Author: விவேக்பாரதி

  • தஞ்சைப் பெருவுடையான்

    தஞ்சைப் பெருவுடையான்

    -விவேக்பாரதி

    தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு நன்னாள்…

    உருவுடை யானை உருவமி லானை உளத்தமரத்
    தருவுடை யானைத் தமிழுடை யானைத் தனதுடல்மேற்
    றிருவுடை யானைத் திரள்சடை யானைத் திசையளந்த
    பெருவுடை யானைப் பிடிப்பவர்க் கில்லை பிறப்பினியே!!

     

     

    Share
  • புத்தாண்டு அழகே வருக

    புத்தாண்டு அழகே வருக

    விவேக் பாரதி

    புத்தாண் டழகே வருக! – நாளும்
    புதுமை இன்பம் இயல்பாய்த் தருக!
    இத்தோ டின்னும் நலமாய் – ஒரு
    ஈடில் லாத சுகமாய்த் தரமாய்
    புத்தாண் டழகே வருக!

    கண்ணில் பட்டவை வண்ண மாகுக
    காற்றில் ஆயிரம் பண்கள் தூவுக
    மண்ணில் அனைத்தும் இன்ப மாகுக
    மனமெல் லாமும் மலர்க ளாகுக

    எண்ணம் நினைப்பன ஏற்ற மாகுக
    எல்லாம் எல்லாம் மாற்ற மாகுக
    தண்ணீர் அமுதம் வானில் வளர்க
    தரையெல் லாமும் நிறையென் றாக

    வயல்கள் எல்லாம் வளமை காண்க
    வழிகள் எல்லாம் வலிமை காண்க
    புயங்கள் உடல்கள் உறுதி காண்க
    புதிராம் வாழ்க்கை புதுமை காண்க

    நியதிகள் எல்லாம் நிலைமை காண்க
    நித்தமும் சத்தியம் நிறைவைக் காண்க
    முயற்சி அனைத்தும் முனைப்பைக் காண்க
    முற்றும் லட்சியம் வெற்றியைக் காண்க

    ஏமாற் றங்கள் இனிமறை யட்டும்
    ஏகாந்தங்கள் இனிநிறை யட்டும்
    நாமாய் உழைக்கும் நலம்வள ரட்டும்
    நல்லவர் நெஞ்சில் நயம்விளை யட்டும்

    ஓமெனும் தத்துவம் உள்ளுறை யட்டும்
    ஒவ்வொரு கணமும் களியிருக் கட்டும்
    ஆமிவை எல்லாம் இனியமை யட்டும்
    ஆண்டுகள் நிலையிலை அகமுண ரட்டும்!!

    Share
  • சித்திர நடம்

    சித்திர நடம்

    விவேக்பாரதி

    நண்பன் சத்திய நாராயணன் இந்தப் படம் எடுத்துவந்து அதற்கொரு கவிதை தரும்படி கேட்டான்!நேற்று முந்தினம் தோழி அமிர்தாவின் நாட்டியத்தைக் காண நேர்ந்தது! அதை இது பிரதிபலிக்க, அந்த இன்பம் இந்த இன்பத்தில் வெளிவந்தது!

    சச்சல சலவென வணுங்கு சலங்கை
    தத்திமி தகஜனு சுரங்கள் வழங்க
    நித்தில நகமொடு நிமிர்ந்த பதங்கள் – நடமாட

    மத்தள ஜதிகொடு வணங்கி மயங்கி
    வக்கனை மலர்குழல் விரிந்து சுழன்று
    மச்சம தெனும்விழி நகர்ந்து நகர்ந்து – விளையாட

    சிற்றிடை யெனுமொரு குழந்தை மருங்கி
    லொட்டிய அரைவடம் சினுங்கி நடுங்க
    உத்தர தனமவை யுயர்ந்து குலுங்க – வொருமாது

    சத்திய விறைவரு லங்க ளறிந்த
    சித்திர நடவகை பொழிந்த துகண்டு
    முற்றிய கவிமனம் வியந்து புகழ்ந்து – மகிழாதோ!!

    Share
  • கவிஞன் கிரேஸி மோகன்

    கவிஞன் கிரேஸி மோகன்

    -விவேக்பாரதி
     
    கண்ணனையே எண்ணியவன் காலமெலாம் கண்ணன்வாய்
    வெண்ணெயென நல்விகடம் வீசியவன் – பண்ணமையும்
    பாட்டும் கவிதைகளும் பண்ணியவன்! நம்கிரேஸி
    நாட்டில் பிறந்ததிந்த நாள்!
     
    நாளொன்று வீழ நமதில்லம் தேடிவரும்
    காலன்ன மோகன் கவிதைகள் – மாலனைக்
    கோட்டோவி யம்செய்யும் கேசவ் படங்கட்குப்
    பாட்டோவி யம்செய்வான் பார்த்து!
     
    பார்த்தால் எளியன் பழகப் புதுக்குழந்தை,
    சேர்ந்தால் அனுபவங்கள் செல்வங்கள் – வார்த்தையில்
    பன்வைத்துப் பேசும் படவசன கர்த்தாவைப்
    பண்வைத்து நெஞ்சே பணி!
     
    பணிவான நெஞ்சும் பகவானின் நாமம்
    அணியான நெற்றி அழகும் – துணிவான
    ஹாசியமும் நட்பின்மேல் ஆதரவும் சேர்த்தால்
    கிரேஸியென மாறும் கிளர்ந்து!
     
    கிளர்ச்சி பெருகும் கிரேஸி வசனம்
    வளர்ச்சி தருமே வழியில் – தளர்ச்சியே
    இல்லாமல் வேடம் எடுத்துநமை ஆட்டிடும்
    வில்லாளி வீரன் வியப்பு!
     
    வியப்பிவன் ஏற்கும் விசித்திர ரூபம்
    நயமுடை ஓவியன் நாட்டில் – பயன்செய்
    நடிகன் கவிஞன் நவயெழுத் தாளன்
    அடியன் திருமால் அடி!
     
    அடித்தாலும் நம்மோகன் ஹாசியத்தால் நம்மைக்
    கடித்தாலும் எல்லாம் கவினே – வெடிக்காத
    பட்டாசு விற்றுப் பழக்கமில் லாதவன்
    தட்டாத கையில்லை சான்று!
     
    சான்றோர் புகழும் சமர்த்தன் வயதிலெனைப்
    போன்றோர் விரும்பும் புதுமையன் – ஆன்ற
    படிப்புக்குச் சொந்தம் பலர்போற்றும் நல்ல
    நடிப்புக்குச் சொந்தம் நரன்!
     
    நரனென்னைக் காத்திடுக நாரணா என்றே
    சுரம்நூறு சொல்வான் தினமும் – கரமென்ன
    எந்திரமா மந்திரமா ஏடு நிறைக்கின்ற
    தந்திரம்யார் தந்த தமிழ்
     
    தமிழில் நம்மோகன் தந்த தனைத்தும்
    அமிழ்தம் இழைத்த அணிகள் – தமிழைச்
    சுவைஞர்கள் கோடி சுவைக்கக் கொடுத்த
    கவிஞன் கிரேஸிமோ கன்!!
     
    16.10.2019
     
     
     
    Share
  • அருணகிரியும் ஆனைமுகனும்

    அருணகிரியும் ஆனைமுகனும்

    -விவேக்பாரதி 

    காலை எழுந்து வழக்கம்போல் திருப்புகழ் பாடல்களை யூடியூபில் பாடவிட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். முதல் வரிசையில் வந்த சில பாடல்கள் எனக்குள் ஒரு சிந்தனையைக் கிளப்பியது. செந்தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அருளால் வண்ணத் தமிழ் படைத்தவர் அருணகிரிநாதர். அவர் அருளியிருக்கும் திருப்புகழ் முருக வழிபாட்டைக் கடைபிடிப்பாருக்கு உயரிய செல்வம். தமிழ்க் கவிதை உலகுக்குப் பெரும் பேறு. திருவண்ணாமலை கோயில் கோபுரத்தின் மேலிருந்து உயிரை மாய்த்துக் கொள்ளக் குதித்தவரை முருகன் தடுத்தாட் கொண்டு மந்திர உபதேசம் வழங்கி, தவத்தில் இருக்கச் செய்தான். “சும்மா இரு சொல்லற” என்ற முருகனின் மந்திர உபதேசம் கேட்டுச் சும்மா தியானத்தின் அமர்ந்த அருணகிரிக்கு வஜ்ஜிர தேகமும், ஞான விளக்கமும் கிடைத்தது. பின்னர் முருகப் பெருமானே அடியெடுத்துக் கொடுக்கத் திருப்புகழ் என்னும் புதுவித வண்ணப் பாடல்களைத் தலங்கள் தோறும் சென்று பாடுவாராயினார். இது அருணகிரி வரலாறு. அருணகிரிநாதரின் அதீத பக்தி, அபாரமான கவித்துவம். அதனை அவரது பாடல்களில் அநாயசமாக கவனிக்க முடியும். முருகனின் அறுபடை வீடுகளில் தொடங்கி அருணகிரிநாதர் எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று முருகனைப் பாடிப் பரந்தார்.

    முருகன் அடி எடுத்துக் கொடுத்து அருணகிரிநாதர் பாடிய ‘முத்தைத் தரு’ என்கிற பாடலே திருப்புகழில் முதல் பாடலாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னம் விநாயகரை அவர் பாடிய சில பாடல்களை முன்வரிசையில் வைத்துப் பதிப்புகள் வெளியாகின்றன. எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளான விநாயகனைப் பாடுதல் நம் தமிழ்க் காவிய மரபு. அதன் அடிப்படையில் உரையாசிரியர்கள் திருப்புகழை அவ்வாறு தொகுத்திருக்கலாம். அருணகிரிநாதர் பாடிய ஏணைய செய்யுட்களான கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகியனவும் முதல் பாடலில் விநாயகரைப் போற்றுவதாகவே அமைந்திருக்கின்றன.
    அருணகிரிநாதர் உறவு சொல்லிப் பாடுவதில் வல்லவராக இருக்கிறார், குறிப்பாக முருகனை நாராயணனாகிய திருமாலின் மருகனே என்று அழைப்பதிலும், சிவசக்தி மைந்தன் என்று புகழ்வதிலும், விநாயானின் தம்பி என்று பெருமை கூறுவதிலும் ஆர்வமாக இருந்திருக்கிறார். இது அவரது எல்லாப் பாடல்களிலும் வெளிப்படை. குறிப்பாக விநாயகப் பெருமானை அருணகிரிநாதர் எந்த இடத்தில் வைத்து வழிபட்டிருக்கிறார் என்பது கந்தர் அலங்காரத்தில் அவர் சொல்லும் பாடலில் விளங்கும்.

    அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
    வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
    தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
    கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.

    தம்முடைய டைரிக் குறிப்பு போல அருணகிரிநாதர் எழுதியிருக்கும் இந்தப் பாடலில், விநாயகன் தம்பி முருகனைத் தாம் கண்டதாகப் பாடுகிறார். அதாவது வருவார்களுக்கு முக்தியைத் தர வல்ல அருணை என்னும் திருவண்ணாமலை கோவில் கோபுரத்துக்குப் பக்கத்தில், அந்த வாயிலுக்கு அருகில் தெற்குப் பக்கமாக அமர்ந்திருக்கிறான் விநாயகப் பெருமான். அவனைத் தரிசிக்க வருபவர்கள் தலையில் குட்டு இட்டு, உக்கி போட்டு வழிபட்டு, மேலும் படையலாக வழங்கும் சர்க்கரை முதலிய பொருட்களை ஏற்கும் விநாயகன் என்னும் யானைக்கு இளைய யானையான முருகன். அவனைக் கண்டேன் என்று அருணகிரி வாக்குமூலம் தருகிறார்.

    வயலூர் திருக்கோவிலைப் பாட வந்த அருணகிரிநாதர் அந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானைப் பாடும் அழகைப் பாருங்கள்…

    பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
    பட்சியெனு முக்ரதுர …… கமுநீபப்

    பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
    பட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும்

    திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
    சிற்றடியு முற்றியப …… னிருதோளும்

    செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
    செப்பெனவெ னக்கருள்கை …… மறவேனே

    இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
    எட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண்

    டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவௌ
    ரிப்பழமி டிப்பல்வகை …… தனிமூலம்

    மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
    விக்கிநச மர்த்தனெனும் …… அருளாழி

    வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
    வித்தகம ருப்புடைய …… பெருமாளே.

    இது நாம் அனைவரும் அறிந்த பாடலே. அருணகிரிநாதர் இதிலே வழங்கும் பட்டியல்,  விநாயகர் சதுர்த்தி திருநாளில் நாம் ஒருதரம் நினைக்க வேண்டியது. கரும்பு, அவரை, நல்ல கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்டின் எச்சில் எனப்படும் தேன், அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளறிப்பழம், இடித்த மாவு வகைகள், கிழங்கு வகைகள், சிறந்த உணவுகள், கடலை ஆகிய பட்சணங்களைப் பிரசாதமாக தருவதாக அருணகிரி பாடுகிறார்.

    மற்றோரிடத்தில், தம்பி முருகப் பெருமானின் காதல் நாடகத்துக்கு அண்ணன் விநாயகன் துணை புரிந்த கதையையும் கைத்தல நிறைகனி பாடலில் விளக்குகிறார். முருகனைப் பாடுதலையே தம்முடைய மறுபிறப்பின் பயனாகக் கொண்டு வாழ்ந்த அருணகிரிநாதர் விநாயகனைப் பாடியிருக்கும் பாங்கு நம்முடன் மிக நெருக்கமானவரை வாஞ்சையுடன் வாழ்த்துவது போல தொணிப்பது ஆனந்தம். நாமும் ஒருகணம் அருணகிரிநாதர் பாடிய விநாயகனைக் காதாரக் கேட்டால் சுகம். கலைவாணி தந்த வரமாக அதற்குத்தான் டி.எம்.எஸ், சம்பந்தம் குருக்கள் ஆகியோர் பாடிய பாடல்கள் யூடியூபில் கிடைக்கின்றனவே!

    பக்கரைவி சித்ரமணி பாடல் – https://www.youtube.com/watch?v=U9CM142K1YA

    கைத்தல நிறைகனி பாடல் – https://www.youtube.com/watch?v=2laPCCsVY_Y

    Share
  • அம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019

    அம்மை துர்க்கை – நவராத்திரி பாடல்கள் 2019

    -விவேக்பாரதி 

    நமக்கு அவள் அணைப்பு போதும்! அவளுக்கு என்ன வெண்டும்? நம்மையே வேண்டும் என்று கேட்கிறாளே! அட! யாரடா இவள் என்று பார்த்தால் அவள் பெயரே பெயராத அளவு நெஞ்சத்தில் நிற்கிறது…

    என்னையே தனக்காகக் கேட்பவள் – அவள்
    என்னுளே தானாகிப் பூப்பவள்
    மின்னலே சிரிப்பாகக் கொண்டவள் – எனை
    மீட்டவே விரல்கொண்டு வந்தவள்!
    முன்னமே நிற்கின்ற மாயையள் – ஒரு
    முறுவலில் சாய்க்கின்ற பூவிதழ்
    அன்னையாய் அன்பளாய் வருபவள் – அவள்
    ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!

    சிம்மத்தின் மேல்வீற்றிருப்பவள் – பிள்ளைச்
    சிணுங்கலை அறிகின்ற காதினள்
    சும்மா இருக்காமல் ஓரமாய் – நின்று
    சுருக்கென்று கிள்ளிச் சிரிப்பவள்!
    நம்மையே அவள்தான் படைத்தவள் – எனில்
    நம்முள்ளும் அவள்தான் இருப்பவள்!
    அம்மாடி எத்தனைப் புதிரவள் – அவள்
    ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!

    கிண்ணத்தில் தேன்கொண்டு வருபவள் – பழம்
    கிள்ளிநம் வாயிலே தருபவள்
    கன்னத்தில் முத்தம் இழைப்பவள் – அடர்
    காட்டினில் தனியாய் வசிப்பவள்!
    அன்னத்தில் அமுதாய் இருப்பவள் – மக்கள்
    அகத்தினில் அன்பாகி வளர்பவள்
    அன்னவள் எப்போதும் எளியவள் – அவள்
    ஆதிதுர்க்கை எனும் பெயரினள்!

    பூச்சூட்டிப் பார்க்கச் சிரிப்பவள் – பகை
    பொய்சூடும் நெஞ்சை எரிப்பவள்
    காய்ச்சலைத் தந்தே ரசிப்பவள் – அதைக்
    கவிதையாய் மாற்றிக் கொடுப்பவள்
    பாய்ச்சலில் வரியற்ற புலியவள் – கொஞ்சம்
    பச்சிளம் பிள்ளைபோல் வாழ்பவள்!
    ஆய்ச்சியர் பால்போல் குணத்தினள் – அவள்
    ஆதிதுர்க்கை எனும் பெயரினள்

    பெயர்சொல்லிக் கூப்பிட வருபவள் – குணம்
    பெயராத வண்ணமே தருபவள்
    மயல்வந்து சாய்க்கின்ற வேளையில் – சூலம்
    மழுவேந்திக் காத்திடும் தைரியள்
    புயல்வந்து நின்றதாய்த் தெரிபவள் – சிறு
    பூவுக்குள் தேன்போல் இனிப்பவள்
    அயலென்ப தில்லாத அசலிவள் – எங்கள்
    அம்மை துர்க்கை எனும் பெயரினள்!!

    03.10.2019

    Share
  • அணைப்பொன்று போதும் – நவராத்திரி பாடல்கள் 2019

    அணைப்பொன்று போதும் – நவராத்திரி பாடல்கள் 2019

    -விவேக்பாரதி 

    என்ன வேண்டும்? நமக்கு என்னதான் வேண்டும்? தினந்தோறும் பூசைகள் திசை எட்டும் பாட்டுகள். யாவும் எதற்காக? மனதே கேள்வி கேட்டு மனதே பதில் சொல்கிறதாம்… எல்லாம் அவள் அணைப்புக்குத்தானே! அதைத்தான் ஊர் நம்புமா?
    அணைப்பொன்று போதும் அம்மா! – உன்
    அணைப்பொன்று போதும் அம்மா!
    என்
    நினைப்பெல்லாம் தூளாக நெஞ்செங்கும் நீயாக
    கணப்போதும் மறவாத காருண்யம் நான்காண!
    புதுப்பாதை நான்போட்டு நடக்கின்ற போதில்
    புயலாக அதைவந்து கலைப்பவளே!
    விதிப்பாதை எனக்காக நீபோட்டு வைத்து
    விளையாடிப் பாரென்று அழைப்பவளே!
    எதைக்கேட்டு எதைப்பார்த்து என்னோடு சேர்ந்தாய்
    எனக்கொன்றும் தெரியாதடி! அட
    இதுக்கென்ன தயக்கம்?என் இதயத்தின் ஓரம்
    இதமாக பதில் சொல்லடி!
    சிவத்தோடு நீயாடும் நடுஜாம நேரம்
    விசுக்கென்று பாட்டோடு எழுப்பிடுவாய்!
    கவலைகள் எனைச்சூழ்ந்து களியாட்டும் போடும்
    கண்ணென்னும் தீயாலே அழித்திடுவாய்!
    அடுத்தென்ன எனக்கென்று தெரியாத நேரம்
    அடியாகி நிற்பவளே! உயிர்
    கொடுத்தேனும் உன்பாதம் தொடவேங்கும் நெஞ்சைக்
    குறிபார்த்துச் சிரிப்பவளே!
    காதோடு மணியோசை புதுச்சந்தம் போட
    கவிபாட எனைக்கூட்டிக் கேட்பவளே
    பாதாதி கேசத்தை நான்பாடும் போதில்
    பக்கத்தில் நின்றென்னை ரசிப்பவளே
    நீதந்த பாட்டுக்கள் நீதந்த ராகம்
    நிஜம் என்று ஊர் நம்புமா? – அடி
    நீயே உன் பாட்டுக்கு ரசிகைபோல் ஆடும்
    நிலைதந்த சந்தேகமா?
    -02.10.2019
    Share
  • குட்டி ரெட்ட ஜடை – நவராத்திரி பாடல்கள்

    குட்டி ரெட்ட ஜடை – நவராத்திரி பாடல்கள்

    -விவேக்பாரதி

    அவளுக்குத்தான் எத்தனை உருவம். எத்தனை வடிவம். எதுதான் அவள் வயது? முதுக்கிழவியாய்த் தெரியும் அவளே மறுகணத்தில் முறுவலிக்கும் குழந்தையாகிறாள்! ஆ! அந்தக் குழந்தைதான் எத்தனை அழகு…

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்!

    குட்டி ரெட்டஜட கட்டிக்கிட்டு ! ஒரு
    கோலச் சிங்காரியும் வந்தாளாம் – ஒரு
    பொட்டுன்னு நெத்தியில் வட்டத்த வெச்சவ
    போட்டி நிலாவுக்கு என்றாளாம்

    சின்னப் பதத்துல வண்ணச் சலங்க
    சினுங்க சினுங்க நடந்தாளாம் – ஒரு
    மின்னலப் பிடிச்சு பாலில் கொழச்சு
    மேனியில் பூசித் திரிஞ்சாளாம்!

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்

    தத்தித் தத்தி வெளையாடுறப்ப முத்து
    தரையில் விழுந்ததாம் நட்சத்திரம் – மொகம்
    பொத்திப் பொத்திவெச்சு போக்குகாட்டி அவ
    பொக்குன்னு சிரிக்கும் விசித்திரம்!

    கலுக்கு கலுக்குன்னு சிரிச்சுத் தொலைக்குற
    காளி தேவியிங்க வந்தாளாம் – அண்டம்
    குலுக்கிப் பிடிக்கிற கோவக்காரி! ஒரு
    குட்டிப் பெண்ணுருவில் வந்தாளாம்!

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்

    அள்ளி அணைச்சிட கையொசத்தி! நம்ம
    ஆட்டிப் படைக்குற ராசாத்தி – அந்தக்
    கள்ளி ஒறவுல சிக்கிக்கிட்டா! இனி
    காலத்துக்கும் அவ அரசாட்சி

    தத்துபித் துன்னவ பேசிடுவா! அதில்
    தத்துவம் இருக்கும் கேட்டுக்கணும் – கொஞ்சம்
    கத்தி அழுது முரண்பிடிப்பா! அதில்
    காரணம் இருக்கும் தாங்கிக்கணும்!

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்

    என்னென்னவோ சொல்லி என்னென்னவோ செஞ்சு
    ஏட்டிக்குப் போட்டி படுத்திடுவா – அதில்
    ஒன்னொன்னும் ஒருரகம் ஒன்னுக்கும் ஒருகத
    ஓயாம பேசிச் சலிச்சிடுவா!

    அட்டக் கருப்பியாம் பார்வைக்குத்தான்! அதில்
    அத்தனை அத்தனை வண்ணமடி – வந்து
    ஒட்டிக்கிட்டதொரு நாழிகைதான் இன்னும்
    ஓடுது ஓடுது எண்ணமடி!!

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்திஓம்!!

    -விவேக்பாரதி
    01.10.2019

    அருமையான படங்களைக் கொடுத்த இன்ஸ்டாகிராம் ரமேஸ் ஹரிகிருஷ்ணசாமி க்கும் பாடிக்கொடுத்த நித்யா அக்காவுக்கும் நன்றி…

    https://youtu.be/V06JMmGEWVM

    Share
  • பராசக்தி சக்தி – நவராத்திரி பாடல்கள்

    பராசக்தி சக்தி – நவராத்திரி பாடல்கள்

    -விவேக்பாரதி
    இரவில் பகலில் எல்லா நேரமும் விழிக்குள் சூழ்ந்திருக்கும் சின்ன இருள், அவள் உருவாகத் தெரிகிறது. மனம் முணுமுணுக்கிறது. அவள் பெயரையே உச்சரிக்கிறது! சொல்லிக்கொண்டே இருந்தால் மட்டும் போதுமா? நெஞ்சின் ஏழ்மை நீங்கவா போகிறது???
    பராசக்தி சக்திசக்தி பராசக்தி என்றுசொல்லிப்
       பார்த்திருக்கும் ஏழை நெஞ்சமே! – உள்ளில்
    வராசக்தி வந்துநின்று தராசக்தி பொழிவதை
       மறப்பதென்ன ஏழை நெஞ்சமே! – இருள்
    பராவிடும் அகத்தில்நல்ல பகலவன் உதிப்பகண்டு
       படபடக்கும் ஏழை நெஞ்சமே! – கள்
    விராவுகின்ற கவிதைசொல்லி வீரையெங்கள் இரவைமெல்ல
       விழுங்குகிறாள் ஏழை நெஞ்சமே!
    கற்கள்தம்மை மலர்களாக்கிக் காலடியில் தூவினாலும்
       கண்பனிக்கப் பார்த்திருப்பவள் – வெறும்
    சொற்களில் பிதற்றுமெங்கள் சோர்வெலாம் அகற்றியுள்ளில்
       சூரியன் சிரிக்கச் செய்பவள்! – சின்னப்
    புற்களுக்கும் ஆண்மைதந்து புட்களுக்கும் வானம்தந்து
       புதிர்கள்கோடி செய்து வைப்பவள் – நெஞ்சக்
    கற்பகத்து நிழலில்நம்மைக் காலம்தோறும் வாழவைக்கும்
       காளியென்று கூவு நெஞ்சமே!
    அரக்கியென்றும் தோற்றம்கொண்டு அகல்சிமிட்டல் குணமும் கொண்டு
       அந்தரத்தில் வாழும் தெய்வதம் – நாம்
    ஆற்றுகின்ற காரியங்கள் அத்தனைக்கும் சாட்சியாகி
       ஆட்சிசெய்யும் சக்தி மந்திரம்! – நல்ல
    நெருப்பவிழ்ந்து கூந்தலாகி நேரிழையில் ஓடுகின்ற
       நேர்த்தியந்த காளி ரூபமாம் – அதை
    நெக்குருகக் கண்டுகண்டு சொக்கிசொக்கி யேவியந்து
       நெஞ்சிலேந்த நாளும் இன்பமாம்!
    கனகனகன கனகனவென திருநகையினில் ஒலிவரவவள்
       காற்றிலே சிரிக்கும் காளியாம் – மனம்
    காமமென்னும் ஏமந்தன்னில் கண்மயங்கி நிற்கும்போது
       காட்சிதந்து மீட்கும் நீலியாம் – தினம்
    நினைவலைகளில் கனவிருள்களில் புதுப்புதுசுரம் படிப்பவருடன்
       நிழலினுருவில் ஆடும் ஜோதியாம் – உயிர்
    நீவிவிட்டு மடியமர்த்தித் தழுவிடாமல் நாடகங்கள்
       நீட்டுகின்ற மாயக் காரியாம்!
    மாயம்காட்டும் காளியுருவை மனதுமொத்தம் வைத்தால்
    சாயம்நீங்கும் மறுகணத்தில் சந்நிதிமுன் தோன்றும்
    நேயமேறும் நெஞ்சினுக்குள் நினைவழிந்து போகும் – நாம்
    காயம்மட்டும் இல்லையென்னும் கதைவிளங்கும் கண்டீர்
    சித்தசுத்தி நேருமதில் நித்தபக்தி ஊறும்
    கத்திக்கத்தி யேதிரிந்த காட்டுநெஞ்சம் ஓயும்
    சத்தியங்கள் தோன்றுமங்கு தத்துவங்கள் தோன்றும் -பரா
    சக்திசக்தி சக்திசக்தி சக்தியென்றால் போதும்…
    -30.09.2019
    Share
  • பழகிப் போன குரல் – நவராத்திரி பாடல்கள்

    பழகிப் போன குரல் – நவராத்திரி பாடல்கள்

    -விவேக்பாரதி 

    ஆயிரம் அலுவல்களுக்கு மத்தியிலும், கிடைத்துவிடும் ஏதோ ஒரு பயணப் பொழுதில், சில நிமிட இடைவெளிக்குள் ஒரு பாடல் நெஞ்சுக்குள் இசைக்கப்படுகிறது. யார் இசைக்கிறார்? எங்கோ கேட்ட குரலாய்…
    பழகிப் போன குரலில் உள்ளே
       பாடல் கேட்கிறது! – ஆ
       பாரதி பாடுகிறாள் – மனம்
    மெழுகாய் மறுகணம் மலையாய்க் கனக்க
       மெல்லிசை மீட்டுகிறாள்! – அடடா
       மேனியை மீட்டுகிறாள்!
    வெள்ளைப் புடைவை தங்கப் புன்னகை
       வீணை கையளென – அவள்
       விரலில் தந்துபிகள்! – ஒரு
    பள்ளத்தினில் நிறை வெள்ளத் துகளெனப்
       பரவிடும் பாடல்களில் – உள்ளே
       பலவித சங்கதிகள்
    நெஞ்சில் சொற்களின் தனியரசாங்கம்
       நேர்வது தெரிகிறது – அவளின்
       நேர்முகம் தெரிகிறது! – உயிர்
    தஞ்சம் என்றவள் தாளடி சேர்கையில்
       தர்மம் தெரிகிறது – அறுபடும்
       கர்மம் புரிகிறது
    கல்விக் கதிபதி காக்கும் குணநிதி
       கவிதைப் பிரியையவள் – வாசக்
       கருமைக் குழலியவள்! – எழும்
    சொல்வித்துக்குள் ககனம் நிரப்பி
       சொலிக்கும் மாயையவள்! – நேரில்
       தோன்றும் சாயையவள்!
    ஒருநாள் தெரிவாள் ஒருநாள் மறைவாள்
       ஓயா விளையாட்டு! – சற்று
       ஓய்ந்தால் தலையாட்டு – என்றே
    தருவாள் பாடலைப் பொழிவாள் அந்தத்
       தாயின் ஒருபாட்டு – காற்றில்
       தரைவரும் தாலாட்டு!!
    -29.09.2019
    Share
  • ஆத்தாடி ஆத்தா – நவராத்திரி பாடல்கள்

    ஆத்தாடி ஆத்தா – நவராத்திரி பாடல்கள்

    விவேக்பாரதி

    நவராத்திரி முழுவதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடல் நிகழும் பேற்றினைப் பராசக்தி கொடுக்கிறாள். அவள்தான் பாட்டுக்கு இறைவி ஆயிற்றே! இதோ 2019 ஆம் ஆண்டின் முதல் பாடல்…

    ஆத்தாடி நம்மவூரு ஆத்தா! என்ன
    ஆளில்லா நேரத்துல பார்த்தா! ஒரு
    அன்பால பாடச்சொல்லி கேட்டா! அதுல
    அடிக்கு அடி மடியில் தாளம் போட்டா!

    ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!

    காத்தாடி வுட்டுக்கிட்டா காலமெல்லாம் சிரிச்சிக்கிட்டா
    கண்ணசரும் நேரத்துல நெஞ்சுக்குள்ள ஒளிஞ்சிகிட்டா
    பார்த்துத் தேணருறெண்டா பக்கம் பக்கமா பதறுறெண்டா!
    பாட்டுக்குள்ள ஒளிஞ்சு சிரிக்கும் பராசத்திய தேடுறெண்டா!

    முழுசா அவனெனப்பு முதுகுதண்டுல குறுகுறுப்பு
    மொத்தமா ராத்திரியில பத்துதரம் கண்விழிப்பு
    அழகா நின்னவடா! அசடுபோல சிரிச்சவடா!
    அடிக்கடி சிரிப்புச் சத்தம்! மொகத்த மட்டும் காணலடா!

    ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!

    தோளுல ஊஞ்சகட்டி தூளியாட்டி சிரிச்சவடா
    தொட்டுத்தொட்டு அகல்வெளக்க பத்திரமா பார்த்தவடா!
    காளி மாரியின்னு பாட்டுப்பாட குதிச்சவடா
    கண்ணுல சிக்காதத்தான் தேடவுட்டு ஒளிஞ்சவடா!

    உள்பக்கம் திரும்பிக்கிட ஒருபயலும் நெனப்பதில்ல
    ஒடனே நெனச்சாலும் திரும்பிப் பார்க்க தெரியவில்ல
    துள்ளுற காட்டெலிய தூக்கியொரு வளையில்வெச்சா
    தூணுக்குப் பின்னால அவ உடுக்குசத்தம் ஒலிக்குமடா!

    ஆமாண்டா ஆத்தா! தாளம் போட்டா!!

    28.09.2019

    Share
  • வல்லமையும் கிரேஸியும்

    வல்லமையும் கிரேஸியும்

    விவேக் பாரதி

    சிரிப்பு என்னும் மருத்துவத்தால் நம் கவலை நோய்கள் அத்தனையும் மறைக்க வைத்த சிரிப்பு டாக்டர் கிரேஸி மோகன். அவரது பன்முகத் தன்மையை என்னென்று சொல்லி வியப்பது? வசனகர்த்தா, நாடக ஆசிரியர், நடிகர், நகைச்சுவை வித்தகர், கவிஞர், பேச்சாளர், ஆன்மீக சிந்தனையாளர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கிரேஸி மோகனுக்கும் வல்லமை மின்னிதழுக்கும் இருந்த தினசரி உறவு. கிரேஸி மோகன் அதிகம் எழுதிய இதழ் என்ற பெருமை வல்லமைக்கு மட்டுமே உண்டு. பார்ப்பவர்கள் பிரம்மித்துப் போகும் அளவுக்கு வெண்பாக்களை எழுதிக் குவித்துள்ளார். கிரேஸி மோகனின் வெண்பாக்கள் தனி ரகம். ஒருபக்கம் புதுமையான நடையைக் கொண்ட வெண்பா என்றால் இன்னொருபக்கம் திருப்புகழ் பாணியில் வண்ணப் பாடல்கள். திருமால் திருப்புகழ். கிரேஸி மோகனின் படைப்பாற்றல் வியக்க வைப்பது. எந்த அளவுக்கு என்றால் அவர் மறைந்த தினத்துக்கு முன் தின இரவு வல்லமைக்குத் தன்னுடைய இரு வெண்பாக்களையும் அனுப்பி வைத்திருக்கிறார். பொதுவாகவே அவருடைய வெண்பாக்கள் படித்ததும் புரியும். அதை அவர் சொல்லும்போது கூட, “ஸ்வீட் மாதிரி கொஞ்சூண்டு இருந்தாலும் டக்குன்னு மனசுல பதிஞ்சுடுதுல்ல… வெண்பாவோட ட்விஸ்ட் ஆஃப் த டேல் அதோட ஈற்றடிதான். அதுலதான் கதையோட க்ளைமேக்ஸ்” என்று அதையும் திரைக்கதை பார்வையில் பார்த்தவர் கிரேஸி மோகன். அவருடைய வெண்பக்கள் எளிமையாக இருக்கும். அதற்குத் தனியே பதவுரை எல்லாம் தேவைப்படாது. ஆனால், நேற்று அவர் அனுப்பியிருந்த வெண்பாவின் ஆழமும் பொருளும் விளங்க கொஞ்ச நேரம் பிடித்தது.

