கொரோனாவின் கோரப்பிடியும், இங்கிலாந்தும்

0

சக்தி சக்திதாசன்
லண்டன்

அசாத்தியமான நிலை, அசாதாரணமான சூழல் நான்கு மாதங்களுக்கு முன்னால் எண்ணிப்பார்த்திருக்கக் கூட முடியாத ஒரு சூழலில் சிக்கித் தவிக்கும் இங்கிலாந்து மக்கள். இங்கிலாந்து மட்டுமல்ல முழு உலகுமே என்று கூடச் சொல்லலாம். எதையும், எப்படியும், எப்போதும் சமாளித்து விடுவோம் என்று பொருளாதாரத்திலும், முன்னேற்றத்திலும் முன்னனி வகித்து அனைத்து வசதிகளும் நிறைந்திருக்கும் நாடுகள் எனும் உல்கக்கணிப்பில் இருந்த நாடுகள் பல. பொருளாதார நெருக்கடிகளுக்குள் சிக்கி வெளியேவர அந்நியநாட்டு உதவிகளை எதிர்பார்த்து தத்தளித்துக் கொண்டிருந்த நாடுகள் பல கலந்து நிறைந்த உலகினை ஒரு கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்க்கிருமி இன்று தன்னிலை உணரப் பண்ணியிருக்கிறது என்பதுவே உண்மை.

இயற்கைக்கு மனிதன் நாகரீக முன்னேற்றம், மனித வளர்ச்சியின் முன்னேற்றம் எனும் வகையில் விடுத்த சவாலை இயற்கை சத்தமின்றி சின்னாபின்னமாக்கியிருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. இனம், மதம், மொழி எனும் எல்லைகளுக்கப்பால் நாடுகள் எனும் எல்லைகளைக் கடந்து நான் உங்களையெல்லாம் பார்ப்பது மனிதர் எனும் ஒரேயொரு இனமாகத்தான் என்று உணர்த்தியிருக்கிறது இக்கொரோனா வைரஸ்.

நேற்று மாலை இல்லத்தில் அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்காக எமக்கருகாமையிலிருக்கும் ஒரு பல்பொருள் அங்காடிக்கு செல்ல வேண்டிய தேவையிருந்தது. புறப்படும்போது மனைவி “கையுறை (Gloves), முகவுறை (Mask), சுத்தம் செய்வதற்கான நனைக்கப்பட்ட காகிதத்தாள் (Anti Bacterial Wipes) இவைகளெல்லாம் எடுத்துக் கொண்டீர்களா” என்று கேட்டபோது ஏதோ போருக்குப் புறப்படுவோனிடம் ஆயுதங்களை எடுத்துக் கொண்டீர்களா? என்று கேட்பது போலிருந்தது.

ஆமாம் இதுவும் ஒரு சத்தமில்லா யுத்தம் தானே! கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்க்கிருமி எத்தனை பேர்களின் உயிர்களைத் தன்னால் காவு கொள்ள முடியும் எனும் வகையில் காத்திருக்க, கண்ணுக்குப் புலப்படாத இந்த எதிரியிடமிருந்து எப்படி எம்மைக் காத்துக் கொள்வது எனும் தந்திர யுத்திகளை நாம் கையாள இதுவும் ஒரு நவீன போர் என்றுதானே கூற வேண்டும்..!

இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து எனும் நான்கு மாநிலங்களை உள்ளடக்கிய ஐக்கிய இராச்சியம் இன்று அடங்கிப் போயிருக்கிறது. லாக் டவுண் எனப்படும் மனித நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் சட்டவிதிகளை அமுலாக்கி இக்கொரோனா வைரஸினை வெற்றி கொள்ளும் ஒரு தீவிரமான கட்டத்தில் தன்னை அமிழ்த்தியிருக்கிறது ஐக்கிய இராச்சியம்.

ஐக்கிய இராச்சியம் மட்டுமல்ல முழு அகிலமுமே இன்று ஏதோ ஒரு வகையிலான கட்டுப்பாட்டினை தமது மக்களின் நடமாட்டத்தின் மீது விதித்திருக்கின்றன. ஐனநாயகத்தினைக் கடைப்பிடிக்கும் எந்த ஒரு நாடுமே எந்த விதமான கட்டுப்பாட்டினைத் தமது நாட்டு மக்களின் மீது என்றுமே விதிக்க மாட்டா என்று இருந்தனவோ இன்று அந்நிலை மாறி அதே மக்களின் நன்மைக்காக அவர்மீது அக்கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் அரசாங்கங்கள் இருப்பது தவிர்க்க முடியாமல் போய்விட்டது.

இக்கொரோனா வைரஸினால் தாக்கப்பட்ட இங்கிலாந்துப் பிரதமரின் காய்ச்சல் பத்து நாட்களாகியும் குறையாததினால் முன்னெச்சரிக்கையாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். நாடு முழுவதுமே ஒருவகையிலான துயர நிலைக்குத்தள்ளப்பட்டது. கடைசியாகக் கிடைத்த செய்திகளின் படி அவர் தீவிர சிகிச்சைப்பிரிவிலிருந்து சாதாரன பிரிவுக்கு மாற்றப்பட்டது அவரது உடல்நிலை தேறிவருகிறது என்பதினை உறுதி செய்கிறது.

எந்தவிதமான அரசியல் பாகுபாடுமின்றி அனைத்துத் தரப்பினரும், நாட்டு மக்களின் பெரும்பான்மையினரும் அவரின் நலனை முன்னிறுத்தியது மனிதத்தின் வெற்றி என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

இங்கிலாந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விதிகளின்படி

  1. ஒருநாளைக்கு ஒரு தடவை உடற்பயிற்சிக்காக தமது இல்லங்களுக்கு அருகாமையில் மக்கள் நடைபயிற்சிக்கோ அன்று தமது வளர்ப்புப்பிராணியின் நடைக்காகவோ வெளியே செல்லலாம்
  2. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வெளியே செல்லலாம்
  3. மருந்துப்பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வெளியே செல்லலாம்
  4. தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள முடியாதவர்களுக்கு உதவுவதற்காக வெளியே செல்லலாம்
  5. வீட்டிலிருந்தபடியே பணி செய்ய முடியாதவர்கள் அவர்களின் பணிகள் அத்தியாவசியமாக இருக்கும் பட்சத்தில் பணிமனை செல்லலாம். ஆனால் பணிமனையில் தனிமனித விலத்தல் விதிகளுக்கமையவே அவர்கள் பணிபுரியலாம்.

என்பனவே சட்டபூர்வமாக கடைப்பிடிக்கும்படி விதிக்கப்பட்டிருக்கிறது

மேலே குறிப்பிட்ட விதிகள் சாதாரண மக்களுக்கானவை. ஆனால் பலவிதமான தீவிரமான நோய்களுக்குட்பட்ட ஏறக்குறய ஒன்றரை லட்சம் மக்களுக்கு ஐக்கிய இராச்சிய வைத்தியத்துறை கடித மூலம் அவர்கள் 12 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடது எனவும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், மற்றும் மருந்துகள் என்பனவற்றைப் பெற்றுக் கொடுக்க உதவிகள் இல்லாத பட்டத்தில் அதற்கான இணையத்தளத்தில் தம்மைப் பதிவு செய்தவன் மூலம் அவர்களுக்கான தேவைகளை அளிக்க கவுன்சில்கள் ஏற்பாடு செய்யும் என்றும் அரிவித்துள்ளார்கள்

பல வியாபார நிலையங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு விட்டன. தனியார், மற்றும் அரச ஊழியர்களில் வீடுகளில் இருந்து பணிபுரியக்கூடியவர்களுக்கு அத்தகைய வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மட்டும் திறப்பதற்கு அனுமதி உள்ளது.

பார்கள், உணவுவிடுதிகள் என்பனன அடைக்கப்பட்டு விட்டன. சில உணவு விடுதிகள் மட்டும் இணையத்தளம் வழியாக தமது வியாபாரத்தினை நடத்துகின்றன, கிரடிட் அட்டைகளின் மூலமாக பணத்தினைச் செலுத்த உணவு இல்லத்துக்கு எடுத்து வரப்படுகின்றன. உதரணமாக பிட்ஸா போன்றவைகளைக் குறிப்பிடலாம்.

