பழகிப் போன குரல் – நவராத்திரி பாடல்கள்

-விவேக்பாரதி
ஆயிரம் அலுவல்களுக்கு மத்தியிலும், கிடைத்துவிடும் ஏதோ ஒரு பயணப் பொழுதில், சில நிமிட இடைவெளிக்குள் ஒரு பாடல் நெஞ்சுக்குள் இசைக்கப்படுகிறது. யார் இசைக்கிறார்? எங்கோ கேட்ட குரலாய்…
பழகிப் போன குரலில் உள்ளே
பாடல் கேட்கிறது! – ஆ
பாரதி பாடுகிறாள் – மனம்
மெழுகாய் மறுகணம் மலையாய்க் கனக்க
மெல்லிசை மீட்டுகிறாள்! – அடடா
மேனியை மீட்டுகிறாள்!
வெள்ளைப் புடைவை தங்கப் புன்னகை
வீணை கையளென – அவள்
விரலில் தந்துபிகள்! – ஒரு
பள்ளத்தினில் நிறை வெள்ளத் துகளெனப்
பரவிடும் பாடல்களில் – உள்ளே
பலவித சங்கதிகள்
நெஞ்சில் சொற்களின் தனியரசாங்கம்
நேர்வது தெரிகிறது – அவளின்
நேர்முகம் தெரிகிறது! – உயிர்
தஞ்சம் என்றவள் தாளடி சேர்கையில்
தர்மம் தெரிகிறது – அறுபடும்
கர்மம் புரிகிறது
கல்விக் கதிபதி காக்கும் குணநிதி
கவிதைப் பிரியையவள் – வாசக்
கருமைக் குழலியவள்! – எழும்
சொல்வித்துக்குள் ககனம் நிரப்பி
சொலிக்கும் மாயையவள்! – நேரில்
தோன்றும் சாயையவள்!
ஒருநாள் தெரிவாள் ஒருநாள் மறைவாள்
ஓயா விளையாட்டு! – சற்று
ஓய்ந்தால் தலையாட்டு – என்றே
தருவாள் பாடலைப் பொழிவாள் அந்தத்
தாயின் ஒருபாட்டு – காற்றில்
தரைவரும் தாலாட்டு!!
-29.09.2019