ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 5

மீ. விசுவநாதன்

“ஸ்ரீ சாதாவின் கட்டளை”

சன்யாசி என்னைப் பார்த்து
சாரதா கட்டளை போட்டாள்!
“உன்னுடைய  சீட னாக
ஒளிமிகு மகனையே  தந்தேன்
நன்றென்றும் நடக்கு மென்று
நாமகள் ஆசியும் செய்தாள்”
அன்னவளின் வாக்கு தன்னை
அருளுடன் உம்மிடம் சொன்னேன்” (41)

“ஆனந்தம்”

என்று குருநாதர் சொல்ல
இன்பத்தில் தந்தை மூழ்கி
நன்று நன்றென்றே அந்த
ஞானகுரு முகத்தை நோக்கி,
“என்றோ செய்துள்ள புண்யம்
இன்றெங்கள் குலத்தைக் காத்துக்
குன்றா வேதநெறி வாழும்
கொடுப்பினையும்  தந்த தென்றார்!” (42)

“தாயிடம் சொன்னார் தந்தை”

நரசராவ் பேட்டை சென்று
நடந்ததை எடுத்துச் சொன்னார்!
பரமனின் செய்கை என்று
பக்தியால் “தாயும்” ஏற்றார்!
அரனவன் அருளின் ஊற்று
அளித்ததாய் சுற்றம் சொல்ல
சிரமதில் கைகள் வைத்து
சிந்தையில் மகிழ்ந்தார் பெற்றோர். (43)

“1974ஆம் வருடம்
சீடரைத் தேர்வு செய்த குரு”

நவராத்ரி முடிந்து தேரில்
நாமகள் வலமும் வந்தாள்!
சிவரூப குருவும் தேவி
சிந்தையில் மூழ்கிப் பின்னே
அவராக வெளியில் வந்து
அங்குள பக்தர் பார்த்து
நவகோளும் நன்மை செய்யும்
நாளதில் சீடன் தேர்வு     (44)

சிறப்பாக நடக்கு மென்றார்!
சீதா ராமாஞ்ச நேயப்
பிறப்புக்கு மாற்றாய் உள்ள
பேறு சன்யாசம் தந்து
முறையான சீட ராக்கி
முன்னோர் குருவழியில் செல்வேன்
பிறைகொண்ட பித்தன் உள்ளான்
பிழையே துமின்றிதினம் காப்பான்!”  (45)

“சீடரின் கவலையும், பணிவும்”

சீடனாக இருக்கும் யோகச்
சேர்க்கை எனக்குண் டாமோ?
ஓடத்தில் உலகை வைத்தால்
ஒழுங்காய்ப் பயணம் போமோ?
பாடத்தை முறையாய்க் கற்றேன்
பற்று விட்டேன் அல்லேன்!
பீடத்தில் அமரும் சக்தி
பிள்ளை எனக்குண் டாமோ?   (46)

இப்படி எண்ணிய நெஞ்சுள்
எதிர்க்குரல் கேட்ட தங்கே!
“எப்படி ஏறினும் அந்த
ஏணியாம் குருவே காவல்!
தப்படி வைத்திடா ஞானி
தருவது கொள்ளல் தர்மம்!
அப்படி எண்ணியே நீயும்
அடுத்தடி வைக்க வேண்டும்!”  (47)

“சிஷ்ய சுவீகாரத்தின் முன்தினம்”
          (10.11.1974)

முந்தைய நாளில் சீடன்
முறையாகக்  குருவைப் போற்றி
சந்திர மௌலீ மற்றும்
சாரதாவை வணங்கி வந்தார்!
அந்தியில் பூஜை கண்டு
அஷ்டசிரார்த் தாமும் செய்தார்!
புந்தியில் “ராம நாமம்”
பொலிவுறவே இரவில் சொன்னார்! (48)

(சிஷ்ய சுவீகார தினம் – 11.11.1974)

காலையில் நீராடி சந்தியா
கடமைகள் செய்தார்; ஹோமமும்
மேலையோர் சொற்படியே செய்துபின்
மேற்கிருந் துவரும் துங்கையில்
மந்திர கோஷத்தில் குளித்தவர்
மண்ணிலே யார்க்கும் அன்புடன்
சந்திர கிரணம்போல் குளிர்ச்சியாய்த்
தவத்தின துபலன் ஈயவும்              (49)

உறுதி செய்தார்; பூணூல்
உடனறுத்து நீரில் விட்டார்!
அறுதி யிட்ட துறவை
அவர்ஏற்ற வகையைப் போற்றி
குருவும் அழைத்தார்; நூலோர்
குழுவாக வேதம் ஓத
அருவும் உருவு மான
அதிஷ்டானம் வந்த டைந்தார்!    (50)

 (யாத்திரை தொடரும்)

Leave a Reply

Your email address will not be published.