படக்கவிதைப் போட்டி – 216

அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை, சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (16.06.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
ஓணானின் மனக்குறை..
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
-ஆ. செந்தில் குமார்.
வேலிக்கு ஓணான் சாட்சியாவென்று..
வேலையற்ற வீணர் சொல்லக்கேட்டு..
ஓட்டமாய் ஓடி வந்தேன்..
ஓருண்மை உரைக்க வந்தேன்..!!
நில அளவை இல்லாத ஓர் காலம்..
நிலவுலகில் வாய்மையே வாழ்ந்த காலம்..
அருகருகே அமைந்த நிலங்கள்..
அதனதன் உரிமையாளர் தம்முள்..
இருந்தது தீராத வழக்கொன்று..
இடம்பெயர்த்து நட்டான் கல்லையென்று..
இவ்வழக்கு வந்தது வழக்காடு மன்றத்திற்கு..
இசைந்தான் தலைவன் இறுதியாயொரு தீர்ப்புரைக்க..
சாட்சியெனப் பொய்யுரைக்க வந்தான் ஒருவன்..
சற்றே சொல்லிடு கல்நட்டது நீயாவென்று..
உரக்கக்கேட்டான் தலைவன்.. உளறினான் பொய்யன்..
உண்மையில் நானில்லை.. உண்மையில் நானில்லை..
வேலிக்கு ஊன்றான் சாட்சி செல்லாது..
வெளியேறு உடனே அவன் நிலத்தைவிட்டு..
உத்தமன் இவனே.. தீர்ப்பளித்தான் தலைவன்..
ஊன்றானை ஓணானாக்கியது உள்ளபடியே சரிதானா..?
உணர்ந்திடுவீர் உண்மைப்பொருள்.. தவிர்த்திடுவீர் உளரல்களை..
குறிப்பு:- ஊன்றான் – ஊன்றாதவன்(எல்லைக் கல்லை)
பேச்சு வழக்கில் மருவி ஊனான் ஆகிப் பின்னர் ஓணான் ஆனது.
மனிதனே…
வேலி யெல்லாம் மதிலாகி
வேற்றுமை மனிதரில் நிலைத்ததாலே
காலி பண்ணின ஓணான்கள்
காட்டுப் பக்கம் நோக்கியேதான்,
வேலி யதற்குச் சாட்சிசொல்ல
வேண்டாம் இனிமேல் ஓணானே,
நாலும் தெரிந்ததாய் மனிதர்களே
நன்றாய்ச் சொல்கிறார் பொய்ச்சாட்சியே…!
செண்பக ஜெகதீசன்…
பதின் பருவ பள்ளியாய்ப் போன
முள் மரங்களின் குத்தகைத்தாரர் நீ
ஆடுகளின் ஓய்விடங்கள்
கவட்டையோடு உன்னை அடிக்க
அலைந்து திரிந்த நிலங்கள் பலவிதம்
தலை தூக்கி சூரியனோடு நீ பேசும்
உரையாடல் கேட்க காத்திருந்த மணித்துளிகள் பல
எதற்குத் தலையாட்டுகிறாய் என்று
என்னைத் தவிர யாருமில்லா நண்பகலில்
சிந்தித்துக் கொண்ட காலங்கள் அநேகம்
என் கவட்டைக் கல்லுக்கு இரையான உனது
உறவினர்கள் கனவுகளில் புரியாத மொழியில்
பேசிக் கொண்டே இருக்கிறார்கள்
நீ வாழ்ந்த இடமெல்லாம் வீடுகளாய்
உன்னைப் பார்த்து ஆண்டுகள் பல
எங்களைப் போல வாழ்வாதாரம் தேடி
எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பாய் என்ற
நம்பிக்கையில் உனது நினைவுகளோடு பூமியில்
உனக்குப் பின் பிறந்த ஒரு விலங்கு.