ராம்பிரகாஷ்  சாமிநாதன்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்றார் வள்ளுவர் !

அன்பு ஒரு மிகப்பெரிய சக்தி, நிகரற்ற பேராற்றல். அதை நாம் இந்தக் “கொரோனா“ கிருமியின் கோரப் பிடியில் கண்கூடாகக் கண்டு வருகின்றோம்.

எண்ணற்ற மனிதர்கள், தன்னார்வ அமைப்புகள், சேவை மையங்கள், ஆலய அலுவலர்கள்  எனப் பல தரப்பு மக்களும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்களால் இயன்ற உதவிகளை உணவாகவோ, பணமாகவோ, பொருட்களாகவோ, உடல் உழைப்பு மூலமாகவோ செய்து வருகின்றனர். அதிலும் தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், மருத்துவம் மற்றும் அதைச் சார்ந்த பணியாளர்களும் செய்து வரும் நிகரற்ற சேவைகளை விவரிக்கவும் வாழ்த்தவும் வார்த்தைகள் போதா!

இவர்களின் அர்ப்பணிப்பான தொண்டிற்கும் அன்பே ஆதாரம், சக உயிரின் பால் உள்ள பிரியம். இந்த அன்பின் நெடும்பயணத்தில் இந்த வாரம் நடைபெற்ற இரு நிகழ்வுகள், நம்மைப் பெரிதும் ஈர்த்தன.

1. ஒரு சாமானியனின் சமரசமற்ற பயணம்

பாசம் விலைமதிப்பற்றது. அதை ஆணித்தரமாக நிரூபிக்கும் விதமாக இந்த வாரத்தில் இரு வேறு நெகிழ வைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

திரு. அறிவழகன் வயது 65. கும்பகோணத்திற்கு  அருகே உள்ள ஒரு சிற்றூரில் வசித்து வருகிறார். விவசாயம் சார்ந்த தொழில் புரியும் சாமானியர், பரம ஏழை!

அவரது மனைவி மஞ்சுளா, வயது 60. வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இரண்டு முறை ஹீமோதெரபி சிகிச்சை முடித்துவிட்டு மூன்றாவது சிகிச்சை பெற, 2020 மார்ச் 30ஆம் தேதி மருத்துவர்கள் வரச்சொல்லி இருந்தனர்.

ஆனால் “கோவிட்-19” கிருமித் தொற்று காரணமாக, நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவிட்டது. அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள், வேன், கார் என எதுவும் கிடைக்கப் பெறமால் தவித்த அறிவழகன், ஓர் அதிரடி முடிவை எடுத்தார்.

அவரது பழைய மிதிவண்டியிலேயே தனது மனைவியைக் கும்பகோணத்தில் இருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதென்று முடிவெடுத்தார். இடைப்பட்ட தூரம்  ஏறக்குறைய 130 கிலோமீட்டர்கள். நெஞ்சுரம் மிக்க அறிவழகன், தம் மனைவியுடன் பயணத்தைத் தொடங்கினார். வரும் வழியில் குறிஞ்சிப்பாடி காவல் துறையினர் இவர்கள் இருவரையும் நிறுத்தி விசாரித்து அசந்துவிட்டனர் அத்தோடு அவர்களுக்கு உணவு வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

அதன் பின்னர்  எங்கேயும் ஓய்வு எடுக்காமல் சிதம்பரம், சீர்காழி, கடலூர் வழியாக ஜிப்மர் சென்று அடைந்தனர்.

ஆனால்  அங்கோ, அனைத்துப் புற நோயாளிகள் சிகிச்சைகளும் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. இச்சமயத்தில் இவர்கள் நிலையையும் வந்த விதத்தையும் கண்டு இரங்கிய திரு.எ.எஸ். பாதே மற்றும் அவருடைய குழு மருத்துவர்கள், அவர்களை 3 நாட்கள் அங்கேயே தங்க வைத்து, சிகிச்சை அளித்து, ஜிப்மர் ஆம்புலன்ஸ் வண்டியிலேயே மிதிவண்டியோடு சேர்த்துத் திரும்ப அனுப்பி வைத்தனர்.

2. தடைகளைத் தவிடுபொடியாக்கிய தாய்ப்பாசம்

ரஜியா பேகம் (50), தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த அரசு ஆசிரியை. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கணவரை இழந்தவர். அதன் பின்னர் தம் இரு மகன்களே அவரின் உலகம்.

வாழ்வில் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டு தன் பிள்ளைகளைக் கரைசேர்க்கப் போராடும் தாய்.

அவருக்கு இளைய மகன் முகமத் நிஜாமுதீன் (17) பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வை எழுதிவிட்டு, சித்தூரில் உள்ள அவரது நண்பர் வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது. அப்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அங்கேயே தங்கும் நிலை உண்டாயிற்று.

பல வழிகளில் முயன்ற ரஜியா, தாமே சென்று நிஜாமுதீனை அழைத்து வந்துவிடுவது என்று முடிவுசெய்து, போதன் காவல் துறை உதவி ஆய்வாளர் திரு. ஜெயபால் ரெட்டியைச் சந்தித்து அனுமதி கோரினார். அவரும் இவரது துணிச்சலைக் கண்டு மெச்சி, பாதுகாப்பு வழிமுறைகளை எடுத்துக் கூறி அனுமதிக் கடிதத்தை அளித்தார் .

2020 ஏப்ரல் 6ஆம் தேதி எரிபொருள் நிரப்ப ஒரு கேனினையும், சாப்பிட சில ரொட்டித் துண்டுகளையும்  தனது ஸ்கூட்டியில் எடுத்துக்கொண்டு கிளம்பினார்.

வழியில் வரும் பெட்ரோல் பங்குகளில் பத்து நிமிடங்கள் ஓய்வு, பிறகு அடர்ந்த காடுகளுக்கு இடையில் அசராத பயணம். இதோ அவரது வார்த்தைகளிலேயே தொடர்கிறது.

“நான் செல்லும் வழிகளில் காவல் துறையினர் எனக்குப் பெரிதும் உதவினார்கள். அவர்கள் எனக்கு மேலும் நம்பிக்கை தந்தனர்.

“சகோதரி, இந்த நேரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம், இங்கேயே சிலமணி நேரம் தங்கிவிட்டுச் செல்லுங்கள்“ என்று கூறித் தங்க வைத்து, எனது பாதுகாப்பை உறுதி செய்தனர். கிட்டத்தட்ட 700 கிலோமீட்டர்கள் கடந்து என் மகனைக் கண்டேன், அவனைக் கண்டவுடன் (7ஆம் தேதி மாலை) அத்தனையும் பறந்துவிட்டது.

மேலும் நேரத்தை விரயம் செய்யாமல் அன்றே கிளம்பி மீண்டும் 700 கிலோமீட்டர்கள் கடந்து 8ஆம் தேதியே இங்கே வந்துவிட்டோம்“

திட சிந்தையும்  தன்னம்பிக்கையும் அயராத நெஞ்சுறுதியும் மிக்க, அன்பே உருவான அறிவழகன், ரஜியா பேகம் இருவரையும் இந்த வார வல்லமையாளர்களாக அறிவிக்கிறோம். இருவரையும் வாழ்த்திக் கௌரவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது.

படத்திற்கு நன்றி – விகடன்.காம் 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க