அணைப்பொன்று போதும் – நவராத்திரி பாடல்கள் 2019

-விவேக்பாரதி
என்ன வேண்டும்? நமக்கு என்னதான் வேண்டும்? தினந்தோறும் பூசைகள் திசை எட்டும் பாட்டுகள். யாவும் எதற்காக? மனதே கேள்வி கேட்டு மனதே பதில் சொல்கிறதாம்… எல்லாம் அவள் அணைப்புக்குத்தானே! அதைத்தான் ஊர் நம்புமா?
அணைப்பொன்று போதும் அம்மா! – உன்
அணைப்பொன்று போதும் அம்மா!
என்
நினைப்பெல்லாம் தூளாக நெஞ்செங்கும் நீயாக
கணப்போதும் மறவாத காருண்யம் நான்காண!
புதுப்பாதை நான்போட்டு நடக்கின்ற போதில்
புயலாக அதைவந்து கலைப்பவளே!
விதிப்பாதை எனக்காக நீபோட்டு வைத்து
விளையாடிப் பாரென்று அழைப்பவளே!
எதைக்கேட்டு எதைப்பார்த்து என்னோடு சேர்ந்தாய்
எனக்கொன்றும் தெரியாதடி! அட
இதுக்கென்ன தயக்கம்?என் இதயத்தின் ஓரம்
இதமாக பதில் சொல்லடி!
சிவத்தோடு நீயாடும் நடுஜாம நேரம்
விசுக்கென்று பாட்டோடு எழுப்பிடுவாய்!
கவலைகள் எனைச்சூழ்ந்து களியாட்டும் போடும்
கண்ணென்னும் தீயாலே அழித்திடுவாய்!
அடுத்தென்ன எனக்கென்று தெரியாத நேரம்
அடியாகி நிற்பவளே! உயிர்
கொடுத்தேனும் உன்பாதம் தொடவேங்கும் நெஞ்சைக்
குறிபார்த்துச் சிரிப்பவளே!
காதோடு மணியோசை புதுச்சந்தம் போட
கவிபாட எனைக்கூட்டிக் கேட்பவளே
பாதாதி கேசத்தை நான்பாடும் போதில்
பக்கத்தில் நின்றென்னை ரசிப்பவளே
நீதந்த பாட்டுக்கள் நீதந்த ராகம்
நிஜம் என்று ஊர் நம்புமா? – அடி
நீயே உன் பாட்டுக்கு ரசிகைபோல் ஆடும்
நிலைதந்த சந்தேகமா?
-02.10.2019