-விவேக்பாரதி 

காலை எழுந்து வழக்கம்போல் திருப்புகழ் பாடல்களை யூடியூபில் பாடவிட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். முதல் வரிசையில் வந்த சில பாடல்கள் எனக்குள் ஒரு சிந்தனையைக் கிளப்பியது. செந்தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அருளால் வண்ணத் தமிழ் படைத்தவர் அருணகிரிநாதர். அவர் அருளியிருக்கும் திருப்புகழ் முருக வழிபாட்டைக் கடைபிடிப்பாருக்கு உயரிய செல்வம். தமிழ்க் கவிதை உலகுக்குப் பெரும் பேறு. திருவண்ணாமலை கோயில் கோபுரத்தின் மேலிருந்து உயிரை மாய்த்துக் கொள்ளக் குதித்தவரை முருகன் தடுத்தாட் கொண்டு மந்திர உபதேசம் வழங்கி, தவத்தில் இருக்கச் செய்தான். “சும்மா இரு சொல்லற” என்ற முருகனின் மந்திர உபதேசம் கேட்டுச் சும்மா தியானத்தின் அமர்ந்த அருணகிரிக்கு வஜ்ஜிர தேகமும், ஞான விளக்கமும் கிடைத்தது. பின்னர் முருகப் பெருமானே அடியெடுத்துக் கொடுக்கத் திருப்புகழ் என்னும் புதுவித வண்ணப் பாடல்களைத் தலங்கள் தோறும் சென்று பாடுவாராயினார். இது அருணகிரி வரலாறு. அருணகிரிநாதரின் அதீத பக்தி, அபாரமான கவித்துவம். அதனை அவரது பாடல்களில் அநாயசமாக கவனிக்க முடியும். முருகனின் அறுபடை வீடுகளில் தொடங்கி அருணகிரிநாதர் எல்லாத் திருத்தலங்களுக்கும் சென்று முருகனைப் பாடிப் பரந்தார்.

முருகன் அடி எடுத்துக் கொடுத்து அருணகிரிநாதர் பாடிய ‘முத்தைத் தரு’ என்கிற பாடலே திருப்புகழில் முதல் பாடலாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னம் விநாயகரை அவர் பாடிய சில பாடல்களை முன்வரிசையில் வைத்துப் பதிப்புகள் வெளியாகின்றன. எந்த ஒரு காரியத்தைத் தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளான விநாயகனைப் பாடுதல் நம் தமிழ்க் காவிய மரபு. அதன் அடிப்படையில் உரையாசிரியர்கள் திருப்புகழை அவ்வாறு தொகுத்திருக்கலாம். அருணகிரிநாதர் பாடிய ஏணைய செய்யுட்களான கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் ஆகியனவும் முதல் பாடலில் விநாயகரைப் போற்றுவதாகவே அமைந்திருக்கின்றன.
அருணகிரிநாதர் உறவு சொல்லிப் பாடுவதில் வல்லவராக இருக்கிறார், குறிப்பாக முருகனை நாராயணனாகிய திருமாலின் மருகனே என்று அழைப்பதிலும், சிவசக்தி மைந்தன் என்று புகழ்வதிலும், விநாயானின் தம்பி என்று பெருமை கூறுவதிலும் ஆர்வமாக இருந்திருக்கிறார். இது அவரது எல்லாப் பாடல்களிலும் வெளிப்படை. குறிப்பாக விநாயகப் பெருமானை அருணகிரிநாதர் எந்த இடத்தில் வைத்து வழிபட்டிருக்கிறார் என்பது கந்தர் அலங்காரத்தில் அவர் சொல்லும் பாடலில் விளங்கும்.

அடலரு ணைத்திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வடவரு கிற்சென்று கண்டுகொண் டேன்வரு வார்தலையிற்
தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே.

தம்முடைய டைரிக் குறிப்பு போல அருணகிரிநாதர் எழுதியிருக்கும் இந்தப் பாடலில், விநாயகன் தம்பி முருகனைத் தாம் கண்டதாகப் பாடுகிறார். அதாவது வருவார்களுக்கு முக்தியைத் தர வல்ல அருணை என்னும் திருவண்ணாமலை கோவில் கோபுரத்துக்குப் பக்கத்தில், அந்த வாயிலுக்கு அருகில் தெற்குப் பக்கமாக அமர்ந்திருக்கிறான் விநாயகப் பெருமான். அவனைத் தரிசிக்க வருபவர்கள் தலையில் குட்டு இட்டு, உக்கி போட்டு வழிபட்டு, மேலும் படையலாக வழங்கும் சர்க்கரை முதலிய பொருட்களை ஏற்கும் விநாயகன் என்னும் யானைக்கு இளைய யானையான முருகன். அவனைக் கண்டேன் என்று அருணகிரி வாக்குமூலம் தருகிறார்.

வயலூர் திருக்கோவிலைப் பாட வந்த அருணகிரிநாதர் அந்தக் கோவிலில் குடிகொண்டிருக்கும் விநாயகப் பெருமானைப் பாடும் அழகைப் பாருங்கள்…

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர …… கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை …… வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப …… னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனவெ னக்கருள்கை …… மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை …… இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவௌ
ரிப்பழமி டிப்பல்வகை …… தனிமூலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் …… அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய …… பெருமாளே.

இது நாம் அனைவரும் அறிந்த பாடலே. அருணகிரிநாதர் இதிலே வழங்கும் பட்டியல்,  விநாயகர் சதுர்த்தி திருநாளில் நாம் ஒருதரம் நினைக்க வேண்டியது. கரும்பு, அவரை, நல்ல கனிகள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், வண்டின் எச்சில் எனப்படும் தேன், அப்பவகை, பச்சரிசி பிட்டு, வெள்ளறிப்பழம், இடித்த மாவு வகைகள், கிழங்கு வகைகள், சிறந்த உணவுகள், கடலை ஆகிய பட்சணங்களைப் பிரசாதமாக தருவதாக அருணகிரி பாடுகிறார்.

மற்றோரிடத்தில், தம்பி முருகப் பெருமானின் காதல் நாடகத்துக்கு அண்ணன் விநாயகன் துணை புரிந்த கதையையும் கைத்தல நிறைகனி பாடலில் விளக்குகிறார். முருகனைப் பாடுதலையே தம்முடைய மறுபிறப்பின் பயனாகக் கொண்டு வாழ்ந்த அருணகிரிநாதர் விநாயகனைப் பாடியிருக்கும் பாங்கு நம்முடன் மிக நெருக்கமானவரை வாஞ்சையுடன் வாழ்த்துவது போல தொணிப்பது ஆனந்தம். நாமும் ஒருகணம் அருணகிரிநாதர் பாடிய விநாயகனைக் காதாரக் கேட்டால் சுகம். கலைவாணி தந்த வரமாக அதற்குத்தான் டி.எம்.எஸ், சம்பந்தம் குருக்கள் ஆகியோர் பாடிய பாடல்கள் யூடியூபில் கிடைக்கின்றனவே!

பக்கரைவி சித்ரமணி பாடல் – https://www.youtube.com/watch?v=U9CM142K1YA

கைத்தல நிறைகனி பாடல் – https://www.youtube.com/watch?v=2laPCCsVY_Y

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *