முனைவர் நா. தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, கோவை.

முதல் மாடியில் ஜன்னலுக்கருகில் வெளியில் கண்ணுக்கெட்டும் தூரம் வரைப் பார்த்துக்கொண்டு சுரேஷ்மேனோன் உட்கார்ந்திருக்கும் போது ஆகாயத்தின் மேகங்கள் நிறம் மாறிக் கொண்டிருந்தது. அவன் இரயிலிலிருந்து இறங்கும்போது இருந்த வெள்ளை மேகங்கள் எங்கோ மறைந்தது. வானம் இருண்டது போலிருந்தது.

“தீப்தியெ இனியும் காணோமே” வேறொரு ஜன்னல்வழியாக வெளியில் பார்த்துக்கொண்டு கீதா கூறினாள்.

தீப்தி சுரேஷ்மேனோனுக்குக் கடைசியாக அனுப்பியக் கடிதத்தில் சில ஆணைகள் இருந்தது. ஏது வண்டியில் நகரத்தில் வரவேண்டுமென்றும், அக்காவின் வீட்டை எப்படிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அதில் விளக்கப்பட்டிருந்தது. சுரேஷ்மேனோன் தீப்தியின் ஆணையை அப்படியேச் செய்தான். அவள் கூறின அதே இரயிலில் பயணித்தான். ப்ளாட்ஃபோமிலிருந்து வெளியில் வந்து கொஞ்சம் கூடயோசித்து நிற்காமல் ஒரு ஆட்டோவில் ஏறி அமர்ந்தான். தீப்தியோடக் கடிதம் சட்டை ஜோப்பிலிருந்தாலும் அதை எடுத்துப்பார்க்க வேண்டிய அவசியம் வரவில்லை. இடத்தினுடையவும், தெருவினுடையவும் பெயர்கள், வீட்டு எண், சுற்றுப்புற அடையாளங்கள் என எல்லாம் மனதில் பதிந்திருந்தது. அதனால்தான் பயணம் சுலபமானது. தீப்தி, அக்காவுக்கும் கடிதம் போட்டிருக்கிறேன் என்று கூறியிருந்தாள். ஆட்டோ கேட்டில் வந்து நின்றதும் முதல்மாடியில் வராந்தாவில் ஒரு நிழல் அசைந்தது. வீட்டில் கீழ்த்தளத்தில் வேறொரு குடும்பம் இருந்தனர். அக்குடும்பத்தில் உள்ள ரிட்டயர்டு நபர் ஒருவர் யார பாக்கணும்னு கேட்பதற்குள் தீப்தியின் அக்கா படியிறங்கி வந்துவிட்டாள்.

“என்னோட ஒரு சொந்தக்கார பையன்” கீதா கூறினாள்.

அவள் முதல்முறையாகப் பார்க்கிறாள்.

“தீப்தி…?”       அவன் கேட்டான்.

“வரல”

கீதா படிக்கெட்டிற்கு நேராக நடந்தாள். அதற்கு முன்பே ரிட்டயர்டு தாத்தா, தான் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் மீண்டும் மூழ்கினார்.

“பத்து மணிக்கு முன்னாடியே இங்க வந்திருவேன்னுதானே எனக்கு எழுதியிருந்தா” படிக்கட்டுகள் ஏறும்போது சுரேஷ்மேனோன் சொன்னான்.

“அப்படிதா எனக்கும் எழுதியிருந்தா இப்போ வந்திருவாளா இருக்கும்” கீதா திரும்பிப்பார்த்து சிரித்துக்கொண்டே கேட்டாள் “பாக்கறதுக்கு அவ்வளவு அவசரமா?”

நல்லமனசுள்ள அக்காவுடன் ஒரு பகல்பொழுதைக் கழிக்கலாம் என்றுதான் தீப்தி சுரேஷ்மேனோனுக்கு எழுதியிருந்தாள். அக்காவின் தயவாக இருந்தாலும் தீப்தியுடன் ஒரு பகல்பொழுதைக் கழிக்கிறோம் என்ற அவனது ஆர்வத்தை மறுக்கமுடியவில்லை. ஒரு எளிமையான வாய்ப்பு தனக்குக் கிடைத்திருக்கிறது என்று அவன் மகிழ்ந்தான். இரயிலில் வரும்போது அவனுடைய மனம் முழுவதும் எதிர்பார்ப்புப் பெட்டகமாயிருந்தது. ஒரு ஸ்பரிசம்? ஒரு முத்தம்? ஒரு கட்டிப்பிடித்தல்? அப்படி சில சந்தர்ப்பங்களை எண்ணி அவன் தெரியாமல் சிரித்துவிட்டான்.

“என்ன சிரிப்பு?” வரவேற்பறைக்கு டீயுடன் வந்த கீதா கேட்டாள்.

“தீப்தியெ நெனச்சுத்தா” கொஞ்சம் தயக்கத்துடன் கூறினான்.

“நல்ல பொண்ணு அவ. அம்மாவுக்கோ இல்ல வேற யாருக்கோ இது தெரிஞ்சா என்ன இனிமேல் உள்ள விடமாட்டாங்க”. கீதா டீயும் பலகாரங்களும் மேசைமேல் வைப்பதற்கிடையில் கூறினாள்.

சுரேஷ்மேனோனுக்கு ஒரு விருந்து உபச்சாரத்தை எதிர்கொள்வதற்கான மனநிலமை இருக்கவில்லை. ஆனால் கீதா அவனைக் கட்டாயப்படுத்தி மேசைக்கருகில் வரவழைத்தாள். தட்டில் கிராம்பின் சுவை கலந்த அப்பம் இருந்தது. சுரேஷ்மேனோனுக்கு உபசரிப்பை மறுக்கமுடியவில்லை.

“தீப்தி வர்றாளேண்ணு செஞ்சதுதா. அவளுக்குச் சின்ன வயசிலிருந்து இது ரொம்பப் புடிக்கும்”. கீதா சொன்னாள்.

“அவ இனியும் வரலையே” சுரேஷ்மேனோன் பொறுமையற்றுக் கூறினான்.

“பஸ்ஸில வர்றா இல்லயா? நெனச்ச மாதிரி பஸ் கெடச்சிருக்காது அவளுக்கு. அதுதா நேரமாகுதுனு நெனக்கறே”.

“அதுதா தெரியும்” சுரேஷ்மேனோன் மேலும் ஒரு அப்பத்தை கையில் எடுத்தான். அவனுடைய கைவிரல்கள் கிராம்பின் மணமுள்ளவையானது.

“நா சமயல்கட்டுக்குப் போகட்டுமா? அவ வர்றதுக்குள்ள ஏதாவது செய்ய வேண்டாமா? அதுவும் ஸ்பெஷலா? இரால் மீன் பிடிக்குந்தானே இல்லயா?” கீதா கேட்டாள்.

“ஆமா!” சுரேஷ்மேனோன் கூறினான்.

“புள்ளகளுக்கும் இரால்னா ரொம்பப்புடிக்கும். வாங்கறதப் பாத்திட்டுதா ரெண்டுபேரும் ஸ்கூலுக்குப்போனங்க. சாயங்காலம் வரை அங்க உட்காரவே பொறுமை இருக்காது”. கீதா மனதார சிரிப்புடன் சமையல்கட்டைப் பார்த்து நடந்தாள்.

சமையல் அறையை மறைத்துக்கொண்டு பச்சைநிற திரைச்சீலை இருந்தது. கீதா திரைசீலைக்கு அப்புறம் மறைந்தாள்.

சுரேஷ்மேனோன் டீ குடித்துவிட்டு கையை கழுவி சிட்டௌட்டில் போய் உட்கார்ந்தான். முன்னால் செய்தித்தாளும்  சில வெளியீடுகளும் கிடந்தன. சுரேஷ்மேனோன் ஒரு வாரஇதழை எடுத்துப் பக்கத்தைத் திருப்பினான்.

பின்னால் காலடி சத்தம் கேட்டது.

“சிகரெட் புடிக்கறப் பழக்கம் இருக்கா?”

அவன் முகமுயர்த்தினான்.“ஹேபிட்டில்ல. எப்போதாவது புடிப்பேன்”.

“சும்மா இருக்கறல்லையா? புள்ளகளோட அப்பா மறந்து வெச்சிட்டுப்போன ஒரு பாக்கெட் பீரோல இருக்கு. நான் எடுத்திட்டு வர்றே. கீதா படுக்கையறைக்குள் சென்றாள். திரும்பி வரும்போது கையில் ஒரு பாக்கெட் சிகரெட்டும், ஒரு தீப்பெட்டியும் இருந்தது.

“அக்காங்கற முறைக்கு நானே ஊக்கப்படுத்தக்கூடாது” அவள் சற்று கர்வம் பாவித்துக் கூறினாள்.

“வேண்டா அக்கா” சுரேஷ்மேனோன் பணிவுடன் கூறினான்.

“பரவால்ல” கீதா நொடியிடையில் கர்வத்தை விட்டு விருந்து உபசாரப்பூர்வத்துடன் தீப்பெட்டியும் சிகரெட்டும் நீட்டினாள்.

