திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை
கவித்தலம் கை. அறிவழகன்
திருவாரூர் மாவட்டத்தில் பேரளம் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ள ஊர்தான் திருமீயச்சூர் என்பதாகும். இவ்வூரில் அமைந்துள்ள பழமையான கோவில் மேகநாத சுவாமி திருக்கோவில். இக்கோவிலில் உள்ள இறைவி பெயர் லலிதாம்பிகை. திருஞானசம்பந்தர் தேவாரத்தில் இக்கோவிலைப் பாடியுள்ளார். இந்தக் கோவிலின் உள்ளேயே இளங்கோயில் ஒன்று உள்ளது. இதனைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் பாடியுள்ளார். தேவாரப் பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 56 ஆவது சிவத்தலமாகும். இந்தத் தலத்தையும் இறைவனையும் பற்றித் தற்காலத்தில் எழுதப் பெற்ற நூல்தான் திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை என்பதாகும். இதனை இயற்றியவர் கவித்தலம் கை. அறிவழகன் ஆவார் .
திருவிரட்டை மணிமாலை என்பது காரைக்கால் அம்மையார் காலத்திலிருந்து புலவர்களால் தொன்றுதொட்டுப் பாடப்பட்டு வருகின்றது. இது வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் விரவிய நடையில் அந்தாதி அமைப்பில் பாடப்படும். இதிலிருந்து சிறிது மாறுபட்ட நடையில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. கட்டளைக்கலித்துறை, அந்தாதி ஆகியவை இதில் பயின்று வரவில்லை. மாறாக வெண்பாவோடு விருத்தம் பயின்று வந்துள்ளது. பத்து நேரிசை வெண்பாக்களும் பத்து அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களும் செய்யுள்களாக அமைந்துள்ளன.
இக்கோவிலில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் 21 ஆம் தேதியிலிருந்து 27 ஆம் தேதி வரை சூரியனின் கதிர்கள் கருவறையில் உள்ள சிவபெருமான் மீது பட்டு வழிபடுவது சிறப்பாகும். ஆகவே, இந்தச் சித்திரைத் திங்களில் இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது. இதனைப் படித்து ஈசனின் திருவருளை எல்லோரும் பெற வேண்டுகிறோம்.
திருமீயச்சூர் திருவிரட்டை மணிமாலை
விருத்தம்
பூசும் நீறும் பொங்கரவும் புலியின் தோலு முடனாக
மாசில் பெற்றம் மிகவூர்ந்தே மங்கைப் பங்கர் வீதிவர
வீசுங் கவரி வெண்கதிரான் வெள்ளை நிலவும் மகிழ்வுடனே
ஆசில் மீயச் சூரானை யங்கே நீரே காண்மின்காள் .
வெண்பா
திருமீயச் சூரானைத் ;திக்கெலாம் போற்றும்
பெருமானைப் பெற்றம தூரும் – உருவை
ஒருமித்துக் காணு முயர்நிலைப் பெற்றால்
வருமிப் பிறவியே வா (1)
விருத்தம்
அப்பர் பாட அகமகிழ்ந்தே அன்பாய்ப் பொழிந்தார் நல்லருளை
எப்பேர் சொல்லி யழைத்தாலும் இரங்கும் குணத்தைக் கொண்டவராம்
தப்பே செய்தீ ரென்றாலும் தந்தை யவரிட முறையிடவே
ஒப்பா ரும்மைக் குழந்தையென வொறுத்தற் செய்யா தருள்வாரே
வெண்பா
நயனங்க ளாயிரம் நன்மேனி கொண்டான்
அயனோடு மாலும் அறியார் – வியனாய்த்
திகழ்ந்தானே யெங்கும் திருமீயச் சூரில்
அகழ்ந்தானும் காணா அரண் . (2)
விருத்தம்
பாச மென்னு மிருளிடையே பலநா லுழலு மாதனையே
வேசங் கொண்ட வினையாவும் விட்டுச் செல்லும் நிலையடைய
தேச மெங்குந் திரண்டொளிரும் தேவ தேவன் திருவடியை
ஆசைக் கொண்டே பற்றுவதா லனைத்தும் நீங்கப் பெற்றிடலாம்.
வெண்பா
தீங்கரும்பைத் தென்னை இளநீரைத் தீர்விலாத்
தேங்கமழ்ச் சோலைப் புதுமலரைப் :– பாங்காகத்
தென்றல் வருடும் திருமீயச் சூர்காண
நன்றே நடக்கும் நமக்கு . (3)
விருத்தம்
பாயச் செல்லும் பகரே ற்றில் பக்கத் துமையாள் சூழ்ந்துவர
நேயர் போற்றும் நேயரவர் நெஞ்சக் கோவில் குடிகொண்டார்
தாயை யொத்த தன்மையினார் தந்தை தானு மவரன்றோ
மீயச் சூரில் மேவிவரும் மேக நாதர் தாள்பணிவாம்
வெண்பா
கன்னல் சுவையமுதைக் காலத்தே ரோட்டியே
நன்னலம் செய்திடும் நாயகனை – தென்னன்
திருமீயச் சூரானை த் தேவனைத் தேனை
அருமறையை அள்ளுவாய் ஆங்கு . (4)
விருத்தம்
திங்க ளரவைத் தீண்டாமற் றிகழும் முடிமேற் றெளிவுடனே
கங்கைப் பாயுஞ் செஞ்சடையார் கறுத்த வேழந் தோலுரித்தே
பொங்கு மரவ மாலையொடு போர்த்திக் கொண்டார் புனிதரிவர்
தெங்கள் பாயும் மலர்ச்சோலை திருமீ யச்சூரை இடங்கொண்டார்
வெண்பா
தோல்விநிலை மாறத் துயரம் கலைந்தோட
பால்மதியைச் சூடும் பரமனை – நால்மறையின்
வீரனை வெற்றியை விளக்கைத் திருமீயச்
சூரனைச் சுற்றியே வ . (5)
விருத்தம்
காழி மண்ணிற் கதறியழும் கருணைக் குழவிப் பசியாற்றி
ஏழின் னிசையை இயற்றுவித்த எழிலாந் தமிழா மிறைநெறியை
ஊழிக் காலத் துள்ளொளியை யுவகை கொண்டே மீயச்சூர்
வாழி வாழி என்றேனீர் வணங்கிச் செல்ல தீதிலையே
வெண்பா
நில்லா உலகில் நீடிக்கா தெப்பொருளும்
செல்லா வினையுஞ் சிதையாதே – ஒல்லும்
அருட்திரு மீயச்சூர் ஆளும் அரசைப்
பொருளெனக் கொண்டால் புகழ். (6)
விருத்தம்
ஊரூர் சென்றே பலியேற்று முலக முய்யப் படியளக்கும்
தாரூ ரரவந் தரித்தபிரான் தவழும் பிறையைத் தலைச் சூடி
ஆரூர் வாழும் அருந்தொண்டன் அன்பர்க் கன்ப னென்பதனால்
தேரூர் கொண்டே சேர்த்தளித்தான் கோளிலி மூட்டைக் குவைநெல்லை
வெண்பா
ஒளியாகி நின்றானை உள்ளுளே நிற்கும்
வளியாகி வந்ததோர் வாக்கை – தெளிவாய்த்
திகழும் திருவைத் திருமீயச் சூரை
புகழும் மொழியே பொலிவு. (7)
விருத்தம்
கோவை பாடிய கோமகனைக் கொடுமை செய்தான் பாண்டியனே
ஏவல் செய்யும் ஒருவனென எட்டி நின்றான் பிட்டுக்குத்
தாவும் வைகைத் தடியடியால் தரைமேல் உயிர்கள் துடித்தனவே
ஆவல் கொண்டே வாசகரின் அடியிணை தொழுதான் மாறனுமே
வெண்பா
மின்னுமொழி மேகலையாள் மேவியதோர் நெஞ்சத்தர்
மன்னியசீர் மாண்பருளும் மாதேவர் – நன்னிலைசேர்
மீயச்சூர்த் தேவர் மிளிர்கொன்றை நாயகரே
ஏயவுலகிற் கெல்லாம் இறை. (8)
விருத்தம்
மால்தான் காணா மந்திரத்தை மக்கள் காண எளிதாக
வேல்வாள் கண்ணாள் அம்பிகையும் விரவி நிற்கும் கோலமதை
மேல்நாள் செல்லும் நிலைவருமுன் மேவிச் செல்வீர் மீயச்சூர்
நால்வர் பெற்ற நலம்யாவும் நாளும் ஆங்கே பெற்றிடலாம்
வெண்பா
அறிவினுக் கெட்டா அதிசயத் தேனைப்
பொறிநிலை நீங்கியே போமுன் – நெறிசேர்
இளங்கோயில் ஈசர் திருமீயச் சூரை
வளங்கொள்ளப் பாடி வணங்கு. (9)
விருத்தம்
சதிபல நினைவுடை சலக்கரையும் சலம்புணர் மனம்படு அரக்கரையும்
முதிரிள வளநகை முறுவலுற மதில்பல எரிஎழ அழித்தனரே
துதிநிலைத் தமிழுடன் தொடர்ந்துடனே துயர்கெட மதியுடன் பலபாட
எதிரிகள் எவருமே விலகிடுவார் எமபயம் கொடுநினை வழிந்திடுமே
வெண்பா
எல்லை எதுவுமின்றி எங்கும் நிறைந்தொளிர
அல்லிலே ஆடும் ஆட்டத்தான் – வல்லான்
உருக்குன்றா பத்திமையார் உள்ளத்துள் ஓங்கி
இருக்கின்றான் மீயச்சூர் இறை. (10)
திருச்சிற்றம்பலம்