அவ்வைமகள்

 சீப்பு எனும் உடல்நலக் கருவி  

பெண்களின் உடல் நலம் என்கிற வகையில், தலைமுடி  பற்றி, நானும்  அந்த இராணுவ அதிகாரியும்  பேசிக்கொண்டு வரும் இத்தருணத்தில், அவர் ஒரு கேள்வியை எழுப்பினார்: பெண்களின் உடல் நலத்தில், தலை வாருவதற்குப் பயன்படுத்தும் சீப்புகளுக்கு  ஏதேனும் முக்கியத்துவம் இருக்கிறதா? ஆண்களும் பெண்களும் பொதுவாக வெவ்வேறு விதமான சீப்புகளைப் பயன்படுத்துகிறார்களே அதனால் தான் கேட்கிறேன் என்றார்.

“ஆம்! சீப்புகளுக்குத் தலைமுடிப் பராமரிப்பிலும் ஆரோக்கியத்திலும், ஏன் ஒட்டுமொத்த, தலை ஆரோக்கியத்திலும் கூட முக்கியப் பங்கு உள்ளது!”

இந்த முக்கியத்துவத்தை முதலில் பார்த்துவிட்டு அதற்குப் பிறகு சீப்பு விஷயத்தில் பெண்-ஆண்  வித்தியாசங்களைப் பார்ப்போமே என்று தொடர்ந்தேன்.

பார்க்கப்போனால், சீப்பு என்பது மனிதகுல வளர்ச்சியில் இன்றியமையாத அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. சுமார் எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பேயே சீப்பு மனிதப் பயன்பாட்டில் இருந்ததை வரலாறு காட்டுகிறது என்றால் சீப்பு என்றைக்கோ எப்போதோ உருவாக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருந்த ஓர்  அன்றாட வாழ்க்கைப் பொருள் என்பது விளங்கும்.

Prehostoric என்று சொல்லப்படுகிற வரலாற்றுக்கு முந்தைய ஆதிகாலத்திலிருந்தே, சீப்பு மனிதனது பிரிவறியாத துணையாக இருந்திருக்கிறது எனலாம். எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்ததாகச் சொல்லப்படும்  சீப்பைப் போலவே இன்றைய சீப்பும் இருக்கிறது என்பதால், சீப்பு என்பது ஆதிகாலத்திலேயே அதனுடைய முத்தாய்ப்பான பணித்தொழில்நுட்ப வடிவத்தை (Working technical design) அடைந்துவிட்டது எனலாம்.

புராதன எகிப்தியச் சீப்பு:

http://phthiraptera.info/sites/phthiraptera.info/files/222%2C%20LouseEggChristmas%20Cave2012.pdf

பத்தொன்பதாம் நூறாண்டு இந்தியச் சீப்பு

https://www.atlasobscura.com/articles/some-of-historys-most-beautiful-combs-were-made-for-lice-removal

தற்காலத்துச்  சீப்பு : inplastico.com/en/1557-double-wooden-comb-for-lice-and-nits.html

எந்த ஒன்று மனித வாழ்க்கைக்கு, அன்றாட இன்றியமையாத தேவையாகிறதோ அதுமட்டுமே உச்சபட்சத் தொழிநுட்பப் பணித்தொழில்நுட்ப வடிவத்தை  ஆதி காலத்திலேயே பெற்றுவிடமுடியும். இது, அறிவியல் உலகில் ஒரு விதி. எனவே, சீப்பு என்பது தொடக்க நாள் முதலே மனித வாழ்க்கைக்கு எத்தனை அவசியமானதாக  இருந்து வந்திருக்கிறது என்பது உங்களுக்கே புரியும் .

சீப்பு பற்றிய இன்னுமொரு அதிசயம் என்னவென்றால், உலகில் சீப்புக்கெனவே மூன்று அருங்காட்சியகங்கள் உள்ளன. அலாஸ்காவில் ஒன்றும், பிரிட்டன் கேம்பிரிட்ஜில் ஒன்றும், ஜெர்மனியில் ஒன்றும் என மூன்று சீப்பு அருங்காட்சியகங்கள் உலகில் உள்ளன என்பது  சீப்புப் பயன்பாட்டின் புராதனத் தன்மையைப்  போதுமான அளவு  விளக்கும் என நினைக்கிறேன். சொல்லப்போனால், இன்று நாம் காணும், உலகின் பழங்குடியினரின் புகைப்படங்கள் யாவுமே, பண்டைக்காலந்தொட்டே, தலைமுடியை வாரி முடிப்பது என்பது மனிதர்களின் பழக்கமாகவே இருந்திருப்பதைப்  பறைசாற்றுகின்றன  – என்றேன்.

https://tribal.nic.in/DivisionsFiles/tribalFaces.pdf

https://www.akpool.co.uk/postcards/26489518-postcard-ceylon-sri-lanka-kandyan-woman-junge-frau-im-gewand-halsschmuck

அப்படி சீப்பு என்னதான் நமக்கு உதவி பண்ணுகிறது? என்றார்.

பறவைகள் தம் அலகால் இறகைக் கோதி மினுமினுக்கச் செய்வது போன்றது, நாம், நம் தலைமுடியைச் சீப்புக்கொண்டு வாருவது. மயிரின் வேர்க்காலில் சுரக்கும் செபத்தை அங்கிருந்து நகர்த்தி, தலைமுடி நெடுகிலும் தீற்றுவதற்ககு, சீப்பால் வாருதல் அவசியம். செபம் நன்கு சுரந்து,  ஆரோக்கியமான தலைமுடி உள்ளவர்கள், பொதுவாகத் தலைமுடியை அழுத்திப் படிய வாரியதும், அவர்களது முடி பளபளப்புடன் ஜொலிப்பதைக் காணலாம். இவ்வாறு சீப்பால் தலையை வாருவதால், செபச்சுரப்பிகள் தூண்டிவிடப்பட்டு, செபம் ஆரோக்கியமாகச் சுரக்கலாகும். நம் மண்டையின் உஷ்ணத்தாலும் சுற்றுச்சூழலின் காற்று மற்றும் உஷ்ணத்தினாலும் செபம் உலர்கிறது என்பதால் சிறுதளவு  எண்ணெய் தடவி  செபத்தை இளக்கி, தலைமுடியை வாருவது அவசியமாகிறது.

எவரொருவரது  மண்டையும் முடியும் செபத்தின் ஈரப்பதத்தோடும் எண்ணெய்ப் பசையோடும்  இருக்கிறதோ அதுவே ஆரோக்கியமான தலை என்று கருதப்படுவது. எனவே தான் சீப்புக்கொண்டு தலைவாருவது என்பது தினசரிப் பழக்கமானது.

சொல்லப்போனால், சீப்பு கொண்டு தினமும் வாரப்படாத தலை, வறட்சி கொள்கிறது.

ஏனென்றால், நாம் ஏற்கனவே பேசியபடி, முடியின் அடியிலிருந்து நீக்கி நீவப்படாத செபம் உறைந்து, புதுச்செபம் சுரப்பதை நிறுத்தி,  மண்டையை வறள வைக்கிறது. மண்டையில் வறட்சி ஏற்படுகிறதென்றால், அங்கே, வெகு பல பிரச்சினைகள் வெகு துரிதமாகத் தோன்றிவிடும்.

சீப்பால் வாருவதால் ஏற்படும் கூடுதல் நன்மை  என்னவென்றால்,  மண்டையில் இரத்த ஓட்டம் நன்கு தூண்டிவிடப்படுகிறது.  மண்டையில் ரத்த ஓட்டம் பரவியது என்றால், உடல் முழுவதும் உள்ள நாடி நரம்புகள்  புத்துணர்ச்சி இருக்கின்றன. எனவேதான், ஒரு நாளைக்கு இருமுறை சீப்பு வைத்துத்  தலையை அடிமுதல் நுனிவரை வாருதல் அவசியம் என்று கூறப்படுகிறது.

சீப்பால்  தலைமுடியை வாருவதால் உடலின் மொத்த ஆரோக்கியமும் பெருகும் என்பது எங்கள் குலத்தின் ஞானம் அல்ல. உலகின் பல்வேறு பண்டைய சமூகங்கள் (எடுத்துக்காட்டாக – எகிப்திய – மெசபொடோமியச் சமூகங்கள்) இந்த ரகசியத் தொடர்பை அறிந்திருந்தன எனவேதான் அவை   சீப்பின் உபயோகத்தில் இருந்தன.

அதிருஷ்டவசமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த ஆரோக்கியப் புரட்சியில்  ஏறக்குறைய உலக மக்கள் அனைவருக்குமே சீப்பின் பயன் பற்றிய  ஞானம் மறுமலர்ச்சி பெற்றது  எனலாம்.

ஆம்! இன்று நாம் கோவிட்  19 ல் அவதிபடுவது போல, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், உலகம்   பல்வேறு உடல்நலப்பிரச்சனைகளைச் சந்திக்க நேரிட்டது. அம்மை, காலரா, காசநோய் ஆகியன தொற்றுநோய்களாக வெகு அளவில் உலக அளவில் பரவி மனித இழப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில், இந்நோய்கள் இன்னபிற சங்கடங்களோடு  தலைமுடியையும்  உதிரவைத்தன. அதைவிடக் கொடுமை என்னவென்றால், இவற்றுக்கான மருந்துகளும் தலைமுடியைத் தாக்கின. பலர் முடியின்றி வழுக்கை மண்டையாக மாறினர்.

இந்நிலையில் தான், அமெரிக்காவில், ஓர் உடல் நலப்புரட்சி நடக்கிறது. ஒட்டுமொத்த உடல் நலப்புரட்சி, Holistic Health Reform of the Ninteenth Century,  என்பதான   இப்புரட்சியில், தலைமுடி நலம் என்பது முக்கியமானதாகக் கருதப்பட்டது.

எடுத்துக்காட்டாக, 1904இல் நியூயார்க்கிலிருந்து வெளிவந்த ஒரு பிரசித்தி பெற்ற புத்தகமான, How to Care for Hair at All  Times [1]  உடல்நலத்தில் சீப்பின் பங்கை எடுத்துரைக்கிறது. இப்புத்தகம் என்ன சொல்கிறது என்றால், சீப்பால் தலையை வாருவது, தலையில் உள்ள தமனிகளைத் தூண்டிவிடுகிறது – இந்தத் தூண்டுதலால், தலைமுடியின் வேர்க்கால்கள் உறுதியடைகின்றன என்பதோடல்லாது உடல் முழுவதும் இரத்த ஓட்டம் தூண்டப்பட்டு உடல் அங்கங்கள் யாவும் புத்துணர்ச்சி பெறுகின்றன.

இந்தப் புத்தகம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக அளவில் ஏற்பட்ட ஒட்டுமொத்த உடல்நலப் புரட்சியில் ஒரு முக்கிய அங்கம் வகித்ததாக அறிகிறோம் என்கிற அளவில், ஒட்டுமொத்த உடல் நலத்தில்,  தலைமுடியைச் சீப்பால் வாருதல் என்பதன் இன்றியமையாதத் தன்மை பற்றி உலகில் அதிக அளவு விழிப்புணர்வு ஏற்பட்டது என்று அறிகிறோம்.   தலைமுடியை வாருவதற்கு மட்டுமல்ல, தலைமுடியை பிரஷ் செய்து தூய்மைப்படுத்தவும் பல்வேறு விதமான சீப்புகள் அமெரிக்காவில் முளைத்த மாபெரும் வணிகக்க காலம் இது.

வாருவதற்கும் பிரஷ் செய்வதற்கும் மட்டும் சீப்புப் பயன்படுவதில்லை. சீப்புக்கு இன்னுமொரு பங்களிப்பும் உண்டு. தலையில் பேன் பீடித்ததென்றால், பேன்களை அகற்றி ஒழிக்கவும் சீப்புத் தேவைப்படுகிறது. நான் மேலே காட்டியுள்ள மூன்று சீப்புகளுமே பேன் நீக்கும் சீப்புகளே.

எனவே சீப்பு என்பது நாம் நினைப்பதை விடவும் கூடுதலான சிறப்புக் குணாதிசயங்களைக் கொண்டது என்பது புரிகிறது அல்லவா?

நாம் பயன்படுத்தும் சீப்பு எந்தப் பொருளினால் செய்யப்பட்டது என்பது சீப்புப் பயன்பாட்டில்  முக்கியமான விஷயம்.

பண்டை நாட்களில் சீப்பு, மரம், எருமை மாட்டுக்கொம்பு, தந்தம், ஆகியவற்றால் மட்டுமே செய்யப்பட்டது. மரம் என்றால் எல்லா மரத்திலும் சீப்புச் செய்யப்படமாட்டாது. வேம்பு, நுணா, ஜாதிக்காய், கருங்காலி, செம்மரம் (மகோகனி) போன்ற மரங்கள் மட்டுமே சீப்புச் செய்யப் பயன்படுத்தப்பட்டன. சிக்கெடுக்க, மூங்கிலால் ஆன சீப்புகள்  தயாரிக்கப்பட்டன.

ஈர்க்கொல்லிகள் என்று நீளப் பிடி கொண்ட சீப்பு வகை உண்டு. பேனின் முட்டைகளுக்கு ஈர் என்று பெயர். அந்த ஈர்களை, இழுத்தெடுத்துக் கொள்பவை ஈர்க்கொல்லிகள். ஈர்க்கொல்லிகளின் பற்களும் நீளமானவை என்பதோடு, அப்பற்கள் உறுதியாகவும் உடையாத நெளிவுத்தன்மை உடையதாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான், இழுத்தெடுத்த ஈரை, அப்படியே பற்களுக்கிடையே நெளித்திடுக்கிக் கொல்ல முடியும். எனவே ஈர்க்கொல்லிகள் பெரும்பாலும் உறுதியான கருங்காலி, செம்மரம் போன்றவற்றில் மட்டுமே செய்யப்பட்டு வந்ததாக அறிகிறோம்.

தந்தச்  சீப்பைப் பொறுத்த மட்டில், எங்கள் நாட்டில்,  யானைத் தந்தத்தால் ஆன சீப்புகள் மட்டுமே பயன்பாட்டில் இருந்திருந்ததாக அறிகிறோம். செல்வந்தர்கள் அரச குடும்பத்தினர் ஆகியோர் வசம்,  தந்தச் சீப்பின் பயன்பாடும் தங்கத்தால் ஆன  சீப்பின் பயன்பாடும்  இருந்திருக்கிறது. ஆனால், பிற நாட்டுப் பண்டைய சமூகங்கள், நீர்யானையின்  தந்தம், காட்டுப் பன்றியின் எலும்பு, ஆமையின் ஓடு என இன்னபிற தந்த வகைகளையும் சீப்புச் செய்யப் பயன்படுத்தியதை அறிகிறோம் .

எங்கள் நாட்டில், ஒரு  சில  இடங்களில் பித்தளையால் ஆன, மிக நெருங்கிய பற்கள் கொண்ட  மிகப் புராதனமான சீப்புகளும் கூடக் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இவை கிடைக்கப் பெற்றிருப்பதால்,  ஏதோ விசேடப் பயன்பாடாக மட்டுமே இந்தப்  பித்தளைச்  சீப்புகள் புழக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. இவ்வாறு எங்கள் நாட்டில் கிடைத்த புராதனப் பித்தளைச் சீப்புகள், மூடியிட்டதான ஒரு திரவக்கலமாக  வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

https://onedrive.live.com/Edit.aspx?resid=2BBA21C9F3B27084!344&wdPid=7b6ccb36

திரவக் கலத்தில் வாசனாதி திரவியங்கள் கலக்கப்பட்ட நீரை ஊற்றி மூடி, அந்த பித்தளைச் சீப்புக்களைத் தலைமுடியில் செருகிக்கொள்வார்களாம். சீப்பின் கால்களின் வழியாக, வாசனாதி திரவியங்கள் மயிர்க்கால்தோறும் இறங்கி முடியின் மயிர்க்கால்களை ஈரப்பதத்துடனும் நல்ல மணத்துடனும் வைத்துக்கொள்ள உதவின என்று விக்கிபீடியா குறிப்பினின்று  அறிகிறோம்.

ஆனால், நன்கு சிந்தித்துப் பார்த்தோமேயானால் இவ்வகையான திரவக் கலன் கொண்ட சீப்புக்கள் மருத்துவச் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டன  என்றே நம்மால்  ஊகித்து உணர முடிகிறது.

இன்றைய ஆயுர்வேத எண்ணெய் வடி ஊற்றல் முறையான ஷீரோதாரா முறைக்கும் முந்தையதான எண்ணெய் மருத்துவமாகச் சீப்பு வழி எண்ணெய்  வடி ஊற்றல் மருத்துவ முறையம் எங்கள்  வாழ்வியலில் இருந்திருக்கின்றது.

பித்தளை ஏன் பயன்படுத்தப்பட்டது என்பதற்குக் காரணம் உண்டு. அறிவியல் ஞானத்தின்படி, தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்கள் நம் தலைமுடியில் செறிவு அடைகின்றன. இந்த இரண்டு உலோகங்களும் போதிய அளவில் முடியின் வேர்க்காலில் செறிவு அடையவில்லையென்றால், முடி கொட்டுதல் உள்ளிட்ட, பல்வேறு  விதமான  தலைமுடி மற்றும் மண்டைப் பிரச்சினைகள் தோன்றும், என்பதோடு, ஞாபகமறதி, புத்திமந்தம் போன்ற பிரச்சனைகள் கூடத்  தோன்றும் என்று சொல்லப்படுகிறது. எனவேதான், எல்லாப் பிரசித்திபெற்ற தலைமுடிப் பராமரிப்புப் பொருட்களிலும், இன்று தாமிரமும் துத்தநாகமும் கண்டிப்பாக இருப்பதைப் பார்க்கிறோம்.

தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்களுமே Trace Metals எனப்படும் நுண் அளவில் மட்டுமே உடலில் இருப்பதான  உலோகங்கள். வளர்சிதை மாற்றத்தில் இவை அதிகப் பங்கு வகிப்பவை.  ஆக, உடலில் வளர்சிதை மாற்றத்தில் நேரடிப் பங்கு வகிப்பதால் முடியில் தாமிரம் மற்றும் துத்தநாகம் ஆகிய இரண்டு உலோகங்களுமே செறிவதில் வியப்பேதும் இல்லை. ஆக, முடியின் வேருக்கு மிகக்குறைத்த அளவில் தாமிரமும் துத்தநாகம் தேவைப்படுகிறது என்பதை உணர்க.

பித்தளை என்பது தாமிரமும் துத்தநாகம் சேர்ந்த உலோகக் கலவையாகும். பித்தளை எண்ணையில் கரையவல்லது. எண்ணெய் பட்டால், பித்தளையில்  களிம்பு ஏறுவதை நாமறிவோம். களிம்பு என்பது எண்ணையுடன் பித்தளை நிகழ்த்தும் ஒரு வேதியியல் வினையாகும். அதிகப்படியாய் எண்ணெயில் கரைந்த பித்தளையே களிம்பு. அது  நஞ்சு.

ஆனால், வெகு  சிறிதளவே பித்தளை எண்ணெய்யில் கரைந்ததென்றால், அந்த எண்ணெய்  முடியின் வேருக்கு ஊட்டச் சத்தாகும். எனவேதான், பித்ததளை சீப்புக்கள் கொண்டு மருத்துவ எண்ணெய்த் தைலங்களை வைத்து, தலைமுடி மற்றும் மண்டைக்கான சிகிச்சைகள் நடத்தப்பட்டன.

எங்கள் நாட்டில், மரகதக்கல்லில் இழைத்துச் செய்யப்பட்ட சீப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.  பித்தளைச் சீப்புக்களைப் போலவே, மருத்துவ எண்ணெய்த் தைலங்களை வைத்து, தலைமுடி மற்றும் மண்டைக்கான சிகிச்சைகளுக்காகவே மரகதக்கல் சீப்புக்களும்   தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்தன. மரகதக் கல்லில், தாமிரம், இரும்பு, துத்தநாகம், மக்னீசியம் ஆகிய உலோகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  சீனாவிலும் பண்டைய நாட்களில் மரதக்கல் சீப்புக்கள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. அங்கும் இவை, சிகை மற்றும் சிரசு மருத்துவச் சிகிச்சைக்காகவே பயன்படுத்தப்பட்டன.

சீனாவின் புராதன மரகதக்கல்  சீப்பு:
https://www.metmuseum.org/art/collection/search/72544

சீப்பின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு உலகமக்களிடையே பெருகியிருந்த காலகட்டத்தில் தான், பிளாஸ்டிக்  பொருட்கள், 1940 வாக்கில் நம் பயன்பாட்டுக்காக, அறிமுகப்படுத்தப் பட்டன. ஆனால், 1970 கள் தொடங்கி, மிக அதிகமான அளவு பிளாஸ்டிக் பொருட்கள் நம் மீது திணிக்கப்பட்டன.

பிளாஸ்டிக் சீப்புக்கள்  இவ்வாறு தான் நம் இல்லங்களில்  நுழைந்து – நம் கைகளுக்கு வந்து – நம் தலைக்கும் போய்ச்  சேர்ந்தன.  இதனால், நாம், மரம் மற்றும் எருமைக் கொம்பினால் ஆன சீப்புகளைத் துறந்தோம் – மறந்தோம். பிளாஸ்டிக் சீப்புகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டோம்.

ஆனால், பிளாஸ்டிக் சீப்புக்கள் நன்மையை விட தீமையையே அளிப்பவை. ஏனென்றால், நம் தலைமுடி நேர்மின்சாரத்தன்மை கொண்டது, பிளாஸ்ட்டிக்கோ, எதிர்மின்சாரத் தன்மை உடையது, இவ்வாறான இரு எதிர் மின்சாரத் தன்மை கொண்ட பொருட்கள் ஒன்றை ஒன்று உரசும்போது அங்கே, நிலைத்த  மின்சாரம் (Static Electricity) உருவாகும். Triboelectric Series எனப்படும் நிலைமின்சாரத் தன்மை கொண்ட பொருட்களின் பட்டியலைப் பார்த்தால், நம் தலைமுடி நேர்மின்சார அளவில் உயர்ந்தும், பிளாஸ்டிக் எதிர்மின்சாரத் தன்மையில் உயர்ந்தும் நிற்கின்றன.

https://alisiteblog.wordpress.com/2015/11/08/static-swiffers/

எனவே, நம் தலைமுடியோடு பிளாஸ்டிக் சீப்பு உரசினது என்றால், தலைமுடியில், வலிமையானதொரு நிலைத்த மின்சாரம் உருவாகி, அது நம் முடியை கிளர்த்தெழச் செய்து, முடியைப் பலவீனப்படுத்துகிறது. முடி சக்தி இழந்து, நுனி வெடிப்பது, வேர் கழன்று விழுவது போன்றவை பிளாஸ்டிக் சீப்பினால் நிகழ்கின்றன.

https://duux.com/en/static-electricity-explained/

அதுவும், உலர்ந்த முடியில் பிளாஸ்டிக் சீப்பால் வாரும்போது மிக அதிக அளவில் நிலைத்த மின்சாரம் உருவாகும்: https://www.youtube.com/watch?v=l1FpIbEAsZk

சலூன்களில், முடி வெட்டும்போதும் இன்னபிற அலங்காரங்களைச் செய்துகொள்ளும்போதும் கூட, நிலைத்த மின்சாரம் உருவாகி, அழகு செய்யும்போதே, முடியும் பலவீனப்படுத்தப்படுகிறது: https://www.youtube.com/watch?v=l1FpIbEAsZk

மரச் சீப்புக்கள், தந்தச் சீப்புக்கள், கொம்புச் சீப்புக்கள் ஆகியன மிகக் குறைந்த அளவிலான நிலைத்த நேர் மின்சாரம் கொண்டவையாக இருக்கின்றன. எனவே இவற்றால் ஆன சீப்புக்கள் கொண்டு தலைமுடியை வாரும்போது, சீப்பும் தலைமுடியும் எவ்வித மின்சார வினையிலும்  ஈடுபடுவதில்லை. அதனால்,  நம் தலைமுடியில் மின்சக்தி உருவாகுவதில்லை. எனவே, தலைமுடியும் மண்டையும் பலவீனப்படுவதில்லை.

தந்தச் சீப்புகள் இனிமேல் கிடைக்காது – கொம்பு சீப்புகளைத்  தயாரிக்கும் கலை  மறைந்து விட்டது ஆனால், மரச்  சீப்புகளைச் செய்வோர் இன்னமும் கொஞ்சம் பேர் இருக்கிறார்கள்  – என்றேன். மரச் சீப்புகளுக்கு நாம் மாறிக்கொள்ள இன்னமும் யோசனை செய்யத் தேவையில்லை, ஏனெனில் இது உடல்நலம் சார்ந்த விஷயமில்லையா?  என்றார்.

[மேலும் பேசுவோம்]  

 

பயன்பட்ட நூல்கள்

[1] Juliot Marion Lee (1904). How to Care for the Hair at All Times; Juliot Hair Culture Company, New York.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *