தேவ நடனம்

விவேக்பாரதி
காலபைரவர் மீது எழுதப்பட்டிருக்கும் “யம் யம் யம் யக்ஷரூபம்” என்கிற அஷ்டகத்தைக் கீரவாணி இசையில் கேட்க நேர்ந்தது. அந்தத் தாக்கத்தில் கோவை ஈஷா மையம் சென்று திரும்புகையில் நான் எழுதிய தேவ நடனம்…
விண்ணெங்கும் ஆன ரூபம் விரிகிற சடையும்
வீரியங் கொண்ட நிலையும்
பண்ணெங்கும் கானம் பாடும் பரவச மடையும்
பார்வையில் காலம் அழியும்
மண்ணெங்கும் ஜீவன் வாழும் மனதினில் நிகழும்
மாதவள் பாக மிணையும்
கண்ணெங்கும் ஜோதி தோன்றும் கலியுக மழியும்
காளனின் தேவ நடனம்! (1)
தம்தம்தம் தாள மாயம் தரையினில் நடனம்
தண்டையின் ஓசை பெருகும்
சிம்மங்கள் காளை யோடு சிவசிவ வெனவே
சிந்தனை பொங்க மருகும்
துன்பங்கள் தீயி னாலே பனியென உருகும்
துக்கமே யின்றி அமையும்
இன்பத்தில் போது தீரும் இனிதென நிகழும்
ஈசனின் தேவ நடனம்! (2)
பூதங்கள் கூடி ஆடும் புதிதென வுலகம்
புத்தி தடுமாறி காணும்
வேதங்கள் தேவை யாகும் சுருதிக ளருளும்
வேகமாய் வானும் மாறும்
நாதங்கள் யாவு மாடும் நடுநிசி இரவில்
நர்த்தனம் காண லாகும்
காதல்கொள் தேவி யோடு கவிமகன் வரையும்
காட்சியே தேவ நடனம்! (3)
பூநெஞ்சம் தீப மாகும் புரிகிற தருணம்
பூரணம் வந்து நிறையும்
தீநஞ்சம் யாவும் மாளும் திசைகளு மதிரும்
திவ்ய லீலைகள் நிகழும்
கானென்றும் தேக மாகும் கடைவரு மிருளில்
காணலாம் யாவும் புரியும்
மானொன்றும் மீதி தோன்றும் மலைமக ளுடனும்
மன்னனின் தேவ நடனம்! (4)
காலங்கள் சாட்சி யாகும் கருணையின் வடிவம்
காருண்யன் செய்யும் நடனம்
ஓலங்கள் தீர லாகும் ஒருவொரு கணமும்
ஓமெனும் ஓசை பரவும்
ஞாலங்கள் கூட ஆடும் நடுநிசி இரவில்
நாயகன் ஆடும் நடனம்
மூலங்கொள் மூச்சு தோறும் நிகழ்கிற நடனம்
முக்கணன் தேவ நடனம்!! (5)
-15.04.2019
தம் தம் தம் சொற்பதம், அற்புதம், பிரமாதம்!