படக்கவிதைப் போட்டி – 300 (நிறைவு)
அன்பிற்கினிய நண்பர்களே!
படக்கவிதைப் போட்டியைத் தொடங்கி, இதோ 300ஆவது வாரத்தைத் தொட்டுவிட்டோம். ஏராளமான புதிய கவிஞர்களையும் புகைப்படக் கலைஞர்களையும் அடையாளம் காண, இந்தப் போட்டி உதவியுள்ளது. இதில் ஊக்கத்துடன் பங்கேற்ற, இதற்குத் துணை நின்ற கவிஞர்கள், தங்கள் புகைப்படங்களை வழங்கிய புகைப்படக் கலைஞர்கள், படங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கிய சாந்தி மாரியப்பன், ராமலக்ஷ்மி உள்ளிட்ட தேர்வாளர்கள், நடுவராகத் தொடர்ந்து சீரிய செயலாற்றி வரும் மேகலா இராமமூர்த்தி. சில வாரங்களுக்கு நடுவராகச் செயலாற்றிய கவிக்கோ ஞானச்செல்வன், தொடர்ந்து வெளியிட்ட பவளசங்கரி, வல்லமை ஆசிரியர் குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றிகள். ஒரே போக்கில் தொடர்ந்து செல்ல வேண்டாம் என்பதால், இந்த வாரத்துடன் இந்தப் போட்டியை நிறைவு செய்கிறோம். இதுவே இந்த வரிசையில் கடைசிப் போட்டி. அடுத்த வாரங்களில் வேறு புதிய போட்டியை அறிமுகப்படுத்துவோம். இப்போது இந்த வாரப் போட்டிக்குச் செல்வோம்.
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
புகைப்படக் கலைஞர் அமுதா ஹரிஹரன் எடுத்த இப்படத்தை அவர்களது தொகுப்பிலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (28.03.2021) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
உன் கையிலும்…
அன்றாடப் பணியை
ஆக்கபூர்வமாய் முடித்து
அழகாக்கி வானத்தை
விடைபெறுகிறான்
அந்திச் சூரியன்..
அழகை ரசிக்கும்
மனிதனே
அதைப் பாடமாய்க்கொள்..
சோம்பலில் சுகம் காணாமல்
ஓய்வெடுக்காமல் உழைத்து
உன்பணி செய்தால்
ஒரு நாள்
உன் கைகளில் கிடைக்கும்
உயரத்து
சூரியனாம் வெற்றியே…!
செண்பக ஜெகதீசன்…
கவிதைகள் செய்வோம்
வாய்மை நேர்மை வல்லமை வாழ்ந்திட
தூய்மை வளர்க்கும் ஞானங்கள் சேர
தாய்தமிழ் ஆர்வலர் உய்த்திடும் வகையில்
மெய்கலை இன்பங்கள் துய்திடச் செய்வோம்
ஆழிசூழ் உலகினில் வாழ்பவரனைவரும்
தாழ்மை ஏழ்மைப் பேதங்களில்லா
சூழ்நிலை வளர்க்கும் சமத்துவம் தோன்ற
சீர்மைத் திறன்கள் வளர்த்திடச் செய்வோம்
காசினி மீதினில் பேதங்கள் அழிந்து
பசிப்பிணிப் போக்கி நேசமாய் வாழ
மாசிலா அன்பு மனதினில் மளர்ந்திட
பூசல்களில்லா உலகினைச் செய்வோம்
பாரினில் பாரத தேசம் சிறந்திட
நேரிய நிறைவு நித்தமும் பெற்றிங்கு
காரிருள் அக்ஞானம் போக்கிடும் வகையில்
சூரிய ஜோதிக் கவிதைகள் செய்வோம்
தங்கத் தகடுகள் உனை சூழ
நீ தாங்கிப் பிடிக்கும் வெள்ளிப் பந்து
தரையினிலே விழுந்தாலும்
தாங்கிடுவாள் பூமித்தாய்
வானத்தை தொட்டனவோ உன் கைகள்
தொட்டவுடன் பறித்திட்டாய் வெள்ளிப் பந்தை
பறித்திட்ட வெள்ளிப் பந்து பகலவனவா இல்லை சந்திரனா
பார்க்காமல் பரிந்துரைப்பாய்
பாவலர் நண்பா
யாரிடம் இருந்தாலென்ன
உலகே ஒளிமயமாக்கும் பந்துகள்தான்
நீயே வைத்துக் கொள்
நிலை மறந்தும் ஒளியை மறைக்காதே
நிலவை இரவியை
என்றுமே போற்றுவோம் நாம்
சுதா மாதவன்
காரிருள் சூழவில்லை ,
கதிரவன் தேய்வதில்லை
தேய்வதென்றால்,
போதுமே ஓர் விண்மதி,
பிழைக்கட்டும் உன் மதி.
முடிவிலி சிதறிய உடுக்களாய்,
வாய்ப்புகள் ஏராளம், வாழ வழிகள் ஆயிரம்
காத்திருப்பின்,
காலம் கனியும்! காலை புலரும்!
-அருணன்(அருண்கிருஷ்ணா)