சேக்கிழார் பா நயம் – 51

-திருச்சி புலவர் இராமமூர்த்தி

திருநாவலூரர் ஆகிய சுந்தரர் , திருக்கோயிலில் இறைவனை வணங்கச் செல்லும் போது பரவையாரைக் கண்டு உள்ளத்தைப் பறிகொடுத்தார். இறைவன் திருவடிகளையே பற்றுக் கோடாகக் கொண்டு வாழும் சுந்தரர் உள்ளத்தில் தானே வந்துநின்று அவர் உள்ளத்தில் சிவனருளாக விளங்கினார் பரவையார்! இறைவனை வணங்கி, வழிபட்டுத் திரும்பும்வரை, அவர் உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட அப்பெண்மணி, அவர் வெளியே வந்த போது அங்கிருந்துசென்றுவிட்டார்! கண்வழியே புகுந்து இறைவன் திருவருளே போல நின்ற உருவம் மறைந்துவிட்டது! அவ்வுருவம் எங்கே என்று தேடத் தொடங்கினார் சுந்தரர். இறைவன் திருவருட் செயல்களுள் மறைப்புஎன்னும் திரோதான சக்தி பரவையாரை மறைத்தருளியது. ஆனாலும் சுந்தரர் தேவாசிரியன் மண்டபத்தைச் சார்ந்துநின்றார். தனக்குத் திருவருளைக் காட்டிய இறைவனே, தம் கண்முன் மறைந்த பரவை நாச்சியாரை மீண்டும் கொண்டு வந்து காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் யாரிடமும் எதனையும் கேட்காமல் நின்றார். அப்போது மாலை நேரத்துக் கதிரவன் மேலைக் கடலுக்குள் மறைய முற்பட்டான். அந்த நிகழ்ச்சியைக் கதிரவன் உளக் கருத்தாகத் தன் குறிப்பினை ஏற்றிக் கவிஞர் பாடுகிறார்.

இறைவன் திருவருளால் சிவபிரான் புகழையும் அடியார் புகழையும் மண்ணுலகில் நிலைநாட்டப் பிறந்தவரே சுந்தரர் என்பதைக் கயிலை மலையில் , ‘’மாதவம்செய் தென்திசை வாழ்ந்திட – அதாவது சிவபெருமான் புகழைத் தம் பாடல்களால் பரவச் செய்து தென்னாட்டிற்கே புது வாழ்வைத் தந்திட, தீதிலாத் திருத்தொண்டத் தொகைதர – அதாவது இறைவனடியார்கள் பலரின் சிறப்பைக் கூறும் திருத்தொண்டத் தொகை என்ற முதல் நூலை வழங்கிச் சைவத்தை உயர்த்தும் கடமையைச் செய்ய அங்குள்ள மாதரார் மேல் மனம் போக்கினார் என்று சேக்கிழார் பெருந்தகை முன்னதாகவே கூறிவிட்டார்.இதனை உரையாசிரியர்,’’சிவபெருமானது புகழையும் அடியார் புகழையும் உலகில் நிலவச் செய்வதற்கே அவதாரஞ் செய்தாராகலின் நல்லிசை நாட்டும் நாவலூரன் என்றார்
ஏனையோர் இசைகள் ஒன்றும் முற்றும் நல்லன ஆகாமையின் அரன் புகழும் அவன் அடியார் புகழுமே நல்லிசை எனப்பெறும்.இதனை நிலைநிறுத்தியவர் திருநாவலூரர். ஆகவே, ‘’நாட்டு நல்லிசை நாவலூரன்‘’என்றார். அவர் முன்பு கைலையில் தம் மனத்தால் விரும்பிய கமலினியாரே
திருவாரூரில் திருக்கோயிலில் வந்து நின்றமையால், விதி கடைக்கூட்ட, அவரை விரும்பினார், இதனை ‘வேட்ட ‘ என்ற சொல் உணர்த்துகிறது. அவர் விரும்பியது,இறைவன் திருவருளை! அத்திருவருள் மின்னல் போன்ற இடையை உடைய பரவையார் என்ற பெண்ணுருவில் தோன்றி மறைந்தது. மின்னல் போன்று தோன்றி மறைந்த , தம் உயிரை மீட்டுத் தர வல்லது அமுதமே! அந்த அமுதத்தை மேற்கடலில் குளித்துக் கைப்பற்றிக் கீழ்க்கடலில் தரவல்ல அருஞ்செயலைச் செய்யவல்லவன், கதிரவனே! ஆதலால் ஏழு வண்ணங்க ளாகிய குதிரைகளை பூட்டிய தேரோனாகிய ‘’ஏழ் பரித் தேரோன் ‘’ மேலைக் கடலில் புகுந்தான். இதனைச் சேக்கிழார்,

‘’வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக்
காட்டுவன் கடலைக் கடைந்து என்பபோல்
பூட்டும் ஏழ்பரித் தேரோன் கடல்புக’’

என்று பாடினார். இப்பாடற்பகுதி தற்குறிப்பேற்ற அணியின் பாற்படும். இயல்பாக நிகழும் இயற்கை நிகழ்ச்சியின் மேல் , புலவன் தன் குறிப்பினை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்றம் ஆகும். இத் தற்குறிப்பேற்றத்தின் மேலும் அதனை விளக்குகிறார் புலவர். கீழ்க்கடலில் புகுந்து அமுதத்தைத் தேடக் கதிரவன் புகுந்ததாகக் கூறுவது சற்று மிகையான விளக்கம்.

உலகில் நிகழும் நிகழ்ச்சிகளை எப்போதும் கண்டு சாட்சியுரைப்பது கதிரவன். அதனால்தான் கண்ணகி தன் கணவன் கள்வனல்லன் என்பதை, நிறுவக் ‘’காய்கதிர்ச் செல்வனே, கள்வனோ என்கணவன் ?’’ எனக்கேட்டாள். இவ்வாறு இயற்கை நிகழ்ச்சியில் தன குறிப்பை ஏற்றிக் கூறும் கவிஞர் , மேலும், பரவை நாச்சியாரை நாவலூரன் சிந்தை வேட்ட ‘’மின்னிடை இன்னமுதம் ‘’ என்று உருவகப்படுத்துவது மிக்க நயத்துடன் விளங்குவதைக் காண்கிறோம். இனிப் பாடலைப் பயில்வோம்.

“நாட்டு நல்லிசை நாவலூரன் சிந்தை
வேட்ட மின்னிடை இன்னமு தத்தினைக்
காட்டுவன் கடலைக் கடைந்து என்பபோல்
பூட்டும் ஏழ்பரித் தேரோன் கடல்புக.”

இப்பாடலில் சுந்தரருக்கு இயற்கையே உதவும் சிறப்பைக் கண்டு மகிழ்கிறோம்!

About திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

கல்வித் தகுதி: புலவர்; எம்.ஏ., எம்.எட்; பணி : தமிழாசிரியர், இ.ஆர்.மேனிலைப் பள்ளி, திருச்சிராப்பள்ளி - 620 002 (36- ஆண்டுகள் - 2001 பணி நிறைவு) இலக்கியப் பணி: சமய, இலக்கியச் சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் (40 ஆண்டுகள்), பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், தொடர் விரிவுரை, கவியரங்கம், கோல உரையாடல் சிறப்புப் பட்டங்கள் : இலக்கியச் சுடர்; இன்கவித் தென்றல்; இன்தமிழ்ச் சொல்லேந்தல்; நகைச்சுவை இமயம்; பாரதி இலக்கியச் செல்வர், இலக்கிய சேவாரத்தினம்   பெற்ற விருதுகள் : 1. ரோட்டரி சாதனையாளர் (கவிதை விருது) 1997-98 2. தமிழ்ச் செம்மல் (கல்கத்தா தமிழ் மன்றம்) 3. இலக்கியச் செல்வர் (கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம்) 4. சிறந்த நூலாசிரியர்(2005-06) உரத்த சிந்தனை 5. சைவ சித்தாந்தப் புலவர்- 2007 ஸ்ரீ காஞ்சி மடம் 6. பாரதி பணிச்செல்வர் 2007 அ.இ.தமிழ் எழுத்தாளர் சங்கம் 7. குலோத்துங்கன் கவிதை விருது -இலக்கியப்பீடம் 8. சாதனையாளர் -2009 (மனிதநேயப் பேரவை, உரத்த சிந்தனை) 9. பாரதி இலக்கியச் செல்வர் -2009 அ. இ. தமிழ் எழுத்தாளர் சங்கம். 10. தமிழ் இலக்கிய சேவாரத்னா - 2014 (காஞ்சி ஸ்ரீ சங்கர மடம் ) எழுதிய நூல்கள் : 1. ஐயப்பன் அந்தாதி 1995 (ஒலிப்பேழை- உன்னிகிருஷ்ணன்) 2. எழுத்தும் பேச்சும் (மணிவிழா) 3. மொழியும் பொருளும் (மணிவிழா) 4. திருக்காளத்தித் தலச்சிறப்பு.- 2004 5. திருக்குறள் தெளிவுரை 2008 (இலக்கியப் பீடம்) 6. அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர் (ஆசிரியர் குழு) 7. பாரதியின் பேரறிவு 2011 8. தமிழ்க் கடல்மணி 2013(70-ஆம் அகவை) 9. ஐயப்பன் அந்தாதி விளக்கவுரை (அச்சில்) 10. மனங்கவரும் மலர்கள் (அச்சில்) 11. வாட்போக்கிக் கலம்பகம் விளக்கவுரை (அச்சில்) 12. திருக்குறளும் தெய்வத்தின் குரலும் சொற்பொழிவாற்றிய ஊர்கள் : தமிழகம் முழுவதும், திருவனந்தபுரம், ஆல்வாய், கொழிஞ்சாம்பாறை, பாலக்காடு, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, புதுதில்லி, கொல்கத்தா.. சொற்பொழிவாற்றிய நாடுகள்: இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து (இலண்டன்), அமெரிக்கா (பீனிக்ஸ்) மற்றும் மஸ்கட்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க