***கொரோனாவுடன் எங்கள் அன்றாட இல்வாழ்க்கை

அவ்வைமகள்

இன்று கொரோனா பற்றிப் பலப்பல தகவல்கள் ஒவ்வொரு நானோநொடிக்கும் வெளிவந்து கொண்டிருக்கும்போது இன்னொரு ரோதனையைத் தருவது நம் நோக்கமில்லை.

இப்போது சுகாதாரத் தூய்மைப் பொருட்களும் பிற அத்தியாவசியப் பொருட்களும் எங்கும் கிடைக்காத ஒரு சூழலில் நாம் இருக்கிறோம். இந்நிலையில், தொற்று நம்மைத் தீண்டாத வகையில் தனிமனிதர்கள் தமது சுகாதாரத்தை –எப்படிப்  பாதுகாத்துக்கொள்வது அதுவும் வீட்டில் இருந்தபடியே, ஒவ்வொரு குடும்பமாக, சுகாதார நிலைப்பாட்டோடு – பாதுகாப்பாக இந்தக் காலக்கட்டத்தை எப்படிக் கடத்துவது என்பதே நம் நோக்கு.

இங்குப் பேசப்படுவது தற்போது எங்கள் இருப்பிடத்தில் நாங்கள் பயன்பாட்டில் பின்பற்றி வருகிற ஓர் எளிமையான தினசரி வாழ்வியல் பயிற்சி. கொரோனாவினால் எங்களுக்கு எந்த இல்லலும் இதுவரை ஏற்படவில்லை. அதனால், எங்களுக்குக் கொரோனா தொற்று ஏற்படவே செய்யாது என்று கட்டியங்கூற வரவில்லை. இடர்ப்பாடுள்ள சூழலில், ஒவ்வொருவரும் தொற்றுக்குத் தோதாக, தூதாக மாறாது தம்மை பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற விருப்பமே எமது உளச்சிந்தை.

இங்குக் கூறப்படுவது மருத்துவ முறையன்று. நான் மருத்துவரும் அல்லள். இது ஒரு அனுபவப் பகிர்வு. நம் இந்தியர்களைப் போலவே, பாரம்பரிய பழக்கவழக்கங்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்ட ஜமைக்கா, மெக்சிகோ, கரீபியன், ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தவர்கள் சேர்ந்து வாழும் ஒரு சமூகத்தில், இன்றைய  சூழலுக்கு இது பொருத்தமாய் இருக்கும் என அறிவார்ந்து எண்ணி, அந்த மனிதர்கள் என்ன செய்கிறார்கள் எனபதை அறியும் ஆவல் இருப்போருக்காக இது பகிரப்படுகிறது. விருப்பமிருப்பின்,  உங்கள் சூழ்நிலைக்கு ஏற்பத் தகவமைப்பு செய்துகொண்டு இவ்வாறான வாழ்வியல் வழிமுறையை நீங்களும் பின்பற்றலாம். இதனால் பாதகம் ஏதும் இல்லை.

மேலும், இங்கு பேசப்படும் வழிமுறை ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் உள்ள நோயாளிகளுக்கானது இல்லை. தற்போது தொற்றில்லாமல் இருந்தபடி, தனக்குத் தொற்று ஏற்படாதவாறு தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என விழைவோருக்கு மட்டுமே. (அடிக் குறிப்பு 1 ஐப் படிக்கவும்). தொற்று வந்துவிட்டதென்றால் அரசுக்கு அறிவித்து, மருத்துவ உதவி நாடுவது வேண்டும்.

காலை மற்றும் இரவுப் பல் துலக்கல்: இருக்கிற பல் பொடி அல்லது பல் பசை – அன்றேல் – உப்பு மற்றும் ஆப்ப சோடா கலந்த கலவை கொண்டு பல்துலக்கி – உப்புநீரால் தொண்டை வரை இறக்கிக் கொப்புளித்து வாய் – மற்றும் உள்நாக்கு – தொண்டைப் பகுதிகளை நன்கு சுத்திகரித்துக் கொண்டுவிட்டு – ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை  வாயிலிட்டு நன்கு கொப்புளித்து – அந்த எண்ணெயை உமிழ்ந்துவிடுதல்.

காலை மற்றும் இரவு பானம் (இயலுமெனில் காலை மற்றும் மாலை இடைவெளி நேரம் கூட): பாலில் சம அளவு நீர் சேர்த்து – அதில், பூண்டு (2) , இஞ்சி (1), ஏலக்காய் (0.5) , மஞ்சள் தூள் (2), மிளகுத்தூள் (0.25)  சேர்த்து நன்கு காய்ச்சி – அதனுடன் தேன் அல்லது, நாட்டுச் சர்க்கரை, அல்லது சர்க்கரை சேர்த்து – பொறுமையாய்த் தொண்டையில் பரவி இறங்குமாறு அவரவர் தாங்கு திறனுக்கேற்ற சூட்டுடன் பருகுதல் – இங்கே தந்துள்ள எண்கள் –எடை அளவின் விகிதாச்சாரம்.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட பால் வெகு சுவையாய் – சிறந்த இனிய மணத்துடன் இருப்பதோடு, பார்க்கவும் வெகு ஜோராய் இருக்கும். அனைத்து வயதினரும் விரும்பிப் பருகக் கூடியது.

சர்க்கரை வியாதி இருப்பவர்கள், இனிப்பு சேர்க்காமல் குடிக்கிறோம்– பால் விரும்பாதவர்கள் –அல்லது பால் கிடைக்கவில்லை என்பவர்கள் – பாலுக்கு பதில் வெறும்  நீரைப்  பயன்படுத்தியே இந்த பானத்தைத் தயார் செய்து கொள்கிறோம்.

ஏலக்காய்க்குள்ள நுண்ணுயிர்க் கொல்லித் திறனை அறிய: https://www.sciencedirect.com/topics/food-science/cardamom

உணவு: எந்த உணவையும் புதிதாகத் தயாரித்து உண்ணுகிறோம். மீந்து போகுமாறு சமைப்பதில்லை. ஒவ்வொரு நாளும் கண்டிப்பாய் ரசம் உண்டு; மோர் உண்டு. பெருங்காயம், பூண்டு, இஞ்சி, மிளகு, சீரகம், தணியா, வெந்தயம் சேர்க்க இயலாத எந்த உணவையும் தயாரிப்பதில்லை. தயிரைத் தவிர்க்கிறோம். தயிருக்குப் பதிலாக முறித்த மோரைப் பயன்படுத்துகிறோம். மோரில் நன்கு காய்ச்சிய இரும்புக் கரண்டிக் காம்பைத் தோய்த்து எடுத்துவிட்டு –  வெந்தயத் தூள், பெருங்காயத் தூள், நசுக்கிய இஞ்சி மற்றும் கருவேப்பிலை சேர்த்து மோரைப் பயன்படுத்துகிறோம். (எங்களுக்கு, பச்சை கருவேப்பிலை கிடைப்பது அரிது – காய்ந்த கருவேப்பிலையைத் தான் பயன்படுத்துகிறோம்). எங்களில் சிலர் (இந்தியர்கள்), ஒருபடி மேலே போய் – மஞ்சள் தூள் சேர்த்து – தாளித்தும் மோரைப் பயன்படுத்துகின்றனர்.

வீட்டில் கைகளைச் சுத்தம் செய்துகொள்ள: வீட்டில் இடையிடையே கையைச் சுத்தம் செய்துகொள்வதற்கென, கீழே குறிப்பிட்டுள்ளபடி தயார் செய்த கழுவு நீரை ஓர் அகலமான பாத்திரத்தில் வைத்துவிடுகிறோம் – குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் – இதில் கை நனைத்து, கைகளை நீருக்குள்ளேயே நன்றாக அலசிக்கொள்கிறோம் பக்கத்தில் சுத்தமான பழைய பருத்தித் துணி – (வேட்டி அல்லது பழைய வாயில் சேலைகள் மிகவும் தோதானவை) கைக்குட்டைகளை வைத்திருக்கிறோம் – அக்கைக்குட்டைகளில்  கை துடைத்துக்கொள்ளச் சொல்கிறோம். துடைத்தபின் அந்தக் கைக்குட்டைகளை ஆப்ப சோடா கரைத்த நீரில் இட்டுவிட்டுச் செல்லுமாறு சொல்கிறோம் – ஒவ்வொரு நாளின் இறுதியிலும் இக்கைக்குட்டைகளைத் துவைத்து  உலர்த்தி – மீண்டும் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்கிறோம். இவ்வாறு செய்வதால், கைகள்  எப்போதும் தொற்று நீங்கி இருப்பதோடல்லாது, தோல் பாழாகாமல் – வறட்சித்தன்மை இன்றி, சுத்தமாய்ப் பளிச்சென்று மிருதுவாய் இருக்கிறது. ஒரு நாளைக்கு, மூன்று முறை இந்த நீரை மாற்றிக்கொள்கிறோம்.

(இரண்டு லிட்டர் நீரை ஒரு புட்டியில் எடுத்துக்கொண்டு அதில் – அரை டீ ஸ்பூன் உப்பு, ஒரு டீ ஸ்பூன் ஆப்ப சோடா, அரை டீ ஸ்பூன் நல்லெண்ணெய், கால் டீ ஸ்பூன் பொடித்த இலவங்கம் சேர்த்து – புட்டியை மூடி – நன்கு குலுக்கிக் கரைத்துக் கொள்ளவும்). கிராம்புக்கு இருக்கிற நுண்ணுயிர்க்கொல்லித் திறனை அறிய: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3074903/

மூக்கின் உட்சுவரில் பூச: விருப்பமுள்ளவர்கள், மூக்கின் உட்சுவரில் சுத்தமான நல்லெண்ணெய் ஒரே ஒரு இழை தடவிக்கொள்கிறோம். நல்லெண்ணெய்க்கு உள்ள நுண்ணுயிர்க் கொல்லித் திறனை அறிய:

https://www.prohealth.com/library/discover-the-little-known-uses-of-sesame-oil-6750

தொண்டையில் வெளிப்புறம் பூச: விருப்பமுள்ளவர்கள், கொத்துமல்லி, துளசி, கற்பூரவள்ளி, தும்பை – இவற்றில் ஏதேனும் ஒன்றின் இலையைப் பறித்துவந்து இரு கைகளுக்கிடையே அழுத்திக் கசக்கிப் பிழிய  வரும் சாற்றை, சிறிது சுண்ணாம்பு கலந்து – தொண்டையின்  வெளிப்புறம் தடவிக்கொள்கிறோம். எங்களுக்குச் சுண்ணாம்பு கிடைப்பது அரிது என்பதால், கால்சியம் மாத்திரையை  உரைகல்லில் இழைத்து – தேவையான சுண்ணாம்பை எடுத்துக்கொள்கிறோம் குழந்தைகளுக்கு – பெரியவர்களுக்கு என எல்லா வயதினருக்கும் ஏற்ற பூச்சு இது. இந்தப் பூச்சினால் எந்தக் கெட்ட வாசனையும் வராது. மாறாக, விறுவிறுப்பான சுகந்தம் தெரியும். இதைத் தினப்படியோ அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ செய்து கொள்ளலாம். (அடிக் குறிப்பு 2ஐப் படிக்கவும்). பச்சிலைச் சாற்றுக்குப் பதிலாக, மஞ்சள் பற்றும் போட்டுக்கொள்கிறார்கள்.

மூக்கில் நுகர: விரலி மஞ்சளை – தீபத்தின் ஜ்வாலையில் காட்ட – அது கனன்று இலேசான மெல்லிய புகை  இழையை உருவாக்கும் – அப்புகையை ஒரே ஒரு விநாடி நுகர்வது ஒரு சிலரது பயிற்சியாக உள்ளது. காலை ஒரு முறை – மதியம் ஒரு முறை – இரவு ஒரு முறை நுகர்ந்தால் போதும், மேல் சுவாச மண்டலத் தொற்றுகளை விலக்குவதற்கு எளிமையான வழியாம். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே சென்று வரவேண்டியிருந்தால், வீட்டு வாசலிலேயே – இதைச் செய்துவிட்டு உள்ளே வருவது நலம் என்று அறிந்து கொண்டோம். ஆஸ்துமா உள்ளவர்கள் இதைச் செய்யவேண்டாம் என்று வலியுறுத்தப்படுகிறது.

மூக்கு – வாய் மூடி: மூக்கு -வாய் மூடிகள் கிடைக்காத நிலையில், சன்னமான பருத்தித் துணியை (வேட்டி அல்லது பழைய வாயில் சேலைகள் மிகவும் தோதானவை) மஞ்சள் கலந்த நீரில் நனைத்து உலர்த்தி  – எங்களுக்குத் தேவையான மூக்கு -வாய் மூடிகளை நாங்களே உருவாக்கிக் கொள்கிறோம். எங்களுடைய சிறுவட்ட இயக்கங்களுக்கு இது தோதாக இருக்கிறது. மஞ்சளின் வாசம் ஒரு பிளஸ் பாயிண்ட் தான்.

வீட்டிற்கு உள்ளும் வெளியும் ஆங்காங்கே:  பூண்டையும் வசம்பையும் தட்டி – டிஷ்யுவில் (பழைய வேட்டி அல்லது புடவைத் துண்டுகள் தோதானவை) தளர்ந்த சிறு சிறு மூட்டைகள் போல் செய்து வீட்டைச் சுற்றி ஆங்காங்கே வைத்துவிடுகிறோம். மூன்று நாளைக்கு ஒருமுறை  இதை மாற்றிக்கொள்கிறோம். (அடிக் குறிப்பு 3ஐப் படிக்கவும்). பூண்டு, வசம்பு இரண்டுமே ஒரு சிறந்த நுண்ணுயிர்க் கொல்லி மற்றும் பூச்சிக் கொல்லிகளாகும். வசம்பு, மருந்து எனும் நிலையைத் தாண்டி உணவாகப் பயன்படுத்தும் பிரபலத்துவம் இல்லாதது. வசம்பின் குணாதிசயங்களை அறிய: https://www.researchgate.net/publication/266372059_Acorus_calamus_An_overview

நாள் முழுவதும் தீபம்: நல்லெண்ணெய் விட்டு தீபம் நாள் முழுக்க எரியுமாறு செய்கிறோம். காற்றைத் தூய்மை செய்ய நன்மை பயக்கும் வழி இது என்பது பெரியவர்களால் சொல்லப்பட்டிருக்கிற சேதி. (அறிவியல் ரீதியாகப் பார்த்தால், தீபத்தின் ஜ்வாலை ஒளி பிளாஸ்மாவாகும்; இது பரவு திறன் கொண்ட அயனிகளை உருவாக்குகிறது – இதனால் வீட்டினுள் காற்றுச் சலனம்  சன்னமாய் ஏற்படுவதால் எரியும் தீபம், காற்றைச் சுத்திகரிக்கும் தன்மை உடையதாகிறது.)

தூபம்: எங்களுக்கு வீட்டில் புகை போடுவது இயலாது (புகை அலாரம் அடித்து ஊரைக்கூட்டி ரகளை பண்ணிவிடும்). எனவே அதிகப் புகை வராதவாறு, மிக இலேசான தூபம் ஒருநாள் விட்டு ஒரு நாள் – ஒரு முறை காலையும் ஒரு முறை மாலையும் போடுகிறோம்– வீட்டிற்கு உள்ளும் வெளியிலும்.

ஐந்து வெள்ளைக் கடுகு, நாலு உலர்ந்த துளசி இல்லை –ஒரு சிட்டிகை வேப்பிலைத் தூள்   – ஒரு சிட்டிகை நீலகிரி இலைத்தூள், இவற்றைக் கலந்து வைத்துக்கொண்டு, இரண்டு பார்பிகியூ கரித்துண்டுகளை வைத்துக்கொண்டு துரிதமாக போடப்படும் தூபம் இது. (அடிக் குறிப்பு 4ஐப் படிக்கவும்). வெள்ளைக் கடுகு இல்லாமலும் இந்த தூபத்தைப் போடலாம். வெள்ளைக் கடுகின் மருத்துவக் குணங்களை அறிய: https://botanical.com/botanical/mgmh/m/mustar65.html

தூபக் குப்பிகள்: மஞ்சள் தூளில் சிறிது வேப்பிலைத் தூள்   – மற்றும் நீலகிரி இலைத்தூள், சில சொட்டுகள் லாவண்டர் எண்ணெய் (நறுமணத்திற்காக) கலந்துப் பிசைந்து சிறு – சிறு கூம்புகள் (மஞ்சள் பிள்ளையார் செய்வது போல) செய்து, வீட்டிலேயே உலர்த்தி எடுத்துக்கொண்டு அவற்றைத் தினசரி தூபமாக ஏற்றி வருகிறோம்.

யோகா: ஜிம், அதாவது உடற்பயிற்சிக் கூடத்தை நம்பியே வாழும் ஒரு வாழ்க்கைக்கு முட்டுக்கட்டை வந்துவிட்டதால் பைத்தியம் பிடித்தால் போல் இருக்கும் நிலை பலருக்கு. அதே நேரத்தில், தொற்றை – நோயை எதிர்ப்பதற்கும் வெளியே செல்லாமல் வீட்டுக்குள் இருப்பதால் நேரும் மந்த நிலையைப் போக்கவும்   – உடலுக்குச் சரியான பயிற்சி தந்தே ஆகவேண்டும். யோகா எனும் நம் பண்டையக் கலை, கருவிகள் சார்ந்த  உடற்பயிற்சிகளைக் காட்டிலும் எத்தனை உன்னதமானது என்று நமக்குப் புரியும்படியான தருணமிது. எனவே நாங்கள் யோகாவை தினசரிப் பயிற்சியாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

தியானமும் பிரார்த்தனையும்: உலகு இன்று ஸ்தம்பித்து நிற்கிறது. இறையருள் இன்றி எதுவும் நடக்காது என்பதை எம் நட்பு வட்டத்தில், நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்கள் கூட வாய்விட்டுச் சொல்லிவிட்டார்கள். இன்று, கிருமி நம் உடலில் புகுந்தாலும், அது நுரையீரலுக்குள் இறங்காமல், நம் மிடறிலேயே  நின்று விட்டதென்றால் எந்தப் பாதிப்புமில்லை என்பது தான் உண்மை. எனவே, நம் அனவருக்கும் திரு நீலகண்டனே துணை. அன்று நளிர் சுரம் வந்து மக்களை வாட்டியபோது, திருஞான சம்பந்தர் பாடித் தொழுத திருநீலகண்டப் பதிகம் நமக்கு அருள்கொடையாக வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் பதிகம் தோன்றிய வரலாற்றை, அறிந்த அந்நொடியில், சமயப் பிணக்கின்றி அனைவருமே அதனைப் படிக்க ஒப்புக்கொண்டது இறைவனின் அருளே – மாலை ஆறு மணிவாக்கில் அனைவரது இல்லங்களிலும் அவரவர் படிப்பது அல்லது ஒலிப்பது (https://shaivam.org/thirumurai/first-thirumurai/1307/thirugnanasambandhar-thevaram-thiruneelakandam-avvinaik-kivvinai) என்று ஒரே நேரத்தில், கூட்டம் போடாமலேயே, கூட்டாகப் பிரார்த்திக்கிறோம். அதிகாலையில் யோகப் பயிற்சிக்கு முன்பு, யோக முத்திரைகளும், தியானமும், சூரிய நமஸ்காரமும் செய்கிறோம்.

கொரோனாவைத் தாண்டிய பிரச்சனைக்கான ஆயத்தம்: பலபேர் வேலை இழந்திருக்கிறார்கள் – பல பேர் வேலை இழக்கக்கூடும் என்பதாகவும் அறிகிறோம்.  பசியும் ருசியும் வெவ்வேறானவை என்பது வெகு தெளிவாகவே புரிகிற காலமாய் இக்காலம் அமைந்திருக்கிறது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு தலைதூக்க ஆரம்பித்திருகிறது. பொருளாதாரப் பிரச்சனைகள் பகிரங்கமாய் வெடிக்க, அதிகக் காலம் பிடிக்காது என்றே தோன்றுகிறது. இதை உணர்ந்தவர்களாக, எல்லா அத்தியாவசியப் பொருட்களையும், மிகக்  குறிப்பாக, உணவுப் பொருட்களை வெகு எச்சரிக்கையோடு உபயோகப்படுத்துகிறோம். எந்த ஒரு பொருளையும் ஒரு துளியும் வீணடிப்பதில்லை என்ற உறுதியோடு செயல்படுகிறோம். மீடியாக்களில் கவனத்தைச் சிதறவிடாமல், இருக்கிற ஒவ்வொரு உணவுப் பொருளையும் – ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளையும் எப்படிப் பாதுகாத்து – அதன் உபயோக நாட்களை எவ்வாறு நீட்டிப்பது – என்பதான சிந்தனையில் –  செயலில் சிரத்தையுடன்  ஈடுபட்டிருக்கிறோம். கொத்துமல்லி, வெந்தயக்கீரை, புதினா, துளசி ஆகியனவற்றை  வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளும் முயற்சியும் இதில் அடக்கம். குழந்தைகளும் – பெற்றோர்களும் – உள்நாடு – வெளிநாடு என்று பிரிவாலும் – கொரோனாத் திகிலாலும் கலக்கமுற்றுக் கிடக்கிறார்கள். ஏழ்மையில் உள்ளோரின் நிலை பரிதாபகரமாக உள்ளது.  என்று தணியும் இந்தக்  கொரோனா பயம்? என்று உலகோர் அனைவரும் இறைஞ்சும் இவ்வேளையில், தனிமனிதப் பாதுகாப்பும் பலமும் இன்றியமையாத சக்திகளாகும் என்பதை  வலியுறுத்தத் தேவையில்லை.

அடிக்குறிப்புகள்

(1) நமக்கு முன்னே உள்ள பிரச்சனையை நாம் முதலில், புரிந்து கொள்ள வேண்டும்: நம்மைச் சுற்றி – நம்முடைய சூழலில் தொற்றுக் கிருமிகள் பரவுகின்றன – அவை நம்மையும் கட்டாயம் வந்தடையும் – அவ்வாறிருப்பினும், ஒவ்வொரு தனிமனிதரும் வைரசிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பது தான்.

இவ்வாறு தனிமனிதர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பொதுவான நெறிமுறைகளை – சட்டங்களை, அரசு அறிவித்திருகிறது – மக்கள் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும் – ஒருவருக்கொருவர் எட்டத்திலே நிற்கவேண்டும்  – முகத்தில் – கண்ணைத் தவிர, பிற ஓட்டைகளை மூடிக்கொள்ளவேண்டும் – சுத்தமாய் இருக்கவேண்டும் என்பதெல்லாம் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டியவையே. அவற்றை அலட்சியம் செய்யக் கூடாது.

அதே நேரத்தில், காற்றை ஊடகமாகக் கொண்டு வரும் ஒன்றை முழுதுமாய்க் கட்டுப்படுத்துவது என்பது அரிது – அதுவும் கிருமிகள், ஒன்றிரண்டாய்ப் பரவுவதில்லை – ஒரு இருமலில் சுமார் 3,000, எச்சிற்துளிகள் இருக்கும், 20,௦௦௦ வைரஸ்கள் இருக்கும்.  தும்மல், இருமலைக் காட்டிலும் கூடுதலான காட்டமுடையது .  தும்மலில் 4௦,௦௦௦ எச்சிற்துளிகள் இருக்கும்; இருமலின் வேகம் மணிக்கு சுமார் 80 கிலோமீட்டர்; தும்மலின் வேகம் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர்.

இருமும்போதும் தும்மும்போதும், வெகு நுண்ணிய துளிச் சிதறல்களாய்ச் சளியும் கிருமிகளும் கலந்த மிகப் பொடிதான் எச்சிற்துளிகள் நோயாளியின் வாயிலிருந்து வெளிவந்து காற்றில் கலப்பதால்,  காற்றில் அவை பலமாய் நிற்பவை. (சிறு துளிகளுக்கு வாழ்க்கை அதிகம்). தும்மல் துளிகளின் பலம், இருமல் துளிகளின் பலத்தைவிட அதிகம். ஏனெனில், தும்மல் துளிகள் இன்னமும் பொடிதானவை.

ஒரு இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு சுமார் ஒரு மணி நேரம், காற்றில் நிலைத்து மிதக்கும் தன்மை உடையவை  இந்த எச்சிற்துளிகள். எச்சிற்துளிகளின் பலத்தால் அவற்றில் உள்ள வைரஸ்களும் காற்றைப் பலமாய்ப் பிடித்துக்கொள்கின்றன

எனவே நம்மீது தும்மல் அல்லது இருமல் நேரடியாகப் படவில்லை என்றாலும் கூட – அவை நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன. மேலும் இந்த எச்சிற்துளிகள் பொருட்களின் மீது படியவல்லவை.

ஆகையால், சூழலில் உள்ள பொருட்களை நாம் – தொடுதலினாலும் பரவுகிறதான ஒன்றாய் இந்நோய் இருக்கிறது.

மேலும், வயதாதானலும் மற்றும் நோய் எதிர்ப்புத்திறன் குறைவாலும் பலவீனமானவர்களாக இருக்கிறவர்களையே அது குறிவைக்கிறது.  இந்நோய் மனிதர்களை, மரணமுறச் செய்யும் பொறிமுறை (mechanism) மிகுந்த நுட்பமானது – விபரீதமானது ஏனெனில், அது நுரையீரல்களைத் தாக்கி மூச்சினை  நிறுத்திச் சாகடிக்கிறது.

(2) அமெரிக்காவில் உள்ளவர்கள், நாங்கள் தும்பைக்கு எங்கே போவது என்று கவலைப்படத் தேவையில்லை. இந்தியத் தும்பையை ஒத்த ஏன் இன்னமும் ஒருபடி மேலான தும்பை இங்கு இருக்கிறது. நம்மூர் தும்பையைப் போலவே, இது சர்வ சாதாரணமாக, கால்படாத இடங்களில் எங்கும், முளைத்துக் கிடக்கறது. இதற்கு “Heal All” அல்லது “Self-heal” என்று பெயர் – தமிழில் சொல்லவேண்டுமென்றால் – சர்வரோக நிவாரணி. இது ஒரு சிறு செடி – புல் பூண்டுகளோடு – இயல்பாய் விளைந்து – கொள்ளை  அழகோடு காணப்படுகிறது. ஊதா வண்ணத்தில் உள்ள இதன் மலர்கள் கண்கொள்ளாக் காட்சி – இதை அப்படியே பச்சையாக உண்ணமுடியும் என்று சொல்கிறார்கள்.

இப்போது இதற்கு சீசன் – சொல்லப்போனால் – இந்த ஆண்டு – சீசனுக்கு முன்னாடியே இது வந்துவிட்டது. நம் கொரோனா போராட்டத்திற்கு ஒத்தாசை செய்ய விரும்புகிறாற்போல.

பெரும்பாலான அமெரிக்கர்களுக்கு “Heal All” செடி பற்றித்  தெரியவில்லை. இதனைக் களை என்று நினைத்து அழித்துவிடுகிறார்கள். ஆனால் சில வர்த்தக நிறுவனங்கள் – “Heal All” பண்ணைகள் வைத்து இதிலிருந்து “Heal All” எண்ணெய் இறக்கி நல்ல விலைக்கு விற்று வருகிறார்கள்.