வரவேற்பறையில் புகைச்சுருள்கள் உயர்ந்தது. சுரேஷ்மேனோன் லாவகமாக சாய்ந்து உட்கார்ந்தான். தாய்லாண்டின் சுற்றுலாப் பகுதிகள் குறித்த ஒரு செய்திக்கட்டுரையை ஒருவார்த்தை கூடத் தவறாமல் வாசித்து முடித்தான். அதற்குப்பிறகு நியூயோர்க்கிலிருந்து ஒரு சிறப்பு செய்தியாளனின் சிறப்பான பெரிய கட்டுரைக்கு நகர்ந்தான்.

“கரண்டிருந்தா ஒரு கேசட் போட்டுப்பாக்காலம். எங்கயோ மெயின் லைன்ல ரிப்பேர் இருக்கறதனால இன்னிக்கிப் பகல் முழுக்கக் கரண்ட் இருக்காதுன்னு பேப்பர்லப் போட்டிருந்தாங்க. கீதா அழுக்குத்துணிகளையும் சோப்புப்பொடியையும் எடுத்துக்கொண்டு குளியலைறைக்குப் போகும்போது கூறினாள்.

தொவைத்து முடிந்து துணிகளை மாடியில் காயப்போடப் போகும்போதுதான் அவள் வானத்தை கவனித்தாள். வெளிச்சம் மங்கியிருந்தது. மொட்டைமாடி மீது மழை மேகங்கள் கனமாகத் தெரிந்தது. “மழ கண்டிப்பாப் பெய்யும்” என்று தனக்குக்தானேக் கூறிக்கொண்டு கீதா ஈரஆடைகளுடன் திரும்பிவந்தாள். அவள் வரவேற்பறைக்கு வரும்போது சுரேஷ்மேனோன் ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டிருந்தான்.

“இப்போ மழ பெய்யும்” அவள் சமையல்கட்டோடு சேர்ந்த சின்ன வராந்தாவை லட்சியமிட்டு நடந்தாள். சரிதான் சுரேஷ்மேனோன் மனதில் நினைத்தான். தீப்தி இனியும் வரல. பார்வைக்கு எட்டின தூரம்வரை அவள் இல்லை. அவ கையில குடை இருக்குமா? அவ மழய எதிர்பார்த்திருப்பாளா? “ஓஹ் மழ பெய்யத் தொடங்கியாச்சு!”

வெளியில இருபக்கங்களிலுமுள்ள கட்டிடங்களில் மொட்டைமாடிகளில் பெண்களின் அவசரமான ஓட்டம். மாடிகளில் துணிகாய்வதற்காகக் கட்டப்பட்டக் கயிறுகள் பார்க்கப்பார்க்கவே சூன்யமானது. வெளியிலும் மொட்டைமாடியும் மழைபெய்து ஈரமாயிற்று.

“மழயெ பாக்கறதுக்கு என்ன ஒரு அழகு. எனக்கு  பைத்தியம் பிடிச்ச போலத்தா” ஜன்னலுக்கு அருகில் நின்று மழையைப் பார்த்துக்கொண்டு கீதா கூறினாள். மழைக்காற்று அவளுக்கு நேராக வீசியது. காற்றில் மழைத்துளிகள் முகத்தில் சிதறி விழுந்தது. சுரேஷ்மேனோன் ஆச்சர்யத்துடன் அவளுடைய முகத்தைப் பார்த்தான். நான் தீப்தியைத்தான் பார்க்கிறேன் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் தனது கைகள் இரண்டையும் உயர்த்தினான். அவளுடைய நினைந்த கன்னங்களை அவன் ஸ்பர்சித்தான். அவள் அவனுடைய கண்களில் மாறிமாறிப்பார்த்தாள். அவற்றில் அசாதாரணமான ஒரு பொலிவை அவள் உணர்ந்தாள். அதுத் தனக்கு மிகவும் நெருக்கமாக வருகிறதென்பதை அவள் அறிந்தாள். ஆனால் அவள் பின்னோக்கி நகரவில்லை. அந்தப் பொலிவிற்கு நேராக அவளுடைய முகமும் நகர்ந்தது. அத்துடன் ஒரு நீண்ட முத்தத்திற்குத் தொடக்கமானது.

ஜன்னலின் கண்ணாடிகளை வேகமாக அடைத்துவிட்டு மழைக்காற்று நகர்ந்து சென்றது.


மூல நூலாசிரியர்: சி.வி.பாலகிருஷ்ணன்
மொழி : மலையாளம்
தமிழில்: முனைவர்.நா.தீபா சரவணன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *