குழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம்

எஸ் வி வேணுகோபாலன்

கிரேசி மோகன் மறைவுச் செய்தி கிடைத்து, உடனே, இல்லை, அவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார், தவறுதலாக யாரோ கொடுத்த செய்தியை உங்களுக்குத் தெரிவித்தேன், மன்னிக்கவும் என்று அதே நண்பர் குறுஞ்செய்தி போட்டிருந்தார். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள், மோகன் காலமாகிவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரே ஒரு முறை கூட நேரில் பரஸ்பரம் சந்தித்திராதபடியே, உயிரோட்டமாக ஆத்மார்த்தமாகப் பழகிய கடந்த நான்காண்டு நட்பு இனி நினைவில் மட்டுமே நிற்பதாயிற்று. நான் தான் இன்னார் என்று பார்த்து அறிமுகம் செய்துகொள்ள இனி ஒருபோதும் புன்னகை பூத்த அந்த முகம் கிட்டப்போவதில்லை. மறைந்தே போய்விட்டார் கிரேசி மோகன்.

திரையில் ஒலிக்கும் அதே குரல், கொஞ்சம் வெற்றிலை சீவல் குழைவோடு மேலும் கனிந்து எத்தனையோ நாட்கள், இரவுகள் தனிப்பட எனக்காக என் காதில் ஒலிக்கக் கேட்ட அந்தக் குரல் காற்றில் கலந்துவிட்டது. ‘வானுறு மதியை அடைந்ததுன் வதனம், மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி’ என்று வரும் நந்திக் கலம்பகம்போல், ‘காற்று வெளியை நிறைத்ததுன் சிரிப்பு, கனிவகை புகுந்ததுன் நேயம்’ என்றுதான் எழுத வேண்டும். அவரை அறியாத தமிழ்த்திரை ரசிகர்களோ, சாதாரண மனிதர்களோ தமிழகத்தில் இருக்க இயலாதென்றே திடமாக நம்புகிறேன்.

செம்மலர் இதழில் வெளியாகி இருந்த ‘மரணத்தை முன் வைத்து..’ என்ற எனது கட்டுரை ஒன்றைத் தற்செயலாக மின்னஞ்சலில் அவருக்கு அனுப்பி இருந்தேன். அதை உடனே வாசித்துவிட்டு, பாராட்டுதலோடு சுருக்கமான ஒரு பதிலை அனுப்பி இருந்தார்:

பிரமாதம் சார் கட்டுரை….

”மரணமென்ற வார்த்தையை மாற்றி அமைத்தால்
வரணும் ரமணனென்ற வார்த்தை, -பெறணும்
அவனருளைப் பெற்றால் அனைத்தும் பெறலாம்
சிவனருளுன் சீமந்தச் சேய்”..

அதனோடு நிறைவு பெறாத மனத்தோடு, இரவு அலைபேசியில் அழைக்கவும் செய்தார். அவரோடான முதல் உரையாடல் அது. மரணத்தை முன்வைத்து எப்படி அத்தனை நகைச்சுவையாக எழுத முடிந்தது என்ற அவரது பாராட்டுக் குறிப்போடு முகிழ்த்தது நான்காண்டுகளுக்குமுன் அவரோடு வாய்த்த நட்பு.

கவிதை பிரியர், வெண்பா சித்தர் என்பதை அப்போதே உணர்ந்த என்னை, இடையறாது திக்குமுக்காடச் செய்து கொண்டிருந்தார் மோகன். அவரது வேகத்திற்கேற்ப பதில் அனுப்புவது சவாலான வேலை. ஏனெனில், வெண்பாவுக்கு பதில் வெண்பா எழுதி அனுப்புவதை மிகவும் சிலாகித்து வாசித்து ரசிக்கவும் செய்தது அவரது குழந்தைமை பொங்கிய குதூகல உள்ளம். எண்ணற்ற வெண்பாக்கள்….ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு என்ன மொழியிலும் சொற்களை முந்திரி பருப்பு போல மேலே தூவி கமகமக்க சூடான வெண்பா(யசத்தை) மின்னஞ்சல் வழி ஊற்றி அனுப்பிக் கொண்டே இருப்பார்.

சிறந்த ஓவியரும், தி இந்து கார்ட்டூனிஸ்டுமான திரு கேஷவ் அவர்கள், மோகனுக்கு விருப்பமான வேலையை அன்றாடம் வழங்கி மகிழ்ந்திருப்பார். கிருஷ்ணரைத் தமது கற்பனையில் இழைத்த தூரிகையைக் கொண்டு அவர் வரையும் அற்புதமான ஓவியங்களை முன்வைத்து, புராண இதிகாச கதைகள், உபநிடத உட்பொருள்களை உள்ளடக்கிய செய்திகளை நான்கே அடிகளாலான வெண்பாக்களில் அசாத்தியமாக எழுதித் தள்ளிக்கொண்டே இருந்த கிரேசி மோகனே ஓர் ஓவியர்தான்! இராமாயண ஓவியங்கள் உள்ளிட்டு ரவிவர்மா ஓவியங்களையும், மிக ஈர்ப்பாக ரமணரையும் மிக அழகாக வரைந்திருப்பார் மோகன்.

நான் ஒரு நாத்திகன், உங்களைப்போல் அல்ல என்று ஒருமுறை அவருக்கு எழுதிய அஞ்சலுக்கு, அவர் இப்படி பதில் எழுதி இருந்தார், நீங்கள் நாத்திகன் அல்ல, naughtyகன் (குறும்பர்) என்று. பிறகு அலைபேசி உரையாடலில், இறை நம்பிக்கை இல்லாதவர் என்பதால் உங்களை வெறுக்க மாட்டேன், அது அவரவர் விருப்பம். அடுத்தவருக்காக சிந்திப்பது, உழைப்பது இதைத்தான் ஆன்மிகம் என்று நான் கருதுவேன். உங்களோடு பேச இந்த விஷயம் ஒரு தடையே அல்ல என்றார்.

வாழ்க்கையின் அபத்தங்களை அனாயாசமாக நகைச்சுவை வசனங்களில் அபாரமான கற்பனையோடு கொண்டுவரும் திறமை அவரது தனித்துவமான அம்சங்களுள் ஒன்று. அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில், ‘உங்க வயசு என்ன 55ஆ’ என்று நாகேஷ் கேட்கும்போது, எதிரே இருப்பவர் ‘இன்னொரு 5 சேர்த்துக்குங்க’ என்றால், ‘555ஆ?’ என்று நாகேஷ் வியப்போடு கேட்கும் வசனத்தைப் பற்றி ஒருமுறை அவரிடம் கேட்டேன், அதெல்லாம் வீட்டுல பாலாஜியோடு பேசினது, எங்கப்பா சொன்னது எல்லாம் தான் இப்படி வசனங்களுக்கு காரணம் என்றார். அடுத்தவர்களைப் பாராட்டும் மனம் அவருடையது.

திரையில், அவரது ஹாஸ்யத்தை மிக நுட்பமாக கவனிக்கத் தவறினால், அடுத்தடுத்த வசனங்கள் போய்க்கொண்டே இருக்கும். அவரது வசனத்திற்காகப் புகழ் ஈட்டிய படங்கள் நிறைய உண்டு. ஆனால், அவரது பேச்சில், எழுத்தில் கொஞ்சமும் கர்வம் தலைதூக்கிப் பார்த்ததில்லை. இதைப் பலமுறை அவரிடமே கேட்டிருக்கிறேன். மிகப் பெரிய மனிதர்கள் பலரது பெயர்களை எல்லாம் வரிசையாகச் சொல்லிவிட்டு, நாம எங்கோ கீழே சாதாரண மட்டத்தில் இருக்கோம் சார், இதில் பெரிய ஆட்டம் எதுக்குப் போடணும் என்று தன்னடக்கத்தோடு பதில் வரும்.

அவரது நகைச்சுவை வசனங்களில் ரசித்த ரசிப்பை விடவும், அவ்வை சண்முகி திரைப்படத்தில் ஆழமான ஓர் ஒருமைப்பாட்டு உணர்வை விதைக்கும் வசனம் ஒன்றை அவர் வழங்கி இருந்ததைக் கொண்டாட வேண்டும். நாசர், தம்மை அய்யர் என்று பொய் சொல்லிவிட்ட ஒரு முகம்மதியர் என்றறிய வந்ததும் கோபப்படும் ஜெமினி கணேசனை, மாமி வேடத்தில் இருக்கும் கமல் ஹாசன் ஆற்றுப்படுத்தும் காட்சி அது. ‘மாட்டுக்கறி சாப்பிடறவா’ என்று சொல்லும் ஜெமினியிடம், கமல் இப்படி சொல்வார்: :நீங்க பண்றது லெதர் பிசினஸ், அவாளுக்காக வெட்டப்படற மாடுகளை விட, உங்களுக்காக வெட்டப்படறது அதிகம்”. சாதி மதங்களைக் கடந்த பேதமற்ற உள்ளம் கொண்ட ஒருவரால் அன்றி வேறு யாரால் இப்படி எழுத முடியும்?

ஓயாது எழுதிக் கொண்டிருந்தார் மோகன். நேர்காணல் எந்த இதழில் வந்தாலும், ஒரு குழந்தைமை உள்ளத்தோடு பகிர்ந்து கொண்டிருந்தார். ரமணரை நோக்கிய தேடல் அவரது அண்மைக்கால தனிப்பட்ட எழுத்தில் அதிகம் மேலோங்கி இருந்தது. இரவு உறங்கப்போகுமுன் என்று அவர் எழுதியதிலும், காலை விழித்தவுடன் என்று எழுதி அனுப்பியதிலும் இந்த ‘பற்றறுத்தல்’ ஒலித்துக் கொண்டே இருந்தது.

“சார், இந்த வெண்பாவில் தளை தட்டி இருக்கிறது என்றால், தலை தட்டாமல் இருந்தால் சரி என்று பதில் போடுவார்…வெண்பாவை உடனே திருத்தி அனுப்பி வைப்பார். பதில் வெண்பாவை அத்தனை ரசித்து அதற்கும் மெயில் போடுவார். பத்து பதினைந்து நாட்கள் அவரது வெண்பாவிற்கு பதில் போடாமலோ, கருத்து தெரிவிக்காமலோ இருந்தால், அவ்வளவுதான், அழைத்தும் பேசிவிடுவார்.

எத்தனை எத்தனை ஆயிரம் பேரிடம் இப்படி, இதேபோல் உயிரான கேண்மை பாராட்டி இருந்தார் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது. அவரது தந்தை திரு ரங்காச்சாரி அவர்கள் இந்தியன் வங்கியில் முதன்மை மேலாளராக, இயக்குநர் குழுவின் செயலாளராக பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றி ஓய்வு பெற்றவர். முதல் உரையாடலிலேயே அதைக் குறிப்பிட்டவுடன், வாஞ்சையோடு அப்படியானா அவரைப் பார்க்கவாவது ‘ஆத்துக்கு வாங்கோளேன் ‘ என்று அவரது பேச்சுத் தமிழில் அழைத்தார். அப்பாவுடன் பேசுவதற்கு தொடர்பு எண்ணையும் எனக்குத் தந்தார். மறுநாளே அவரோடு பேசிய இனிமையான நேரத்தையும் மறக்க முடியாது.

ஆனால், நேரில் சென்று பார்க்காது நாட்களைக் கடத்திக்கொண்டு இருந்துவிட்டேன், மன்னிக்க முடியாத பாவி! கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு மறுநாள் காலை அவருடைய தந்தை திரு ரங்காச்சாரி காலமான செய்தி அறிந்து அவரை உடனே அழைத்தேன். மிகவும் இயல்பாக, ‘எஸ்விவி சார், அப்பா காலமாயிட்டார்” என்று பேசத் தொடங்கினார். ‘நேரில் வந்து பார்க்காதிருந்து விட்டேன், இப்போது வெளியூர் வந்திருக்கிறேன், உங்கள் அப்பா என்னை மன்னிப்பாரா ?” என்று கண்ணீர் மல்க அவரோடு பேசினேன்.

“அதெல்லாம் மன்னிப்பார், கவலையே படாதீங்கோ. தூக்கத்திலேயே அமைதியாய் பிரிந்துவிட்டது அவர் உயிர்” என்றார்.

நீண்ட ஒரு கடிதம் அனுப்பி இருந்தேன், திரு சாரி குறித்து! அதை வாசித்துவிட்டுப் பேசுகையில், மிகவும் ஆறுதலாக இருந்ததென்றார் மோகன். இப்போது அவரையும் இழந்துவிட்டோம். யார் தர முடியும், ஆறுதலை?

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “குழந்தைமை உள்ளம், உன்னத நட்பின் இலக்கணம்

 1. கிரேசி மோகன்

  வெண்பா கவிவேந்தர்; வெண்பாவுக் கேற்றபடம்
  கண்பார்க்க வைப்பார்; கணக்கில்லை – விண்ணகம்
  ஏகிவிட்டார்; வெண்பாக்கள் ஏங்கும் இனி, கிரேசி
  மோகன் இழந்தோமே என்று.

  சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *