வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-21

0

தி. இரா. மீனா

பசவேசர்

பசவண்ணர், பசவேசர், அண்ணா என்றெல்லாம் போற்றப்படும் இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நடந்த சிவசாரணர்களின் சமுதாய ,தார் மீகப் போராட்டத்தின் சூத்ரதாரி. யுகப்புருஷனாகப் போற்றப்படும் இவ ரைக் குறித்து பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. கர்நாடகத்தில் பீஜாப்பூர் மாவட்டத்தின் பாகேவாடி பசவேசரின் பிறந்த ஊர். சைவ பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை மாதராசா, தாய் மாதலாம்பிகே. இவருக்கு கங்காம்பிகே, நீலாம்பிகே என்று இரண்டு மனைவியர். அக்கநாகம்மா இவரது சகோதரி. சென்ன பசவண்ணர் இவர் சகோ தரி மகன். வேலையை மட்டும் முதன்மையாகக் கொண்ட (கர்மநிஷ்ட) சைவப் பார்ப்பனர் பழக்க வழக்கத்தை எதிர்த்து பசவேசர் கூடல சங்கமத்திற்கு வருகிறார். கல்வி கற்கிறார்; தனித்துவத்தை நிலை நிறுத்திக் கொள்கிறார். மண்டல அதிபதி பிஜ்ஜளனின் மங்கள வாடாவுக்குச் சென்று கருவூல அதிகாரியாகப் பணியாற்றுகிறார். பின்னர் பிஜ்ஜளனின் நிதியமைச்சர் பதவியை ஏற்றுக் கொள்கிறார். கல்யாண் நகர் பசவேசர் வாழ்க்கையில் முக்கிய இடம் பெறுகிறது. வர்க்க சாதி, பால் வேறுபாடுகள், மூடப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை மறுத்து சமத்துவம், சுதந்திரம், உடன் பிறப்புக் கொள்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய சமுதாயம் உருவாக்க முயற்சிக்கிறார். அரசாங்கப் பிரதிநிதிகளின் நியாயங்களை எதிர்க்கிறார். ”அரண்மனையில் ராணியாக இருப்பதைவிட பக்தரின் வீட்டில் வேலைக்காரி யாக இருப்பதே மேல்”,  “மன்னனின் பிணமானாலும் ஒரு காசுக்கு வாங்குபவரில்லை “என்பன போன்ற அவர் வழிநடத்துதல்கள் மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்துகிறது. பசவேசரின் முத்திரை ”கூடலசங்கமதேவன்” என்பதாகும். அவர் பலரும் போற்றும் இயல்பு டையவராக விளங்கியிருப்பதை “நான் பசவண்ணராகப் பிறக்க இயலாமல் போய் விட்டதே“ என்று அல்லமாபிரபு கூறியதைக் காட்டலாம்.

1. “குலம் எதுவாக இருந்தாலென்ன?
சிவலிங்கமுடையவன் உயர்குலத்தவன்
சாதிகள் இணைந்த பின்பு
சரணருள் குலம் தேடலாமோ?
சிவதர்மகுலே ஜாதஹ புனர்ஜன்ம விவர்ஜிதஹ
உமா மாதா பிதா ருத்ர யீஸ்வரம் குலமேவ ச்ச்
ஆதலால் கொடுத்ததை உண்பேன்
கொடுப்பேன் பெண்ணை
சரணர்களை நம்புவேன்
கூடலசங்கமதேவனே“

2. “இருவர் மூவர் தேவரென்று ஆணவமாகப் பேசவேண்டாம்
ஒருவனே காணீர், இருவரென்பது பொய்யே
கூடலசங்கமதேவனன்றி மற்றதில்லையென்றது வேதம்“

3. “யாரிவன் யாரிவன் யாரிவனென நினைக்க வேண்டாம்
இவன் நம்மவன் இவன் நம்மவன் இவன் நம்மவனென
நினைக்க வைக்க வேண்டும் கூடலசங்கமதேவனே
உங்கள் வீட்டுப்பிள்ளையென நினைக்க வையும் ஐயனே“

4. “நீருள் மறைந்திருக்கும் அக்னி போலிருந்தது
செடியின்னுள்ளிருக்கும் சாற்றின் சுவை போலிருந்தது
பூவிலடங்கிய நறுமணம் போலிருந்தது
கூடலசங்கமதேவனே“

5. “செல்வர் சிவாலயம் கட்டலாம்
ஏழை நானென்ன செய்வேன் ஐயனே?
காலே தூண், உடலே கோயில்
தலையே பொன்கலசம் கூடலசங்கமதேவனே
தாவரத்திற்கு அழிவுண்டு ஜங்கமத்திற்கு அழிவில்லை.”

6. “கல் எத்தனை காலம் தண்ணீருள் இருந்தென்ன
ஊறி மிருதுவாகுமா?
உன்னை எத்தனை காலம் தொழுதென்ன
மனதில் உறுதியின்றி?
புதையல் காக்கும் பூதம் போலானதே என் நிலை
கூடலசங்கமதேவனே“

7. “வாருங்கள், நலமா என்றால் உங்கள் பணம் அழியுமோ?
உட்காருங்களென்றால் பூமி குழியுமோ?
அவரோடு பேசினால் தலை துண்டாகுமோ?
எதுவும் கொடுக்கவில்லையெனினும் பரவாயில்லை
மனிதருக்கு குணமிருக்க வேண்டும் இல்லையெனில்
சும்மா விடுவானோ கூடலசங்கமதேவன்?”

8. “அக்னி எரிந்தால் எதிரில் நிற்கமுடியும்
உலகம் எரிந்தால் முடியுமோ?
ஏரியே நீரைக் குடித்தால்
வேலியே பயிரை மேய்ந்தால்
தன் வீட்டில் தானே திருடினால்
முலைப்பால் நஞ்சாகிக் கொன்றால்
யாரிடம் முறையிடுவது கூடலசங்கமதேவனே?”

9. “கல்நாகம் கண்டால்  பாலூற்று என்பார்
மெய்நாகம் கண்டால் கொல்லென்பாரய்யா
உண்ணும் மெய்யன்பர் வந்தால் ’போ’ என்பாரையா
உண்ணாத இலிங்கத்திற்கு உணவைப் படை என்பாரய்யா
கூடலசங்கமனின் சரணரைப் புறக்கணித்தால்
கல்பட்ட மண்சட்டியாவார் ஐயனே“

10. “திருடாதே கொலை செய்யாதே பொய்யும் சொல்லாதே
சினவாதே பிறரைக் கண்டு கடுகடுக்காதே
தன்னைப் புகழாதே பிறரைக் கண்டு புழுங்காதே
இதே அந்தரங்க சுத்தி பகிரங்க சுத்தி
இதே எங்களது கூடலசங்கமதேவனைக் கும்பிடும் வழி“

11. “நூல்வலையில் பிணைத்துக் கொள்ளும் சிலந்தி
வலைக்கான நூலை எங்கிருந்து பெற்றது?
இராட்டையில்லை; பஞ்சில்லை நூல் நூற்றது யார்?
தன்னுடல் நூலெடுத்து வலையாக்கிய சிலந்தி
தனக்குள் தன்னைத் தக்க வைத்துக் கொண்டிருப்பது போல
தான் படைத்த உடலைத் தனக்குள் வைத்துக் கொள்வான்
கூடலசங்கமதேவன்“

12. “குதிரையேறி வருபவர்களைக் கண்டால்
முன்னால் விழுந்து கால்களைப் பிடிப்பார்கள்
ஏழ்மையான சரணர் வந்தால்”தள்ளிப் போ “ என்பார்கள்
என்னிறைவன் கூடலசங்கமதேவன்
அவர்களைப் பார்த்தால்
கீழே தள்ளி மூக்கறுக்காமல் விடுவானோ?”

13. “கணவன் மீது நம்பிக்கையில்லாத மனைவி
இலிங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத அடியவன்
இருந்தென்ன ? போயென்ன ?
குடிப்பதற்குக் கொடுக்காத பசுவிடம்
குடிக்காத கன்றை விட்டது போலாம்
கூடலசங்கமதேவய்யனே“

14. “சாதியின் பெயரால் தீட்டைத் தேடுவார்கள்
ஓளியைப் பிடித்துக் கொண்டு இருளைத் தேடுவார்கள்
மூடமனிதனே எதற்கு இது ? சாதியில் உயர்வென்பாய்
கோடி அந்தணர் இருந்து பயனென்ன?
’பக்தனே சிறந்தவன் ”என்கிறது வசனம்
கூடலசங்க அடியாரின் பாதத்தை நம்பிடுவாய்
கெடவேண்டாம் மானிடனே“

15. “உடல் உனதென்றான பிறகு வேற்றுடல் எனக்கில்லை
உள்ளம் உனதென்றான பிறகு வேற்றுமனம் எனக்கில்லை
பொருள் உனதென்றானபிறகு வேற்றுப் பொருள் எனக்கில்லை
மூன்றும் உனதான பிறகு வேற்றெண்ணம்
எனக்குண்டோ கூடலசங்கமதேவனே?”

[தொடரும்]

[ஏப்பிரல் திங்கள் 26ம் நாள் பசவஜெயந்தியாக கர்நாடக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டுவருகிறது. அதை யொட்டி இக்கட்டுரை]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *