-மேகலா இராமமூர்த்தி

நண்பர்களே! படக்கவிதைப் போட்டி இவ்வாரத்தோடு நிறைவுபெறுகின்றது. இப்போட்டி 300 வாரங்கள் வெற்றிகரமாய்த் தொய்வின்றி நடக்கத் துணைநின்ற நிழற்படக் கலைஞர்கள், தேர்வாளர்கள், ஆர்வத்தோடு கவிதைகள் எழுதிவந்த கவிஞர்கள், வாசகர்கள் அனைவருக்கும் வல்லமை மின்னிதழின் நன்றிகள்!

*****

புகைப்படக் கலைஞர் திருமிகு. அமுதா ஹரிஹரன் எடுத்திருக்கும் இந்த ’ஒளி’ப்படத்தை அவருடைய படத்தொகுப்பிலிருந்து தேர்ந்தெடுத்து நமக்கு வழங்கியுள்ளார் திருமிகு. ராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

தகத்தகாய ஒளியை வானில் பரப்பிக்கொண்டிருக்கின்ற சூரியப் பிஞ்சை ஏந்தியிருப்பதுபோல் காட்சியளிக்கும் இந்தக் கரம் காண்போரின் விழிகளை வியப்பில் விரிய வைக்கின்றது.

”நல்லொளியால் மன்பதையைப்
புரக்கின்றாய் வான்திகழ்
பல்கதிர்ச் செல்வனேநீ
உயிரேது உணவேது

மல்லல்மா ஞாலத்தில்
உன்னருள் தானின்றியே!”

இக்கவினார் காட்சியை வருணித்திட கவிகள் எழுக! நற்கவிதைகள் பொழிக!

*****

”காசினி மீதினில் பேதங்கள் அழித்துப் பசிப்பிணி போக்கி, மாசிலா அன்பு மலர்ந்திட, அஞ்ஞானமெனும் காரிருள் நீக்கிச் சூரியஜோதிக் கவிதைகள் செய்வோம்!” என்று நமை வாஞ்சையோடு அழைக்கின்றார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.

கவிதைகள் செய்வோம்!

வாய்மை நேர்மை வல்லமை வாழ்ந்திடத்
தூய்மை வளர்க்கும் ஞானங்கள் சேரத்
தாய்தமிழ் ஆர்வலர் உய்த்திடும் வகையில்
மெய்க்கலை இன்பங்கள் துய்த்திடச் செய்வோம்

ஆழிசூழ் உலகினில் வாழ்பவரனைவரும்
தாழ்மை ஏழ்மைப் பேதங்களில்லாச்
சூழ்நிலை வளர்க்கும் சமத்துவம் தோன்றச்
சீர்மைத் திறன்கள் வளர்த்திடச் செய்வோம்

காசினி மீதினில் பேதங்கள் அழித்துப்
பசிப்பிணி போக்கி நேசமாய் வாழ
மாசிலா அன்பு மனதினில் மலர்ந்திடப்
பூசல்களில்லா உலகினைச் செய்வோம்

பாரினில் பாரத தேசம் சிறந்திட
நேரிய நிறைவு நித்தமும் பெற்றிங்குக்
காரிருள் அஞ்ஞானம் போக்கிடும் வகையில்
சூரிய ஜோதிக் கவிதைகள் செய்வோம்!

*****

”பாவலர் நண்பா! நீ தாங்கிப்பிடிக்கும் வெள்ளிப் பந்து பகலவனா? சந்திரனா? நிலை மறந்தும் ஒளி மறைக்காதே! நிலவை இரவியை என்றும் போற்றுவோம் நாம்!” என்று ஒளிப்பந்தைக் களிப்போடு போற்றுகின்றார் திருமிகு. சுதா மாதவன்.

தங்கத் தகடுகள் உனைச் சூழ
நீ தாங்கிப் பிடிக்கும் வெள்ளிப் பந்து
தரையினிலே விழுந்தாலும்
தாங்கிடுவாள் பூமித்தாய்!

வானத்தைத் தொட்டனவோ உன் கைகள்
தொட்டவுடன் பறித்திட்டாய் வெள்ளிப் பந்தை
பறித்திட்ட வெள்ளிப் பந்து பகலவனவா இல்லை சந்திரனா
பார்க்காமல் பரிந்துரைப்பாய்
பாவலர் நண்பா!

யாரிடம் இருந்தாலென்ன
உலகை ஒளிமயமாக்கும் பந்துகள்தான்?
நீயே வைத்துக் கொள்
நிலை மறந்தும் ஒளியை மறைக்காதே
நிலவை இரவியை
என்றுமே போற்றுவோம் நாம்!

*****

”கதிரவன் தேய்வதில்லை; தேய்வதற்குப் போதும் ஓர் விண்மதி!” என்றுரைக்கும் திரு. அருணன், ”முடிவின்றிச் சிதறிய உடுக்களாய், வாழ வழிகளும் வாய்ப்புகளும் மனிதர்க்கு ஏராளம்; காலம் கனியும்!” எனும் இனிய மொழிகளைத் தம் கவிதையில் நிறைத்துள்ளார்.

காரிருள் சூழவில்லை,
கதிரவன் தேய்வதில்லை
தேய்வதென்றால்,
போதுமே ஓர் விண்மதி,
பிழைக்கட்டும் உன் மதி.
முடிவிலி சிதறிய உடுக்களாய்,
வாய்ப்புகள் ஏராளம், வாழ வழிகள் ஆயிரம்
காத்திருப்பின்,
காலம் கனியும்! காலை புலரும்!

*****

சூரியப் பந்து கண்டு, கவியெழுத ஆர்வங் கொண்டு, சிந்தனைச் சரங்களைச் சுந்தரக் கவிதைகளாய்த் தந்திருக்கும் வல்லமைக் கவிஞர்களை நெஞ்சாரப் பாராட்டுகின்றேன். தொடர்ந்து கவிதைகள் எழுதிவாருங்கள்! பார்போற்றும் கவிஞர்களாய் நீங்கள் பேர்பெற என் வாழ்த்துக்கள்!

அடுத்து வருவது இவ் இறுதி வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தெரிவுசெய்திருப்பது…

உன் கையிலும்…

அன்றாடப் பணியை
ஆக்கபூர்வமாய் முடித்து
அழகாக்கி வானத்தை
விடைபெறுகிறான்
அந்திச் சூரியன்!

அழகை ரசிக்கும்
மனிதனே
அதைப் பாடமாய்க்கொள்!

சோம்பலில் சுகம் காணாமல்
ஓய்வெடுக்காமல் உழைத்து
உன்பணி செய்தால்
ஒரு நாள்
உன் கைகளில் கிடைக்கும்
உயரத்துச்
சூரியனாம் வெற்றியே…!

”மனிதனே! தன் அன்றாடப் பணியை ஆக்கபூர்வமாய் முடித்து விடைபெறுகின்றான் அந்திச் சூரியன். அவன்போல் நீயும் சோம்பலின்றி உழைத்தால் உயரத்துச் சூரியனாய் உனக்கும் வெற்றி கிட்டும்!” என்று உழைப்பின் உயர்வைத் தம் கவிதையில் அழகாய் வடித்துத் தந்திருக்கும் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

படக்கவிதைப் போட்டி தொடங்கிய காலந்தொட்டுத் தவறாமல் அதில் பங்கேற்றுவருகின்ற அவரின் கவியார்வத்துக்கு என் சிறப்பான பாராட்டுக்கள்! 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *