தொடர்கள்நாலடியார் நயம்

நாலடியார் நயம் – 3

நாங்குநேரி வாசஸ்ரீ

3. யாக்கை நிலையாமை

பாடல் 21

மலைமிசைத் தோன்றும் மதியம்போல் யானைத்
தலைமிசைக் கொண்ட குடையர் – நிலமிசைத்
துஞ்சினார் என்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால்
எஞ்சினார் இவ்வுலகத் தில்.

மலைமேல் தோன்றும் சந்திரன் போல்
மண்ணுலகில் யானைத் தலைமேல்
பிடித்த வெண்கொற்றக் குடையுடைய
புகழுடை வேந்தர்களும் மாண்டனர்
என இகழப்பட்டார் அல்லாமல்
எஞ்சியவர் என்று சாகாமல்
எவருமில்லை இவ்வுலகில்.

பாடல் 22

வாழ்நாட்கு அலகுஆ வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅது எழுதலால் – வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல்.

உயிர் வாழும் காலத்தை
உலகோர்க்கு அளந்தியம்பும்
கருவியாம் சூரியன்
காலம் தவறாது உதிப்பதால்
ஆயுள் முடியும் முன்னர்
அடுத்தவருக்கு உதவுங்கள்
உயிர்விடாமல் நிலைத்து
உலகில் வாழ்ந்தவர் எவருமில்லை.

பாடல் 23

மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் – பின்றை
ஒலித்தலும் உண்டாமென்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம்.

திருமண மண்டபத்தில் ஒலிக்கும்
தக்க மங்கல வாத்தியம்
அன்றே நிலை மாறி
அவருக்குப் பிணப்பறையாய்
ஒலித்தலும் உண்டென்பதை
உணர்ந்த பெரியோர் மனம்
உறுதியாய்ப் பற்றி நிற்கும்
பிறவித் துயரினின்று
பிரிந்து தப்பும் வழியை.

பாடல் 24

சென்றே எறிய ஒருகால்; சிறுவரை
நின்றே எறிப பறையினை – நன்றேகாண்
முக்காலைக் கொட்டினுள் மூடித்தீக் கொண்டுஎழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து

இறந்தவர் வீட்டில் பறை அடிப்போர்
இடைவெளி விட்டு பறை அடிப்பர்
முதற்பறைக்குப்பின் காலம் கழித்து
மீண்டும் அடிப்பது இரண்டாம் பறை
மூன்றாம் பறை அடிக்குமுன்னே
முகத்தைத் துணியால் மூடி நெருப்பிலிட
செத்தவனைத் தூக்கிச்செல்வர்
சாகாதவர்கள் சுடுகாட்டை நோக்கி

பாடல் 25

கணம்கொண்டு சுற்றத்தார் கல்லென் றலறப்
பிணம்கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் – மணங்கொண்டீண்டு
உண்டுண்டுண் டென்னும் உணர்வினால் சாற்றுமே
டொண்டொண்டொ டென்னும் பறை

கூட்டம் கூடி உறவினர்
கூவி அழுது பிணத்தைச்
சுடுகாடு கொண்டு சென்று
சுட்டெரிப்பதைக் கண்டபின்னும்
திருமணம் செய்துகொண்டு
திகட்டாத இன்பத்துடன்
சுகமாய் வாழ்வேன் என்ற
சிந்தனையுடன் மயங்குவோர்க்கு
சாப்பறையின்  தொண் தொண் ஒலி
இவ்வுலகவாழ்வில் இத்தகு
இன்பம் இல்லை எனக்காட்டும்.

பாடல் 26

நார்த்தொடுத்து ஈர்க்கிலென் நன்றாய்ந்து அடக்கிலென்
பார்த்துழிப் பெய்யிலென் பல்லோர் பழிக்கிலென்;
தோற்பையுள் நின்று தொழிலறச் செய்தூட்டும்
கூத்தன் புறப்பட்டக் கால்.

தோல் பையெனும் உடலுள்
தங்கித் தன் தொழில்களை ஆற்றி
விளையும் பயனைத் தானே
விரும்பி அனுபவிக்கும்
கூத்தாடியாகிய உயிர்
கூட்டை விட்டுச் சென்றபின்
பிணத்தைக் கயிற்றால் கட்டி
பிடித்து இழுத்தால் தான் என்ன?
நன்கு சுத்தம் செய்து
நல்லடக்கம் செய்தால்தான் என்ன?
வீசிப் போட்டால்தான் என்ன?
வீண்பழி சுமத்தினால்தான் என்ன?

பாடல் 27

படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் – தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல்.

பெய்யும் மழை நீரில்
பலமுறை தோன்றி அழியும்
குமிழிபோல் ஒரு பொருள்
உடம்பு என உறுதியாய்
உணர்ந்துத் தடுமாறாமல்
பிறவித் துன்பத்தைப் போக்க
பெரும் அறம் செய்து வாழும்
பேரறிவுடைய பெரியோருக்கு
இணையாய் ஒத்தோர் எவருளார்
இப்பெரும் உலகில்.

பாடல் 28

யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற
யாக்கையா லாய பயன்கொள்க; – யாக்கை
மலைநாடு மஞ்சுபோல் தோன்றிமற் றாங்கே
நிலையாது நீத்து விடும்.

வலிமையான உடலை
வினைப்பயனால் பெற்றவர்
அதனால் ஆகும் பயனாய்
ஆகச்சிறந்த நற்செயல் புரிவீர்!
மலைமேல் உலாவும்
மேகம்போன்ற இவ்வுடல்
நிலைபெற்று நில்லாது
நீங்கிச் சென்றுவிடும் முன்னே

பாடல் 29

புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி
இன்னினியே செய்க அறவினை; – இன்னினியே
நின்றான் இருந்தான் கிடந்தான்தன் கேள்அலறச்
சென்றான் எனப்படுத லால்.

இப்போதுதான்  நின்றிருந்த
இவன் உட்கார்ந்தான்
பின்னர் படுத்தவன்
பல உறவினரை
அலறி அழவைத்து
ஆருயிர் நீத்தான்
என்பது போல்
எவ்வகையிலும் நிலையில்லா
நுனிப்புல்லில் உள்ள
நீர்த்துளி போன்ற
இவ்வுடம்பின் நிலையுணர்ந்து
இப்பொழுதே தொடங்குவீர்
அறச்செயல்களை ஆற்ற.

பாடல் 30

கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி
வாளாதே போவரால் மாந்தர்கள் –  கேளாதே
சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து.

வரட்டுமா? எனக் கேளாது
வந்து சேர்வர் உறவினராய்
பின் தம்கூடு மறந்து தொலைவில்
பறந்து செல்லும் பறவைபோல்
உற்றார் உறவினரிடம்
உடலை விட்டுவிட்டு
உயிர்நீத்துச் சென்றிடுவர்.

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க