இந்த வார வல்லமையாளர் 308 – ‘ட்ரீ ஆம்புலன்ஸ்’ அப்துல் கனி

-நாங்குநேரி வாசஸ்ரீ
இந்த வார வல்லமையாளர் 308 – அப்துல் கனி
உலக வெப்பமயமாதல் அதனால் ஏற்படும் வறட்சி பேரழிவு ஆகியவற்றிற்கு முக்கிய காரணம் காடுகள் அழிக்கப்படுவதே ஆகும். இதிலிருந்து மீண்டு வருவதற்கு மரங்கள் வளர்ப்பது ஒன்றே தீர்வாக அமையும். .
தொல்காப்பியம், சங்க இலக்கியப் பாடல்களில் தொடங்கி தற்கால புதுக்கவிதைகள் வரை அனைத்திலிருந்தும் நம் தமிழர்கள் மரங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தை உணரலாம். பண்டைய தமிழகத்தில் ஒவ்வொரு மன்னனும் ஒரு குறிப்பிட்ட மரத்தினை காவல் மரமாகக் கருதினர். . இறை வழிபாட்டோடு தொடர்புடைய தல விருட்சங்களாகவும் மரங்கள் இருந்ததற்குப் பக்தி இலக்கியங்கள் சான்றளிக்கின்றன.
ஆனால் இன்றைய நிலையில் வேளாண்மை, நகரமயமாக்கம் போன்ற பல காரணங்களுக்காக சிறிது சிறிதாக நாம் காடுகளை அழித்து வந்துவிட்டோம். அதன் விளைவு புவியியல் மற்றும் காலநிலை சார்ந்த தாக்கங்கள். இயற்கையான காட்டு மரங்கள் தொடர்ச்சியாக வெட்டப்பட்டு எரிபொருள் பயன்பாட்டிற்காக உபயோகப்படுத்தப்படுவதோடு , அந்த இடங்கள் மேய்ச்சல் நிலம், விளை பொருள் தோட்டங்கள் மற்றும் குடியேற்றங்களாக உருமாறிவிட்டன. மரங்கள் தொடர்ந்து குறைந்துவருவதால் உயிரியற் பல்வகைமை (bio diversity) குறைந்து சூழலும் தரம் குறைந்துவிட்டது. வாழ்விட சேதம், பல்லுயிர் இழப்பு, மற்றும் வறண்ட நிலங்கள் பெருகிவிட்டன.. வளிமண்டல கரியமிலவாயுவை நீக்க போதிய காடுகள் இன்மையால் எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டு காலநிலை மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டன.
தற்போதைய மிகப்பெரும் பிரச்சினையான தண்ணீர்ப் பஞ்சத்துக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் , மரங்கள் அழிப்பால் போதிய மழைப்பொழிவு இல்லாமல் போனது முக்கிய காரணம். இதேபோல் போதியமரங்கள் இல்லாததால் சென்னை போன்ற பெரு நகரங்களில் காற்று மாசுபாடும் அதிகரித்து வருகின்றது.
மனிதன் இன்புற்று வாழ
மழை வளம் பெருக்கி, மண்வளம் காத்து,
உறைவிடம் கொடுத்து, உணவு வழங்கி
மகிழ்ச்சியுடன் நாளும் மாசில்லாக் காற்றளிக்கும்
மரங்கள் இயற்கைச் சீற்றத்தால் இன்னலுரும்போது கை கொடுத்துக் காப்பது நம் கடமையன்றோ.
அந்த மாபெரும் பணிக்காகத்தான் சென்னை கிண்டியில் உள்ள சாசா என்ற தனியார் நிறுவனம் ட்ரீ ஆம்புலன்ஸ் சேவை ஒன்றைத் தொடங்கியுள்ளது. உலக சுற்றுச் சூழல் தினத்தன்று மரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான அவசர ஊர்தி சேவையை இந்த நிறுவனம் சென்னையில் துவக்கியது. இந்த சேவையை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்தியில் பயணிக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், மரங்களுக்கு முதலுதவி அளித்தல், வேரோடு சாய்ந்த மரங்களை மறு பதியம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்கின்றனர். இது குறித்து திரு அப்துல் கனி பேசுகையில் பசுமையின் தேவையை மனிதர்கள் உணர வேண்டும். அதனால்தான் இந்த மர ஆம்புலன்ஸ் சேவை என்றும் தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் போவதாகவும் 2020க்குள் இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தப் போவதாகவும் கூறினார். முதற்கட்டமாக தமிழகத்தில் பயணிக்கும் இந்த அவசர ஊர்தி நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்ட மரங்களுக்கு முதலுதவி அளித்தல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற பணிகளைச் செய்யும்.
9941006786 என்ற எண்ணில் ட்ரீ ஆம்புலன்ஸ் குழுவினரை அழைத்து, அவர்களின் சேவையைப் பெறலாம். இவர்களின் இணையத்தளம் – www.treeambulance.org
உயிர் காக்கும் மரங்களின் உயிர் காக்கும் பணி செய்யும் ட்ரீ ஆம்புலன்ஸ் நிறுவனர் அப்துல் கனி அவர்களையும், உடன் பணியாற்றும் ஆர்வலர்களையும் வல்லமை மின்னிதழ் சார்பில் உளமாரப் பாராட்டுகிறோம். இந்த நற்பணிக்காக அவருக்கு “இந்த வார வல்லமையாளர்” விருதினை அளித்துப் பாராட்டுகிறோம். அப்துல் கனி குழுவினர், இன்னும் பற்பல தொண்டுகள் புரிய வாழ்த்துகிறோம்.
தொடர்புடைய பக்கங்கள்