-நாங்குநேரி வாசஸ்ரீ 

நெல்லைத் தமிழில் திருக்குறள் 

67.வினைத்திட்பம் 

குறள் 661:

வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற

செயல செஞ்சு முடிக்குணும்ங்குத உறுதி அவன் நெஞ்சுறுதி மட்டுந்தான். மத்ததெல்லாம் வேற தான். 

குறள் 662:

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

தடங்கல் வரமுன்ன தடுக்கணும். வந்துடுச்சின்னா அந்தால கெடந்து தொவண்டு போவாம இருக்கணும். இந்த ரெண்டும் அறிவுள்ளவங்களோட கொள்க. 

குறள் 663:

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்

ஒரு செயல எப்பமும் செஞ்சு முடிச்ச பொறவுதான் வெளிப்படுத்தணும். இடையில வெளிப்படுத்தினா முடிக்க முடியாம தடங்கலா வந்து நிக்கும்.  

குறள் 664:

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்

இந்தக் காரியத்த இப்டி செஞ்சு முடிக்கலாம்னு சொல்லுதது எல்லாருக்கும் சுளுவு. சொன்னமேனிக்கு செஞ்சு முடிக்கது தான் சிரமம்.  

குறள் 665:

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்

செய்யுத தெறமையில பெரும பெத்து ஒசந்தவங்களோட செயல்உறுதி நாட்ட ஆளுத ராசா வரைக்கும் பரவி மதிக்கப்படும்.

குறள் 666:

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

ஒண்ணச் செய்யணும்னு நெனைக்கவங்க நெஞ்சுறுதி உள்ளவங்களா இருந்தாங்கன்னா அவங்க நெனச்சத நெனச்சபடி அடஞ்சிக்கிடுவாங்க.

குறள் 667:

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

உருளுத தேருக்கு வடிவுல சிறுசா இருக்க அச்சாணி எம்புட்டு முக்கியமோ அது கணக்கா தான் ஒலகத்துல மன உறுதி உள்ளவங்களும்.  அவுக உருவத்த வச்சி எளக்காரம் செய்யக்கூடாது. 

குறள் 668:

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்

கொளம்பாம தெளிவா துணிஞ்சு ஏத்துக்கிட்ட தொழில அசராம, கெடப்புல போடம வெரசலா செஞ்சு முடிக்கணும். 

குறள் 669:

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை

முடிக்கையில மகிழ்ச்சி கெடைக்கும்னு தெரிஞ்சா ஒரு செயல சங்கடப்பட்டுக்கிட்டேன்னாலும் செஞ்சு முடிக்கணும். 

குறள் 670:

எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு

வேற எந்த வகையில உறுதி இருந்தாலும் காரியம் செய்யுததுல  உறுதியில்லாதவர ஒலகம் விரும்பாது. 

(அடுத்தாப்லையும் வரும்…)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *