Month: April 2020

  • அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    அண்ணாகண்ணன் யோசனைகள் 40 – கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி?

    கொரோனா தொற்று பரவும் இந்த ஊரடங்கு காலத்தில், கடைகளிலும் பொது இடங்களிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? இதோ எனது யோசனை.

     

    படப் பதிவு: ஹேமமாலினி

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 256

    படக்கவிதைப் போட்டி – 256

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளோம். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (03.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • படக்கவிதைப் போட்டி 255-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 255-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    கருமுகில்களுக்குப் பின்னே காய்கதிர்ச் செல்வன் தன் ஒளிமுகத்தை ஒருசிறிதே காட்டுவதைத் தம் புகைப்படக் கருவிக்குள் பத்திரப்படுத்தி வந்திருப்பவர் திரு. பார்கவ் கேசவன். இந்தப் படத்தை படக்கவிதைப் போட்டி 255க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

    இந்தப் படத்தைக் காணும்போது எனக்குக் கபிலர் பெருமான் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கதிரவனோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதனினும் விஞ்சுபுகழ் கொண்டவன் வாழியாதன் என்று அவனை விதந்தோதுவது நினைவுக்கு வருகின்றது.

    ”……ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
    கடந்தடு தானைச் சேரலாதனை
    யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்
    பொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி
    மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி

    அகல்இரு விசும்பி னானும்
    பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.”
    (புறம் – 8)

    இனி இப்படம் குறித்து நம் இனிய கவிஞர்களின் கற்பனைத் திறத்தினைக் கண்டு வருவோம்!

    *****

    மூன்று முத்தான கவிதைகளை வடித்திருக்கும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய முதற் கவிதையில் அக்னி குண்டமாய்த் தழல்வீசும் வானில் எட்டிப்பார்க்கும் நிலவைத் தம்மோடு கைகோத்து இல்லம்வர அழைக்கின்றார்.

    இரண்டாவது கவிதையில் வானில் தெரிவது சந்திரனா சூரியனா என்று ஐயவினாவெழுப்பி இவையிரண்டும் மந்திரமும் தந்திரமுமாக வாழ்வை இயக்குபவை என்று முடிக்கின்றார்.

    மூன்றாவது கவிதையில் ”நிலவே நீ முழுதாய் முகம் காட்டு! அந்தி இருள் ஓட்டு!” என்று நிலவை வாஞ்சையாய் அழைக்கின்றார்.

    செந்தழல்
    புடத்திலிட்ட தங்கம்
    அக்னிக் குண்டம்
    செங்கதிர்
    இவைகளின் வர்ணம்
    இவ்வழகிய புகைப்படத்தில்

    இதனூடே எட்டிப் பார்க்கிற சந்திரன்
    உலகின் இரவு நேர ஒளிக்குத் தயாராகி
    அதிகாலை வரை வானில் தவழ்ந்து
    இளம் மாலை வரை ஓய்வெடுத்து
    இரவுக்கு தயாராவான் தினமும்

    அழகிய நிலவே
    என் கைகளைக் கோத்துக் கொள்
    என்னுடனே வா என் இல்லம் செல்ல
    ஏகபோக உரிமை எனதாக்கிக் கொள்ள!

    *****

    காலைநேரக் கதிரவனா?
    மாலைநேரச் சந்திரனா?
    தகதகக்கும் நிறம் இரண்டும்
    மினுமினுக்கும் ஒளி இரண்டும்
    கதகதக்கும் குளிர் இரண்டும்
    கொதிகொதிக்கும் தணல் இரண்டும்
    இடைவிடாது உலகை இயக்கும் இவர்களே
    மனித வாழ்வில் மாற்றங்களைத் தரும் கோள்களே
    ஆம் கதிரவன் சந்திரன்
    வாழ்வின் மந்திரம் தந்திரம்!

    *****

    தங்க நிலா வெள்ளி நிலா
    வட்ட நிலா வடிவழகு நிலா
    மாய நிலா மவுசு நிலா
    ஒளிரும் நிலா எண்ணத் துளிரும் நிலா

    நிலா நிலா நீ இலா இலா
    நாள் இலா இலா வா அருகில் நிலா நிலா
    செவ்வான மேகங்களோடே
    கடலலையினூடே
    முகத்தை மட்டும் காட்டிடாமல்
    முழுவதுமாய் வா
    மாலை நேரம் மறைந்து
    இரவு வரக் காத்திருக்கு
    இருளை அகற்று ஒளியை ஏற்று!

    *****

    படத்திலிருப்பது கதிரா மதியா என்ற ஐயத்தோடு புகைப்படத்தை அணுகும் திரு. கருணானந்தராஜா, ”நீ கதிராயின் சீறியெழுந்து கொரோனா கிருமியைக் கொன்று உன் திறமையைக் காட்டிடுவாய்!” என்று ஆதவனுக்கு அறைகூவல் விடுக்கின்றார்.

    கதிரே உதவு!

    எல்லையிலாத இவ்வான விளிம்பில்
    இருந்தொளிர் வெண்சுடரே – நீ
    அல்லை (இரவு) முடிக்கப் பிறந்த கதிரோ
    அல்லது வெண்மதியோ
    மெல்ல மறைந்திடப் போகுதியோ இல்லை
    மீண்டெழப்போகுதியோ – என்ன
    சொல்வது என்று புரிகிலன் நானுமுன்
    தோற்றம் புரிந்திலனே.

    ஆதவனாயின் விழித்தெழு -இந்த
    அகிலம் தனை அழிக்க
    பூதமென வந்த பூஞ்சையிலும் சிறு
    பொல்லாக் கொரோனாவெனும்
    பாதி உயிரின் பரவல் தடுத்து இப்
    பாரைச் சுகப்படுத்தும்
    வேதியற் சூழலை ஆக்கிடு நீ இந்தத்
    தீதினைப் போக்கிடற்கே.

    தீச்சுடர் வீசி இவ் வானப்பரப்பினுள்
    சீறி எழுந்திடுவாய் – அலை
    பாய்ச்சி உலகை இயக்கிச் சுகம்பெறப்
    பாதையமைத் திடுவாய்
    மூச்சினில் காற்றில் முகவழியெங்கிலும்
    மூர்க்கமுடன் பரவி – பெரும்
    தீச்செயல் செய்யும் கிருமியைக் கொன்றுன்
    திறமையைக் காட்டிடுவாய்.

    *****

    ”அந்திக் கருக்கும் வானத்திலே சந்திரனை வரவேற்க இயற்கை விரித்த செந்நிறக் கம்பளம் அல்லவோ இது!” என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

    மந்திரக் கோலம்

    அந்திக் கருக்கும் வானத்திலே
    சிந்தை மயங்கும் வேளையிலே
    சந்திரன் தன்னை வரவேற்க –
    இயற்கை செந்நிறக் கம்பளம் இட்டிருக்கும்

    விந்தைகள் ஆயிரம் செய்து தினம்
    இரவின் வாசலில் செந்நீர் தெளிக்கும்
    முந்தைய தினத்தைப் போல அன்றி – புதுச்
    சிந்தைகள் தோன்றிட வழிவகுக்கும்

    எந்திர வாழ்க்கை மறந்திடுவே
    மந்திர ஜாலங்கள் செய்து தினம்
    சுந்தர நிகழ்வைச் செய்திருக்கும்
    தந்திரன் யார் நீ சொல்லிடுவாய்!

    *****

    ”அந்திவானில் ஆதவனுக்கு மேகங்கள் முகக்கவசம் ஆகி அவனைக் காத்திட, நந்தவனத் தேராய் நிலா வானில் உலாவரும்! பாரினில் நாளும் அரங்கேறும் நாடகமிது!” என்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்க
    உன் கடமை ஆற்றிட
    ஓயாமல் உதித்தெழுந்து
    கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
    தினந்தோறும் ஓடிட
    மெல்ல நகரும் மேகம்
    முகக்கவசமாய் மாறி
    கதிரவன் உன்னைக் காத்திட
    கதிர்வீசும் கரங்களை மடக்கி
    அந்தி சாய்ந்திடும் நேரம்
    நீல வானும் இங்கே
    நிறம் மாறும்
    நந்தவனத் தேராய் வரும்
    நிலவே உன்னழகு மட்டும் மிளிரவே
    இருள் சூழ்ந்து இரவாகும்
    நாளும் இதே நாடகம்
    பாரெல்லாம் அரங்கேறும்
    பகல் இரவாய்
    காலை முதல் மாலை வரை
    வேலை ஏதும் இன்றியே
    இரவு நேரப் பணியாய்
    நிலவு வந்து போகும்
    இயற்கை எனும் நிறுவனத்தில்!

    *****

    செக்கர்வானில் தெரியும் ஒளிப்பிழம்பைக் கதிராகவும் மதியாகவும் வைத்து அழகிய கற்பனைகளைக் குழைத்துக் கவிபுனைந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    இன்ப நாடகம்

    அந்தி வானை
    அழகாக்குகிறது
    அடையும் சூரியன்!

    வந்தவேலை முடித்த
    பகலவனுக்கு
    வாழ்த்துச் சொல்லும்
    பணி நிறைவுப்
    பாராட்டு விழாவுக்கு
    வானமெங்கும்
    வண்ணத் தோரணங்கள்!

    வந்துவிட்டான் தலைவனென
    வானமகளின் வதனத்தில்
    வெட்கச் சிவப்பு!

    இது
    இன்றல்ல நேற்றல்ல,
    காலம் காலமாய்த் தொடரும்
    இயற்கையின்
    இன்ப நாடகம்-
    கண்டு களிப்போமே!

    ”வந்தவேலை முடிந்ததெனப் புறப்படும் கதிரவனுக்கு வானில் தோரணங்களோடு பணிநிறைவுப் பாராட்டுவிழா நடக்கின்றது; தலைவனின் வருகை கண்டு வானமகள் நாணிச் சிவக்கின்றாள்” எனும் அழகிய கற்பனையைக் கவிதையில் செருகியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கலை விமர்சகர் தேனுகா உரை

    கலை விமர்சகர் தேனுகா உரை

    அண்ணாகண்ணன்

    30 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன ஓவியம், சிற்பம், இசை, புகைப்படம், கட்டடவியல், சித்திரக் கவிகள் எனக் கலைத் துறையின் பல்வேறு முனைகளில் உலகளாவிய பார்வையுடன் இயங்கியவர், தேனுகா. இத்துறைக் கலைஞர்கள், அவர்களின் பாணிகள், அவற்றின் நிறை – குறைகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பவர். கலை உலகில் விமர்சகராக நன்கு அறியப்பெற்றவர்.

    வண்ணங்கள் வடிவங்கள் (1987), வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழி (1987), மைக்கேலேஞ்சலோ (1991), லியனார்டோ டாவின்சி (1991), புது சிற்பவியல் : பியாத் மாந்திரியானின் நியோபிளாஸ்டிசிஸம், ஓவியர் வான்கோ (1996), பழகத் தெரியவேணும் (1997), பியாத் மோந்த்ரியான்(2007) உள்ளிட்ட நூல்களைப் படைத்தவர்.

    மாநில லலித கலா அகாதெமியின் கலைச்செம்மல் விருது, இந்திய அரசின் பெல்லோஷிப் விருது, சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசு விருது, ஸ்டேட் வங்கி இலக்கிய விருது… உள்பட பல விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவை அனைத்திற்கும் மேலாகப் பெரும் மரியாதைக்கு உரியவர். காரணம், அவருடைய நேர்மையும் செல்வாக்குக்கு மயங்காத நடுநிலைமையுமே ஆகும்.

    “கலைகளைப் பற்றிய கருத்துகளைக் குறைவின்றி வெளியிடும் வகையில் இது வரையில் வளர்ந்துள்ள தமிழ்ச் சொற்களின் எல்லையை விரிவுபடுத்துகிறார் தேனுகா. கலை விமர்சனத்திற்கான புதிய சொற்களைக் கையாள்வதன் வாயிலாகத் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் அவர் வளம் சேர்க்கிறார். இவருடைய அறிவும் மனோதர்மமும் நுண்உணர்வும் கருத்து வெளியீடும் மிகவும் அபூர்வமானவை. தன் சம காலத்தைப் பற்றிய உணர்வுடன் அமரத்தன்மை பற்றிய பார்வையும் பெற்றுள்ளார் தேனுகா. இது போன்ற எழுத்துகள் அரிதானவை என்பது மட்டுமல்ல; ஆஷாட பூதித்தனமும் ஜம்பங்களும் பாசாங்கும் கூத்தடிக்கும் இந்த வேளையில் தன் ஆளுமை காட்டும் வழியில் தேனுகா தன் பணியினைத் தொடரவேண்டும்” என்று இலக்கிய விமர்சகர் க.நா.சுப்ரமணியம் பாராட்டியிருக்கிறார்.

    மேலும் எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ்…. எனப் பலரின் உயரிய பாராட்டுகளைப் பெற்றவர் தேனுகா.

    கும்பகோணத்தில் வசித்த கலை விமர்சகர் தேனுகா, இங்கே தன் புதிய நூலான பியாத் மோந்த்ரியான் பற்றியும் அதன் உள்ளடக்கம் குறித்தும் நம்மிடம் உரையாடுகிறார். உரையினூடாகக் கலை, கட்டடவியல், ஓவியம், வாழ்வியல்… எனப் பலவற்றையும் விவரித்துச் செல்கிறார்.

