குறளின் கதிர்களாய்…(298)
செண்பக ஜெகதீசன்
குறளின் கதிர்களாய்…(298)
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.
– திருக்குறள் -184 (புறங்கூறாமை)
புதுக் கவிதையில்…
இரக்கம் ஏதுமின்றி
எதிரில் நின்று
ஒருவனைக் கடிந்து
சொன்னாலும் சொல்லாம்..
அவன்
கண்முன் இல்லாதபோது
பின்விளைவைப் பாராமல்
அவனைப் பற்றிப்
புறங்கூறும் சொல்லைப்
பேசாதே…!
குறும்பாவில்…
கண்முன் ஒருவனைக்
கடிந்து பேசிடினும், பேசாதே புறஞ்சொல்
அவன் இல்லாதபோது இழிவாய்…!
மரபுக் கவிதையில்…
கண்முன் நிற்கும் ஒருவனிடம்
கருணை நெஞ்சில் ஏதுமின்றி
புண்படக் கடிந்து பேசிடினும்
பெரிதாய் ஒன்றும் தவறில்லை,
கண்முன் னவனே யிலாதபோது
கருதா ததனின் பின்விளைவை,
கண்ணிய மின்றிப் புறம்பேசும்
கதைதான் என்றும் வேண்டாமே…!
லிமரைக்கூ…
கண்டித்திடு கண்களின் முன்னே
கருணையிலாதே ஒருவனை, கருதாது பின்விளைவை
புறம்பேசாதேயவன் போன பின்னே…!
கிராமிய பாணியில்…
பேசாத பேசாத
பொறஞ்சொல்லு பேசாத..
எரக்கமே இல்லாம
எதுருல நிக்கிற ஒருத்தனக்
கண்டிச்சி எதுவும் பேசலாம்..
கண்முன்ன அவன் இல்லாதப்போ
கட்டாயமா அவனப்பத்திப்
பொறம்பேசாத,
எதுவும் யோசிக்காம..
அதால
பேசாத பேசாத
பொறஞ்சொல்லு பேசாத…!