பிரபலமான பல்பொருள் அங்காடிகள் காலை ஆறு மணி முதல் மாலை 10 மணிவரை திறக்கப்படுகின்றன. இங்கு தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே மக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ஏனையோர் கடைக்கு வெளியே 2 மீட்டர் இடைவெளியில் வரிசையில் நிற்பார்கள் உள்ளே இருப்பாரில் எத்தனை பேர் வெளியே வருகிறார்களோ அத்தனை பேர் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். ஷாப்பிங் வண்டிகளின் கைப்பிடியை சுத்தம் செய்வதற்கான வசதிகள் வாசலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கடையின் உள்ளே ஒருவழிப்பாதை முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இது தனிமனிதருக்கிடையில் இருக்கும் இடைவெளியை தக்க வைப்பதற்கு உதவுவதற்காக எனலாம் .

ஆசிய உணவு வகைகளை விற்கும் கடைகள் இங்கிலாந்தில் பல உண்டு. இவைகளில் தமிழ்க்கடைகள் அதிகமாகவே இருக்கும். இங்கு வகை வகையிலான எமது நாட்டு காய்கறிகள் கிடைக்கும். ஆனால் இன்றோ இவைகளில் பெரும்பான்மையானவை மூடப்பட்டிருக்கின்றன. திறந்திருக்கும் ஒருசில கடைகளில் எமது நாட்டு காய்கறி கிடைப்பது அரிதாகவே உள்ளது.

இங்கிலாந்தின் பொருளாதாரம் முடங்கிக் கிடக்கிறது. ஆனால் வர்த்தக ஸ்தாபனங்கள் மூடப்பட்டு விட்டதால் இதனைக் கடந்து மீண்டும் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது கடினம் என்பதினால் இதுவரை வரலாற்றில் காணாத வகையில் பல பொருளாதார உதவிகளை இங்கிலாந்து நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார். இங்கிலாந்தின் அரசாங்கத்தை அமைத்திருப்பது கன்சர்வேடிவ் கட்சி. பொதுச் செலவுகளை மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதில் ஒரு பெயர் பெற்ற கட்சி. அந்தக் கட்சியின் கொள்கைகளுக்கு முற்றும் முரணாக பலவகையிலான பொருளாதார உதவிகளை அள்ளி வழங்கியிருக்கிறது இங்கிலாந்து அரசு. இங்கிலாந்தின் நிதியமைச்சர் இந்தியாவின் முன்னனி நிறுவனமான “இன்போசிஸ்” நிறுவன உரிமையாளரான திரு நாராயணமூர்த்தி அவர்களின் மாப்பிள்ளையான ரிஷி சுனாக் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

வியாபார நிறுவனங்கள இழுத்து மூடி அங்கு பணிபுரிபவர்களை வேலையிலிருந்து நீக்காதீர்கள், இந்நிலையிலிருந்து நாம் மீளும்வரை நீங்கள் வேலையில் வைத்திருக்கும் ஊழியர்களின் 80% ஊதியத்தை அரசாங்கம் தரும் என்று அறிவித்திருக்கிறார். அத்துடன் Self employed எனும் வகையிலான பணிபுரிவோருக்கும் பொருளாதார உதவிகளை அறிவித்திருக்கிறது அரசு. இவ்வகை பணிபுரிபவர்கள் தமது வரிக்கான பத்திரத்தைச் சமர்ப்பிக்கும்போது தமது வருமானம் எவ்வளவு என்று குறிப்பிடிருந்தார்களோ அதன் 80% த்தை அரசு கொடுக்கும் என்பதுவே அது. அதுதவிர தமது வாழ்வாதரத்துக்கான நிதிப்பற்றாக்குறையுள்ளவர்கள் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றி அரச உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்கள்.

தேசிய சுகாதார சேவையில் இருக்கும் அத்தியாவசிய ஊழியர்களுக்கான பாதுகாப்புக் கவசப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல நிறுவனங்கள் தாம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பதிலாக அரசுக்குத் தேவையான பாதுகாப்புக் கவசங்களை உற்பத்தி செய்யும்படி வேண்டப்பட்டு அதனை உற்பத்தி செய்கிறார்கள்.

இங்கிலாந்தின் தேசிய சுகாதரச் சேவையின் அன்றாட பொருட்கள், நோயாளர்கள், மருந்துகள் என்பனவற்றினை உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு தமக்கு உதவி தேவை அதற்காக தன்னார்வ முறையில் சுமார் 250000 பேர்வரை எதிர்பார்க்கிறோம் என்ற அவர்களது கோரிக்கை வந்த இரண்டு நாட்களுக்குள் சுமார் 750000 பேர் உதவ அதற்கான இணையத்தளத்தில் தம்மைப் பதிவு செய்தமை மக்களின் புரிந்துணர்வினை நன்கு எடுத்துக் காட்டுகிறது.

அரசாங்கத்தின் சட்டத்திற்கமைய மூடப்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு நஷ்டஈடு உரியவகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கொரோனா வைரஸினால் தாக்கப்பட்டவர்களைப் பராமரிக்கும் முன்னனி வைத்தியர்கள், தாதிமார்கள் மற்றும் வயோதிபர்களைப் பராமரிக்கும் விடுதிகளின் சேவையாளர்களுக்கான பரிசோதனை திருப்திகரமாக இல்லை எனும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதற்காக இம்மாத இறுதிக்குள் நாளொன்றுக்கு 100000 பேரைப் பரிசோதிக்கக்கூடிய வசதிகளை நிர்ணயித்து விடுவோம் என சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்,

ஒவ்வொரு வியாழனும் இரவு 8 மணிக்கு அனைவரும் தமது இல்லங்களிலிருந்து வெளியே வந்து இத்தனை இன்னல்களுக்கு மத்தியிலும் தமது அன்றாடக் கடமைகளை ஆற்றும் அத்தியவசியத்துறை ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரகோஷம் செய்து வருகிறார்கள்.

இதுவரை கிடைத்த தரவுகளின் படி இங்கிலாந்தில் 65,077 பேர்கள் இவ்வைரஸினால் தாக்கப்பட்டுள்ளார்கள். 7,978 பேர்கள் மரணத்தை தழுவியுள்ளார்கள். இங்கே குறிப்பிடப்பட்ட தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வைத்தியசாலைக்குச் சென்று தம்மை அடையாளப் படுத்திக் கொண்டவர்களேயாகும். அவர்களைத் தவிர மேலும் பலர் மிகவும் குறைவான நிலையில் இவ்வைஸினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைக்கு செல்லத் தேவையில்லாமல் இருப்பார்கள் என்றே தெரிவிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 250000 க்கும் அதிகமானோர் பரிசோதிக்கப்பட்டுள்ளார்கள்.

மார்ச் 23ம் திகதியே ஐக்கிய இராச்சியத்தில் கட்டுப்பாட்டு விதிகள் அறிவிக்கப்பட்டன. இக்கட்டுப்பாட்டினை பெரும்பான்மையான ஐக்கிய இராச்சிய மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இதன் காரணமாக புதிய வைரஸ் தொற்றுக்கள் குறைந்து வருவதோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப் படுவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இறப்போரின் எண்ணிக்கை இன்னும் ஓரிரு வாரங்களுக்கு அதிகரிக்க வாய்ப்புண்டு எனவும் அதன் பின்னால் இறப்போரின் எண்ணிக்கை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் மாலை 5 மணியளவில் ஐக்கிய இராச்சிய அரசின் சார்பாக பத்திரிகையாளர் மகாநாடு நடத்தப்படுகிறது. இது தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இப்போது அநேகமாக கேட்கப்படும் கேள்வி எப்போ மக்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்பதே. அதற்கு அரசின் சார்பாக அடுத்த வார இறுதியில் இது மீள்பரிசோதிக்கப்படும் வரை எதுவும் கூற முடியாது எனும் பதிலே கிடைக்கிறது.

