-மேகலா இராமமூர்த்தி

புகைப்படக் கலைஞர் திரு. எஸ். இராமலிங்கம் கலைநுணுக்கத்தோடு எடுத்திருக்கும் சிலைகளின் நிழற்படத்தை அவரின் படத்தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 299க்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

சொல்லில் கலைவண்ணம் ஊட்டிக் காலத்தால் அழியாப் பாடல்களைப் படைத்தளித்த பைந்தமிழ்ப் புலவர்களைப்போல், கல்லில் கலைவண்ணம் காட்டிக் காலத்தால் அழியாக் கவின் சிலைகளைப் படைத்த  சாதனையாளர்கள் நம் சிற்பிகள்; அவர்களைப் போற்றுதல் நம் கடன்!

இந்தச் சிற்பங்களின் நேர்த்தியை, இவற்றை வடித்த சிற்பிகளின் சீர்த்தியைத் தீந்தமிழ்ச் சொல்லெடுத்துப் பாட வருகிறார்கள் நம் கவிஞர்கள்; அவர்களை அன்போடு வரவேற்கின்றேன்.

*****

”கல்லில் கலைவண்ணம் காட்டிய கலைஞனைப் போற்றுவோம்; அவன் சோராதிருக்க வாழ்த்துவோம்” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

சிற்பியைப் போற்றுவோம்…

கல்லில் கலையின் வண்ணமது
கலைஞன் ஒருவன் எண்ணமதாய்
வெல்லும் கால ஓட்டமதை
விளங்கும் சிலையாய்க் காலமெல்லாம்,
வல்லமை இதுதான் பேர்சொல்லும்
வையம் உளநாள் வரையிலுமே,
சொல்லிப் புகழ்வோம் இவர்திறனை
சோரா திருக்க வாழ்த்துவோமே…!

*****

”சிற்பக் கலையில் சிறந்தவன் தமிழன்! மாமல்லைச் சிலைகளைப் போற்றுவதா? ஆலயச் சிலைகளின் புகழைச் சாற்றுவதா?” என்று சிற்பியின் அழியாக் கலைநுட்பத்தை வியக்கின்றார் திருமிகு. சுதா மாதவன்.

செதுக்கி வைத்த சிற்பங்கள்
செவ்வனே வடித்திட்ட இதில்
சிற்பியின் கைகள்தான்
சிறப்பம்சம் கொண்டதுவே!

எத்தனையெத்தனை வர்ணங்கள்!
எத்தனையெத்தனை முக அம்சங்கள்!
அத்தனையத்தனை வடிவங்களும்
தத்துவமதனை உரைத்திடுமே!
மனம் அதில் சொக்கிடச்சொக்கிட வைத்திடுமே அதைப் போற்றிடப் போற்றிட

சிற்பக்கலையில் சிறந்தவனே
செம்மொழியில் சிறந்த தமிழன்தான்!
வள்ளுவனுக்கோர் சிலை கண்ணகிக்கோர் சிலை
நுட்பம் வாரி வழங்கியது அவன் நிலை

மாமல்லபுரச் சிலைகளைச் சொல்வதா?
சிறந்ததோர் ஆலயச் சிலைகளைச் சொல்வதா?
கருத்துக்கள் கூறும் சிலைகளைச் சொல்வதா?
தரணிபுகழ் பல சிலைகளைச் சொல்வதா?

இத்துணைச் சிற்பங்கள் சிறந்திட
சிற்பியின் கைகள்தான்
சிறப்பம்சம் கொண்டதுவே நம்
மனமும் அதில் கொள்ளை கொண்டதுவே
சிற்பக்கலை அழியாக்கலை!

*****

சிற்பக்கலையின் சிறப்பினைச் செப்பும் நல்ல கருத்துக்களைத் தம் கவிதைகளில் செதுக்கித் தந்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டுகின்றேன் உளமார!

அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

உளியின் வலி

உள்ளத்தில் எண்ணிய சிந்தை
உருக் கொண்டு எழுந்ததோர் விந்தை
உளி கொண்டு உருவாக்கிய கவிதை
உருவாக்கியவன் கையிலோ கந்தை

விரல்களில் விளையாடும் கலை
வியப்பூட்ட உருவான சிலை
உழைத்து உருவாக்கியவன் நிலை
எண்ணிப் பார்த்தவர் எவரும் இலை

ஆலயங்காணும் கடவுளர் திருமேனி
காலங்கள்தோறும் நிலைத்திடும் வண்ணம்
மாயங்கள் காட்டும் மனங்கவர் சிற்பம் – அவர்
காயங்கள் துயரங்கள் காட்டியா நிற்கும்?!

”சிலை, உளிகொண்டு உருவாக்கிய கவிதை; ஆனால் உருவாக்கியவன் கையிலோ கந்தை. மாயங்கள் காட்டிநிற்கும் சிற்பங்கள் அதை வடித்தவனின் மனக் காயங்களைக் காட்டுவதில்லை” என்று உளி பிடித்தவனின் வலியை – வேதனையைத் தம் கவிதையில் உளந்தொடும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கும் திரு. வேங்கட ஸ்ரீநிவாசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.   

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 299இன் முடிவுகள்

  1. அழகிய கவிதைகள். என் படத்தைத் தேர்வு செய்தமைக்கு மிக்க நன்றி.
    ராமலிங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *