நாங்குநேரி வாசஸ்ரீ

 10. ஈகை

 பாடல் 91

இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
உள்ளஇடம் போல் பெரிதுவந்து – மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடைய மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு.

பொருள் இல்லாத காலத்தும்
பொருள் உள்ளதுபோல் மகிழ்ந்து
தம்மால் இயன்றதை இயல்பாகத்
தரும் குணமுள்ள மாந்தருக்கு
அவ்வுலகத்துக் கதவுகள் என்றும்
அடைக்கப்படாமல் திறந்திருக்கும்.

பாடல் 92

முன்னரே சாம்நாள் முனிதக்க மூப்புள
பின்னரும் பீடழிக்கும் நோயுள; – கொன்னே
பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.

முன்னே இறக்கும் நாள் காத்திருக்க
முதுமையெனும் வெறுக்கத்தக்க
காலம் வந்ததோடு உடல்வலிமை
குறைக்கும் நோய்களும் வருதலால்
பொருள் உள்ள காலத்தே மேலும்
சேர்க்க நாற்புறமும் ஓடி அலையாதீர்!
சேர்த்த பொருளை இறுகப் பற்றியிராதீர்!
பலருக்கும் கொடுத்து ஒளிக்காது
பகுத்து உண்ணுங்கள்.

பாடல் 93

நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்;
கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;
இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால்

அடுத்தவருக்குக் கொடுத்து
அனுபவித்தாலும் செல்வம்
அதுவாகச் சேரும் காலத்தில்
அண்டிவந்து சேரும்
நம்மிடத்தே பொருள் சேர்த்த
நல்வினை தொலையும் நேரம்
இறுக்கிப் பிடித்தாலும் நில்லாது
இல்லாமல் நீங்கிவிடும்
இதை உணராதார் வறுமையால்
இன்னலுற்று உதவி நாடிவருபவர்
துயரைப் போக்க மாட்டார்.

பாடல் 94

இம்மி யரிசித் துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்துண்மின் – உம்மைக்
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து
அடாஅ அடுப்பி னவர்.

இம்மியளவு அரிசியின் அளவாவது
இயன்றவரை பிறருக்குத் தினமும்
அளித்துப் பின் உண்ணுவீர்!
ஆழிசூழ் இவ்வுலகில் சமைக்காத
அடுப்புடைய பிச்சையெடுப்போர்
அடுத்தவருக்கு உதவாதவர்
அவர்தம் முற்பிறப்பிலென
அறிந்து செயல்படுவீர் நாளூம்.

பாடல் 95

மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமா றியைவ கொடுத்தல் – வறுமையால்
ஈதல் இசையா தெனினும் இரவாமை
ஈதல் இரட்டி யுறும்.

மேலுலகப் பயனையும்
மேவும்இவ்வுலகப் பயனையும்
தம் மனதில் நினைத்து
தம்மால் இயன்ற அளவு
தானம் செய்வீர்!
கொடும் வறுமை காரணமாய்
கொடுக்க இயலாவிடினும்
பிச்சைகொள்ளாமல் இருத்தல்
பிறருக்கு ஈவதைக் காட்டிலும்
இருமடங்கு நல்லது.

பாடல் 96

நடுவூருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார்;
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்கள்
இடுகாட்டுள் ஏற்றைப் பனை.

வள்ளன்மையுடன் பலரும் விரும்புமாறு
வாழ்பவர் ஊர்நடுவே மேடைசூழ நிற்கும்
பயன்தரும் பெண்பனை போன்றோர்
பல்வளம் பெற்றிருந்தும் பிறருக்கு ஈந்து
தான் உண்ணாத மக்கட்பண்பு இல்லாதோர்
தனித்து சுடுகாட்டில் நிற்கும் ஆண்பனைக்கு
ஒப்பானவரே.

பாடல் 97

பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும் – கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப!
என்னை உலகுய்யுமாறு.

கயல்மீனின் புலால் நாற்றத்தைக்
கடற்கரை புன்னைமலர் போக்கும்
அலை மோதும் குளிர் கடற்கரையுடை
அரசனே! பருவ மழை தவறினாலோ
அகிலத்து உயர்ந்தோர் செய்யத்தக்க
உதவிகளைச் செய்யாது விடுத்தாலோ
உலகத்து உயிர்கள் எவ்வாறு பிழைக்கும்?

பாடல் 98

ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்
ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் – ஆற்றின்
மலிகடல் தண்சேர்ப்ப மாறீவார்க் கீதல்
பொலிகடன் என்னும் பெயர்த்து.

வளம்மிகு குளிர்ச்சிநிறை கடற்கரையுடை
வேந்தனே! ஏந்தியவனின் கையை மறுக்காது
இன்னார் என வரையறை செய்யாது
இரந்து பெற்றதைத் திருப்பித் தர
இயலாத வறியவருக்கு ஒன்று
ஈதலே ஆண்மகனின் கடமையாம்
திருப்பிக்கொடுக்க முடிந்தவர்க்குத்
தரும் ஈகை கடன் எனப் பெயர்பெறும்.

பாடல் 99

இறப்பச் சிறிதென்னாது இல்லென்னாது என்றும்
அறப்பயன் யார்மாட்டும் செய்க – முறைப்புதவின்
ஐயம் புகூஉம் தவசி கடிஞைபோல்
பைய நிறைத்து விடும்.

கொடுப்பது அற்பமானது என நினையாது
கேட்டவர்க்கு இல்லை எனச் சொல்லாது
எப்போதும் எப்படிப்பட்டவர்க்கும்
ஏற்ற பயனுடைய தருமத்தைச் செய்க!
வாயில் தோறும் பிச்சை ஏற்கும்
வாழ்க்கை துறந்த தவசியின் பிச்சைப்பாத்திரம்
மெதுவாக நிரம்புவதுபோல் நல்வினைப்பயன்
மெல்ல மெல்ல முழுமையாக நிரம்பிவிடும்.

பாடல் 100  

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்;
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்.

குறுங்கோலால் அடிக்கும் முரசின் ஒலி
கேட்கும் ஒரு காத தூரம் மட்டும்
ஒலிக்கும் இடியோசை கேட்பது
ஒருயோசனை தூரம் இருப்பவருக்கே
தகுதியுடை சான்றோர் கொடுத்தார் எனும்
தக்க புகழ்ச் சொல் கேட்பதோ
அடுக்கப்பட்டிருக்கும் மூவுலகங்களுக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *