படக்கவிதைப் போட்டி 255-இன் முடிவுகள்

-மேகலா இராமமூர்த்தி
கருமுகில்களுக்குப் பின்னே காய்கதிர்ச் செல்வன் தன் ஒளிமுகத்தை ஒருசிறிதே காட்டுவதைத் தம் புகைப்படக் கருவிக்குள் பத்திரப்படுத்தி வந்திருப்பவர் திரு. பார்கவ் கேசவன். இந்தப் படத்தை படக்கவிதைப் போட்டி 255க்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!
இந்தப் படத்தைக் காணும்போது எனக்குக் கபிலர் பெருமான் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனைக் கதிரவனோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதனினும் விஞ்சுபுகழ் கொண்டவன் வாழியாதன் என்று அவனை விதந்தோதுவது நினைவுக்கு வருகின்றது.
”……ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்தடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்
பொழுதுஎன வரைதி புறக்கொடுத்து இறத்தி
மாறி வருதி மலைமறைந்து ஒளித்தி
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.” (புறம் – 8)
இனி இப்படம் குறித்து நம் இனிய கவிஞர்களின் கற்பனைத் திறத்தினைக் கண்டு வருவோம்!
*****
மூன்று முத்தான கவிதைகளை வடித்திருக்கும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய முதற் கவிதையில் அக்னி குண்டமாய்த் தழல்வீசும் வானில் எட்டிப்பார்க்கும் நிலவைத் தம்மோடு கைகோத்து இல்லம்வர அழைக்கின்றார்.
இரண்டாவது கவிதையில் வானில் தெரிவது சந்திரனா சூரியனா என்று ஐயவினாவெழுப்பி இவையிரண்டும் மந்திரமும் தந்திரமுமாக வாழ்வை இயக்குபவை என்று முடிக்கின்றார்.
மூன்றாவது கவிதையில் ”நிலவே நீ முழுதாய் முகம் காட்டு! அந்தி இருள் ஓட்டு!” என்று நிலவை வாஞ்சையாய் அழைக்கின்றார்.
செந்தழல்
புடத்திலிட்ட தங்கம்
அக்னிக் குண்டம்
செங்கதிர்
இவைகளின் வர்ணம்
இவ்வழகிய புகைப்படத்தில்
இதனூடே எட்டிப் பார்க்கிற சந்திரன்
உலகின் இரவு நேர ஒளிக்குத் தயாராகி
அதிகாலை வரை வானில் தவழ்ந்து
இளம் மாலை வரை ஓய்வெடுத்து
இரவுக்கு தயாராவான் தினமும்
அழகிய நிலவே
என் கைகளைக் கோத்துக் கொள்
என்னுடனே வா என் இல்லம் செல்ல
ஏகபோக உரிமை எனதாக்கிக் கொள்ள!
*****
காலைநேரக் கதிரவனா?
மாலைநேரச் சந்திரனா?
தகதகக்கும் நிறம் இரண்டும்
மினுமினுக்கும் ஒளி இரண்டும்
கதகதக்கும் குளிர் இரண்டும்
கொதிகொதிக்கும் தணல் இரண்டும்
இடைவிடாது உலகை இயக்கும் இவர்களே
மனித வாழ்வில் மாற்றங்களைத் தரும் கோள்களே
ஆம் கதிரவன் சந்திரன்
வாழ்வின் மந்திரம் தந்திரம்!
*****
தங்க நிலா வெள்ளி நிலா
வட்ட நிலா வடிவழகு நிலா
மாய நிலா மவுசு நிலா
ஒளிரும் நிலா எண்ணத் துளிரும் நிலா
நிலா நிலா நீ இலா இலா
நாள் இலா இலா வா அருகில் நிலா நிலா
செவ்வான மேகங்களோடே
கடலலையினூடே
முகத்தை மட்டும் காட்டிடாமல்
முழுவதுமாய் வா
மாலை நேரம் மறைந்து
இரவு வரக் காத்திருக்கு
இருளை அகற்று ஒளியை ஏற்று!
*****
படத்திலிருப்பது கதிரா மதியா என்ற ஐயத்தோடு புகைப்படத்தை அணுகும் திரு. கருணானந்தராஜா, ”நீ கதிராயின் சீறியெழுந்து கொரோனா கிருமியைக் கொன்று உன் திறமையைக் காட்டிடுவாய்!” என்று ஆதவனுக்கு அறைகூவல் விடுக்கின்றார்.
கதிரே உதவு!
எல்லையிலாத இவ்வான விளிம்பில்
இருந்தொளிர் வெண்சுடரே – நீ
அல்லை (இரவு) முடிக்கப் பிறந்த கதிரோ
அல்லது வெண்மதியோ
மெல்ல மறைந்திடப் போகுதியோ இல்லை
மீண்டெழப்போகுதியோ – என்ன
சொல்வது என்று புரிகிலன் நானுமுன்
தோற்றம் புரிந்திலனே.
ஆதவனாயின் விழித்தெழு -இந்த
அகிலம் தனை அழிக்க
பூதமென வந்த பூஞ்சையிலும் சிறு
பொல்லாக் கொரோனாவெனும்
பாதி உயிரின் பரவல் தடுத்து இப்
பாரைச் சுகப்படுத்தும்
வேதியற் சூழலை ஆக்கிடு நீ இந்தத்
தீதினைப் போக்கிடற்கே.
தீச்சுடர் வீசி இவ் வானப்பரப்பினுள்
சீறி எழுந்திடுவாய் – அலை
பாய்ச்சி உலகை இயக்கிச் சுகம்பெறப்
பாதையமைத் திடுவாய்
மூச்சினில் காற்றில் முகவழியெங்கிலும்
மூர்க்கமுடன் பரவி – பெரும்
தீச்செயல் செய்யும் கிருமியைக் கொன்றுன்
திறமையைக் காட்டிடுவாய்.
*****
”அந்திக் கருக்கும் வானத்திலே சந்திரனை வரவேற்க இயற்கை விரித்த செந்நிறக் கம்பளம் அல்லவோ இது!” என்கிறார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
மந்திரக் கோலம்
அந்திக் கருக்கும் வானத்திலே
சிந்தை மயங்கும் வேளையிலே
சந்திரன் தன்னை வரவேற்க –
இயற்கை செந்நிறக் கம்பளம் இட்டிருக்கும்
விந்தைகள் ஆயிரம் செய்து தினம்
இரவின் வாசலில் செந்நீர் தெளிக்கும்
முந்தைய தினத்தைப் போல அன்றி – புதுச்
சிந்தைகள் தோன்றிட வழிவகுக்கும்
எந்திர வாழ்க்கை மறந்திடுவே
மந்திர ஜாலங்கள் செய்து தினம்
சுந்தர நிகழ்வைச் செய்திருக்கும்
தந்திரன் யார் நீ சொல்லிடுவாய்!
*****
”அந்திவானில் ஆதவனுக்கு மேகங்கள் முகக்கவசம் ஆகி அவனைக் காத்திட, நந்தவனத் தேராய் நிலா வானில் உலாவரும்! பாரினில் நாளும் அரங்கேறும் நாடகமிது!” என்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்க
உன் கடமை ஆற்றிட
ஓயாமல் உதித்தெழுந்து
கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி
தினந்தோறும் ஓடிட
மெல்ல நகரும் மேகம்
முகக்கவசமாய் மாறி
கதிரவன் உன்னைக் காத்திட
கதிர்வீசும் கரங்களை மடக்கி
அந்தி சாய்ந்திடும் நேரம்
நீல வானும் இங்கே
நிறம் மாறும்
நந்தவனத் தேராய் வரும்
நிலவே உன்னழகு மட்டும் மிளிரவே
இருள் சூழ்ந்து இரவாகும்
நாளும் இதே நாடகம்
பாரெல்லாம் அரங்கேறும்
பகல் இரவாய்
காலை முதல் மாலை வரை
வேலை ஏதும் இன்றியே
இரவு நேரப் பணியாய்
நிலவு வந்து போகும்
இயற்கை எனும் நிறுவனத்தில்!
*****
செக்கர்வானில் தெரியும் ஒளிப்பிழம்பைக் கதிராகவும் மதியாகவும் வைத்து அழகிய கற்பனைகளைக் குழைத்துக் கவிபுனைந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…
இன்ப நாடகம்
அந்தி வானை
அழகாக்குகிறது
அடையும் சூரியன்!
வந்தவேலை முடித்த
பகலவனுக்கு
வாழ்த்துச் சொல்லும்
பணி நிறைவுப்
பாராட்டு விழாவுக்கு
வானமெங்கும்
வண்ணத் தோரணங்கள்!
வந்துவிட்டான் தலைவனென
வானமகளின் வதனத்தில்
வெட்கச் சிவப்பு!
இது
இன்றல்ல நேற்றல்ல,
காலம் காலமாய்த் தொடரும்
இயற்கையின்
இன்ப நாடகம்-
கண்டு களிப்போமே!
”வந்தவேலை முடிந்ததெனப் புறப்படும் கதிரவனுக்கு வானில் தோரணங்களோடு பணிநிறைவுப் பாராட்டுவிழா நடக்கின்றது; தலைவனின் வருகை கண்டு வானமகள் நாணிச் சிவக்கின்றாள்” எனும் அழகிய கற்பனையைக் கவிதையில் செருகியிருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.