளர்ப்பதே நம் நோக்கம். ‘வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்ற பாரதி, இந்த விருதாளர்களைக் கண்டு மனம் மகிழட்டும்.

இந்த வாரத்திலிருந்து இந்த விருதுகளை வழங்கலாம். ஏப்ரல் 23 முதல் 29 வரையான காலக்கட்டத்தில் தலைசிறந்த முறையில் வல்லமை காட்டியவர்கள் யார் யார்? உங்கள் பரிந்துரைகளை வரவேற்கிறோம்.

அன்புடன் என்றும்,
அண்ணாகண்ணன்.

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (1)

  1. Avatar

    வணக்கம். என் வலைதளம் பார்க்க அன்புடன் அழைக்கிறேன்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க