குறளின் கதிர்களாய்…(296)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(296)
உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு.
– திருக்குறள் – 261 (தவம்)
புதுக் கவிதையில்…
உண்டி சுருக்கல்
போன்ற நோன்புகளால்
தம் உயிருக்கு வரும்
துன்பங்களைப் தாம்
பொறுத்தலும்,
பிற உயிர்களுக்குத்
துன்பம் தராதிருத்தலும்
ஆகிய அளவினதே
தவத்திற்கு வடிவமாகும்…!
குறும்பாவில்…
தவத்தின் வடிவம் இதுவே,
தன்னுயுயிருக்கான துன்பம்பொறுத்தல், பிறவுயிரைத்
துன்புறுத்தாதிருத்தல் ஆகியவற்றின் அளவினதே…!
மரபுக் கவிதையில்…
உண்டி சுருக்கல் போலுள்ள
உயர்தர நோன்புகள் பலவற்றால்
அண்டிடும் தம்முயிர்த் துன்பங்கள்
அனைத்தையு மொன்றாய்த் தாம்பொறுத்தும்,
அண்டையி லுள்ள பிறவுயிர்க்கும்
அளவிலா துன்பம் தராதிருக்கும்
பண்புட னிருத்தல் போன்றவற்றின்
பயனுள அளவே தவவடிவே…!
லிமரைக்கூ..
தனன்னுயிருக்கான துன்ப மதுவே
பொறுத்தலும் பிறவுயிர்க்குத் துன்பம்தராதது மிணைந்த
தவத்தின் வடிவ மிதுவே…!
கிராமிய பாணியில்…
ஒசந்ததுதான் ஒசந்ததுதான்
உண்மயான தவமதுதான்
ஒசந்ததுதான் ஒசந்ததுதான்..
உண்ணாநோம்பு போலவுள்ள
பலவக நோம்புகளால
தனக்க உயிருக்கு வருகிற
துன்பங்களப் பொறுத்துக்கிறதும்,
அடுத்த உயிருக்குத்
துன்பம் செய்யாமயிருக்கிறதும்தான்
நல்ல தவத்துக்கு
அடயாளமே..
எப்பவும்
ஒசந்ததுதான் ஒசந்ததுதான்
உண்மயான தவமதுதான்
ஒசந்ததுதான் ஒசந்ததுதான்…