அண்ணாகண்ணன்

30 ஆண்டுகளுக்கும் மேலாக நவீன ஓவியம், சிற்பம், இசை, புகைப்படம், கட்டடவியல், சித்திரக் கவிகள் எனக் கலைத் துறையின் பல்வேறு முனைகளில் உலகளாவிய பார்வையுடன் இயங்கியவர், தேனுகா. இத்துறைக் கலைஞர்கள், அவர்களின் பாணிகள், அவற்றின் நிறை – குறைகள் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பவர். கலை உலகில் விமர்சகராக நன்கு அறியப்பெற்றவர்.

வண்ணங்கள் வடிவங்கள் (1987), வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழி (1987), மைக்கேலேஞ்சலோ (1991), லியனார்டோ டாவின்சி (1991), புது சிற்பவியல் : பியாத் மாந்திரியானின் நியோபிளாஸ்டிசிஸம், ஓவியர் வான்கோ (1996), பழகத் தெரியவேணும் (1997), பியாத் மோந்த்ரியான்(2007) உள்ளிட்ட நூல்களைப் படைத்தவர்.

மாநில லலித கலா அகாதெமியின் கலைச்செம்மல் விருது, இந்திய அரசின் பெல்லோஷிப் விருது, சிறந்த தமிழறிஞருக்கான தமிழக அரசு விருது, ஸ்டேட் வங்கி இலக்கிய விருது… உள்பட பல விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவை அனைத்திற்கும் மேலாகப் பெரும் மரியாதைக்கு உரியவர். காரணம், அவருடைய நேர்மையும் செல்வாக்குக்கு மயங்காத நடுநிலைமையுமே ஆகும்.

“கலைகளைப் பற்றிய கருத்துகளைக் குறைவின்றி வெளியிடும் வகையில் இது வரையில் வளர்ந்துள்ள தமிழ்ச் சொற்களின் எல்லையை விரிவுபடுத்துகிறார் தேனுகா. கலை விமர்சனத்திற்கான புதிய சொற்களைக் கையாள்வதன் வாயிலாகத் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும் அவர் வளம் சேர்க்கிறார். இவருடைய அறிவும் மனோதர்மமும் நுண்உணர்வும் கருத்து வெளியீடும் மிகவும் அபூர்வமானவை. தன் சம காலத்தைப் பற்றிய உணர்வுடன் அமரத்தன்மை பற்றிய பார்வையும் பெற்றுள்ளார் தேனுகா. இது போன்ற எழுத்துகள் அரிதானவை என்பது மட்டுமல்ல; ஆஷாட பூதித்தனமும் ஜம்பங்களும் பாசாங்கும் கூத்தடிக்கும் இந்த வேளையில் தன் ஆளுமை காட்டும் வழியில் தேனுகா தன் பணியினைத் தொடரவேண்டும்” என்று இலக்கிய விமர்சகர் க.நா.சுப்ரமணியம் பாராட்டியிருக்கிறார்.

மேலும் எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான்குஞ்சு, தஞ்சை ப்ரகாஷ்…. எனப் பலரின் உயரிய பாராட்டுகளைப் பெற்றவர் தேனுகா.

கும்பகோணத்தில் வசித்த கலை விமர்சகர் தேனுகா, இங்கே தன் புதிய நூலான பியாத் மோந்த்ரியான் பற்றியும் அதன் உள்ளடக்கம் குறித்தும் நம்மிடம் உரையாடுகிறார். உரையினூடாகக் கலை, கட்டடவியல், ஓவியம், வாழ்வியல்… எனப் பலவற்றையும் விவரித்துச் செல்கிறார்.

என் வேண்டுகோளுக்கு இணங்கி, இந்த ஒலிப்பதிவைத் தேனுகா அனுப்பியிருந்தார். 2007 தமிழ் சிஃபி சுதந்திர தினச் சிறப்பிதழில் முதலில் இந்தப் பதிவு வெளியானது. இயல்பான, ஆழமான அந்த உரையை இப்போது கேளுங்கள்.

(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.