அமெரிக்காவில், கற்பூரவள்ளி இல்லை என்று எண்ணாதீர்கள். மெக்சிகன் மின்ட் என்ற பெயரிலும் விக்ஸ் பிளான்ட்  என்ற பெயரிலும் கற்பூரவள்ளி இங்கு கிடைகிறது. விதை அல்லது துண்டங்கள் (cuttings) வாங்கி நாமே வீட்டில் தொட்டிகளில் வளர்க்க முடியும்.

(3) வசம்பு (Sweet Flag) அமெரிக்காவிலும் இருக்கிறது. வசம்புக் கன்றுகள் கூட சில நர்சரிகளில் விற்கப்படுகின்றன.

நம்மூர் வசம்பு (Acorus calamus)  மற்றும் அமெரிக்காவின் வசம்பு இரண்டுமே இங்கு உள்ளன. அமரிக்க வசம்பு (Acorusamericanus) நம்மூர் வசம்பைப் போலவே இருப்பினும் தாவரவியல் ரீதியாக இது வசம்புக் குடும்பத்தைச் சேர்ந்த இன்னோர் உறுப்பினர் அவ்வளவே (வசம்பை, யுரேசிய  வெள்ளையர்கள், அமெரிக்காவில் புகுத்தியதாக வரலாறு). இங்குள்ள பாரம்பரியம் மிக்க வெள்ளையர்கள் பலரும், மருத்துவப் பயன்பாட்டுக்கும் அழகுக்கும் என வசம்புச் செடிகளை வீட்டில் வளர்க்கிறார்கள். (ஆனால், அமரிக்காவின் USDA, உணவுப் பொருட்களில் வசம்பைச் சேர்ப்பதைத் தடை செய்துள்ளது).

(4) வெள்ளைக் கடுகு விதைகள் இங்கே கிடைக்கின்றன. இங்கு இது வெள்ளைப் பனிக் கடுகு என்று அழைக்கப்படுகின்றது. பார்ப்பதற்கு நம்மூர் வெள்ளைக் கடுகு போலவே இருக்கிறது.

அமெரிக்காவில்  வேப்பமரங்கள் உண்டு என்றாலும் – எல்லா மாநிலங்களிலும் அவை வளரா. புளோரிடா, டெக்ஸாஸ், அரிஸோனா, கலிபோர்னியா, போன்ற சாதகமான தட்பவெப்பச் சூழ்நிலைகள் உள்ள மாநிலங்களில் – சில இடங்களில் வேப்ப மரங்கள் – வேப்பமரப் பண்ணைகள் உள்ளன என்று அறிகிறோம். வேப்ப மரங்களை வளர்க்க அமெரிக்காவில் தடையில்லை என்றாலும், வேம்புக்குத் தேவையான தட்பவெப்ப நிலை இல்லாததாலும்  – வேம்பினால் வணிக இலாபமும் இல்லை என்பதாலும்  அமெரிக்கர்கள் வேப்பமரத்தைப் பயிரிடுவதில் நாட்டம் காட்டுவதில்லை. இப்போதுள்ள சில வேப்பமரங்கள் அல்லது வேப்பம்பண்ணைகள், பெரும்பாலும் இந்திய ஆர்வலர்களால் வந்தவை என்பதாகச் சொல்லப்படுகிறது. அமரிக்காவில், யூகலிப்டஸ் மரங்கள் உண்டு என்றாலும், வெகு பரவலாக எல்லோராலும் வளர்க்கப்படும் மரமாக அல்லது சாலை நெடுகிலும் காணப்படும் மரமாக, சர்வஜனக் காட்சியாக எல்லார் வீடுகளிலும் எல்லா மாநிலங்களிலேயும் இதைக் காண முடிவதில்லை.

நான் உலர்ந்த வேப்பிலையையும் வேப்பிலைத் தூளையும், மற்றும் யூகலிப்டஸ் இலைத் தூளையும் ஆன்லைனில் மட்டுமே வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.