ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 3

மீ.விசுவநாதன்
“குருவின் கருணை”
தானே சீட னுக்காய்
“தர்க்க சங்க்ரஹம்” என்ற
தேனாம் பாடம் தன்னை
தினமும் கற்றவர் கொடுத்தார் !
மேலாம் கருணை கொண்ட
மேகம் அவரருள் என்று
நூலோர் சொன்ன வார்த்தை
நூறு சதமெனக் கண்டார். (21)
“குரு சீடருக்கு அறிவுரை”
அப்பா அம்மா உன்னை
அன்பால் தேடு வார்கள்
இப்போ துடனே நீயும்
எழுது கடிதம் என்றார்
சிப்பாய் போல ஓடிச்
செய்து விட்டார் சீடர்;
அப்பா அம்மா உள்ளம்
அதனால் அமைதி ஆச்சு. (22)
“1968ல் சிருங்கேரி வந்தார்”
வடநாடு யாத்திரை சென்று
மறுபடி சிருங்கேரி வந்தார்
திடமான அத்வைத ஞானி
தெய்வமாம் நம்வித்யா தீர்த்தர்;
கடலாழ முத்தினை ஒத்தக்
கவிஞராம் சீடருமே பாம்புப்
படத்தாலே தவளையைக் காத்த
பதியினை வந்த டைந்தார். (23)
“சிருங்கேரி “
வேம்பும் அரசும் ஒன்றாய்
வேருடன் நிற்றல் போல
பாம்பும் தவளை யோடு
பாசமாய் இருத்தல் பார்த்து
ஆமாம் இந்த மண்தான்
அமைதியைப் பேணு மென்று
ஓமோம் என்று ஓதி
முதல்மடம் அங்க மைத்த (24)
சங்கரர் வாழ்ந்த பூமி!
சங்கர வம்சம் வாழும்
மங்கல சிருங்கே ரிக்கு
மாந்தரே வருக என்று
திங்களைச் சூட்டிக் கொண்ட
செந்நிற சிவனே போன்ற
எங்களின் குருவே அன்பால்
இன்முகங் கொண்ட ழைப்பார். (25)
“நரசிம்மவனம்”
நரசிம்ம வனத்தி லுள்ள
“ஆக்னீக மந்திரம்” என்னும்
மரம்சூழ்ந்த அறையை அன்று
மகாசன்னி தானமே தந்தார்
பரம்பொருளைக் காட்ட வேண்டி
பாதையினைத் காட்டினார் என்றே
சிரம்தாழ்த்தி வணக்கம் சொல்லி
சீடருமே தங்கியும் வந்தார். (26)
“கசடறக் கற்கக் கற்க”
கசடறக் கற்க வேண்டும்
கற்றபடி நிற்க வேண்டும்
இசைபட என்றும் வாழ
வேதநெறி ஒழுக வேண்டும்
அசைவிலா உள்ளுக் குள்ளே
அகிலத்தை அடக்கி வைக்கும்
நிசமான ஞானம் கொள்ள
நினைத்தாரே சீட ரும்தான் (27)
“தாயைப்போல் பரிவு”
ஒருபிர தோஷ நன்னாள்
துங்கைக் கரையில் உள்ள
அருமையாம் சார தாவின்
ஆல யம்சென் றுவிட்டு
திரும்பிடும் போது பார்த்தார்
தெய்வ நிகர்ஆ சானை !
இருட்டிடும் முன்பே வாவா
என்றார் குருவும் அன்பால்! (28)
“தர்க்க சாத்திரப் பாடம்”
தக்கதோர் குருவைக் கொண்டு
தர்க்க சாத்திரப் பாடம்
அக்கணம் சீடன் கற்க
ஆசான் விரும்பினார் ! நல்ல
பக்குவப் பட்ட சான்றோர்
பக்கம் இருந்திடச் செய்து
திக்கெலாம் புகழும் வண்ணம்
சீடன் பேர்பெற வைத்தார். (29)
காலையில் கற்ற பாடம்
கருங்கல் எழுத்தைப் போல
மாலையில் சொல்வார் சீடர் !
மயங்கு வாராம் ஆசான்!
சோலையில் வீசும் தென்றல்
சுகமாய் குருவும், “அம்பாள்”
வேலையி தென்றே எண்ணி
நெகிழ்ந்தே மகிழ்ந்தி ருப்பார் . (30)