    மற்கடக்(குரங்குக்) குட்டியே, மாதா ரமணரை
    நிற்க அனுமதிப்பாய் நின்னுள்ளே – வர்கத்தின்
    பேதங்கள் போகும் பிறவிப் பிணிதீரும்
    மோதுங்கள் அண்ணா மலை’’….!

    வந்த மனக்குரங்கு வாயுள்ளே வாத்ஸல்யம்
    சந்திர வம்சத்து சூரியன் – பந்தமறுப்பு:
    முற்றும் துறக்க முனிவனாய் மாறலாம்
    கற்ற களவை மற….கிரேசி மோகன்…! (09.06.2019)

     

    எத்தனை பொருள் பொதிந்த வெண்பா.. அவருடைய இறுதி வெண்பாக்கள் முக்தியை நோக்கி, நிலையாமை நோக்கி அமைந்திருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. கிரேஸி மோகனின் ஆன்மா சாந்தி பெற பிராத்திக்கிறோம். அவரை இழந்து வாழும் எம் போன்ற நண்பர் குழாத்துக்கும், குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்களை வல்லமை மின்னிதழ் தெரிவித்துக்கொள்கிறது.

    வல்லமையில் கிரேஸி மோகன் படைப்புகளைப் பார்க்க…

    கேஷவ் வண்ணம் கிரேஸி எண்ணம், பெருமாள் திருப்புகழ், கட்டுரைகள் இன்னும் பல…

    http://www.vallamai.com/category/thirumal-thiruppugazl/

    http://www.vallamai.com/category/thirumal-thiruppugazl/crazyquotes/

     

     

    Share
  • தேவ நடனம்

    தேவ நடனம்

    விவேக்பாரதி

    காலபைரவர் மீது எழுதப்பட்டிருக்கும் “யம் யம் யம் யக்‌ஷரூபம்” என்கிற அஷ்டகத்தைக் கீரவாணி இசையில் கேட்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில் கோவை ஈஷா மையம் சென்று திரும்புகையில் நான் எழுதிய தேவ நடனம்…

    விண்ணெங்கும் ஆன ரூபம் விரிகிற சடையும்
    வீரியங் கொண்ட நிலையும்
    பண்ணெங்கும் கானம் பாடும் பரவச மடையும்
    பார்வையில் காலம் அழியும்
    மண்ணெங்கும் ஜீவன் வாழும் மனதினில் நிகழும்
    மாதவள் பாக மிணையும்
    கண்ணெங்கும் ஜோதி தோன்றும் கலியுக மழியும்
    காளனின் தேவ நடனம்! (1)

    தம்தம்தம் தாள மாயம் தரையினில் நடனம்
    தண்டையின் ஓசை பெருகும்
    சிம்மங்கள் காளை யோடு சிவசிவ வெனவே
    சிந்தனை பொங்க மருகும்
    துன்பங்கள் தீயி னாலே பனியென உருகும்
    துக்கமே யின்றி அமையும்
    இன்பத்தில் போது தீரும் இனிதென நிகழும்
    ஈசனின் தேவ நடனம்! (2)

    பூதங்கள் கூடி ஆடும் புதிதென வுலகம்
    புத்தி தடுமாறி காணும்
    வேதங்கள் தேவை யாகும் சுருதிக ளருளும்
    வேகமாய் வானும் மாறும்
    நாதங்கள் யாவு மாடும் நடுநிசி இரவில்
    நர்த்தனம் காண லாகும்
    காதல்கொள் தேவி யோடு கவிமகன் வரையும்
    காட்சியே தேவ நடனம்! (3)

    பூநெஞ்சம் தீப மாகும் புரிகிற தருணம்
    பூரணம் வந்து நிறையும்
    தீநஞ்சம் யாவும் மாளும் திசைகளு மதிரும்
    திவ்ய லீலைகள் நிகழும்
    கானென்றும் தேக மாகும் கடைவரு மிருளில்
    காணலாம் யாவும் புரியும்
    மானொன்றும் மீதி தோன்றும் மலைமக ளுடனும்
    மன்னனின் தேவ நடனம்! (4)

    காலங்கள் சாட்சி யாகும் கருணையின் வடிவம்
    காருண்யன் செய்யும் நடனம்
    ஓலங்கள் தீர லாகும் ஒருவொரு கணமும்
    ஓமெனும் ஓசை பரவும்
    ஞாலங்கள் கூட ஆடும் நடுநிசி இரவில்
    நாயகன் ஆடும் நடனம்
    மூலங்கொள் மூச்சு தோறும் நிகழ்கிற நடனம்
    முக்கணன் தேவ நடனம்!! (5)

    -15.04.2019

    Share
  • வல்லமையாளர் விருது 307 – திவான்ஷு

    -விவேக்பாரதி

    அறிவியலின் துணை கொண்டு மனிதன் எத்தனையோ இயலாமைகளைச் சாத்தியமாக்கி இருக்கிறான். மனிதனால் வேகமாக நகர முடிந்தது, இருட்டை விலக்க ஒளி உருவாக்க முடிந்தது, பறக்க முடிந்தது, தண்ணீரின் ஆழம்வரை காண முடிந்தது, விண்வெளியின் விளக்கங்களைப் பார்த்துப் பகிர முடிந்தது. மனிதன், தன்னுடைய எத்தனையோ இயலாமைகளை அறிவியலால் சாத்தியமாக்கி இருக்கிறான். ஆனாலும் இன்னும் சில இடங்களில் மனிதராகிய நாம் பின் தங்கித்தான் இருக்கிறோம். காற்றில்லா வெற்றிடத்தின் (Vacuum) மூலம் மனிதக் கழிவுகளை அகற்றும் அளவுக்கு வளர்ந்திருக்கும் நம் தொழில்நுட்பம், செப்டிக் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இன்னும் சில இடங்களில் மனிதக் கரங்களைத்தான் நம்பி இருக்கிறது. அதற்கும் அறிவியல் விடையைக் கண்டுகொண்டால்? இன்னும் பல நகரப்பார்வை படாத உள்முக கிராமங்களில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்துகிறார்கள். இந்த நிலையை மாற்ற ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தி இருக்கிறார்கள் ஐஐடி மாணவர்கள். அவர்களே இந்த வாரத்தின்  வல்லமையாளர்கள்.

    ஐஐடி மதராஸைச் சேர்ந்த திவான்ஷு என்ற மாணவரும் அவருடைய குழுவும் தங்கள் பேராசிரியர் பிரபு ராஜகோபால் என்பவருடன் இணைந்து இந்தச் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது செப்டிக் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் இயந்திரம். மீன் போன்று செயல்படும் வடிவமைப்பைக் கொண்ட இந்த ரோபோ, செப்டிக் தொட்டிகளில் இருக்கும் அழுக்குகளை பிரத்யேகமான ஒரு வெட்டுக் கருவி  கொண்டு வெட்டி எடுத்து, வெற்றிடக் குழாய்களின் வழியே அழுக்கையும் வண்டலையும் சுத்தம் செய்கிறது. இது குறித்த வெங்கடாச்சலம் என்பவர் லிங்க்டு இன் தளத்தில் பதிவேற்றியது.

     

    மாணவர்களாகச் சேர்ந்து சமுதாயத்தில் ஒரு முன்னேற்றப் பாதைக்கு வித்திட்டிருப்பதை வல்லமை மின்னிதழ் மிகவும் பாராட்டுகிறது. அந்தக் குழுவுக்கு “வல்லமையாளர்” என்ற விருதை அளித்து இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறது.

    Share
  • நூல்நோக்கம் 2 – ராஜா வேசம்

    -விவேக்பாரதி

    ராஜா வேசம் – சரசுராம்

    சரசுராம் எழுதியிருக்கும் சிறுகதைத் தொகுப்பு “ராஜா வேசம்”. பொதுவாக சிறுகதைகள் என்னைப் பெரிதாய்க் கவர்வதில்லை. கதை என்றாலே தேர்ந்தெடுத்து வாசிப்பவன் நான். இந்தப் புத்தகத்தின் சில கதைகளை வாசிக்கும்போதே, முழுவதுமாய் வாசித்துவிட வேண்டும் என்று தோன்றிவிட்டது. அத்தனை வசீகரம் இவரது கதைகளில் எவ்விடத்தும் குறையாமல் காணப்படுகிறது. சற்றும் எதிர்பாராக் கோணங்களில் அமைந்திருக்கிறது ஒவ்வொரு கதையும். ஆனால் நாம் அந்த நிலைகளைப் பற்றி ஒருமுறையேனும் வாழ்வில் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டோம்.

    மகனுக்காக பாரட்டை மறுத்த அண்ணாமலையும், தன் சோகத்தை மறைத்த பார்வதியும் கண்முன் நிற்கிறார்கள். என்னுடைய இந்த இருபதாம் வயதில், நானும் என் சமூகமும் எங்கள் பெற்றோர்களை எப்படிக் காக்க வேண்டும் என்பது அதிலே பாடமாக வருகிறது.

    பாட்டி சொல்லாத கதை நம் அனைவரின் வாழ்விலும் நிகழும் தருணம் என்பது ஸ்பாய்லர். இதனை இங்கே வைப்பது எனக்கு மகிழ்ச்சியான செய்தி தான். என் பள்ளிக்கால பேருந்து நிறுத்த நண்பர்களை இப்போது சில டிப்போக்களில் பார்க்க முடியுமா என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.

    அனைத்துக்கும் முத்தாய்ப்பு அந்த ராஜா வேசம் கட்டிய கபிலன் தான். காதில் கேட்ட நிறைய செவிவழிச் செய்திகளோடும், நேரில் கண்ட சிலரின் வாழ்க்கையோடும் சரசுராமின் கபிலனையும் நர்மதாவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது. மகாபாரதக் கதாப்பாத்திரங்களின் நடத்தை முரண், அழகு முரண்.

    ஒவ்வொரு கதையையும் இப்படிச் சொல்லித்தான் ஆகவேண்டும், அத்தனை கதைகளும் அவ்வளவு சிறப்பு வாய்ந்தவை.

    பொதுவாக கதைகளில் அதீத காதல் என்ற பெயரில் சில்மிஷங்களோ இல்லை வெற்றுக் கற்பனைகளையோ மட்டுமே சொல்லிக்கொண்டு வரும் கதைக்காலம் மாறியிருக்கிறது. சரசுராம், சிறுகதைகளைக் குறித்த என் கண்ணோட்டத்தை மாற்றி இருக்கிறார். பிரம்மாண்டம் என்று சொல்லும்படிக்கான கதைக்கருவோ, வார்த்தை ஜாலமோ இல்லாமல் அமைந்திருக்கின்றன கதைகள். மொத்தமாய் சரசுராம் அருகில் அமர்ந்து கதைகளைக் கேட்ட உணர்வு. அத்தனை இலாகவம், தெளிவு, எளிமை மற்றும் எதார்த்தம். ஒவ்வொரு கதையும் பல இரவுகளை விழுங்கும் திறன் கொண்டவை. வாசித்தல் யோசித்தலாக வினை பெயரும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு.

    எந்தவொரு இடத்திலும் சமரசம் ஆகாத கண்ணியம் – ராஜா வேசம்.

    புத்தக விமர்சனமாக வரவிருக்கும் இந்தத் தொடரில் தங்கள் புத்தகம் குறித்த விமர்சனம் இடம்பெற வேண்டில் தங்கள் புத்தகத்தின் மென்நகலையும் (SOFT COPY) அட்டைப் படத்தையும் vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    Share