    என் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்த ஒலிப்பதிவைத் தேனுகா அனுப்பியிருந்தார். 2007 தமிழ் சிஃபி சுதந்திர தினச் சிறப்பிதழில் முதலில் இந்தப் பதிவு வெளியானது. இயல்பான, ஆழமான அந்த உரையை இப்போது கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 78 (ஆயும்)

    சேக்கிழார் பாடல் நயம் – 78 (ஆயும்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ஆயும்   நுண்பொருள்  ஆகியும்   வெளியே
    அம்பலத்   துள்நின்று  ஆடுவார்   வெளியே
    நாய   கிக்கும..  தறியவோ  பிரியா
    நங்கை   தானறி  யாமையோ  அறியோம்
    தூய   நீறுபொன்   மேனியில்   விளங்கத்
    தூர்த்த    வேடமும்  தோன்றவே   தியராய்
    மாய    வேடமே   கொண்டுதம்     தொண்டர்
    மறாத  வேடமும்   காட்டுவான்  வந்தார்!

    பூம்புகார்  நகரில்  வாழ்ந்த  சிவனடியாராகிய இயற்பகையாரை நோக்கி  இறைவன்  ஒருநாள் வந்தார். உலகில் உள்ளவர் சிவஞானத்தால் ஆராய்வதற்கு உரிய மிகுந்த நுண்பொருளாய் இருப்பவரும், தில்லை யம்பலத்திலே வெளிப்படையாய் நின்று ஆடுகின்றவரும் ஆகிய சிவபெருமான், கைலாயத்திலுள்ள  உமையம்மையார்  அறியாத வண்ணமோ, என்றும் பிரியாது இடப்பாகத்தில் இருக்கும் நங்கை  தானே அறிந்து கொள்ளாத  நிலையிலோ,  நம் அறிவுக்கெட்டாத வகையில் வந்தார். அவ்வாறு வரும் அவர் திருமேனியில் தூய்மையான திருநீறு தம் பொன்போன்ற  மேனியில்  ஒளிவீசி விளங்க  வேதியராகவும்,  காமவயப்பட்ட ஒரு   தூர்த்தனாகத்  தோன்றியும் வந்தார். அவர்தோற்றம் பிறருக்குப் புலப்படாத மாயவேடமாக   விளங்கிய போதும், சிவனைடியார் மறுத்து  விலக்காத  உயர் தோற்றம்  உடையவராக  வந்தார்.

    இப்பாடலில் ‘ஆயும்’ என்ற சொல், நாம் நம் ஆணவத்தால் ஆராய்வோம் என்ற நிலையில் இல்லாமல் ஆணவத்தை முற்றிலும் அடிப்படுத்தி அவன் அறிவிக்க அறிகின்றேன் – என்னும் பரஞான சிற்சத்தி ஒளியின் உதவியால் அறிகின்ற ஆராய்ச்சியை இங்கே காட்டுகிறது. இது பாசஞானத்தால் பெறாத ஆய்வைப் பசுஞானத்தால் பெறலாம் என்பதைக் குறித்தது! அவர் பிரபஞ்சப் பெருவெளியில் எங்கும் உறைந்து ஆனந்த நடனம் ஆடுகிறார்; அவரே பூம்புகார் நகரினுள்   எளிய மனிதராகி, அந்தணராய்த் தூர்த்த வேடத்தில்  வருகிறார். இதனை,

    ‘’ஆயும்  நுண்பொருள் ஆகியும்  வெளியே
    அம்பலத்து  நின்று ஆடுவார்…..
    மாய வண்ணமும்  கொண்டு தொண்டர்
    மறாத  வண்ணமும் காட்டுவான் வந்தார்’’

    என்று சேக்கிழார் பாடுகிறார். தூயதாகிய திருநீறு தமது  பொன்மேனியிலே விளக்கம் பெறவும், (அதற்கு மாறாகத்) தூர்த்த வேடமும் அத்திருமேனியிலே வெளிப்படையாய்த் தோன்றவும், ஒரு வேதியராக உருவங் கொண்டு, தமது மறைப்பினிற் போந்த உருவத்தினையே மேற்கொண்டு (உலகத்தார் காண அதனைக் காட்டுதலே யன்றித்) தமது தொண்டராகிய இயற்பகையார் அடியவர் வேண்டியவை எவையேயாயினும் இல்லை யென்னாது கொடுக்கும் இயல்பினையும் காட்டும் பொருட்டு வந்தார். இதனையே  திருவாசகம்,

    ‘’வேதங்கள் ஐயா  எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே!’’

    என்று பாடும்! சொரூப  நிலையிலிருந்து தடத்த நிலைக்கு மாறும் தோற்றச்  சிறப்பு  இது! ஆழ்ந்து என்பது நெடுந்தோற்றம்; அகன்று என்பது பக்கத் தோற்றத்தின் விரிவு; இது சொரூபம்;  நுண்மை என்பது நுட்பத்தோற்றம் இது தடத்தம்;   இதனைப்

    ‘’பாதாளம்  ஏழினும் கீழ்  சொற்கழிவு பாத மலர்!
    போதார் புனை முடியும் எல்லாப்  பொருள் முடிவே ‘’

    என்ற திருவாசகத்தால் அறியலாம்! நுட்பத்தை,

    ‘’அணுவோர்  அண்டமாம் சிறுமை கொண்டு ‘’

    என்ற திருவிசைப்பா காட்டும். மேலும், ’’உள்ளதன்  நுணுக்கம்’’ என்ற தொல்காப்பியச் சூத்திரம்  விளக்கம்  பெறும்.  அடுத்து,

    ‘’அருளும்  வண்ணமும்   ஆதி மாண்பும்  கேட்பான்  புகின்,  அளவில்லை‘’ என்றும்,

    ‘’எதுக்களாலும்  எடுத்த மொழியாலும்  மிக்குச்
    சோதிக்க வேண்டா சுடர் விட்டுள்ளன்  எங்கள் சோதி!’’

    என்றும் கூறப்பெறும் தேவாரத்தின்  விளக்கமாகச் சேக்கிழாரே,

    ‘’ஓதும் எல்லை உளப்பில வாதலின்  யாதும்  ஆராய்ச்சி இல்லை!’’

    என்று பாடுகிறார். ‘’மனம் வாக்குக்களுக்கு எட்டாததாயும் சிவஞானத்தால் அறியப்பெறுவதாயும் உள்ள நுண் பொருளேயாயினும், திருவம்பலத்தினிடத்தே தாமாக வெளிப்பட்டு எல்லா உயிர்களும் உய்யுமாறு அருட் கூத்தாடுவார்’’ என்பதை முன்னரே  ‘’உலகெலாம்‘’ என்ற பாட்டில் கூறினார்.

    மேலும் இப்பாட்டில் ‘’அறியோம்’’ என்ற சொல்லிற்கு, ‘இங்கு இறைவன் திருமேனி தாங்கிவரும் இயல்பினைப்பற்றி முன் ஆயுநுண்  பொருளாகியும் என்றதற்கேற்ப ஒர் ஆராய்ச்சி செய்கின்றார். இவர்  திருமேனி தாங்கி வருவதில் ஒன்றற்கொன்று மாறுபட்ட இவ்விரண்டியல்புகள் காணப் பெறுகின்றன; ஆயுநுண் பொருளாவார வெளியே யாடுவாருமாயினர்; ஓருருவு மில்லார் ஒரு வேடங்  கொண்டார். தூர்த்த வேடமுடைய பொன்மேனியில் தூய நீறும் விளங்கிற்று; இவர்தாம் இவ்வாறு வருங்கால் தமது பங்குடைய உமையம்மையார் அறிய வந்தனரோ? அன்றி அறியாமை வந்தனரோ? எனின் அறிய வருவாராயின், இவர் இங்குப் பிறர்  மனைவியாரை வேண்டிச் செல்வதற்கு அவர் உடன்பட்டிரார் அவர் அறியாது வந்தாரெனின் உடன் பிரியாது இருப்பாராதலின் அஃதுமியலாது; ஆதலின் இதனை இன்னவாறெனத் துணிய அறியோம் என்று பொருள் காணலாம்.

    வெளிப்படையாக அருளும் சத்தியும், மறைப்பாகிய திரோதான சத்தியும் ஒருங்கே தொழிற்பட்டன என்ற கருத்தால் இவ்வாறு கூறப்பெற்றது போலும்! நாயனார் இயற்பகையாராயினமையால் தாமும் தமது இயலுக்கு  மாறாக இத்தன்மையில் வெளிப்பட்டு அருளினர் என இங்கு நினைவு கூர்ந்தவாறாம்.

    மேலும் திருநீறணிந்த தோற்றமும் தூர்த்த வேடமும் வெவ்வேறாய் இருப்பதன் நுட்பம் ஆராய்வதற்கு உரியது!  தூய நீறு “சுத்தம தாவது நீறு“ என்றவாறு தான்  தூய்மையுடையதாகும். அதனோடு யாவற்றையும் தூய்மை  செய்வதுமாம். திருநீறு தம் சார்ந்த  மேனியைத் தூய்மை செய்வது. ஆதலால் அடியவரின் தூய மனம் அவர் வடிவத்தையு மறுக்காமல்  ஏற்றுக் கொண்டது.

    அதனோடு அதற்கு மாறாகத்  தூயதல்லாத தூர்த்த வேடமும் ஒருங்கே காணஅதாவது, பிறனில் விழைவோன் செய்யும் காமந்தோன்றும் அடையாளங்கள் விளங்கும் கோலத்துடன் அதாவது நகக்குறி, பற்குறி, மஞ்சட்பூச்சுக்குறி ஆகியவற்றுடன் வந்தார். காமவசப்பட்ட இயல்புடன் இழிந்த செயல் செய்பவனாய்த்  தூர்த்த வேடத்தில் இருக்கும்  இழிபினைப் போக்க அதற்குப் பரிகாரமாக அந்த மேனியிலே நீறு அணிந்ததுபோல என்ற குறிப்புமாம். மேலும் வேதியராய்  விளங்கியதையும் குறிப்பிடும் திறம் உணர்ந்து கொள்ளுதற்குரியது.

    அடுத்து இப்பாடலில் ‘’மாய வண்ணமும், மறாத வண்ணமும்‘’ என்ற தொடர்கள், பிறர் அறிய இயலாதபடித் தம்மை மறைத்துக் கொண்ட இவ்வுருவந் தாங்கிக்கொண்டு அதனைக் காட்டுதலேயன்றி,  வேண்டும் யாவையும்  இல்லை யென்னாதே முன் கொடுக்கும் இயல்பினையும். தமது மாயை வண்ணத்தைக் காட்டுதலேயன்றி, அடியார் மறாத வண்ணத்தையும் கொண்டு வந்தார்.

    இறைவன் தம் அருள் விளையாட்டில் காட்டும் தோற்ற மாற்றங்களை மிகவும் நுட்ப்பமாகப் புலப்படுத்தும்  இப்பாடல்,  சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகிறது.

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-21

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-21

    தி. இரா. மீனா

    பசவேசர்

    பசவண்ணர், பசவேசர், அண்ணா என்றெல்லாம் போற்றப்படும் இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடந்த சிவசாரணர்களின் சமுதாய ,தார் மீகப் போராட்டத்தின் சூத்ரதாரி. யுகப்புருஷனாகப் போற்றப்படும் இவ ரைக் குறித்து பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. கர்நாடகத்தில் பீஜாப்பூர் மாவட்டத்தின் பாகேவாடி பசவேசரின் பிறந்த ஊர். சைவ பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை மாதராசா, தாய் மாதலாம்பிகே. இவருக்கு கங்காம்பிகே, நீலாம்பிகே என்று இரண்டு மனைவியர். அக்கநாகம்மா இவரது சகோதரி. சென்ன பசவண்ணர் இவர் சகோ தரி மகன். வேலையை மட்டும் முதன்மையாகக் கொண்ட (கர்மநிஷ்ட) சைவப் பார்ப்பனர் பழக்க வழக்கத்தை எதிர்த்து பசவேசர் கூடல சங்கமத்திற்கு வருகிறார். கல்வி கற்கிறார்; தனித்துவத்தை நிலை நிறுத்திக் கொள்கிறார். மண்டல அதிபதி பிஜ்ஜளனின் மங்கள வாடாவுக்குச் சென்று கருவூல அதிகாரியாகப் பணியாற்றுகிறார். பின்னர் பிஜ்ஜளனின் நிதியமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்கிறார். கல்யாண் நகர் பசவேசர் வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகிறது. வர்க்க சாதி, பால் வேறுபாடுகள், மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை மறுத்து சமத்துவம், சுதந்திரம், உடன் பிறப்புக் கொள்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய சமுதாயம் உருவாக்க முயற்சிக்கிறார். அரசாங்கப் பிரதிநிதிகளின் நியாயங்களை எதிர்க்கிறார். ”அரண்மனையில் ராணியாக இருப்பதைவிட பக்தரின் வீட்டில் வேலைக்காரி யாக இருப்பதே மேல்”,  “மன்னனின் பிணமானாலும் ஒரு காசுக்கு வாங்குபவரில்லை “என்பன போன்ற அவர் வழிநடத்துதல்கள் மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்துகிறது. பசவேசரின் முத்திரை ”கூடலசங்கமதேவன்” என்பதாகும். அவர் பலரும் போற்றும் இயல்பு டையவராக விளங்கியிருப்பதை “நான் பசவண்ணராகப் பிறக்க இயலாமல் போய் விட்டதே“ என்று அல்லமாபிரபு கூறியதைக் காட்டலாம்.

    1. “குலம் எதுவாக இருந்தாலென்ன?
    சிவலிங்கமுடையவன் உயர்குலத்தவன்
    சாதிகள் இணைந்த பின்பு
    சரணருள் குலம் தேடலாமோ?
    சிவதர்மகுலே ஜாதஹ புனர்ஜன்ம விவர்ஜிதஹ
    உமா மாதா பிதா ருத்ர யீஸ்வரம் குலமேவ ச்ச்
    ஆதலால் கொடுத்ததை உண்பேன்
    கொடுப்பேன் பெண்ணை
    சரணர்களை நம்புவேன்
    கூடலசங்கமதேவனே“

    2. “இருவர் மூவர் தேவரென்று ஆணவமாகப் பேசவேண்டாம்
    ஒருவனே காணீர், இருவரென்பது பொய்யே
    கூடலசங்கமதேவனன்றி மற்றதில்லையென்றது வேதம்“

    3. “யாரிவன் யாரிவன் யாரிவனென நினைக்க வேண்டாம்
    இவன் நம்மவன் இவன் நம்மவன் இவன் நம்மவனென
    நினைக்க வைக்க வேண்டும் கூடலசங்கமதேவனே
    உங்கள் வீட்டுப்பிள்ளையென நினைக்க வையும் ஐயனே“

    4. “நீருள் மறைந்திருக்கும் அக்னி போலிருந்தது
    செடியின்னுள்ளிருக்கும் சாற்றின் சுவை போலிருந்தது
    பூவிலடங்கிய நறுமணம் போலிருந்தது
    கூடலசங்கமதேவனே“

    5. “செல்வர் சிவாலயம் கட்டலாம்
    ஏழை நானென்ன செய்வேன் ஐயனே?
    காலே தூண், உடலே கோயில்
    தலையே பொன்கலசம் கூடலசங்கமதேவனே
    தாவரத்திற்கு அழிவுண்டு ஜங்கமத்திற்கு அழிவில்லை.”

    6. “கல் எத்தனை காலம் தண்ணீருள் இருந்தென்ன
    ஊறி மிருதுவாகுமா?
    உன்னை எத்தனை காலம் தொழுதென்ன
    மனதில் உறுதியின்றி?
    புதையல் காக்கும் பூதம் போலானதே என் நிலை
    கூடலசங்கமதேவனே“

    7. “வாருங்கள், நலமா என்றால் உங்கள் பணம் அழியுமோ?
    உட்காருங்களென்றால் பூமி குழியுமோ?
    அவரோடு பேசினால் தலை துண்டாகுமோ?
    எதுவும் கொடுக்கவில்லையெனினும் பரவாயில்லை
    மனிதருக்கு குணமிருக்க வேண்டும் இல்லையெனில்
    சும்மா விடுவானோ கூடலசங்கமதேவன்?”

    8. “அக்னி எரிந்தால் எதிரில் நிற்கமுடியும்
    உலகம் எரிந்தால் முடியுமோ?
    ஏரியே நீரைக் குடித்தால்
    வேலியே பயிரை மேய்ந்தால்
    தன் வீட்டில் தானே திருடினால்
    முலைப்பால் நஞ்சாகிக் கொன்றால்
    யாரிடம் முறையிடுவது கூடலசங்கமதேவனே?”

    9. “கல்நாகம் கண்டால்  பாலூற்று என்பார்
    மெய்நாகம் கண்டால் கொல்லென்பாரய்யா
    உண்ணும் மெய்யன்பர் வந்தால் ’போ’ என்பாரையா
    உண்ணாத இலிங்கத்திற்கு உணவைப் படை என்பாரய்யா
    கூடலசங்கமனின் சரணரைப் புறக்கணித்தால்
    கல்பட்ட மண்சட்டியாவார் ஐயனே“

    10. “திருடாதே கொலை செய்யாதே பொய்யும் சொல்லாதே
    சினவாதே பிறரைக் கண்டு கடுகடுக்காதே
    தன்னைப் புகழாதே பிறரைக் கண்டு புழுங்காதே
    இதே அந்தரங்க சுத்தி பகிரங்க சுத்தி
    இதே எங்களது கூடலசங்கமதேவனைக் கும்பிடும் வழி“

    11. “நூல்வலையில் பிணைத்துக் கொள்ளும் சிலந்தி
    வலைக்கான நூலை எங்கிருந்து பெற்றது?
    இராட்டையில்லை; பஞ்சில்லை நூல் நூற்றது யார்?
    தன்னுடல் நூலெடுத்து வலையாக்கிய சிலந்தி
    தனக்குள் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது போல
    தான் படைத்த உடலைத் தனக்குள் வைத்துக் கொள்வான்
    கூடலசங்கமதேவன்“

    12. “குதிரையேறி வருபவர்களைக் கண்டால்
    முன்னால் விழுந்து கால்களைப் பிடிப்பார்கள்
    ஏழ்மையான சரணர் வந்தால்”தள்ளிப் போ “ என்பார்கள்
    என்னிறைவன் கூடலசங்கமதேவன்
    அவர்களைப் பார்த்தால்
    கீழே தள்ளி மூக்கறுக்காமல் விடுவானோ?”

    13. “கணவன் மீது நம்பிக்கையில்லாத மனைவி
    இலிங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத அடியவன்
    இருந்தென்ன ? போயென்ன ?
    குடிப்பதற்குக் கொடுக்காத பசுவிடம்
    குடிக்காத கன்றை விட்டது போலாம்
    கூடலசங்கமதேவய்யனே“

    14. “சாதியின் பெயரால் தீட்டைத் தேடுவார்கள்
    ஓளியைப் பிடித்துக் கொண்டு இருளைத் தேடுவார்கள்
    மூடமனிதனே எதற்கு இது ? சாதியில் உயர்வென்பாய்
    கோடி அந்தணர் இருந்து பயனென்ன?
    ’பக்தனே சிறந்தவன் ”என்கிறது வசனம்
    கூடலசங்க அடியாரின் பாதத்தை நம்பிடுவாய்
    கெடவேண்டாம் மானிடனே“

    15. “உடல் உனதென்றான பிறகு வேற்றுடல் எனக்கில்லை
    உள்ளம் உனதென்றான பிறகு வேற்றுமனம் எனக்கில்லை
    பொருள் உனதென்றானபிறகு வேற்றுப் பொருள் எனக்கில்லை
    மூன்றும் உனதான பிறகு வேற்றெண்ணம்
    எனக்குண்டோ கூடலசங்கமதேவனே?”

    [தொடரும்]

    [ஏப்பிரல் திங்கள் 26ம் நாள் பசவஜெயந்தியாக கர்நாடக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவருகிறது. அதை யொட்டி இக்கட்டுரை]

    Share
  • எழுவகைப் பெண்கள் – 15

    எழுவகைப் பெண்கள் – 15

    அவ்வைமகள்

     சீப்பு எனும் உடல்நலக் கருவி  

    பெண்களின் உடல் நலம் என்கிற வகையில், தலைமுடி  பற்றி, நானும்  அந்த இராணுவ அதிகாரியும்  பேசிக்கொண்டு வரும் இத்தருணத்தில், அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்: பெண்களின் உடல் நலத்தில், தலை வாருவதற்குப் பயன்படுத்தும் சீப்புகளுக்கு  ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா? ஆண்களும் பெண்களும் பொதுவாக வெவ்வேறு விதமான சீப்புகளைப் பயன்படுத்துகிறார்களே அதனால் தான் கேட்கிறேன் என்றார்.

    “ஆம்! சீப்புகளுக்குத் தலைமுடிப் பராமரிப்பிலும் ஆரோக்கியத்திலும், ஏன் ஒட்டுமொத்த, தலை ஆரோக்கியத்திலும் கூட முக்கியப் பங்கு உள்ளது!”

    இந்த முக்கியத்துவத்தை முதலில் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு சீப்பு விஷயத்தில் பெண்-ஆண்  வித்தியாசங்களைப் பார்ப்போமே என்று தொடர்ந்தேன்.

    பார்க்கப்போனால், சீப்பு என்பது மனிதகுல வளர்ச்சியில் இன்றியமையாத அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே சீப்பு மனிதப் பயன்பாட்டில் இருந்ததை வரலாறு காட்டுகிறது என்றால் சீப்பு என்றைக்கோ எப்போதோ உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்த ஓர்  அன்றாட வாழ்க்கைப் பொருள் என்பது விளங்கும்.

    Prehostoric என்று சொல்லப்படுகிற வரலாற்றுக்கு முந்தைய ஆதிகாலத்திலிருந்தே, சீப்பு மனிதனது பிரிவறியாத துணையாக இருந்திருக்கிறது எனலாம். எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததாகச் சொல்லப்படும்  சீப்பைப் போலவே இன்றைய சீப்பும் இருக்கிறது என்பதால், சீப்பு என்பது ஆதிகாலத்திலேயே அதனுடைய முத்தாய்ப்பான பணித்தொழில்நுட்ப வடிவத்தை (Working technical design) அடைந்துவிட்டது எனலாம்.

    புராதன எகிப்தியச் சீப்பு:

    http://phthiraptera.info/sites/phthiraptera.info/files/222%2C%20LouseEggChristmas%20Cave2012.pdf

    பத்தொன்பதாம் நூறாண்டு இந்தியச் சீப்பு

    https://www.atlasobscura.com/articles/some-of-historys-most-beautiful-combs-were-made-for-lice-removal

    தற்காலத்துச்  சீப்பு : inplastico.com/en/1557-double-wooden-comb-for-lice-and-nits.html

    எந்த ஒன்று மனித வாழ்க்கைக்கு, அன்றாட இன்றியமையாத தேவையாகிறதோ அதுமட்டுமே உச்சபட்சத் தொழிநுட்பப் பணித்தொழில்நுட்ப வடிவத்தை  ஆதி காலத்திலேயே பெற்றுவிடமுடியும். இது, அறிவியல் உலகில் ஒரு விதி. எனவே, சீப்பு என்பது தொடக்க நாள் முதலே மனித வாழ்க்கைக்கு எத்தனை அவசியமானதாக  இருந்து வந்திருக்கிறது என்பது உங்களுக்கே புரியும் .

    சீப்பு பற்றிய இன்னுமொரு அதிசயம் என்னவென்றால், உலகில் சீப்புக்கெனவே மூன்று அருங்காட்சியகங்கள் உள்ளன. அலாஸ்காவில் ஒன்றும், பிரிட்டன் கேம்பிரிட்ஜில் ஒன்றும், ஜெர்மனியில் ஒன்றும் என மூன்று சீப்பு அருங்காட்சியகங்கள் உலகில் உள்ளன என்பது  சீப்புப் பயன்பாட்டின் புராதனத் தன்மையைப்  போதுமான அளவு  விளக்கும் என நினைக்கிறேன். சொல்லப்போனால், இன்று நாம் காணும், உலகின் பழங்குடியினரின் புகைப்படங்கள் யாவுமே, பண்டைக்காலந்தொட்டே, தலைமுடியை வாரி முடிப்பது என்பது மனிதர்களின் பழக்கமாகவே இருந்திருப்பதைப்  பறைசாற்றுகின்றன  – என்றேன்.

    https://tribal.nic.in/DivisionsFiles/tribalFaces.pdf

    https://www.akpool.co.uk/postcards/26489518-postcard-ceylon-sri-lanka-kandyan-woman-junge-frau-im-gewand-halsschmuck

    அப்படி சீப்பு என்னதான் நமக்கு உதவி பண்ணுகிறது? என்றார்.

    பறவைகள் தம் அலகால் இறகைக் கோதி மினுமினுக்கச் செய்வது போன்றது, நாம், நம் தலைமுடியைச் சீப்புக்கொண்டு வாருவது. மயிரின் வேர்க்காலில் சுரக்கும் செபத்தை அங்கிருந்து நகர்த்தி, தலைமுடி நெடுகிலும் தீற்றுவதற்ககு, சீப்பால் வாருதல் அவசியம். செபம் நன்கு சுரந்து,  ஆரோக்கியமான தலைமுடி உள்ளவர்கள், பொதுவாகத் தலைமுடியை அழுத்திப் படிய வாரியதும், அவர்களது முடி பளபளப்புடன் ஜொலிப்பதைக் காணலாம். இவ்வாறு சீப்பால் தலையை வாருவதால், செபச்சுரப்பிகள் தூண்டிவிடப்பட்டு, செபம் ஆரோக்கியமாகச் சுரக்கலாகும். நம் மண்டையின் உஷ்ணத்தாலும் சுற்றுச்சூழலின் காற்று மற்றும் உஷ்ணத்தினாலும் செபம் உலர்கிறது என்பதால் சிறுதளவு  எண்ணெய் தடவி  செபத்தை இளக்கி, தலைமுடியை வாருவது அவசியமாகிறது.

    எவரொருவரது  மண்டையும் முடியும் செபத்தின் ஈரப்பதத்தோடும் எண்ணெய்ப் பசையோடும்  இருக்கிறதோ அதுவே ஆரோக்கியமான தலை என்று கருதப்படுவது. எனவே தான் சீப்புக்கொண்டு தலைவாருவது என்பது தினசரிப் பழக்கமானது.

    சொல்லப்போனால், சீப்பு கொண்டு தினமும் வாரப்படாத தலை, வறட்சி கொள்கிறது.

    ஏனென்றால், நாம் ஏற்கனவே பேசியபடி, முடியின் அடியிலிருந்து நீக்கி நீவப்படாத செபம் உறைந்து, புதுச்செபம் சுரப்பதை நிறுத்தி,  மண்டையை வறள வைக்கிறது. மண்டையில் வறட்சி ஏற்படுகிறதென்றால், அங்கே, வெகு பல பிரச்சினைகள் வெகு துரிதமாகத் தோன்றிவிடும்.

    சீப்பால் வாருவதால் ஏற்படும் கூடுதல் நன்மை  என்னவென்றால்,  மண்டையில் இரத்த ஓட்டம் நன்கு தூண்டிவிடப்படுகிறது.  மண்டையில் ரத்த ஓட்டம் பரவியது என்றால், உடல் முழுவதும் உள்ள நாடி நரம்புகள்  புத்துணர்ச்சி இருக்கின்றன. எனவேதான், ஒரு நாளைக்கு இருமுறை சீப்பு வைத்துத்  தலையை அடிமுதல் நுனிவரை வாருதல் அவசியம் என்று கூறப்படுகிறது.

    சீப்பால்  தலைமுடியை வாருவதால் உடலின் மொத்த ஆரோக்கியமும் பெருகும் என்பது எங்கள் குலத்தின் ஞானம் அல்ல. உலகின் பல்வேறு பண்டைய சமூகங்கள் (எடுத்துக்காட்டாக – எகிப்திய – மெசபொடோமியச் சமூகங்கள்) இந்த ரகசியத் தொடர்பை அறிந்திருந்தன எனவேதான் அவை   சீப்பின் உபயோகத்தில் இருந்தன.

    அதிருஷ்டவசமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த ஆரோக்கியப் புரட்சியில்  ஏறக்குறைய உலக மக்கள் அனைவருக்குமே சீப்பின் பயன் பற்றிய  ஞானம் மறுமலர்ச்சி பெற்றது  எனலாம்.

    ஆம்! இன்று நாம் கோவிட்  19 ல் அவதிபடுவது போல, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலகம்   பல்வேறு உடல்நலப்பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டது. அம்மை, காலரா, காசநோய் ஆகியன தொற்றுநோய்களாக வெகு அளவில் உலக அளவில் பரவி மனித இழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில், இந்நோய்கள் இன்னபிற சங்கடங்களோடு  தலைமுடியையும்  உதிரவைத்தன. அதைவிடக் கொடுமை என்னவென்றால், இவற்றுக்கான மருந்துகளும் தலைமுடியைத் தாக்கின. பலர் முடியின்றி வழுக்கை மண்டையாக மாறினர்.

    இந்நிலையில் தான், அமெரிக்காவில், ஓர் உடல் நலப்புரட்சி நடக்கிறது. ஒட்டுமொத்த உடல் நலப்புரட்சி, Holistic Health Reform of the Ninteenth Century,  என்பதான   இப்புரட்சியில், தலைமுடி நலம் என்பது முக்கியமானதாகக் கருதப்பட்டது.

    எடுத்துக்காட்டாக, 1904இல் நியூயார்க்கிலிருந்து வெளிவந்த ஒரு பிரசித்தி பெற்ற புத்தகமான, How to Care for Hair at All  Times [1]  உடல்நலத்தில் சீப்பின் பங்கை எடுத்துரைக்கிறது. இப்புத்தகம் என்ன சொல்கிறது என்றால், சீப்பால் தலையை வாருவது, தலையில் உள்ள தமனிகளைத் தூண்டிவிடுகிறது – இந்தத் தூண்டுதலால், தலைமுடியின் வேர்க்கால்கள் உறுதியடைகின்றன என்பதோடல்லாது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடல் அங்கங்கள் யாவும் புத்துணர்ச்சி பெறுகின்றன.

    இந்தப் புத்தகம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக அளவில் ஏற்பட்ட ஒட்டுமொத்த உடல்நலப் புரட்சியில் ஒரு முக்கிய அங்கம் வகித்ததாக அறிகிறோம் என்கிற அளவில், ஒட்டுமொத்த உடல் நலத்தில்,  தலைமுடியைச் சீப்பால் வாருதல் என்பதன் இன்றியமையாதத் தன்மை பற்றி உலகில் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்பட்டது என்று அறிகிறோம்.   தலைமுடியை வாருவதற்கு மட்டுமல்ல, தலைமுடியை பிரஷ் செய்து தூய்மைப்படுத்தவும் பல்வேறு விதமான சீப்புகள் அமெரிக்காவில் முளைத்த மாபெரும் வணிகக்க காலம் இது.

    வாருவதற்கும் பிரஷ் செய்வதற்கும் மட்டும் சீப்புப் பயன்படுவதில்லை. சீப்புக்கு இன்னுமொரு பங்களிப்பும் உண்டு. தலையில் பேன் பீடித்ததென்றால், பேன்களை அகற்றி ஒழிக்கவும் சீப்புத் தேவைப்படுகிறது. நான் மேலே காட்டியுள்ள மூன்று சீப்புகளுமே பேன் நீக்கும் சீப்புகளே.

    எனவே சீப்பு என்பது நாம் நினைப்பதை விடவும் கூடுதலான சிறப்புக் குணாதிசயங்களைக் கொண்டது என்பது புரிகிறது அல்லவா?

    நாம் பயன்படுத்தும் சீப்பு எந்தப் பொருளினால் செய்யப்பட்டது என்பது சீப்புப் பயன்பாட்டில்  முக்கியமான விஷயம்.

    பண்டை நாட்களில் சீப்பு, மரம், எருமை மாட்டுக்கொம்பு, தந்தம், ஆகியவற்றால் மட்டுமே செய்யப்பட்டது. மரம் என்றால் எல்லா மரத்திலும் சீப்புச் செய்யப்படமாட்டாது. வேம்பு, நுணா, ஜாதிக்காய், கருங்காலி, செம்மரம் (மகோகனி) போன்ற மரங்கள் மட்டுமே சீப்புச் செய்யப் பயன்படுத்தப்பட்டன. சிக்கெடுக்க, மூங்கிலால் ஆன சீப்புகள்  தயாரிக்கப்பட்டன.

    ஈர்க்கொல்லிகள் என்று நீளப் பிடி கொண்ட சீப்பு வகை உண்டு. பேனின் முட்டைகளுக்கு ஈர் என்று பெயர். அந்த ஈர்களை, இழுத்தெடுத்துக் கொள்பவை ஈர்க்கொல்லிகள். ஈர்க்கொல்லிகளின் பற்களும் நீளமானவை என்பதோடு, அப்பற்கள் உறுதியாகவும் உடையாத நெளிவுத்தன்மை உடையதாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான், இழுத்தெடுத்த ஈரை, அப்படியே பற்களுக்கிடையே நெளித்திடுக்கிக் கொல்ல முடியும். எனவே ஈர்க்கொல்லிகள் பெரும்பாலும் உறுதியான கருங்காலி, செம்மரம் போன்றவற்றில் மட்டுமே செய்யப்பட்டு வந்ததாக அறிகிறோம்.

    தந்தச்  சீப்பைப் பொறுத்த மட்டில், எங்கள் நாட்டில்,  யானைத் தந்தத்தால் ஆன சீப்புகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்திருந்ததாக அறிகிறோம். செல்வந்தர்கள் அரச குடும்பத்தினர் ஆகியோர் வசம்,  தந்தச் சீப்பின் பயன்பாடும் தங்கத்தால் ஆன  சீப்பின் பயன்பாடும்  இருந்திருக்கிறது. ஆனால், பிற நாட்டுப் பண்டைய சமூகங்கள், நீர்யானையின்  தந்தம், காட்டுப் பன்றியின் எலும்பு, ஆமையின் ஓடு என இன்னபிற தந்த வகைகளையும் சீப்புச் செய்யப் பயன்படுத்தியதை அறிகிறோம் .

    எங்கள் நாட்டில், ஒரு  சில  இடங்களில் பித்தளையால் ஆன, மிக நெருங்கிய பற்கள் கொண்ட  மிகப் புராதனமான சீப்புகளும் கூடக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இவை கிடைக்கப் பெற்றிருப்பதால்,  ஏதோ விசேடப் பயன்பாடாக மட்டுமே இந்தப்  பித்தளைச்  சீப்புகள் புழக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இவ்வாறு எங்கள் நாட்டில் கிடைத்த புராதனப் பித்தளைச் சீப்புகள், மூடியிட்டதான ஒரு திரவக்கலமாக  வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

    https://onedrive.live.com/Edit.aspx?resid=2BBA21C9F3B27084!344&wdPid=7b6ccb36

    திரவக் கலத்தில் வாசனாதி திரவியங்கள் கலக்கப்பட்ட நீரை ஊற்றி மூடி, அந்த பித்தளைச் சீப்புக்களைத் தலைமுடியில் செருகிக்கொள்வார்களாம். சீப்பின் கால்களின் வழியாக, வாசனாதி திரவியங்கள் மயிர்க்கால்தோறும் இறங்கி முடியின் மயிர்க்கால்களை ஈரப்பதத்துடனும் நல்ல மணத்துடனும் வைத்துக்கொள்ள உதவின என்று விக்கிபீடியா குறிப்பினின்று  அறிகிறோம்.

    ஆனால், நன்கு சிந்தித்துப் பார்த்தோமேயானால் இவ்வகையான திரவக் கலன் கொண்ட சீப்புக்கள் மருத்துவச் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டன  என்றே நம்மால்  ஊகித்து உணர முடிகிறது.

    இன்றைய ஆயுர்வேத எண்ணெய் வடி ஊற்றல் முறையான ஷீரோதாரா முறைக்கும் முந்தையதான எண்ணெய் மருத்துவமாகச் சீப்பு வழி எண்ணெய்  வடி ஊற்றல் மருத்துவ முறையம் எங்கள்  வாழ்வியலில் இருந்திருக்கின்றது.

    பித்தளை ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்குக் காரணம் உண்டு. அறிவியல் ஞானத்தின்படி, தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்கள் நம் தலைமுடியில் செறிவு அடைகின்றன. இந்த இரண்டு உலோகங்களும் போதிய அளவில் முடியின் வேர்க்காலில் செறிவு அடையவில்லையென்றால், முடி கொட்டுதல் உள்ளிட்ட, பல்வேறு  விதமான  தலைமுடி மற்றும் மண்டைப் பிரச்சினைகள் தோன்றும், என்பதோடு, ஞாபகமறதி, புத்திமந்தம் போன்ற பிரச்சனைகள் கூடத்  தோன்றும் என்று சொல்லப்படுகிறது. எனவேதான், எல்லாப் பிரசித்திபெற்ற தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களிலும், இன்று தாமிரமும் துத்தநாகமும் கண்டிப்பாக இருப்பதைப் பார்க்கிறோம்.

    தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்களுமே Trace Metals எனப்படும் நுண் அளவில் மட்டுமே உடலில் இருப்பதான  உலோகங்கள். வளர்சிதை மாற்றத்தில் இவை அதிகப் பங்கு வகிப்பவை.  ஆக, உடலில் வளர்சிதை மாற்றத்தில் நேரடிப் பங்கு வகிப்பதால் முடியில் தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்களுமே செறிவதில் வியப்பேதும் இல்லை. ஆக, முடியின் வேருக்கு மிகக்குறைத்த அளவில் தாமிரமும் துத்தநாகம் தேவைப்படுகிறது என்பதை உணர்க.

    பித்தளை என்பது தாமிரமும் துத்தநாகம் சேர்ந்த உலோகக் கலவையாகும். பித்தளை எண்ணையில் கரையவல்லது. எண்ணெய் பட்டால், பித்தளையில்  களிம்பு ஏறுவதை நாமறிவோம். களிம்பு என்பது எண்ணையுடன் பித்தளை நிகழ்த்தும் ஒரு வேதியியல் வினையாகும். அதிகப்படியாய் எண்ணெயில் கரைந்த பித்தளையே களிம்பு. அது  நஞ்சு.

    ஆனால், வெகு  சிறிதளவே பித்தளை எண்ணெய்யில் கரைந்ததென்றால், அந்த எண்ணெய்  முடியின் வேருக்கு ஊட்டச் சத்தாகும். எனவேதான், பித்ததளை சீப்புக்கள் கொண்டு மருத்துவ எண்ணெய்த் தைலங்களை வைத்து, தலைமுடி மற்றும் மண்டைக்கான சிகிச்சைகள் நடத்தப்பட்டன.

    எங்கள் நாட்டில், மரகதக்கல்லில் இழைத்துச் செய்யப்பட்ட சீப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.  பித்தளைச் சீப்புக்களைப் போலவே, மருத்துவ எண்ணெய்த் தைலங்களை வைத்து, தலைமுடி மற்றும் மண்டைக்கான சிகிச்சைகளுக்காகவே மரகதக்கல் சீப்புக்களும்   தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்தன. மரகதக் கல்லில், தாமிரம், இரும்பு, துத்தநாகம், மக்னீசியம் ஆகிய உலோகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  சீனாவிலும் பண்டைய நாட்களில் மரதக்கல் சீப்புக்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அங்கும் இவை, சிகை மற்றும் சிரசு மருத்துவச் சிகிச்சைக்காகவே பயன்படுத்தப்பட்டன.

    சீனாவின் புராதன மரகதக்கல்  சீப்பு:
    https://www.metmuseum.org/art/collection/search/72544

    சீப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு உலகமக்களிடையே பெருகியிருந்த காலகட்டத்தில் தான், பிளாஸ்டிக்  பொருட்கள், 1940 வாக்கில் நம் பயன்பாட்டுக்காக, அறிமுகப்படுத்தப் பட்டன. ஆனால், 1970 கள் தொடங்கி, மிக அதிகமான அளவு பிளாஸ்டிக் பொருட்கள் நம் மீது திணிக்கப்பட்டன.

    பிளாஸ்டிக் சீப்புக்கள்  இவ்வாறு தான் நம் இல்லங்களில்  நுழைந்து – நம் கைகளுக்கு வந்து – நம் தலைக்கும் போய்ச்  சேர்ந்தன.  இதனால், நாம், மரம் மற்றும் எருமைக் கொம்பினால் ஆன சீப்புகளைத் துறந்தோம் – மறந்தோம். பிளாஸ்டிக் சீப்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம்.

    ஆனால், பிளாஸ்டிக் சீப்புக்கள் நன்மையை விட தீமையையே அளிப்பவை. ஏனென்றால், நம் தலைமுடி நேர்மின்சாரத்தன்மை கொண்டது, பிளாஸ்ட்டிக்கோ, எதிர்மின்சாரத் தன்மை உடையது, இவ்வாறான இரு எதிர் மின்சாரத் தன்மை கொண்ட பொருட்கள் ஒன்றை ஒன்று உரசும்போது அங்கே, நிலைத்த  மின்சாரம் (Static Electricity) உருவாகும். Triboelectric Series எனப்படும் நிலைமின்சாரத் தன்மை கொண்ட பொருட்களின் பட்டியலைப் பார்த்தால், நம் தலைமுடி நேர்மின்சார அளவில் உயர்ந்தும், பிளாஸ்டிக் எதிர்மின்சாரத் தன்மையில் உயர்ந்தும் நிற்கின்றன.

    https://alisiteblog.wordpress.com/2015/11/08/static-swiffers/

    எனவே, நம் தலைமுடியோடு பிளாஸ்டிக் சீப்பு உரசினது என்றால், தலைமுடியில், வலிமையானதொரு நிலைத்த மின்சாரம் உருவாகி, அது நம் முடியை கிளர்த்தெழச் செய்து, முடியைப் பலவீனப்படுத்துகிறது. முடி சக்தி இழந்து, நுனி வெடிப்பது, வேர் கழன்று விழுவது போன்றவை பிளாஸ்டிக் சீப்பினால் நிகழ்கின்றன.

    https://duux.com/en/static-electricity-explained/

    அதுவும், உலர்ந்த முடியில் பிளாஸ்டிக் சீப்பால் வாரும்போது மிக அதிக அளவில் நிலைத்த மின்சாரம் உருவாகும்: https://www.youtube.com/watch?v=l1FpIbEAsZk

    சலூன்களில், முடி வெட்டும்போதும் இன்னபிற அலங்காரங்களைச் செய்துகொள்ளும்போதும் கூட, நிலைத்த மின்சாரம் உருவாகி, அழகு செய்யும்போதே, முடியும் பலவீனப்படுத்தப்படுகிறது: https://www.youtube.com/watch?v=l1FpIbEAsZk

    மரச் சீப்புக்கள், தந்தச் சீப்புக்கள், கொம்புச் சீப்புக்கள் ஆகியன மிகக் குறைந்த அளவிலான நிலைத்த நேர் மின்சாரம் கொண்டவையாக இருக்கின்றன. எனவே இவற்றால் ஆன சீப்புக்கள் கொண்டு தலைமுடியை வாரும்போது, சீப்பும் தலைமுடியும் எவ்வித மின்சார வினையிலும்  ஈடுபடுவதில்லை. அதனால்,  நம் தலைமுடியில் மின்சக்தி உருவாகுவதில்லை. எனவே, தலைமுடியும் மண்டையும் பலவீனப்படுவதில்லை.

    தந்தச் சீப்புகள் இனிமேல் கிடைக்காது – கொம்பு சீப்புகளைத்  தயாரிக்கும் கலை  மறைந்து விட்டது ஆனால், மரச்  சீப்புகளைச் செய்வோர் இன்னமும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்  – என்றேன். மரச் சீப்புகளுக்கு நாம் மாறிக்கொள்ள இன்னமும் யோசனை செய்யத் தேவையில்லை, ஏனெனில் இது உடல்நலம் சார்ந்த விஷயமில்லையா?  என்றார்.

    [மேலும் பேசுவோம்]  

     

    பயன்பட்ட நூல்கள்

    [1] Juliot Marion Lee (1904). How to Care for the Hair at All Times; Juliot Hair Culture Company, New York.

    Share
  • நாலடியார் நயம் – 10

    நாலடியார் நயம் – 10

    நாங்குநேரி வாசஸ்ரீ

     10. ஈகை

     பாடல் 91

    இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
    உள்ளஇடம் போல் பெரிதுவந்து – மெல்லக்
    கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
    அடையாவாம் ஆண்டைக் கதவு.

    பொருள் இல்லாத காலத்தும்
    பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து
    தம்மால் இயன்றதை இயல்பாகத்
    தரும் குணமுள்ள மாந்தருக்கு
    அவ்வுலகத்துக் கதவுகள் என்றும்
    அடைக்கப்படாமல் திறந்திருக்கும்.

    பாடல் 92

    முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
    பின்னரும் பீடழிக்கும் நோயுள; – கொன்னே
    பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
    கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.

    முன்னே இறக்கும் நாள் காத்திருக்க
    முதுமையெனும் வெறுக்கத்தக்க
    காலம் வந்ததோடு உடல்வலிமை
    குறைக்கும் நோய்களும் வருதலால்
    பொருள் உள்ள காலத்தே மேலும்
    சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்!
    சேர்த்த பொருளை இறுகப் பற்றியிராதீர்!
    பலருக்கும் கொடுத்து ஒளிக்காது
    பகுத்து உண்ணுங்கள்.

    பாடல் 93

    நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
    கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
    இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
    விடுக்கும் வினையுலந்தக் கால்

    அடுத்தவருக்குக் கொடுத்து
    அனுபவித்தாலும் செல்வம்
    அதுவாகச் சேரும் காலத்தில்
    அண்டிவந்து சேரும்
    நம்மிடத்தே பொருள் சேர்த்த
    நல்வினை தொலையும் நேரம்
    இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது
    இல்லாமல் நீங்கிவிடும்
    இதை உணராதார் வறுமையால்
    இன்னலுற்று உதவி நாடிவருபவர்
    துயரைப் போக்க மாட்டார்.

    பாடல் 94

    இம்மி யரிசித் துணையானும் வைகலும்
    நும்மில் இயைவ கொடுத்துண்மின் – உம்மைக்
    கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
    அடாஅ அடுப்பி னவர்.

    இம்மியளவு அரிசியின் அளவாவது
    இயன்றவரை பிறருக்குத் தினமும்
    அளித்துப் பின் உண்ணுவீர்!
    ஆழிசூழ் இவ்வுலகில் சமைக்காத
    அடுப்புடைய பிச்சையெடுப்போர்
    அடுத்தவருக்கு உதவாதவர்
    அவர்தம் முற்பிறப்பிலென
    அறிந்து செயல்படுவீர் நாளூம்.

    பாடல் 95

    மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
    உறுமா றியைவ கொடுத்தல் – வறுமையால்
    ஈதல் இசையா தெனினும் இரவாமை
    ஈதல் இரட்டி யுறும்.

    மேலுலகப் பயனையும்
    மேவும்இவ்வுலகப் பயனையும்
    தம் மனதில் நினைத்து
    தம்மால் இயன்ற அளவு
    தானம் செய்வீர்!
    கொடும் வறுமை காரணமாய்
    கொடுக்க இயலாவிடினும்
    பிச்சைகொள்ளாமல் இருத்தல்
    பிறருக்கு ஈவதைக் காட்டிலும்
    இருமடங்கு நல்லது.

    பாடல் 96

    நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
    படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
    குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
    இடுகாட்டுள் ஏற்றைப் பனை.

    வள்ளன்மையுடன் பலரும் விரும்புமாறு
    வாழ்பவர் ஊர்நடுவே மேடைசூழ நிற்கும்
    பயன்தரும் பெண்பனை போன்றோர்
    பல்வளம் பெற்றிருந்தும் பிறருக்கு ஈந்து
    தான் உண்ணாத மக்கட்பண்பு இல்லாதோர்
    தனித்து சுடுகாட்டில் நிற்கும் ஆண்பனைக்கு
    ஒப்பானவரே.

    பாடல் 97

    பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
    செயற்பால செய்யா விடினும் – கயற்புலால்
    புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
    என்னை உலகுய்யுமாறு.

    கயல்மீனின் புலால் நாற்றத்தைக்
    கடற்கரை புன்னைமலர் போக்கும்
    அலை மோதும் குளிர் கடற்கரையுடை
    அரசனே! பருவ மழை தவறினாலோ
    அகிலத்து உயர்ந்தோர் செய்யத்தக்க
    உதவிகளைச் செய்யாது விடுத்தாலோ
    உலகத்து உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்?

    பாடல் 98

    ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
    ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் – ஆற்றின்
    மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
    பொலிகடன் என்னும் பெயர்த்து.

    வளம்மிகு குளிர்ச்சிநிறை கடற்கரையுடை
    வேந்தனே! ஏந்தியவனின் கையை மறுக்காது
    இன்னார் என வரையறை செய்யாது
    இரந்து பெற்றதைத் திருப்பித் தர
    இயலாத வறியவருக்கு ஒன்று
    ஈதலே ஆண்மகனின் கடமையாம்
    திருப்பிக்கொடுக்க முடிந்தவர்க்குத்
    தரும் ஈகை கடன் எனப் பெயர்பெறும்.

    பாடல் 99

    இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
    அறப்பயன் யார்மாட்டும் செய்க – முறைப்புதவின்
    ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
    பைய நிறைத்து விடும்.

    கொடுப்பது அற்பமானது என நினையாது
    கேட்டவர்க்கு இல்லை எனச் சொல்லாது
    எப்போதும் எப்படிப்பட்டவர்க்கும்
    ஏற்ற பயனுடைய தருமத்தைச் செய்க!
    வாயில் தோறும் பிச்சை ஏற்கும்
    வாழ்க்கை துறந்த தவசியின் பிச்சைப்பாத்திரம்
    மெதுவாக நிரம்புவதுபோல் நல்வினைப்பயன்
    மெல்ல மெல்ல முழுமையாக நிரம்பிவிடும்.

    பாடல் 100  

    கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
    இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
    அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
    கொடுத்தார் எனப்படுஞ் சொல்.

    குறுங்கோலால் அடிக்கும் முரசின் ஒலி
    கேட்கும் ஒரு காத தூரம் மட்டும்
    ஒலிக்கும் இடியோசை கேட்பது
    ஒருயோசனை தூரம் இருப்பவருக்கே
    தகுதியுடை சான்றோர் கொடுத்தார் எனும்
    தக்க புகழ்ச் சொல் கேட்பதோ
    அடுக்கப்பட்டிருக்கும் மூவுலகங்களுக்கும்.

    Share
  • கற்பனைத் தேரேறி கவலையை ஓட்டு!

    கற்பனைத் தேரேறி கவலையை ஓட்டு!

    கவியோகி வேதம்

    கற்பனைத் தேரில்நீ பறந்து சென்றால்
    கவலையும் உன்னைவிட் டோடி டாதோ?
    அற்பமாம் வேதனை முட்கள் எல்லாம்
    அந்தஓர் தேர்மூலம் மாய்ந்தி டாதோ?

    விண்ணில்உன் கற்பனை பாய்ந்து சென்றால்
    மேவிடும் காட்சிகள் இன்பமன்றோ?!-மனக்
    கண்ணிலே தென்படும் அமுதக் குடம்உன்
    கவலை- அசுரரை மாய்க்குமன்றோ!

    வளைந்துமே விண்ணிலே ஓடும்அந் நாரையும்
    மாயைய டாஇந்த உலகம் என்னும்!
    உளையும்உன் எண்ணமாம் குப்பை எல்லாம்
    ஒன்றாகிச் சொற்களுள் தேய்ந்து விடும்!!

    கவிதையாம் வானில்நீ பார்க்கலையோ அந்தக்
    கந்தர்வன் ரம்பையைத் தழுவுவதை?-
    புவியைத் தொடப்போம் இருள்முகிலும் உன்னில்
    புதுமையாம் சொற்களை விதைப்பதுவை?

    அம்பிகை உன்னையிங் கழைப்பதுவை உன்றன்
    அமுதக் கவிதையால் கண்டுவிடு! –(இந்த)
    வம்புக்க ரோனாஉனைப் பார்க்கும் முன்-அந்த
    மாயக்கைக் குள்ளே ஒளிந்துவிடு!

    Share
  • வலை ஊடக வாய்ப்புகள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    வலை ஊடக வாய்ப்புகள் – அண்ணாகண்ணன் கருத்துரை

    ‘தமிழிணையக் கருவிகளும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் 25.01.2020 அன்று நடைபெற்ற ஒருநாள் பயிலரங்கில், ‘வலை ஊடக வாய்ப்புகள்’ என்ற தலைப்பில், முனைவர் அண்ணாகண்ணன் வழங்கிய கருத்துரை. 

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அமெரிக்காவும் கோவிட்-19 வைரஸும்

    அமெரிக்காவும் கோவிட்-19 வைரஸும்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    கோவிட்-19 வைரஸ் மனித இனத்தை முற்றுகையிட வந்தாலும் வந்தது உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் மக்களின் தினசரி வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத இந்த ஜீவராசி அணுவிலும் பாதிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்; இருந்தாலும் மனிதனை எத்தனை கஷ்டத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

    சீனாவின் வூஹான் என்னும் இடத்தில் முதலில் தோன்றிய இதை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வூஹான் வைரஸ் என்று அழைக்கிறார்; சீனா வைரஸ் என்றும் கூறுகிறார். சீனாதான் இதை அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் கொடுத்திருக்கிறது என்கிறார்.  சீன அதிபதி ஷியோ இது சீனாவுக்கு வந்த அமெரிக்க விளையாட்டு வீரர்கள் இதைச் சீனாவுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள் என்கிறார்.  இந்தச் சண்டை ஒரு புறம் இருக்க இது உலகம் முழுவதும் கோவிட்-19 என்று அழைக்கப்படுகிறது. தோன்றிய சில மாதங்களிலேயே இது உலகம் முழுவதும் இருபது லட்சம் மக்களைப் பாதித்திருக்கிறது; ஒரு லட்சத்துப் பதினேழாயிரம் பேர்களின் உயிரைப் பலிவாங்கியிருக்கிறது. உலகிலேயே பணக்கார நாடான அமெரிக்காவில்தான் இதனால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் இறப்புகள் அதிகம் என்று தோன்றுகிறது. உலக ஜனத்தொகையில் ஐந்தே சதவிகிதம் மக்கள் வாழும் அமெரிக்காவில் உலக இறப்புக்களில் பத்து சதவிகிதம் நேர்ந்திருக்கிறது. இது ஏன் என்று விளக்காமலும், இந்த நிலையை சீர்திருத்துவதில் கவனம் செலுத்தாமலும் எப்போதும்போல் ட்ரம்ப் யாரையாவது குறை சொல்வதில் குறியாக இருக்கிறார்; எப்போதும்போல் தினம் தினம் பொய்களாகக் கூறிவருகிறார்.

    நோய்த் தடுப்பு மையத்தின் தலைவர் அமெரிக்க மக்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இல்லாமல் இருக்க வேண்டும், அத்தியாவசியமான தேவைகளுக்குத் தவிர வெளியே எங்கும் போகக் கூடாது என்று கூறிய யோசனைகளையெல்லாம் முதலில் காதில் போட்டுக்கொள்ளாமல் இருந்த ட்ரம்ப் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பதற்குள் நிலைமை மிஞ்சிவிட்டது. இறப்புகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. வைரஸ் பற்றித் தான் முதலிலேயே எச்சரித்ததாகப் பொய் சொல்கிறார். பொய்யைத் தவிர வேறு எதுவும் பேசாத ட்ரம்ப்புக்கு உலக மகா புளுகன் என்ற பட்டம் கொடுக்கலாம்.

    அமெரிக்கப் பொருளாதாரம் மிகவும் கீழே போய்விட்டதாம். அதைத் தூக்கி நிறுத்துவதற்கு இப்போது மூடப்பட்டிருக்கும் வணிக நிறுவனங்களைத் திறக்க வேண்டும் என்கிறார். வைரஸின் தாக்கத்தை நிறுத்துவதற்குத் தவறிவிட்ட ட்ரம்ப் இப்போதாவது அதன் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கடைப்பிடிக்கலாம். அதற்குப் பதில் சீக்கிரமே கடைகளையெல்லாம் திறக்க வேண்டும் என்கிறார். அமெரிக்காவில் மாநிலங்களுக்கென்று சில உரிமைகள் உண்டு. அவற்றைப் பயன்படுத்திச் சில மாநிலங்கள் பொது இடங்களை மக்களின் உபயோகத்திற்கு இப்போதைக்கு விடப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கின்றன. அந்த மாநிலங்களிலுள்ள இவருடைய ஆதரவாளர்களை கடைகளைத் திறக்கும்படி கிளர்ச்சி செய்யும்படி தூண்டிவிடுகிறார். மக்களின் வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்பினால் வைரஸின் பாதிப்பு இன்னும் கூடலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்வதையெல்லாம் ட்ரம்ப் கேட்பதில்லை. இவரை சமூகத்துக்கு எதிரான பபூன் (Sociopath and buffoon) என்கிறார் அரசியல் விமர்சகரும் மொழியியல் ஆளுமையுமான சாம்ஸ்கி. எல்லோரும் கோவிட்-19 என்று குறிப்பிடும் இந்த வைரஸை ட்ரம்ப் சீன வைரஸ் என்று குறிப்பிடுவதால் சீனர்களுக்கு எதிரான வன்மம் அமெரிக்காவில் கூடியிருக்கிறது என்கிறார்கள். இப்படிப்பட்ட ட்ரம்ப்பை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னும் என்னென்ன பலன்கள் அனுபவிக்கப் போகிறார்களோ அமெரிக்க மக்கள்.

    நேற்று உணவுப் பொருள்கள் வாங்கக் கடைக்குச் சென்றிருந்தோம். எங்களைப் போன்ற வயதானவர்கள் எங்கும் வெளியில் போகக் கூடாது, உணவுப் பொருள்களைக்கூட கடைக்காரர்களைக் கொண்டுவந்து கொடுக்கச் சொல்லலாம் என்று பலர் கூறுகிறார்கள். இரண்டு தடவை அப்படிச் செய்தபோது பொருள்களுக்கு அதிக விலை வாங்கியதோடு நாங்கள் கேட்காத சாமான்களைக் கேட்ட சாமான்களுக்குப் பதிலாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள். அதனால் நாங்களே நேரில் போவதென்று முடிவுசெய்தோம்.  இது நாங்கள் வழக்கமாகப் போகும் கடைதான். இது மற்ற கடைகளைப்போல் பெரிய சூப்பர் மார்க்கெட் அல்ல.  காய்கறிகள், பழங்கள், பால், சீஸ், ரொட்டி வகைகள்தான் இங்கு அதிகமாகக் கிடைக்கும்.  இந்தக் கடை திறப்பது காலை 8 மணிக்கு. நாங்கள் 8:10-க்குச் சென்றபோது ஏற்கனவே பத்துப் பேர் கடைக்கு வெளியில் 6 அடி இடைவெளி விட்டு வரிசையில் காத்திருந்தார்கள்.  கடைச் சிப்பந்தி ஒருவர் வாயிலின் அருகில் நின்றுகொண்டு உள்ளே செல்வோர்களை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். ஒருவர் சாமான்களை வாங்கி முடித்து வெளியில் வரவும் இன்னொருவரை உள்ளே அனுப்பினார். இப்படிச் செய்ததால் கடைக்குள் நாலைந்து பேர்களே இருந்தனர். பில் போடுபவர்களும் இரண்டு பேர்தான் இருந்தனர். இதனால் ஒருவரிடமிருந்து இன்னொருவர் 6 அடி தூரம் நிற்க முடிந்தது. உணவுப் பொருள்கள் விற்கும் கடைகளில் வரிசை என்பது அமெரிக்கா இதுவரைக் கண்டிராத ஒன்று. வைரஸ் இதைச் சாதித்துவிட்டது.

    வைரஸ் இரண்டாவது முறையாக 2020 அக்டோபர், நவம்பர் மாதங்களில் இன்னும் அதிகத் தீவிரத்தோடு வரலாம் என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.  யாரையும், எந்த நாட்டையும் தண்டிக்கலாம், அடிக்கலாம் என்று நினைக்கும் அமெரிக்காவின் பாச்சா இந்த கோவிட்-19 வைரஸிடம் பலிக்கவில்லை.  இது அமெரிக்காவை ஒரு உலுக்கு உலுக்கிவிடும்போல் தெரிகிறது. உலகையே பஸ்மமாக்கிவிடக் கூடிய அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடம் எக்கச்சக்கமாக இருக்கின்றன.  ஆனால் கண்ணுக்கே தெரியாத இந்த வைரஸை ஒன்றும் செய்ய முடியவில்லையே.

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 5

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 5

    மீ. விசுவநாதன்

    “ஸ்ரீ சாதாவின் கட்டளை”

    சன்யாசி என்னைப் பார்த்து
    சாரதா கட்டளை போட்டாள்!
    “உன்னுடைய  சீட னாக
    ஒளிமிகு மகனையே  தந்தேன்
    நன்றென்றும் நடக்கு மென்று
    நாமகள் ஆசியும் செய்தாள்”
    அன்னவளின் வாக்கு தன்னை
    அருளுடன் உம்மிடம் சொன்னேன்” (41)

    “ஆனந்தம்”

    என்று குருநாதர் சொல்ல
    இன்பத்தில் தந்தை மூழ்கி
    நன்று நன்றென்றே அந்த
    ஞானகுரு முகத்தை நோக்கி,
    “என்றோ செய்துள்ள புண்யம்
    இன்றெங்கள் குலத்தைக் காத்துக்
    குன்றா வேதநெறி வாழும்
    கொடுப்பினையும்  தந்த தென்றார்!” (42)

    “தாயிடம் சொன்னார் தந்தை”

    நரசராவ் பேட்டை சென்று
    நடந்ததை எடுத்துச் சொன்னார்!
    பரமனின் செய்கை என்று
    பக்தியால் “தாயும்” ஏற்றார்!
    அரனவன் அருளின் ஊற்று
    அளித்ததாய் சுற்றம் சொல்ல
    சிரமதில் கைகள் வைத்து
    சிந்தையில் மகிழ்ந்தார் பெற்றோர். (43)

    “1974ஆம் வருடம்
    சீடரைத் தேர்வு செய்த குரு”

    நவராத்ரி முடிந்து தேரில்
    நாமகள் வலமும் வந்தாள்!
    சிவரூப குருவும் தேவி
    சிந்தையில் மூழ்கிப் பின்னே
    அவராக வெளியில் வந்து
    அங்குள பக்தர் பார்த்து
    நவகோளும் நன்மை செய்யும்
    நாளதில் சீடன் தேர்வு     (44)

    சிறப்பாக நடக்கு மென்றார்!
    சீதா ராமாஞ்ச நேயப்
    பிறப்புக்கு மாற்றாய் உள்ள
    பேறு சன்யாசம் தந்து
    முறையான சீட ராக்கி
    முன்னோர் குருவழியில் செல்வேன்
    பிறைகொண்ட பித்தன் உள்ளான்
    பிழையே துமின்றிதினம் காப்பான்!”  (45)

    “சீடரின் கவலையும், பணிவும்”

    சீடனாக இருக்கும் யோகச்
    சேர்க்கை எனக்குண் டாமோ?
    ஓடத்தில் உலகை வைத்தால்
    ஒழுங்காய்ப் பயணம் போமோ?
    பாடத்தை முறையாய்க் கற்றேன்
    பற்று விட்டேன் அல்லேன்!
    பீடத்தில் அமரும் சக்தி
    பிள்ளை எனக்குண் டாமோ?   (46)

    இப்படி எண்ணிய நெஞ்சுள்
    எதிர்க்குரல் கேட்ட தங்கே!
    “எப்படி ஏறினும் அந்த
    ஏணியாம் குருவே காவல்!
    தப்படி வைத்திடா ஞானி
    தருவது கொள்ளல் தர்மம்!
    அப்படி எண்ணியே நீயும்
    அடுத்தடி வைக்க வேண்டும்!”  (47)

    “சிஷ்ய சுவீகாரத்தின் முன்தினம்”
              (10.11.1974)

    முந்தைய நாளில் சீடன்
    முறையாகக்  குருவைப் போற்றி
    சந்திர மௌலீ மற்றும்
    சாரதாவை வணங்கி வந்தார்!
    அந்தியில் பூஜை கண்டு
    அஷ்டசிரார்த் தாமும் செய்தார்!
    புந்தியில் “ராம நாமம்”
    பொலிவுறவே இரவில் சொன்னார்! (48)

    (சிஷ்ய சுவீகார தினம் – 11.11.1974)

    காலையில் நீராடி சந்தியா
    கடமைகள் செய்தார்; ஹோமமும்
    மேலையோர் சொற்படியே செய்துபின்
    மேற்கிருந் துவரும் துங்கையில்
    மந்திர கோஷத்தில் குளித்தவர்
    மண்ணிலே யார்க்கும் அன்புடன்
    சந்திர கிரணம்போல் குளிர்ச்சியாய்த்
    தவத்தின துபலன் ஈயவும்              (49)

    உறுதி செய்தார்; பூணூல்
    உடனறுத்து நீரில் விட்டார்!
    அறுதி யிட்ட துறவை
    அவர்ஏற்ற வகையைப் போற்றி
    குருவும் அழைத்தார்; நூலோர்
    குழுவாக வேதம் ஓத
    அருவும் உருவு மான
    அதிஷ்டானம் வந்த டைந்தார்!    (50)

     (யாத்திரை தொடரும்)

    Share
  • ஈழத்து நாடக கலைஞர்: ஏ.ரகுநாதன்

    ஈழத்து நாடக கலைஞர்: ஏ.ரகுநாதன்

    முல்லைஅமுதன்

    ஈழத்தின் நாடக, திரைப்பட வரலாற்றில் மறந்திவிட முடியாத மாபெரும் கலைஞன் .ரகுநாதன் என்பதில் மாற்றுக்கருத்தேதுமில்லை.

    வாழ்நாளில் சாதனைகளை நிகழ்த்திக்காட்டியவர். 05/05/1935இல் மலேசியாவில் பிறந்தாலும், தன் சிறுபராயம் தொட்டே யாழ்ப்பாணம் நவாலியில் தன் தாயுடன் வாழ்ந்துவந்தார். தனது கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பயின்றார். நாடகக் கலைக்குப் பேர்போன மானிப்பாய், நவாலியில் தன் ஆர்வத்தை வெளிப்படுத்த மானிப்பாய் இந்துக் கல்லுரி பெரிதும் உதவியது.

    நானும் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் க.பொ.த உயர்தரம் பயின்ற காலத்தில் கல்லூரி இல்லங்களிடையே நடைபெறும் நாடகப்போட்டிகளில்  மத்தியஸ்தராக,பார்வையாளராக, சிறப்பு விருந்தினராக வந்து நம்மைப்போன்றவர்களை ஊக்குவித்ததும் இன்றும் மறக்கமுடியாதது.

    சுந்தரர் இல்ல போட்டி நாடகமான ‘மூன்று துளிகள்’  கலைஞர்  (அமரர்) நற்குணசேகரன் (1933 – 2020) இயக்கினார். நாடக ஒத்திகையின் போதும், அதன் பின்னரும் நாடகம் பற்றிய பல அரிய விடயங்களைப் பகிரும் ஒரு நண்பராய் திரு.ஏ.ரகுநாதன் ஆனார். கலை ஆர்வத்தில்  தன்  அரச பதவியே இராஜினாமச் செய்திருந்தார். கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் நாடகங்களை அரங்கேறிய  அனுபவங்களைப் பலதடவைகள் என்னுடன் பகிர்ந்துள்ளார்.

    யாழ்ப்பாணத்தில்  லிபர்ட்டி  பிலிம்ஸாரின்  ‘உறங்காத உள்ளங்கள்’  திரைப்படத்தை  ஆரம்பித்து  அதற்கான  சில காட்சிகளும் படமாக்கப்பட்ட  சூழலில் அது தொடரமுடியாது போனது.

    ஏற்கனவே கடமையின் எல்லை, நிர்மலா, நெஞ்சுக்கு நீதி, தெய்வம் தந்த வீடு, புதிய காற்று போன்ற ஈழத்துத் திரைப்படங்களில் நடித்து பலரது பாராட்டையும் பெற்றிருந்தாலும் நாடகமே தன் மூச்சு என அடிக்கடி சொல்வார்.

    கலையரசு  சொர்ணலிங்கம் அவர்களின் பாராட்டுடனும், பயிற்சியுடனும் ‘தேரோட்டி மகன் உட்பட பல நாடகங்களில் நடித்தார். தேரோட்டி மகன், சாணக்கியன், வேதாளம் சொன்ன கதை, அவனைக் கொன்றவள் நீ, சலோமியின் சபதம், பார்வதி பரமசிவம், ஆராவமுதா அசடா எனப்  பல நாடகங்கள் பலரின்  பாராட்டைப் பெற்றமையும்  இங்கு  குறிப்பிடத்தக்கது.

    1966இல் வெளிவந்த கடமையின் எல்லை திரைப்படத்திற்குப் பிறகு 1968இல் நண்பர்களுடன் இணைந்து ‘நிர்மலா’ எனும் திரைப்படத்தைத் தயாரித்தார். தமிழக திரைப்படங்களின் அனுபவம் மிக்க இவரின் நண்பரின் கைவண்ணமும் இணைய நல்லதொரு படமாக வெளிவந்தது. நல்ல விமர்சனங்களைப் பெற்றுத்தந்தாலும் நம்மவர்களின் தென்னிந்திய சினிமாமோகம் தயாரிப்பாளரின் கையைச் சுட்டுக்கொள்ளும் நிலைமை வந்தது. ஆனாலும் ரகுநாதனின் உற்சாகம் அதிகமாகவே ஏற்பட முனைப்புடன் செயல்பட்டார். அதன் தொடர்ச்சியாகவே வி. கே. டி. பொன்னுச்சாமியின் தயாரிப்பில் இலங்கையில் முதன் முதலில் சினிமாஸ்கோப் வடிவில் வெளிவந்த ‘தெய்வம் தந்த வீடு’ திரைப்படத்தை 1978இல் வெளியிட்டார். ஆர்வமுள்ளவர்களை, அனுபவம் மிக்கவர்களை தேடிச்சென்று ஊக்கம் கொடுப்பதுடன், தன்னுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பையும் ஏற்படுத்தியவர்.

    பலதிரைப்படங்கள் வெளிவரவிருந்த சூழல், பல ஆரம்ப பூஜைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட படங்கள் எனச் சிறப்பான வெளிச்சம் வரவிருந்த சூழலில் தான் 83 ஜூலைக்கலவரம் எல்லாவற்றையும் புரட்டிப்போட்டது. வாழமுடியாத சூழலிலே புலம்பெயர்ந்தார். தமிழகத்தில் இருந்த காலங்களிலும் தன் கலை முயற்சியை விடவில்லை.

    பின், பாரிஸ் வந்துசேரவே, கலைகள், கலைஞர்கள் சங்கமிக்கும் நாடாக பாரீஸ் இவருக்காகியமையினால், நாடகம், குறும்படங்கள், திரைப்படங்கள் எனத் தொடர்ந்தார். அவற்றுள் இன்னுமொரு பெண்முகத்தார் வீடுபேர்த்தி, நினைவு முகம்மௌனம், தயவுடன் வழிவிடுங்கள்தீராநதி, மீளுதல், தொடரும், முள்ளும் மலராகும், மாறுதடம், பூப்பெய்தும் காலம், தொடரும்அழியாத கவிதை, இனியவளே காத்திருப்பேன் (2012), WITNESS IN HEAVEN சாட்சிகள் சுவர்க்கத்தில் (2018) குறிப்பிடத்தக்கன.

    எனது வீட்டுக்கு வந்தபோது நிறையப் பேசிய பொழுதுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நமது கலைஞர்களை ஒன்றிணைத்து நீண்டது திரைத் தொடரை ஆரம்பிக்க இருப்பதாகச் சொன்னார். லண்டன் ஈழவர் திரைக்கலை மன்றம்/ஈழவர் சினி ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ்  அமைப்பினரும்  இணைந்து செயல்பட்டதால் அங்கும் ரகுநாதனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. 2009இற்குப் பின்னர் ஏற்பட்ட அசாதாரண  சூழலினால் ஈழவர் திரைக்கலை மன்ற செயல்பாடுகள் பற்றிச் சரிவரத் தெரியாததினால் ரகுநாதனைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை. ஆனால் இடையே தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு பேசுவதுண்டு எனினும் பிரான்ஸ் செல்லும் காலங்களிலும் சந்திக்கும் சூழலும் ஏற்படவில்லை.

    எழுத்தாளர் விபரத்திரட்டு ஒன்றினை வெளியிடும் ஆர்வத்தில் தொடர்புகொண்டு சில தகவலைப் பெற்றுக்கொண்டேன்.

    ஈழத்து நூல் கண்காட்சியினை ஆரம்பிக்கவென ஆயத்தங்களில் இறங்கியபோது முதலாவது வாழ்த்தைத் தெரிவித்திருந்தார். அதனையொட்டி ஆரம்பிக்கப்பட்ட காற்றுவெளியில் அவரின் நேர்காணலை வெளியிட வேண்டும் என்கிற ஆதங்கத்தைச் சொல்லியிருந்தேன். முடியாது போயிற்று. இலங்கையிலிருந்தபோது எப்படி என்னுடன் பழகினாரோ அதே போலவே பழகினார். காற்றுவெளி பற்றிப் பேசிய போதே இலங்கையில் நிழல் (1968) சஞ்சிகை நடத்தியதாகச் சொன்னார். இதனை அறிந்திருக்கவில்லை. புனிதலிங்கத்தின் ‘திரை’ சஞ்சிகையே ஓரளவு திரையுலக செய்திகளைத் தந்ததாக அறிவேன். இன்னும் வந்திருக்கலாம்.

    பாரீஸ் வந்தபின் ‘பாரிஸ் முரசு‘ பத்திரிகைக்கு ஆசிரியாராக இருந்தததாகச் சொன்னார். சில இதழ்களையும் பார்த்திருக்கிறேன். பல அனுபவங்களைப் பெற்றவரான ரகுநாதனிடம் வழமையாக எல்லோரிடமும் கேட்பது போல அவ்வனுபவங்களைக் கொண்டு நாவலாக எழுதலாமே எனக் கேட்டிருந்தேன். பார்ப்போம் என்றார். எனினும் ’தமிழன் இதழில் கலை அனுபவங்களை ஒரு ஒப்பனை இல்லாத முகம் எனும் பெயரில் எழுதியாகச் சொன்னார். அதே போல ‘எனக்காகப் பூக்கும் (1999)’ நாவலையும் தந்தார். திரைப்படத்திற்காக நினைத்திருந்ததை நாவலாக்கியதாவும் சொன்னார். இன்னும் எழுதக்கூடிய அனுபவங்களைக் கொண்டிருந்தவரால் எழுத முடியவில்லை என்றே நினைக்கிறேன். சிறுகதைகளும், கவிதைகளும் எழுதியிருப்பாதாக அறியும் பட்சத்தில் அவரின் படைப்புக்களைத் தேடும் முயற்சியும் படைப்பாளர்களின் கைகளுக்கு வருகின்றது.

    ஐரோப்பிய  கலைஞர்களின் ஒருங்கிணைப்பில் எந்தையும் தாயும்‘, ‘தூண்டில்காரன்  போன்ற நாடகங்களிலும் நடித்திருந்தார்.

    பறாளையூர் பிறேமகாந்தனின் ரோஜாப்பூ இதழுடனும் தொடர்பில் இருந்தார். தனது பங்களிப்பு இல்லையெனினும் அது நாடகமெனினும், திரைப்படமெனினும் அதன் வெளியீட்டிற்கு உதவியாக இருந்திருக்கிறார் என அறிய முடிகிறது. வாடைக்காற்று திரைப்படத்திற்கும் அவ்வாறே உதவியவர் என அறிய முடிகிறது.

    நல்ல வாசிப்பாளரும் கூட. ஆனாலும் நாவல்களை, சிறுகதைகளைப் படமாக்கும் ஆர்வம் இல்லாதவராக இருப்பினும், திரைக்கேற்ப கதைகள் இருப்பின் படமாகலாம் என்றும் சொல்லியிருந்தார்.

    மானிப்பாய் இந்துக்கல்லூரியில் நிர்மலாவின் புதிய பிரதியை மாணவர்களுக்காக  திரையிட்டார். நாடகத்திற்கான நடிப்பு, காட்சியமைப்பு, அதன் கட்டமைப்பு வேறு. திரைப்படத்திற்கான நடிப்பு, வடிவமைப்பு வேறு. அதனைக் கற்றுணர்ந்தவனே நல்ல நடிகனாக பிரகாசிக்க முடியும் என்பார்.

    எனது நாடக முயற்சிக்கெல்லாம் ஆலோசனை தந்தவர்களில் பா.சத்தியசீலன், வி.ரி.ஏ.விஷ்வா இவர்களுடன் கலைஞர்.ஏ.ரகுநாதனும் ஒருவர். எழுத்தாளர். அப்பச்சி மகாலிங்கம் அவர்களையும் அறிமுகம் செய்து தந்தார்.

    இன்று இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் வெகுதூரம் வந்துவிட்டோம் எனினும் இவர்களிடமிருந்து பெற்ற அனுபவமே கடந்துவந்த பாதைகளின் சுவடுகளாய் அமைந்தன என்பேன்.

    வாழ்நாள் சாதனையாளரான கலைஞர்.ஏ.ரகுநாதன் இன்று நம்மிடையே இல்லை என்பது நெஞ்சம் கனக்கின்ற நாளாய் ஆகின்றது. வயதின் எல்லைகளும், நோய்களும் உடலை அலைக்கழிக்கும் போது கனவுகளுக்கான ஆயுளும் குறைந்தே போகுமோ?

    எவ்வளவுதான் சாதித்திருந்தாலும், எத்தனை உயரத்தின் உச்சிக்குப் போனாலும் ஒவ்வொரு கலைஞனுக்குள்ளும் நிறைவடையாத கனவுகளும் இருந்திருக்கும்.

    எனினும், கலைஞர்.ஏ.ரகுநாதன் நமது ஈழத்துக் கலை உலகின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் என்பதே உண்மை.

    கலையுலகின் வரலாற்றை இவர் பதிவு செய்திருந்தார். இவரின் வரலாற்றைக் காலம் பதிவு செய்யும். ஈழத்தின் நாடக, திரைப்பட கலைஞர்களை மறந்துவிட்டது போல ரகுநாதனின் பணியை கலைஞர்கள் தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(298)

    குறளின் கதிர்களாய்…(298)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(298)

    கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
    முன்னின்று பின்னோக்காச் சொல்.

           – திருக்குறள் -184 (புறங்கூறாமை)

    புதுக் கவிதையில்…

    இரக்கம் ஏதுமின்றி
    எதிரில் நின்று
    ஒருவனைக் கடிந்து
    சொன்னாலும் சொல்லாம்..

    அவன்
    கண்முன் இல்லாதபோது
    பின்விளைவைப் பாராமல்
    அவனைப் பற்றிப்
    புறங்கூறும் சொல்லைப்
    பேசாதே…!

    குறும்பாவில்…

    கண்முன் ஒருவனைக்
    கடிந்து பேசிடினும், பேசாதே புறஞ்சொல்
    அவன் இல்லாதபோது இழிவாய்…!

    மரபுக் கவிதையில்…

    கண்முன் நிற்கும் ஒருவனிடம்
         கருணை நெஞ்சில் ஏதுமின்றி
    புண்படக் கடிந்து பேசிடினும்
         பெரிதாய் ஒன்றும் தவறில்லை,
    கண்முன் னவனே யிலாதபோது
         கருதா ததனின் பின்விளைவை,
    கண்ணிய மின்றிப் புறம்பேசும்
         கதைதான் என்றும் வேண்டாமே…!

    லிமரைக்கூ…

    கண்டித்திடு கண்களின் முன்னே
    கருணையிலாதே ஒருவனை, கருதாது பின்விளைவை
    புறம்பேசாதேயவன் போன பின்னே…!

    கிராமிய பாணியில்…

    பேசாத பேசாத
    பொறஞ்சொல்லு பேசாத..

    எரக்கமே இல்லாம
    எதுருல நிக்கிற ஒருத்தனக்
    கண்டிச்சி எதுவும் பேசலாம்..

    கண்முன்ன அவன் இல்லாதப்போ
    கட்டாயமா அவனப்பத்திப்
    பொறம்பேசாத,
    எதுவும் யோசிக்காம..

    அதால
    பேசாத பேசாத
    பொறஞ்சொல்லு பேசாத…!

    Share
  • திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை

    திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை

    கவித்தலம்  கை. அறிவழகன்

    திருவாரூர் மாவட்டத்தில் பேரளம் என்னும் ஊருக்கு அருகில்  அமைந்துள்ள ஊர்தான்  திருமீயச்சூர்  என்பதாகும். இவ்வூரில் அமைந்துள்ள பழமையான கோவில் மேகநாத சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் உள்ள இறைவி பெயர் லலிதாம்பிகை. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இக்கோவிலைப் பாடியுள்ளார். இந்தக்  கோவிலின் உள்ளேயே இளங்கோயில் ஒன்று உள்ளது. இதனைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது  56 ஆவது சிவத்தலமாகும்.  இந்தத்  தலத்தையும் இறைவனையும் பற்றித் தற்காலத்தில் எழுதப் பெற்ற நூல்தான் திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை என்பதாகும். இதனை இயற்றியவர் கவித்தலம் கை. அறிவழகன்  ஆவார் .

    திருவிரட்டை மணிமாலை என்பது காரைக்கால் அம்மையார் காலத்திலிருந்து புலவர்களால் தொன்றுதொட்டுப் பாடப்பட்டு வருகின்றது. இது  வெண்பாவும்  கட்டளைக் கலித்துறையும் விரவிய நடையில் அந்தாதி அமைப்பில் பாடப்படும். இதிலிருந்து சிறிது மாறுபட்ட நடையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. கட்டளைக்கலித்துறை, அந்தாதி ஆகியவை இதில் பயின்று வரவில்லை. மாறாக வெண்பாவோடு விருத்தம் பயின்று வந்துள்ளது. பத்து நேரிசை வெண்பாக்களும் பத்து அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களும் செய்யுள்களாக அமைந்துள்ளன.

    இக்கோவிலில்  ஒவ்வோர்  ஆண்டும் சித்திரை மாதம் 21 ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரை சூரியனின் கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமான் மீது பட்டு வழிபடுவது சிறப்பாகும். ஆகவே, இந்தச் சித்திரைத் திங்களில் இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது. இதனைப்  படித்து  ஈசனின் திருவருளை எல்லோரும் பெற வேண்டுகிறோம்.

    திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை

                                விருத்தம்                                

    பூசும் நீறும்  பொங்கரவும்  புலியின்  தோலு  முடனாக
    மாசில் பெற்றம்  மிகவூர்ந்தே  மங்கைப் பங்கர்  வீதிவர
    வீசுங்  கவரி வெண்கதிரான்  வெள்ளை  நிலவும்  மகிழ்வுடனே
    ஆசில்  மீயச்  சூரானை  யங்கே  நீரே  காண்மின்காள் .

                                       வெண்பா

    திருமீயச் சூரானைத் ;திக்கெலாம் போற்றும்
    பெருமானைப் பெற்றம  தூரும் – உருவை
    ஒருமித்துக்  காணு  முயர்நிலைப்  பெற்றால்
    வருமிப் பிறவியே வா     (1)

                                       விருத்தம்

    அப்பர் பாட அகமகிழ்ந்தே அன்பாய்ப்  பொழிந்தார்  நல்லருளை
    எப்பேர் சொல்லி யழைத்தாலும் இரங்கும்  குணத்தைக் கொண்டவராம்
    தப்பே செய்தீ ரென்றாலும் தந்தை யவரிட  முறையிடவே
    ஒப்பா ரும்மைக் குழந்தையென  வொறுத்தற்   செய்யா தருள்வாரே

                                       வெண்பா

    நயனங்க  ளாயிரம் நன்மேனி கொண்டான்
    அயனோடு மாலும் அறியார் – வியனாய்த்
    திகழ்ந்தானே  யெங்கும் திருமீயச் சூரில்
    அகழ்ந்தானும் காணா அரண் .   (2)

                                           விருத்தம்

    பாச  மென்னு மிருளிடையே  பலநா லுழலு மாதனையே
    வேசங் கொண்ட  வினையாவும் விட்டுச்  செல்லும் நிலையடைய
    தேச மெங்குந்   திரண்டொளிரும்  தேவ தேவன் திருவடியை
    ஆசைக்  கொண்டே பற்றுவதா  லனைத்தும் நீங்கப் பெற்றிடலாம்.

                                       வெண்பா

    தீங்கரும்பைத்  தென்னை இளநீரைத்  தீர்விலாத்
    தேங்கமழ்ச்  சோலைப் புதுமலரைப்  :– பாங்காகத்
    தென்றல் வருடும் திருமீயச் சூர்காண
    நன்றே நடக்கும் நமக்கு . (3)

                                       விருத்தம்

    பாயச் செல்லும் பகரே ற்றில்  பக்கத்  துமையாள்  சூழ்ந்துவர
    நேயர் போற்றும்  நேயரவர் நெஞ்சக் கோவில் குடிகொண்டார்
    தாயை யொத்த தன்மையினார் தந்தை தானு மவரன்றோ
    மீயச் சூரில் மேவிவரும் மேக நாதர் தாள்பணிவாம்

                                       வெண்பா

    கன்னல்  சுவையமுதைக்   காலத்தே  ரோட்டியே
    நன்னலம்  செய்திடும் நாயகனை – தென்னன்
    திருமீயச்  சூரானை த் தேவனைத்  தேனை
    அருமறையை   அள்ளுவாய்  ஆங்கு .  (4)

                                       விருத்தம்

    திங்க ளரவைத்  தீண்டாமற்  றிகழும் முடிமேற் றெளிவுடனே
    கங்கைப் பாயுஞ் செஞ்சடையார்  கறுத்த வேழந் தோலுரித்தே
    பொங்கு மரவ மாலையொடு போர்த்திக் கொண்டார் புனிதரிவர்
    தெங்கள் பாயும் மலர்ச்சோலை  திருமீ  யச்சூரை  இடங்கொண்டார்

                                       வெண்பா

    தோல்விநிலை  மாறத்   துயரம் கலைந்தோட
    பால்மதியைச்   சூடும்  பரமனை – நால்மறையின்
    வீரனை வெற்றியை விளக்கைத்   திருமீயச்
    சூரனைச்   சுற்றியே வ .   (5)

                                       விருத்தம்

    காழி  மண்ணிற் கதறியழும்  கருணைக் குழவிப் பசியாற்றி
    ஏழின்  னிசையை இயற்றுவித்த எழிலாந் தமிழா மிறைநெறியை
    ஊழிக்    காலத்   துள்ளொளியை   யுவகை கொண்டே மீயச்சூர்
    வாழி வாழி  என்றேனீர்  வணங்கிச் செல்ல தீதிலையே

                                       வெண்பா

    நில்லா  உலகில்  நீடிக்கா   தெப்பொருளும்
    செல்லா வினையுஞ்  சிதையாதே – ஒல்லும்
    அருட்திரு  மீயச்சூர்  ஆளும் அரசைப்
    பொருளெனக்   கொண்டால்   புகழ்.   (6)

                                       விருத்தம்

    ஊரூர் சென்றே பலியேற்று முலக முய்யப்  படியளக்கும்
    தாரூ  ரரவந்   தரித்தபிரான்  தவழும் பிறையைத்  தலைச் சூடி
    ஆரூர் வாழும் அருந்தொண்டன் அன்பர்க் கன்ப  னென்பதனால்
    தேரூர் கொண்டே சேர்த்தளித்தான்  கோளிலி மூட்டைக்   குவைநெல்லை

                                       வெண்பா

    ஒளியாகி  நின்றானை  உள்ளுளே நிற்கும்
    வளியாகி  வந்ததோர் வாக்கை – தெளிவாய்த்
    திகழும்  திருவைத் திருமீயச் சூரை
    புகழும் மொழியே பொலிவு.  (7)

                                       விருத்தம்

    கோவை பாடிய  கோமகனைக்  கொடுமை செய்தான் பாண்டியனே
    ஏவல் செய்யும் ஒருவனென  எட்டி நின்றான் பிட்டுக்குத்
    தாவும் வைகைத் தடியடியால் தரைமேல் உயிர்கள் துடித்தனவே
    ஆவல் கொண்டே வாசகரின்   அடியிணை தொழுதான் மாறனுமே

                                       வெண்பா

    மின்னுமொழி  மேகலையாள்  மேவியதோர் நெஞ்சத்தர்
    மன்னியசீர் மாண்பருளும்  மாதேவர் – நன்னிலைசேர்
    மீயச்சூர்த்   தேவர் மிளிர்கொன்றை நாயகரே
    ஏயவுலகிற்  கெல்லாம் இறை.   (8)

                                       விருத்தம்

    மால்தான் காணா மந்திரத்தை மக்கள் காண எளிதாக
    வேல்வாள் கண்ணாள் அம்பிகையும் விரவி நிற்கும் கோலமதை
    மேல்நாள் செல்லும் நிலைவருமுன்  மேவிச் செல்வீர் மீயச்சூர்
    நால்வர் பெற்ற நலம்யாவும் நாளும் ஆங்கே பெற்றிடலாம்

                                       வெண்பா

    அறிவினுக் கெட்டா அதிசயத் தேனைப்
    பொறிநிலை  நீங்கியே   போமுன்  – நெறிசேர்
    இளங்கோயில்  ஈசர் திருமீயச் சூரை
    வளங்கொள்ளப்  பாடி வணங்கு.  (9)

                                       விருத்தம்

    சதிபல நினைவுடை  சலக்கரையும் சலம்புணர் மனம்படு அரக்கரையும்
    முதிரிள  வளநகை முறுவலுற   மதில்பல எரிஎழ  அழித்தனரே
    துதிநிலைத் தமிழுடன் தொடர்ந்துடனே    துயர்கெட  மதியுடன்  பலபாட
    எதிரிகள் எவருமே விலகிடுவார்  எமபயம்  கொடுநினை  வழிந்திடுமே

                                       வெண்பா

     எல்லை எதுவுமின்றி  எங்கும் நிறைந்தொளிர
    அல்லிலே ஆடும் ஆட்டத்தான் – வல்லான்
    உருக்குன்றா  பத்திமையார் உள்ளத்துள் ஓங்கி
    இருக்கின்றான்   மீயச்சூர் இறை. (10)

                                                    திருச்சிற்றம்பலம்

    Share