இவ்வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சகட்டத்தை அடைந்து விட்டதா என்பதை இன்னமும் நிர்ணயிக்க முடியாமல் இருப்பதே இதற்குக் காரணமாகிறது. இங்கே இறப்போரின் எண்ணிக்கை என்பது ஒரு தொகையாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் ஒவ்வொரு மரணத்தின் பின்னாலும் ஒரு குடும்பத்தின் சோகம் காணாமல் போகிறது. இந்நோயினால் இறந்தவர்களின் உடல்கள் உறவினர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. ஒரேயொருவர் மட்டும் மரணச்சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். ஏனையோர் அதிக பட்சம் காணொளியில் மட்டுமே கண்டு கொள்ளலாம், தமது உறவினர்களின் கடைசி யாத்திரையைக் கூட நேரடியாகக் கண்டு கொள்ள முடியாத ஒரு அவலமான நிலையில் பலர் மனமுடைகிறார்கள். அது தவிர இறப்பவர்களின் உயிர் பிரியும்போது அவர்களின் உறவினர்கள் யாரும் அருகில் இல்லாமல் உலகை விட்டு நீங்குகிறார்கள்.. ஆனால் அவர்கள் தன்னந்தனியாக உலகை விட்டு நீங்காமல் தாதிமார்கள் அருகில் இருக்கிறார்கள். ஆனால் இதனைத் தொடர்ந்து கண்ணுறும் டாக்டர் மற்றும் தாதிமார் கூட மிகவும் மனமுடைந்து போகிறார்கள்.

இன்று ஐக்கிய இராச்சியமும், உலகும் கண்டு கொண்டிருக்கும் நிலை உலகப் போர்களுக்குப் பின்னால் வரலாற்றில் முதன்முறையாக நிகழ்கிறது. இதனை எதிர்கொள்வதும், கையாள்வதும், மக்களுக்கும், அனைத்து அரசுகளுக்கும் ஒரு புதிய அனுபவமே.

ப்ரெக்ஸிட் எனும் ஒரு நிகழ்வு ஐக்கிய இராச்சியத்தை பிளவு படுத்தியது. ஆனால் இன்று கொரோனா எனும் வைரஸ் ஐக்கிய இராச்சியத்தை மீண்டும் ஓரணியில் திரள வைத்திருக்கிறது. இவ்வைரஸின் தாக்கத்திலிருந்து மீண்டு வரும்போது உலகம் நிச்சயமாக ஒரு பொருளாதார பின்னடைவைச் சந்திக்கப் போவது உறுதி என்பதை பல பொருளாதார நிபுணர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். உலகமயமாதல் எனும் நிலையை விட்டு முன்னனி நாடுகள் தாமும் தமது நலமும் எனும் ஒரு கோட்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கும் சமயத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வின் தாக்கத்தை உலகநாடுகள் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து எதிர்கொள்ளப் போகின்றனவா? இல்லை மீண்டும் சுயநலத்தின் அடிப்படையில் இயங்கப் போகின்றனவா? என்பது கேள்விக்குறியே!

ஆனால் நிச்சயமாக இந்நிலையிலிருந்து மீண்டு வரும்போது மனித வாழ்க்கையின் செயற்பாடுகளிலும், வாழ்க்கையை நோக்கிய அவர்களது பார்வையிலும் நிச்சயம் ஒரு மாற்றம் இருக்கத்தான் போகிறது. இருப்போரும், இல்லையென்போரும் ஒரே தளத்தில் வாழ்வினை எதிர்நோக்க வைத்ததில் கொரோனா வைரஸ் வெற்றி கண்டிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.

மனிதர்கள் அனைவரையும் எதுவித வேறுபாடுமின்றி மனிதர் என்றே பார்த்த வைரஸ் தந்த பாடம் எம்மையும் அதேபோல பார்க்க வைக்குமா? இல்லை மீண்டும் பழைய குருடி கதவைத் திறவடி! எனும் நிலைதானா ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *